இராணி மங்கம்மாள்/பேரனின் ஆத்திரம்
விஜயரங்க சொக்கநாதனுக்கு அப்போது இரண்டுங்கெட்டான் வயது. கைக்குழந்தையாக இருந்தபோதே அவனுக்கு முடிசூட்டியாயிற்று என்று பேர் செய்திருந்தாலும் அவனுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்பதை அறிந்து அவன் சார்பில்தானே ஆட்சி நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வந்தாள் ராணி மங்கம்மாள்.
பேரனின் நன்மைக்காக அவனைப் பற்றிய நல்லெண்ணத்தோடு அவள் செய்துவந்த இக்காரியம் அவனாலேயே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டபோதுதான் அவளுக்கு ஆச்சரியமும் ஆத்திரமும் ஏற்பட்டது. ஊர் உலகமெல்லாம் தன்னை மெச்சிப் புகழும்படி தான் ஆட்சி நடத்திவந்தபோது தன் சொந்தப் பேரனே தனக்குத் தலைவலியாக உருவாகித் தொல்லை கொடுக்கத் தொடங்கியது அவள் மனத்தைப் பெரிதும் பாதித்தது.
அருமைத் தந்தையையும் ஆருயிர்த் தாயையும் அடுத்தடுத்து இழந்த குழந்தையைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்து ஆளாக்கிய தனக்கா இந்தக் கதி என்று எண்ணிய போது அவள் மனம் நலிந்தது. மைசூர் மன்னனையும், இராமநாதபுரம் கிழவன் சேதுபதியையும் போன்ற புறப்பகைவர்களைப் பற்றிக் கவலைப்படுவதைவிட அதிகமாக இந்த உட்பகைமையையும், இதற்குக் காரணமான பேரன் விஜயரங்கனையும் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தாள் அவள். பேரனின் மனதைக் கெடுத்துத் துர்ப்போதனை செய்யும் கலகக்காரர்களும் கெடுமதியாளர்களும் உள்ளேயே இருக்கிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் அவர்கள் கையும் களவுமாகச் சிக்கவில்லை.
பேரன் விஜயரங்கனுக்கு அப்போது பதினெட்டு வயது. அரண்மனையைச் சேர்ந்த சில துர்ப்போதனையாளர்கள் அவனைத் தோப்புத் துரவுகளுக்குத் தனியே அழைத்துச் சென்று மங்கம்மாளைப் பற்றித் தொடர்ந்து கோள் மூட்டினார்கள்.
இயல்பிலேயே விஜயரங்கன் இரண்டுங்கெட்டானாகவும் நைப்பாசைக்காரனாகவும் இருந்தான். பாட்டியின் கட்டுப்பாட்டி லிருந்து விடுபட்டு அரசனாக வேண்டும் என்கிற ஆசை உள்ளவனாக இருந்த அவனை மற்றவர்கள் மேலும் கலைத்தனர்.
"உன் தந்தை ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரின் காலத்திலும் இப்படித்தான் நடந்தது. அவருடைய இளமைப் பருவத்தில் பேருக்கு அவருக்கு முடிசூட்டிவிட்டு இவளே ஆட்சியை நடத்தினாள். இவளுக்குப் பதவி வெறியைத் தவிர வேறெதுவும் இல்லை. இவள் உயிரோடிருக்கிறவரை உன்னை ஆட்சி பீடத்தில் ஏறவே விடமாட்டாள். நீ இப்படியே வெறும் இளவரசு பட்டத்தைச் சுமந்து கொண்டு திரியவேண்டியதுதான். கடைசிவரை உன்னிடம் ஆட்சியை ஒப்படைக்காமலே உன்னை ஏமாற்றி விடுவாள் இவள். போதாக்குறைக்குத் தளவாய் அச்சையா வேறு இப்போது உன் பாட்டியோடு நெருக்கமாக இருக்கிறார். உன்னை எப்படி ஏமாற்றுவது என்பதற்கு அவர் வேறு யோசனைகளைக் கூறுவார் அச்சையாவும் பாட்டியும் இந்த ஜன்மத்தில் உன்னை ஆளவிடப் போவதில்லை" என்று அவர்கள் விஜயரங்கனிடம் இடைவிடாமல் உருவேற்றிக் கொண்டிருந்தார்கள்.
