இராணி மங்கம்மாள்/சகலருக்கும் சமநீதி

விக்கிமூலம் இலிருந்து
9. சகலருக்கும் சமநீதி

பாதிரியாரை மிகவும் மரியாதையாக வணங்கி வரவேற்றான் ரங்க கிருஷ்ணன். அதிகச் சிரமப்பட்டு அலைந்து திரிந்து வந்திருப்பதுபோல் களைப்போடும் கவலையோடும் தென்பட்ட அந்தப் பாதிரியாரைப் பரிவோடும் அனுதாபத்தோடும் விசாரித்தான் அவன்;

"பெரியவரே நாடு எங்கும் நன்கு வாழக் கேடு ஒன்றும் இல்லை என்பதுதான் எமது கொள்கை. எல்லாச் சமயங்களும் எல்லா வாழ்க்கை நெறிகளும் செழிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடுதான் எங்கள் பாட்டனார் திருமலை நாயக்கர் கால முதல் இந்த நாயக்கர் மரபின் நல்லாட்சி இங்கு தொடர்ந்து நடந்து வருகிறது."

"அந்த நல்லெண்ணத்தை நாங்களும் அறிவோம் அரசே! நோக்கம் நன்றாகவே இருந்தாலும் கவனக் குறைவால் சில செயல்கள் பழுதுபட்டுப் போகலாம்."

"செயல் எங்காவது பழுதுபட்டுப் போயிருந்தால் அதை உடனே எங்கள் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டியது தங்களைப் போன்ற சான்றோர்களின் கடமை அல்லவா?"

"தாங்கள் கூறும் கடமையைக் கருதியே இப்போது தங்களைக் காண வந்திருக்கிறேன் அரசே!"

புதிதாகத் தமிழ் கற்று அதைக் கற்ற சுவட்டோடு உடனே பேசும் கொச்சையும் திருத்தமும் மாறி மாறி விரவிய தமிழ் நடையில் பேசினார் பாதிரியார். வடிவில் முழுமையும் எழுத்தொலி உச்சரிப்பில் கொச்சையுமாக அது இருந்தது. ஆயினும் அவர் தேவையை உணர்ந்து தமிழ் கற்றிருக்கும் விரைவையும் விவேகத்தையும் மனத்துக்குள்ளேயே பாராட்டிக்கொண்டான் ரங்ககிருஷ்ணன். எந்தப் பிரதேசத்துக்குப் போகிறோமோ அந்தப் பிரதேசத்து மொழியைக் கற்காமல் அப்பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியாது என்னும் மனோதத்துவம் அவருக்கும் அவரைப்போல் வந்தவர்களும், வருகிறவர்களுக்கும் புரிந்திருப்பதை அவன் உணர்ந்தான்.

"அரசே தங்கள் பாட்டனார் புகழ்பெற்ற திருமலை நாயக்கரின் காலத்திலிருந்து நாங்கள் அடைந்து வரும் நியாயங்களும் சலுகைகளும் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதான் இப்போதும் எங்கள் பிரார்த்தனையாயிருக்கிறது."

"பிரார்த்தனைகளைத் தெய்வங்களும் அரசர்களும் ஒருபோதும் ஒருவருக்கும் புறக்கணிப்பதில்லை."

"உண்மை. ஆனால் தெய்வங்களையும் அரசர்களையும் தவிரப் பெருவாரியாக இருக்கும் மக்கள் சில சமயங்களில் வெறுப்பையும், புறக்கணிப்பையும் காட்டிவிடுகிறார்களே!"

"நல்லது அப்படி ஏதாவது என் ஆட்சிக்கு உட்பட்ட எல்லையில் நடந்திருந்தால் சொல்லுங்கள்! உடனே கவனித்து நியாயம் வழங்குகிறேன். என்பாட்டனார் காலத்தில் கிடைத்த அதே நியாயங்களையும் சலுகைகளையும் நீங்கள் இப்போதும் அடைய முடியும். அதற்கு எந்தத் தடையுமில்லை."

"அரசும், ஆட்சியும், தாங்களும் தடுக்காமல் இருக்கலாம். ஆனால் பெருவாரியான மக்கள் சில சமயங்களில் நியாயங்களுக்கும் சலுகைகளுக்கும் குறுக்கே நிற்கிறார்களே..."

"கவலை வேண்டாம் பாதிரியாரே! கோடிக்கணக்கான மக்களே குறுக்கே நின்றாலும் நியாயத்தை நிலைநாட்டுவதில் உறுதியாயிருப்பேன்."

