இராணி மங்கம்மாள்/சாதுரியமும் சாகஸமும்

விக்கிமூலம் இலிருந்து

15. சாதுரியமும் சாகஸமும்

கிழவன் சேதுபதி என்ற பெயரைக் கேட்டவுடனே தன் சொந்தத் துயரங்களைக்கூட மறந்து உறுதியும் கண்டிப்பும் திடமான முடிவும் உடையவளாக மாறியிருந்தாள் ராணிமங்கம்மாள்.

அரசியலில் ஏற்க வேண்டியதை ஓரிரு கணங்கள் தாமதித்து ஏற்பதும், எதிர்க்க வேண்டியதை ஓரிரு கணங்கள் தாமதித்து எதிர்ப்பதும்கூடி விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கி விடலாம் என்பதைக் கடந்த கால அநுபவங்களிலிருந்து அவள் நன்கு உணர்ந்திருந்தாள். புரிந்து கொண்டிருந்தாள். கணித்தும் வைத்திருந்தாள்.

'தான் ஒரு பெண்-அதனால் பலவீனமானவள்' என்று தன்னைப்பற்றி யார் எண்ணினாலும் அவர்களது எண்ணத்தைப் பொய் என்று உடனே நிரூபித்துக் காட்டும் துணிவோடு செயற்படுவது எப்போதுமே அவளுடைய வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

மகனையும், மருமகளையும் இழந்து தான் பலவீனமாக இருந்தாலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல எதிரிகள் நடந்துகொள்ளத் தயங்கமாட்டார்கள் என்று தான் அவளுக்குத் தோன்றியது. ராஜதந்திரிகளும் அரசாங்க அதிகாரிகளும் கூறிய யோசனைகளை மட்டுமே நம்பிவிடாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சுயமாகவும் சிந்தித்தாள் அவள்.

விஜயரங்க சொக்கநாதன் குழந்தையாக இருக்கும்வரை மறைமுகமாக ஆட்சிப் பொறுப்பின் பாரத்தைத் தாங்குவது என்று தனக்குள் முடிவு செய்து கொண்டிருந்தாள் அவள்.

ராணி மங்கம்மாள் குழந்தையோடு நல்லநாள் பார்த்து மதுரைக்குச் சென்றாள். ராணியின் பரிவாரங்களும் சுற்றமும் உடன் சென்றன. அக்கம்பக்கத்துப் பகையரசர்களை உத்தேசித்துத் திரிசிரபுரத்திலும் மதுரையிலும் மாறி மாறி இருப்பதுபோல் காட்டிக்கொள்வது நல்லதென்றுகூடச் சில ராஜதந்திரிகள் அபிப்ராயப் பட்டார்கள். ராணியும் அதைப் பற்றிச் சிந்தித்தாள். அக்கம் பக்கத்து எதிரிகளை தற்காலிகமான நண்பர்களாக்கிக் கொள்ளவும் அவள் முயலவேண்டியிருந்தது. எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்கிற சாணக்கியத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

தன் கையில் பேரக் குழந்தையோடும், மனத்தில் அரசியல் பொறுப்புகள் என்னும் சுமைகளோடும் ராணி மங்கம்மாள் மதுரைக்கு வந்தபோது சுற்றுப்புற அரசியல் சூழ்நிலைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. சிலரது மறைவால் வேறு சிலருக்குத் தைரியம் வந்தது. சிலர் தலையெடுத்த காரணத்தால் வேறு சிலர் தைரியத்தை மறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

மராத்தியச் சிங்கம் வீரசிவாஜி மறைந்துவிட்டதனால் அதுவரை அந்தப் பெருவீரனுக்குப் பயந்து சில ஆக்கிரமிப்புகளைச் செய்யாமல் இருந்தவர்கள் ஆக்கிரமிப்புகளுக்குத் துணிந்தார்கள்.

விரைந்து அப்படித் துணிந்தவர்களில் டில்லி பாதுஷாவும் ஒருவர். டில்லி பாதுஷாவின் கவனம் தெற்கே சிறிது சிறிதாகச் சிதறியிருந்த நாடுகள்மேல் விழுந்தது. அவற்றின் வளத்தையும் வாழ்வையும் ஏதோ ஒரு வகையில் தனக்கு அடிமைப்படுத்திக் கொள்ளவேண்டுமென்ற எண்ணம் அவன் மனத்தில் எழுந்தது.