இளவரசன் விஜயரங்கள் அவர்களுக்குச் செவி சாய்த்தான். அவர்கள் கூறுவதெல்லாம் சரியாயிருக்கும் என்றே அவனுக்குத் தோன்றியது. பாட்டி தன்னைப் பிரியமாக அரவணைத்து ஆளாக்கி வளர்த்ததெல்லாம் அவனுக்கு மறந்துவிட்டது. ஆசை பாசத்தை மறைத்துவிட்டது. பாட்டி மங்கம்மாள்தான் தன்னுடைய முதல் எதிரி என்று எப்படியோ அவனுடைய மனத்தில் ஒரு தப்பபிப்ராயம் ஏற்பட்டுவிட்டது. அவனைச் சுற்றியிருந்தவர்களில் ஒருவர் கூட அந்தத் தப்பபிப்ராயத்தை மாற்ற முற்படவில்லை. மாறாக அதற்கு உரமேற்றி அதை மேலும் மேலும் அவன் உள்ளத்தில் வளர்க்கவே முயற்சி செய்தார்கள்.
இராயசம் அச்சையாவுக்கும் தன் பாட்டிக்கும் தகாத முறையில் உறவு இருப்பதாகத் தன்னிடம் கோள்மூட்டியவர்களின் கூற்றை அவன் நம்பினான். 'கெடுமதி கண்ணுக்குத் தோற்றாது' என்ற பழமொழி விஜயரங்கனின் விஷயத்தில் உண்மையாயிருந்தது. கலகக்காரர்களின் போதனையே அவன் மனத்தினுள்ளே உருவேறிற்று. தான் அரசாட்சியை அடையாமல் இருக்கப் பாட்டி சதி செய்கிறாள் என்றே நம்பினான் அவன்.
போதாக்குறைக்கு அவனைக் கெடுத்த வந்தவர்கள் அவன். மனத்தில் பதியும்படி ஒன்றைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. அவர்கள் கட்டிக் காட்டியது அப்போது பொருத்தமாக இருந்தது. உடனே நம்பி ஏற்கும்படியாகவும் கூட இருந்தது.
இடக் கையால் தாம்பூலம் தரித்துவிட்ட பாவத்திற்காக மங்கம்மாள் ஏதேதோ தானதருமங்களைச் செய்யப்போக அதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விஜயரங்கனிடம் சொல்லித் தூற்றுவதற்கு இடம் கிடைத்தது.
"அருமை இளவரசே! உங்கள் பாட்டியார் மகாராணி மங்கம்மாள் போகிற போக்கைப் பார்த்தால் காற்றையும் காவிரித் தண்ணீரையும் தவிர உங்களுக்கு வேறு எதையும் மீதம் வைத்து விட்டுப் போகமாட்டார்கள் போலிருக்கிறது. அரண்மனைச் சொத்துகள் எல்லாம் தான தருமங்களுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. கோயில் குளங்களுக்கும், தர்ம சத்திரங்களுக்கும் போவதற்கு இது என்ன பிள்ளையில்லாத சொத்தா? இந்தச் சொத்து ஏன் இப்படிப் பாழ் போகிறது? ஏற்கெனவே பாதி ராஜ்யத்தைக் கிழவன் சேதுபதி பறித்துக் கொண்டாயிற்று. மீதி இருப்பதையும் எவனாவது பறித்துக் கொள்வதற்குள்ளாவது ஆட்சியை நீங்கள் கைப்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் காலம் இப்படியே இளவரசுப் பட்டத்தோடு கழிய வேண்டியதுதான். இளவரசுப் பட்டத்தால் என்ன லாபம்? ஆட்சி மட்டும் பாட்டியிடம். வெறும் இளவரசுப் பட்டம் மட்டும் உங்களிடம். நீங்கள் உடனே தட்டிக் கேட்காவிட்டால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது" என்று தூபம் போட்டார்கள் கலகக்காரர்கள். விஜயரங்கன் அதைக் கேட்டு ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்காமல் புத்தி பேதலித்துப் போனான். தன் நன்மைக்காகவே அவர்கள் அந்த யோசனைகளைச் சொல்வதாக நம்பினான். அவர்களுடைய சுயநன்மைக்காகவே ஆட்சி தன் கையில் வரவேண்டுமென அவர்கள் நினைத்துத் தன்னைத் தூண்டுகிறார்கள் என்பது அப்போது அவனுக்குப் புரியவில்லை.
பாட்டி ராணி மங்கம்மாளிடம் நேரில் போய் இரண்டில் ஒன்று கேட்டுவிடுவது என்று பிடிவாதமான முடிவுக்கு வந்தான் விஜயரங்கன். அரசாட்சி தொடர்பாகத் தன்னை எதுவுமே கலந்தாலோசியாமல் ஒதுக்கி வைக்கும் பாட்டியிடம் ஏதோ பெரிய சூழ்ச்சியும் சூனியக்கார எண்ணமும் இருப்பதாக அவன் நம்பத் தொடங்கிவிட்டான். ஆனால் ஒரு சிறு சந்தேகமும் இருந்தது. அந்தச் சந்தேகத்தைத் தனக்குப் போதனை செய்த நண்பர்களிடமே அவன் கேட்டு விட்டான்.