"அப்படியானால் இரட்டை மகிழ்ச்சி அரசே இனிமேல் நான் முறையிட வேண்டியவற்றைக் கவலையோ தயக்கமோ இல்லாமல் தங்களிடம் முறையிடலாம். அரசே! பாரபட்சம் இல்லாமல் தாங்கள் நியாயம் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. தங்கள் தந்தையார் சொக்கநாத நாயக்கர் காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புகள் -அந்நிய ஆக்கிரமிப்புகளுக்குப் பயந்து இந்நகரிலிருந்த கிறிஸ்தவர்கள் சிலர் தங்கள் வீடு வாசல் நிலங்கரைகளை அப்படி அப்படியே விட்டுவிட்டு வேறு இடங்களுக்குக் குடிபெயர நேர்ந்தது. மறுபடி திரிசிரபுரத்தில் அமைதி ஏற்பட்டு அவர்கள் எல்லாரும் திரும்பிவந்து பார்த்தபோது அவர்களுடைய நிலங்களில் சில பகுதிகளில் இந்துக்கள் கோயில்களைக் கட்டித் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கிருப்பது தெரிந்தது. எவ்வளவோ முயன்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் நிலங்கரைகளைத் திரும்ப அடைய முடியவில்லை. திரிசிரபுரத்துக்குத் திரும்ப வந்த கிறிஸ்தவ மக்கள் நியாயம் கிடைக்காமல் அநாதைகளாக நடுத்தெருவில் நிற்க நேர்ந்திருக்கிறது."

"நீங்கள் சொல்லுவதற்கு என்ன ஆதாரம் பாதிரியாரே?"

"எழுத்துப் பூர்வமான ஆதாரங்களும் இருக்கின்றன. தாங்களே விரும்பினாலும் நேரில் வந்து காணலாம் அரசே அழைத்துச் செல்லத் தயாராயிருக்கிறேன்."

"நீங்கள் சொல்கிறபடி இருந்தால் கட்டாயம் விசாரித்து நியாயம் வழங்கப்படும்."

"தங்கள் வாக்குறுதி எனக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது அரசே!"

"ஒருவருக்குரிய உடைமையை இன்னொருவர் ஆக்கிரமித்துச் சொந்தங் கொண்டாடுவது முறையில்லை. முறைகேடு எங்கே யாரால் நடந்திருந்தாலும் விசாரித்து நீதி வழங்குவேன் பாதிரியாரே!"

பாதிரியாருடைய முகத்தில் மலர்ச்சியும் சந்தேகமும் ஒளியும் நிழலும் போல் மாறி மாறித் தெரிந்தது. ரங்ககிருஷ்ணன் அவருடைய முகத்தைக் கூர்ந்து கவனித்து அவருக்கு இன்னும் முழு நம்பிக்கை வரவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இவ்வளவிற்கு மனம் விட்டுப் பேசியும் அவருக்கு முழு நம்பிக்கை வராதது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவருக்கு உறுதி மொழிகள் கூறி ஆவன செய்வதாக வாக்களித்து அவரை அனுப்பி வைத்துவிட்டு உடனே மாறுவேடத்தில் அந்தக் கிறிஸ்தவர்களின் நிலங்களாக அவர் குறிப்பிட்டிருந்த பகுதிக்குச் சென்றான் ரங்ககிருஷ்ணன்.

தன் பாட்டனார் திருமலை நாயக்கரும் தந்தை சொக்கநாத நாயக்கரும், தாய் ராணி மங்கம்மாளும் சமயக் காழ்ப்புகளையும், மதமாற்சரியங்களையும், பூசல்களையும் தவிர்க்க எவ்வளவோ பாடுபட்டிருந்தும் அத்தகைய சண்டைகளும், பூசல்களும் மறுபடி எழுவதைத் தவிர்க்க முடியாமல் இருப்பதை இப்போது அவனே உணர்ந்தான்.

பெரும்பாலும் தவறுகள் ஒரு தரப்பில் மட்டுமில்லை. இரு தரப்பிலும் இருந்தன. இவர்கள் அடங்கினால் அவர்கள் பூசல்களைக் கிளப்புவதும் அவர்கள் அடங்கினால் இவர்கள் பூசல்களைக் கிளப்புவதும் வழக்கமாகி இருந்தது. தெய்வங்களுக்கே பொறுக்காததும் பிடிக்காததுமாகிய சண்டை சச்சரவுகளைத் தெய்வங்களின் பெயரால் தெய்வங்களுக்காகச் செய்வதாகக் கருதி மனிதர்கள் செய்தார்கள். பரந்த மனப்பான்மையும் சமரச நினைவுகளும் வருவது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது.

மனவேதனையுடன் அந்த இடங்களைச் சுற்றிப் பார்த்தபோது அங்கே புதிய புதிய கோயில்களைச் சுற்றிலும் அவற்றைச் சார்ந்து மக்கள் குடியேறியிருப்பதையும் ரங்ககிருஷ்ணனால் காணமுடிந்தது. கோயில்களில் தெய்வத்திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆகம முறைப்படி பூஜைகளும் வழிபாடுகளும் நடந்து கொண்டிருந்தன.

உண்மை நிலைமையை அறிவதற்காக அங்கேயிருந்த பரமபக்தர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான் அவன்.

"ஐயா பரம பக்தரே! நான் நீண்டகாலம் வடதேசங்களில் தீர்த்த யாத்திரை போய்விட்டு இப்போதுதான் மீண்டும் திரிசிரபுரம் திரும்பினேன். முன்பு நான் இந்த இடத்தில் கோயில்களைக் கண்டதில்லை. இப்போது காண்கிறேன். மக்களின் பக்தி உணர்வைப் பாராட்டவேண்டும். எப்போது இங்கே புதிதாகக் கோயில்களைக் கட்டினார்கள்?"