சூரியோதயத்தில் சிறிய சிறிய நட்சத்திரங்கள் ஒளியிழந்து போவதைப்போல் வலிமை வாய்ந்த டில்லி பாதுஷாவின் எழுச்சியில் தென்னாட்டு அரசர்கள் ஒவ்வொருவராக வலுவிழந்தனர்.

அதுவரை மிகப் பெரிய பராக்கிரமசாலியாயிருந்த மைசூர் மாமன்னன் சிக்கதேவராயன் டில்லி பாதுஷாவை எதிர்க்க விரும்பாமலும் முடியாமலும் சமரசம் செய்து கொண்டு கப்பம் கட்ட இணங்கிவிட்டான். தஞ்சையை ஆண்டுவந்த மராத்திய மன்னனும் டில்லி பாதுஷா அவுரங்கசீப்புக்குக் கப்பல் கட்டத் தொடங்கி விட்டான். இந்தச் சூழ்நிலையில், 'தான் என்ன செய்வது' என்று சிந்திக்கத் தொடங்கினாள் ராணி மங்கம்மாள். அவசரமாக அவள் முடிவு எடுக்க வேண்டியிருந்தது.

முன்பு தன் மகன் ரங்ககிருஷ்ணன் பட்டத்துக்கு வந்த புதிதில் பாதுஷாவின் மிதியடிகளை வணங்கக்கோரி வந்த பிரதிநிதிகளுடன் ஏற்பட்ட சச்சரவும் அதே சமயம் அந்தச் சச்சரவோடு சச்சரவாக மறுக்காமல் அவர்களுக்கு, தான் செலுத்த வேண்டிய திறையைச் செலுத்தியிருந்தும் ராணி மங்கம்மாளுக்கு நினைவு வந்தன. அன்று தொடங்கிய சச்சரவைத் தொடர்வதா அல்லது சமரசம் செய்து கொள்வதா என்கிற பிரச்சனை எழுந்தது.

சுற்றி இருக்கிற எல்லாரும் விட்டுக் கொடுத்து அல்லது ஒத்துப்போகிற சமயத்தில் தான் மட்டும் முரண்பட்டு எதிர்த்துக் கொள்வதற்குச் சூழ்நிலை சரியாயிருக்கிறதா இல்லையா என்பதைச் சிந்தித்தாள் அவள்.

பாய்வதற்காகப் பின்வாங்கிப் பதுங்குவதும் பதுங்குவதற்காகப் பாய்வதுபோல் சீறுவதும் அரசியலில் மிகவும் இயல்பானவை என்று அவள் அறிவாள். புதிய சூழ்நிலையை எப்படி எதிர் கொள்ளலாம் என்று ராஜ தந்திரிகளையும் அரண்மனை இராயசத்தையும் கலந்து பேசினாள். இராயசம் சொல்லலானார்.

"எதிர் கொள்கிற காரியத்தையும் அந்தக் காரியத்தின் வலிமையையும், அதை எதிர்கொள்கிற தனது வலிமையையும், எதிரிகளின் வலிமையையும் எதிரிகளுக்குத் துணையாக வரப் போகிறவர்களின் வலிமையையும் சீர்தூக்கிப் பார்த்த பின்பே இதில் ஒரு முடிவுக்கு வரவேண்டியிருக்கும்."

"சுருக்கமாகச் சொன்னால் பெரும்பாலான அரசியல் முடிவுகள் சமயோசிதமாயிருக்க வேண்டும்."

"அரசியல் வெற்றி தோல்விகளே சமயோசித முடிவுகளாலும், சமயோசிதமில்லாத முடிவுகளாலும் தான் வருகின்றன."

"இன்றுள்ள சூழ்நிலையில் டில்லி பாதுஷாவை எதிர்த்துக் கொள்ளாமல் கொஞ்சம் தணிந்து போவதே நல்லது."

"இப்போது நாம் டில்லி பாதுஷாவை எதிர்த்துக் கொள்ள முற்பட்டால் இங்கே யார் யார் பாதுஷாவை ஆதரிக்கிறார்களோ அவர்களெல்லாரும்கூட உடனே நம் எதிரிகளாக மாறிவிடுவார்கள். அக்கம் பக்கத்திலுள்ளவர்களையும் விரோதித்துக் கொண்டு தொலை தூரத்தில் இருக்கின்ற வலுவான எதிரிகளையும் விரோதித்துக் கொள்வது சாதுரியமல்ல."