"ஒருவேளை என் கோரிக்கையைப் பாட்டிமறுத்துவிட்டாலோ, கண்டிப்பாக முடியாது என்று பதில் சொல்லி விட்டாலோ, அப்புறம் என்ன செய்வது?"
"அவள் மட்டும் முடியாதென்று சொல்லட்டும். அதன் பிறகு நாங்கள் அடுத்த யோசனையைச் சொல்கிறோம். முதலில் நீங்கள் அவளிடம் போய்க் கேட்பதைக் கேட்டு விட்டு வாருங்கள்."
"நான் ஒன்றும் ஏமாளியில்லை. இதோ இப்போதே கேட்டு விட்டு வந்துவிடுகிறேன்" என்று ஆவேசத்தோடு புறப்பட்டான் விஜயரங்கன். அவன் முகம் சினத்தால் சிவப்பேறியிருந்தது. பார்வையில் கோபக்கனல் தெறித்தது. நெஞ்சில் பதற்றமும் படபடப்பும் நிறைந்திருந்தன.
அவன் தேடிச்சென்ற சமயம் அந்தப்புரத்தில் சில மூத்த தோழிப் பெண்களோடு அமர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தாள் ராணி மங்கம்மாள். விஜயரங்கன் புயல் போல் நேரே உள்ளே பாய்ந்தான். அவன் வந்த நிலைமையைப் பார்த்து மங்கம்மாளே தோழிப் பெண்களை விலகிச் செல்லுமாறு சைகை செய்தாள். அவர்கள் சென்றனர். அவனைத் தன் அருகே அமரச் சொல்லிப் பாசத்தோடும் பரிவோடும் அவள் அழைத்தாள். அவன் அமரவில்லை. வெறுப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
"என்ன வேண்டும் விஜயரங்கா பாட்டியின்மேல் இன்று உனக்கு ஏன் இத்தனை கோபம்?"
"உங்கள் பக்கத்தில் அமர்ந்து அத்தைப் பாட்டிக் கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பதற்கு நான் இன்னும் பச்சைக் குழந்தையில்லை பாட்டி!"
"உண்மைதான் உனக்கு வயதாகிவிட்டது. ஒப்புக்கொள்கிறேன்."
"நீங்கள் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளவிட்டாலும் அது உண்மையே பாட்டி! உங்களுக்கு எதுதான் நினைவிருக்கிறது?"
உங்களுக்கு மற்றவர்கள் வயதும் நினைவிருப்பதில்லை; உங்கள் வயதும் நினைவிருப்பதில்லை."
அவன் இந்த வார்த்தைகளைச் சொல்லுகிறவரை விளையாட்டாக ஏதோ பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளின் முகபாவம் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் இறுகியது. நெகிழ்ச்சி தவிர்ந்து கடுமையாக மாறியது. அவள் தலைநிமிர்ந்து விஜயரங்கனைக் கூர்ந்து பார்த்தாள். அவன் மெய்யாகவே அடக்கமுடியாத ஆத்திரத்தோடு தன்னிடம் வந்திருப்பது புரிந்தது.
"ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளிக் கொட்டி விடாதே விஜயரங்கா கொட்டிய வார்த்தைகளைத் திருப்பி மறுபடி எடுத்துக்கொள்ள முடியாது. யாரிடம் பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பேசு!"
"நல்ல ஞாபகத்தோடு தான் பேசுகிறேன் பாட்டி வயதாகி மூத்த பின்னும் ஆள வேண்டும் என்கிற பதவி ஆசையையும் வேறு ஆசைகளையும் விடமுடியாத மகாராணி மங்கம்மாளிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு ஞாபகமில்லாமற் போகவில்லை. நன்றாக ஞாபகமிருக்கிறது."
“நாக்கை அடக்கிப் பேசக் கற்றுக்கொள்."
"முதலில் உங்கள் வயதுக்குத் தகுந்த அடக்கத்தை நீங்கள்தான் கற்றுக் கொள்ளவேண்டும்."
"உன்னை வளர்த்து ஆளாக்கியதற்கு எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்."
"இப்படிப் பொய்ப் புலம்பல் புலம்பியே என்னை இனி மேலும் நீங்கள் ஏமாற்றிவிட முடியாது பாட்டி!"
"நீ என்ன சொல்கிறாய்? எதைச் சொல்கிறாய்? நான் எதற்காக உன்னை ஏமாற்ற வேண்டும்?"