"அப்படிக் கேளுங்கள் சொல்கிறேன். இந்த நிலங்கள் கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமானவை. யுத்த காலங்களில் கலவரங்களுக்கும், மதப் பூசல்களுக்கும் பயந்து அவர்கள் எங்கெங்கோ சிதறி ஓடிவிட்டார்கள். அவர்கள் திரும்பி வருவதற்குள் இங்கே கோயில்களைக் கட்டிவிட்டதால் இனிமேல் அப்புறம் யாரும் நம்மை அசைக்க முடியாது ஐயா!"

"இன்னொருவருக்குச் சொந்தமான நிலத்தை நாம் ஆக்கிரமிப்பது பாவமில்லை?"

"ஒரு புண்ணிய காரியத்தை நிறைவேற்றுவதற்காகத்தானே அவசர அவசரமாக இந்தப் பாவத்தைச் செய்திருக்கிறோம்!"

"புண்ணியத்துக்காகச் செய்யப்படும் பாவ காரியங்கள் தவறில்லை என்பது தங்கள் கருத்து போலிருக்கிறது?"

"பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்" என்று வள்ளுவர் பெருமானே கூறியிருக்கிறாரே? சர்வேசுவரனைக் குடியேற்றும் கைங்கர்யத்தில் பாவம் ஏது? பரிகாரம் ஏது?-

இதற்கு பதிலாக ஏதும் கூறாமல் அங்கிருந்து மெல்ல நகர்ந்தான் மாறுவேடத்திலிருந்த ரங்ககிருஷ்ணன். தடியெடுத்தவன் தண்டல்காரன் என்கிற பாணியில் பெருவாரியான மக்கள், நியாயத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டிருப்பது நிதரிசனமாகத் தெரிந்தது. தாயிடம் விவரங்களைத் தெரிவித்தான். "தீர விசாரித்து எது நியாயமோ அதைச் செய்" என்றாள் அவள். நில உடைமைக் கணக்குகளையும், விவரங்களையும் கவனிக்கும் ஆவண அதிகாரிகளை அழைத்து அப்படிக் கோயில்கள் கட்டப்பட்டிருக்கும் நிலங்களின் உரிமைச் சாஸனங்களைப் பார்த்து விவரம் கூறுமாறு கட்டளையிட்டதில் அவர்கள் கூறிய விவரம் கிறிஸ்தவர்களுக்குச் சாதகமாயிருந்தது.

கிழவன் சேதுபதியின் மறவர் சீமையில் கிறிஸ்தவப் பாதிரியார்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் பற்றித் தான் முன்பு கேள்விப்பட்டிருந்தவை. ரங்ககிருஷ்ணனுக்கு நினைவு வந்தன. நாயக்கர் வமிசத்துக்கு நல்ல பெயர் கிடைக்கும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவன் எண்ணினான். பாதிரியார் மூலம் நிலங்களை இழந்து பாதிக்கப்பட்ட ஏழைக் கிறிஸ்தவ மக்களைக் கூப்பிட்டுச் சந்தித்தான். அவர்கள் இப்போது அநாதைகளாகத் தெருவில் நிற்பது புரிந்தது. இன்னொரு கவலையும் அவனுக்குள்ளே இருக்கத்தான் செய்தது. கட்டிய கோயில்களையும், பூஜையிலுள்ள விக்கிரகங்களையும் ஓரிடத்தை விட்டு அப்புறப்படுத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். அதைச் செய்ய முயன்றால் பெருவாரியான மக்களின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ள நேரிடும் என்பதையும் அவன் உணர்ந்துதான் இருந்தான்.

இதில் யாருக்கு நியாயம் வழங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருந்தாலும் தேவாலயங்களைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து நிர்வகித்து வருபவர்களையும் கூப்பிட்டு விசாரித்துவிட எண்ணினான் ரங்ககிருஷ்ணன். அவர்களைக் கூப்பிட்டனுப்பினான்.

மாறுவேடத்தில் அவன் அந்த தேவாலயங்கள் இருந்த பகுதிக்குப் போயிருந்தபோது அவனோடு உரையாடியிருந்த அந்தப் பரம பக்தர் உட்படப் பலர் வந்திருந்தார்கள். அவர்களில் யாரும் தாங்கள் செய்தது தான் நியாயம் என்பதாக வாதிடுவதற்குப் பதில், "தெய்வ கைங்கரியம் நடந்து முடிந்துவிட்டது இனிமேல் எதுவும் செய்யமுடியாது. பிரதிஷ்டைசெய்த மூர்த்திகளை இடம்பெயர்த்துக் கொண்டு போவது என்பது சாத்தியமில்லை வேண்டுமானால் அந்தத் கிறிஸ்தவர்களுக்கு வேறு இடங்களில் நிலம் ஒதுக்கிவிடுங்கள்"- என்றுதான் வாதிட்டார்கள். இனிமேல் தங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பு அவர்களிடம் இருப்பதைக் கண்டான் அவன்.