"நம்முடைய ராஜதந்திரம் என்பது நமக்கும் நம் மக்களுக்கும், நம் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களுக்கும் நன்மை செய்யக் கூடியதாயிருக்க வேண்டும்."

"ஆம் ராஜதந்திரத்தில் சுயநன்மைதான் முக்கியமேயன்றிப் பரோபகாரம் முக்கியமில்லை."

"தர்மங்களைப் போல் ராஜதந்திரங்கள் நிரந்தரமாயிருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா ராஜதந்திரங்களுமே சமயோசிதமானவை, தற்காலிகமானவை."

"இந்த அளவுகோலின்படி தான் நம்முடைய இன்றைய முடிவும் இருக்கவேண்டும்" என்று தனது தீர்மானத்தை அறிவித்தாள் ராணி மங்கம்மாள். டில்லி பாதுஷாவைத் தன்னைக் கட்டிக் கொண்டு மதுரைப் பெருநாட்டையும் சுற்றுப்புறங்களையும் ஆளுவதற்காக அவனுக்குத் திறைப்பணமும் செலுத்தினாள் அவள்.

டில்லி பாதுஷாவுக்குக் கப்பம் செலுத்தி அவனுடைய நட்பையும் பாதுகாப்பையும், விரோதமின்மையையும் அநுசரணையையும் பெற்றதன் மூலம் சில தற்செயலான பெரிய ராஜதந்திர வெற்றிகள் அவளுக்குக் கிடைத்தன. மங்கம்மாளுக்குச் சொந்தமான மதுரைப் பெருநாட்டுப் பகுதிகளில் எல்லையோரத்து ஊர்களில் சிலவற்றைத் தஞ்சை வேந்தன் கைப்பற்றித் தனக்கே சொந்தமான இடங்கள் போலப் பாவித்து ஆண்டு கொண்டிருந்தான்.

டில்லி பாதுஷாவை விட்டே அவன் உதவியால் தஞ்சை மன்னனிடமிருந்து மதுரைப் பெருநாட்டுக்குரிய தனக்குச் சொந்தமான ஊர்களை மீட்டாள் ராணி மங்கம்மாள். அவளுக்கு இந்த ஊர்களின் ஆட்சியுரிமையைத் திருப்பித் தராவிட்டால் டில்லி பாதுஷாவின் விரோதம் ஏற்படும் என்று பயந்து தானே வலிந்து ராணி மங்கம்மாளிடம் கத்தியின்றி இரத்தமின்றிப் போரின்றி போர்க் களமின்றி இப்படி ஒரு ராஜதந்திர வெற்றி இதனால் அவளுக்குக் கிடைத்தது. டில்லி பாதுஷாவுக்கு அடங்கிய பெரும்படைத் தலைவனான கல்பீர்கான் தென் திசைக்குப் படைகளோடு வந்தபோது சமயோசிதமான முறையில் அவனுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு அளித்து விலை மதிப்பற்ற பல பரிசுகளை வழங்கச் செய்தாள் ராணி மங்கம்மாள். அதைப் பெற்ற பின் அந்தப் படைத் தலைவன் ராணி மங்கம்மாளுக்குப் பெரிதும் உதவி செய்யக் கூடியவனாக மாறினான்.

தஞ்சை மன்னன் போன்ற அக்கம் பக்கத்து அரசர்கள் எல்லாரிடமும், "ராணி மங்கம்மாளின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஒரு கடுகளவு ஆக்கிரமிக்க முற்பட்டாலும் டில்லிப் பேரரசுக்கு அவர்கள் பதில் சொல்லவேண்டியிருக்கும்" என்று அந்தப் படைத் தலைவன் கடுமையாக எச்சரித்துவிட்டுச் சென்றான்.

போருக்குத் தலைமை ஏற்றுப் படையெடுத்துச் சென்று எதிர்க்கவும் எதிர்த்து வந்தவர்களைத் தாக்கவும் முடியாத பெண்ணாக இருந்ததனால் ராஜதந்திர முறைகளிலேயே தன் எதிரிகளைச் சமாளித்து வந்தாள் அவள்.

