இராணி மங்கம்மாள்/பேரன் பிறந்தான்

விக்கிமூலம் இலிருந்து

12. பேரன் பிறந்தான்

பேரிடி போன்ற இந்தச் செய்தியை அறிந்ததும் கர்ப்பிணியாக இருந்த சின்ன முத்தம்மாள் நிலை குலைந்து போனாள். வளைகாப்பணிந்த சமயத்தில் தன்னிடம் 'உனக்கு ஒரு கஷ்டமும் வராமல் பார்த்துக் கொள்வேன்' என்று உறுதி கூறியிருந்த ஆருயிர்க் கணவன் இன்று எல்லாக் கஷ்டங்களையுமே தன் தலையில் சுமத்தி இப்படி அமங்கலியாகவும், அநாதையாகவும் அழவைத்து விட்டுப் போனதை எண்ணி மனம் நைந்து வருந்தினாள். அவளது மங்கலக் கழுத்து மூளிக் கழுத்தாகிப் பொலிவிழந்தது.

"நான் இனிமேல் உயிர் வாழ்வதற்கே ஆசைப்படவில்லை! என்னைக் கணவனோடு வைத்து எரித்துவிடுங்கள். எனக்கு இந்த உலகமும் வேண்டாம். வாழ்க்கையும் வேண்டாம்" என்று ராணி மங்கம்மாளிடம் கதறினாள் அவள். வயிறும் பிள்ளையுமாக இருந்த அவளுக்கு ஆறுதல் கூறித் தேற்றுவது யாராலும் முடியாததாயிருந்தது. துயரங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும், வேதனைகளுக்கும் ஈடுகொடுத்துப் பழகியிருந்த ராணி மங்கம்மாளே உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் தவித்தாள். மனம் மறுகி அலமந்தாள்; அயர்ந்துபோனாள். அப்போது சின்ன முத்தம்மாளின் துயரவெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காவது தான் தனது உணர்வுகளை முதலில் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று எண்ணினாள், எல்லாரையும் போலத் தானும் அழுது புலம்பித் திகைத்து நிற்பது தன் எதிரிகளுக்கு மகிழ்வூட்டக் கூடிய காரியம் என்று அவளுக்கே தோன்றியது. ஆனாலும் தாய்ப் பாசம் அவ்வளவு சுலபமாக அடங்கிவிடக் கூடியதாயில்லை.

எதிர் காலத்தில் நாயக்க வம்சத்தின் நம்பிக்கைகளை எல்லாம் கொன்றுவிட்டு மாண்டு போயிருந்தான் ரங்ககிருஷ்ணன். தன்னுடைய ஆட்சிக்கும், அரசியலுக்கும் இனிமேல் தான் சோதனைக் காலம் தொடங்குகிறது என்பது ராணி மங்கம்மாளுக்குப் புரிந்தது.

விரோதங்களும், பொறாமைகளும் ஒரு பக்கம் இருந்தாலும், கிழவன் சேதுபதி உட்பட எல்லா அக்கம் பக்கத்து அரசர்களும் துக்கம் விசாரிக்க வந்துபோனார்கள். துக்கம் விசாரிக்கத்தான் வந்தார்களா அல்லது தான் எந்த அளவு சோகமிகுதியால் பலவீனப்பட்டுப் போயிருக்கிறோம் என்று நேரில் பார்த்துவிட்டுப் போக அவர்கள் வந்தார்களா என்னும் அந்தரங்கமான சந்தேகம்கூட ராணி மங்கம்மாளுக்கு இருந்தது. அந்தச் சந்தேகத்தில் ஓரளவு உண்மை இல்லாமலும் போகவில்லை.

ரங்ககிருஷ்ணன் சடலத்தை அரண்மனை எல்லையிலிருந்து மயானத்திற்காக எடுப்பதற்கு முன் முத்தம்மாளின் பிடிவாதம் எல்லை மீறியது. அவன் உடல் மீது விழுந்து புரண்டு கதறியழுது தன்னையும் அவனோடு சேர்ந்து எரித்துவிடும்படி மீண்டும் முரண்டு பிடித்தாள் சின்னமுத்தம்மாள். பணிப் பெண்களின் உதவியோடு ராணி மங்கம்மாள் சின்ன முத்தம்மாளைத் தனியே பிரித்து அழைத்துச் சென்று அவளிடம் பேசினாள்:

"உன் துயரத்தைவிட என் துயரம் பலமடங்கு பெரியது முத்தம்மா! மகன் இறந்த உடனேயே என் உயிரும் போயிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் பல்லைக் கடித்துக் கொண்டாவது நான் உயிர் வாழ வேண்டியிருக்கிறது. கணவனை இழந்த உன் துயரத்தைக் காட்டிலும் ஏற்கெனவே கணவனையும் இழந்து இன்று மகனையும் இழந்து தவிக்கும் என்துயரம் எவ்வளவு பெரியது என்று நினைத்துப் பார்."