"என்னை ஏமாற்றினால்தானே நீங்கள் தொடர்ந்து ஆளமுடியும்? என் தந்தையார் காலத்திலும் அவரை ஏமாற்றிக் கைப் பொம்மையாக வைத்துக்கொண்டு நீங்களே ஆட்சி நடத்தினீர்கள். இப்போதும் அதையே தான் செய்கிறீர்கள்."
"உன் நன்மைக்காகத்தான் அதைச் செய்கிறேன். உனக்குப் பக்குவம் வந்ததும் நீயே ஆளலாம். அந்த நல்ல நாளை எதிர்ப் பார்த்துத்தான் நானும் காத்திருக்கிறேன். உன்னிடம் ஆட்சியை ஒப்படைப்பதைவிட மகிழ்ச்சியான சம்பவம் என் வாழ்வில் வேறொன்றும் வரப்போவதில்லை அப்பா!"
"வீணாக நாடகமாடிப் பயனில்லை! இப்படிச் சொல்லிச் சொல்லியே எனக்குக் குழிபறிக்க வேண்டாம் பாட்டி!"
"உன் மனத்தை யாரோ கெடுத்திருக்கிறார்கள். அதனால்தான் நீ இப்படியெல்லாம் உளறுகிறாய்."
"உளறுவது யார்? நானா? நீங்களா?"
"உன் மேல் பிரியமில்லாமலா நீ மூன்று மாதத்துப் பாலகனாக இருக்கும்போதே உனக்கு முடிசூட்டினேன்."
"நல்லதற்காகவும், பிரியத்துக்காகவுமா அப்படிச் செய்தீர்கள்? என்னை ஏமாற்றிவிட்டு நீங்களும் தளவாய் அச்சையாவும் உல்லாச வாழ்க்கை வாழலாமென்று..." அவன் முடிக்கவில்லை. அதற்குள் அவள் குறுக்கிட்டாள்.
"விஜயரங்கா. வாயை மூடு..." அந்த மாளிகையின் நான்கு சுவர்களிலும் எதிரொலிக்கும்படி கூப்பாடு போட்டாள் ராணி மங்கம்மாள். பேரன் வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களைக் கேட்டு தீயை மிதித்தவள்போல் ஆனாள் அவள்.
"இந்த அதிகாரமும் அடக்குமுறையும் இனிமேல் பலிக்காது பாட்டி நீங்களாக அடங்காவிட்டால் நானே உங்களையும் அடக்க வேண்டி வரும்..."
இதைக் கேட்டு ஆத்திரத்தை அடக்க முடியாமல் சீறி எழுந்திருந்தாள் ராணி மங்கம்மாள். அவள் முகம் சிவந்து கண்களில் அனல் பறந்தது ஒரு விஷமக்காரக் குழந்தையை இரண்டு குட்டுக் குட்டினால்தான் அடங்கும் என்ற எரிச்சலுடன் அவள் அவனை எட்டிப் பிடிக்க முயன்றபோது அவன் விருட்டென்று அங்கிருந்து வெளியேறிச் சென்று விட்டான்.
காவற்காரர்களை அழைத்து அவனைச் சிறைபடுத்திக் கொண்டுவந்து தன் முன் நிறுத்தித் தண்டித்திருக்க அவளால் முடியும். அந்த அளவுக்குப் பேரன் அவளை அவமானப்படுத்தியிருந்தான் என்றாலும் நிதானமாக யோசித்து அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அவனை மற்றவர்கள் முன்னிலையில் பதிலுக்கு அவமானப்படுத்தவும் தண்டிக்கவும் அவள் தயங்கினாள். திருந்தி விடுவான் அல்லது தானே முயன்று திருத்தி விடலாம் என்று அவள் இன்னமும் நம்பினாள்.
ஆத்திரத்தில் பேரன் பேசிவிட்டுப் போயிருந்த ஒவ்வொரு சொல்லும் அவள் செவிகளில் நெருப்புக் கங்குகளாகச் சுழன்று கொண்டிருந்தன.
இவ்வளவு கடுமையான வார்த்தைகளை, பெற்ற தந்தையோ, தாயோ காலஞ்சென்ற ஆருயிர்க் கணவரோ கூட அவளிடம் பேசியதில்லை. பெற்றோரிடம் செல்லமாக வளர்ந்து கணவனிடம் மதிப்போடு வாழ்ந்து நாட்டு மக்களிடம் செல்வாக்கோடு வளர்ந்து பிரியமாக எடுத்து வளர்த்த சின்னஞ்சிறு பேரனிடம் இப்படி அவமானப்பட நேர்ந்ததே என்ற நினைப்பு ராணி மங்கம்மாளின் மனத்தை வலி உண்டாகும்படி இப்போது மிகவும் அழுத்தி உறுத்தியது.