"ராணி மங்கம்மாளை விரோதித்துக் கொள்வது டில்லி பாதுஷாவுக்குக் கோபமுண்டாக்கும் காரியம்" என்று தென்னாட்டுச் சிற்றரசர்கள் பேரரசர்கள் எல்லாரும் தயங்கும்படி நம்பகமான பிரமை ஒன்றை வெகு விரைவில் அவளால் உருவாக்கிவிட முடிந்தது. திரிசிரபுரத்தில் எந்தப் பாதுஷாவின் பிரதிநிதியோடு தன் மகன் தன்மானப் போரைக் கிளப்பிக் குமுறி எழுந்தானோ அந்தப் பாதுஷாவின் பிரதிநிதிகள், படைத் தலைவர்கள் அனைவரும் டில்லிக்குத் திரும்பிப்போய் "தெற்கே நமக்குத் திறை செலுத்தும் அரசுகளில் ராணி மங்கம்மாளின் அரசைப் போல் நல்ல அரசு எதுவுமே இல்லை. பாதுஷாவையும் பாதுஷாவின் பிரதிநிதி களையும் வரவேற்று உபசரிப்பதிலும் விருந்தோம்புவதிலும் ராணி மங்கமாளுக்கு நிகரில்லை உத்தமமான விசுவாசமுள்ள பெண்மணி" என்று வாய் ஓயாமல் தன்னை அவர்கள் புகழும்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருந்தாள். இந்தச் சூழ்நிலை அவளையும் அவளுடைய ஆட்சியையும் கவசம்போல் பாதுகாக்கத் தொடங்கியிருந்தது.

இதைப்பற்றி உரையாடும்போது அவளே ஒரு நாள் இராயசத்திடம், "ஆண்களே சில சமயங்களில் மற்ற ஆண்களை முட்டாளாக்கிவிடலாம். ஆனால் என்னைப்போல் பெண்கள் எங்கள் முழுத் திறமையையும் சாதுரியத்தையும் பயன்படுத்தி முட்டாளாக்குவது என்று புறப்பட்டுவிட்டால் எங்களை யாரும் வெல்ல முடியாது" என்று சிரித்தபடியே சொல்லியிருந்தாள். அதைக் கேட்டு இராசயமும் பதிலுக்குச் சிரித்தார்.

"எப்படியோ ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தாயிற்று டில்லி பாதுஷாவின் விரோதம் தீர்ந்தது. அக்கம் பக்கத்து அரசர்கள் விரோதிகள் ஆக முடியாதபடி அவர்களைத் தடுத்தும் ஆயிற்று" என்றார் இராயசம். அதற்கு மங்கம்மாள் பதிலுரைத்தாள்.

"குழந்தை விஜயரங்கன் பெரியவனாகி முழு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்கிறவரை இப்படியெல்லாம்தான் இந்த ஆட்சியையும் நாட்டையும் நான் காப்பாற்றியாகவேண்டும் வேறு வழியில்லை."

வெறுத்துத் தற்கொலை செய்து கொண்டு விடவேண்டிய அளவு துயரங்களை அடுத்தடுத்து அநுபவித்து வாழ்க்கையே கசந்துபோன பின்னும் பேரன் என்கிற வம்சத்தளிர் வளர்ந்து தழைக்கின்ற வரை எல்லாக் கசப்புகளையும் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்ற பொறுமை அவளுக்கு வந்திருந்தது.

இப்போது வாழ்வா சாவா என்பது அவளையும் அவளுடைய அருமைப் பேரனும் தாயில்லாக் குழந்தையுமான விஜயரங்க சொக்கநாதனையும் பொறுத்த கேள்வியாக மட்டும் இல்லை. ஓர் அரச வம்சம் மேலும் தொடர்ந்து வாழப்போகிறதா அல்லது இதோடு அழிந்து விடப்போகிறதா என்ற கேள்வியாகவே இருந்தது. அதனால்தான் அவள் இந்த விஷயத்தில் இத்தனை பொறுமைகளையும் பிடிவாதத்தையும் சாகஸங்களையும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. முற்ற முற்ற அடியிலேயும் உள்ளேயும் வைரம் பாயும் தேக்க மரத்தைப் போல, அரசியலிலும் வைரம் பாய்ந்த முயற்சியும் பிரச்சனைகளை தயங்காமல் எதிர் கொள்ளும் திறனும் அவளுள் இப்போது நன்றாக வளர்ந்திருந்தன.

அதிக சிரமமும் பிரயத்தனமும் இல்லாமல் ராஜதந்திர சலனங்களைச் சிக்கல்களையும் ஏற்படுத்தியே தன் எதிரிகளைச் சமாளித்தாள் அவள். டில்லி பாதுஷாவிடம் நம்பிக்கையையும் மதிப்பையும் சம்பாதித்து அதன் மூலம் அந்தப் பாதுஷாவுக்குக் கீழ்ப்படிந்து அடங்கிய மற்ற அரசர்கள் எல்லாரும் தன்னிடம் எந்த வம்புக்கும் வராமல் மரியாதைக்குரிய எல்லைகளில் அவர்கள் ஒதுங்கி விலகியே நிற்கும்படி அவள் கவனித்துக் கொண்டாள்.

"இப்படி அரண்மனை அந்தப்புரத்திலிருந்து அதிகம் வெளியேறாமலே பெரிய பெரிய அரசியல் சாதனைகளை எல்லாம் அவள் நிறைவேற்றிக் கொள்ள முடிந்ததென்றால் அதற்கெல்லாம் காரணமான சாகஸத்திலும் சாதுரியத்திலும் அவள் தேர்ந்திருந்தது தான் காரணம.

அரண்மனையில் பேரனை வளர்த்தபடியே வெளியில் தன் ஆட்சியையும் அதன் எல்லைகளையும் கூட வளர்த்துப் பெருக்க முடிந்தது அவளால், தென்னாட்டின் ஒரே பெண்ணரசி என்ற முறையில் அவள் டில்லி பாதுஷாவின் இரக்கத்தையும் கருணையையும் சலுகைகளையும் அடைந்திருந்தாள். அதே சமயத்தில் தான் யார் மேலும் ஏமாளித்தனமான கருணையையும் தகுதியில்லாத இரக்கத்தையும் காட்டிவிடாமல் திடமாக இருந்தாள். ஒளரங்கசீப்பின் அரசியல் பிரதிநிதிகளாகவோ, படைத்தலைவர்களாகவோ யார் தெற்கே புறப்பட்டு வந்தாலும் அவர்களைத் தன்மேல் அதிகமான மரியாதை உள்ளவர்களாலும் தான் சொன்னபடி கேட்கக் கூடியவர்களாகவும் மாற்ற முடிந்த வித்தை அவளுக்குத் தெரிந்திருந்தது. பாதுஷாவின் பிரதிநிதிகளும் படைத்தலைவர்களும் அவளிடம் பொன்னையும் பொருளையும் அவற்றைவிட அதிக சக்தியுள்ள உபசார வார்த்தைகளையும், உபகாரத்தையும் அடைந்தார்கள். வசப்பட்டார்கள். மதித்தார்கள். சாகஸத்தால் யாருக்குப் பணிந்து கப்பம் கட்டினாளோ அவர்களையே வேறொரு விதத்தில் தன் விருப்பப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தாள். தன் விருப்பப்படியே எல்லாம் நிறைவேற்றிக்கொண்டிருந்தாள்.

எல்லாம் இப்படிச் சுமுகமாகப் போய்க் கொண்டிருந்தாலும் உள்ளூர அவளுக்கும் கவலைகள் இருந்தன. வருத்தங்கள் இருந்தன. வெளியே சொல்ல முடியாதபடி உள்ளார்ந்த ஊமைத் துயரங்கள் இருந்தன.

டில்லி பாதுஷாவை அவள் சரிப்படுத்தி விட்டாலும் மராத்தியர்களிடமிருந்தும், மராத்தியப் படைத்தலைவர்களிடமிருந்தும் அவளுக்கு அடிக்கடி தொல்லைகள் இருந்தன. அவர்களை அடக்கி வசப்படுத்த அவர்களுக்கும் அடிக்கடி பொருளை வாரியிறைக்க வேண்டியிருந்தது. அவர்களில் சிலர் எவ்வளவுதான் கொடுத்தாலும் திருப்திப்படாதவர்களாக இருந்தனர். அடிக்கடி பொருளுக்காக ராணி மங்கம்மாவைத் தேடி வந்தனர். ராணி மங்கம்மாள் மராத்தியர்கள் விஷயத்தில் பாம்பென்று தாண்டவும் முடியாமல் பழுதை என்று மிதிக்கவும் முடியாமல் திணறினாள். சிந்தித்துச் சிந்தித்து முடிவு தோன்றாமல் அந்த விஷயத்தில் திகைத்தாள்.