"நியாயம்தான்! உங்களால் துயரத்தைத் தாங்க முடிகிறது. தாங்குகிறீர்கள். என்னால் முடியவில்லை. துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் பக்குவமும் எனக்கு இல்லை. எனக்கு நீங்கள் ஏதாவது உதவ முடியுமானால் அது இப்போது என்னைச் சாக விடுவதுதான்."

"சாவதும், வாழ்வதும் நம் கையில் மட்டும் இல்லையம்மா அளவற்ற துயரம் வரும்போது சாகவேண்டுமென்று நினைப்பதும், மகிழ்ச்சி வரும்போது வாழவேண்டும் என்று திட்டமிடுவதும் மனத்தின் ஆசாபாசங்களால் நிகழ்பவை உன் வயிற்றில் ஒரு சிசு வளர்கிறது. அது இந்த வம்சத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது. உன் கணவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமானால் இறப்பதுதான் ஒரே வழி என்று நீ நினைப்பது தவறு அம்மா! அவனுடைய கருவை வளர்த்துப் பெற்றெடுப்பதுதான் அவனுக்கு விசுவாசமான காரியம்...! உன்னைக் கொன்று கொள்ள வேண்டுமானால் உனக்கு உரிமையிருக்கலாம்! ஆனால் உன்னுள் வளரும் குழந்தையைக் கொல்லும் உரிமை உனக்கில்லை" என்று கண்டித்துக் கூறி அவளை நிர்ப்பந்தமாக ஓர் அறையில் அடைத்துச் சில பணிப் பெண்களையும் அவளோடு காவலுக்கு வைத்து விட்டுச் சென்றாள் ராணி மங்கம்மாள்.

மகன் ரங்ககிருஷ்ணனின் சடலத்துக்கான அந்திமக் கிரியைகள் நடந்தன. அதன்பின் சில நாட்கள் தொடர்ந்து அந்த அரண்மனையும் அதிலிருந்த மனிதர்களும் கலகலப்பற்றிருந்தார்கள். சின்ன முத்தம்மாளுக்கு ஆறுதல் தேறுதல் கூறி அவளைப் பாதுகாப்பதே ராணி மங்கம்மாளுக்குப் பெரிய பொறுப்பாக இருந்தது. அரசியல் பொறுப்புகள் எதையுமே அவள் கவனிக்க முடியவில்லை. இராயசம் கவனித்து வந்தார். அரண்மனையில் நடந்துவிட்ட துக்கச் சம்பவத்தின் காரணமாகக் கோயில்களில் தரிசனத்துக்குக் கூடச் செல்ல முடியாமல் இருந்தது. தங்களைத் தாங்களே சிறை வைத்துக் கொண்டது போல் திரிசிரபுரம் அரண்மனையில் நாட்களைக் கடத்தினார்கள் அவர்கள்.

சின்ன முத்தம்மாளின் அர்த்தமற்ற பிடிவாதமாகிய கணவனோடு உடன்கட்டை ஏறுவது என்பதைத் தடுத்து நிறுத்திவிட்டாலும் கர்ப்பிணியாகிய அவள் தற்கொலை செய்து கொண்டுவிடுவாளோ என்ற பயம் இன்னும் ராணி மங்கம்மாளுக்கு இருந்தது. தொடர்ந்து சின்ன முத்தம்மாள் விரக்தியோடு தானிருந்தாள். அவளுடைய வேதனை ஒரு சிறிதும் தணிந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் வயிறும் பிள்ளையுமாக இருக்கும் அவளை அரண்மனையில் ஒரு கணமும் தனியே விடாமல் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. சோக மிகுதியில் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவள் எதுவும் செய்து கொண்டுவிடக் கூடாதே என்று பயந்தாள் ராணி மங்கம்மாள்.

அம்மை கண்டு இறப்பதற்கு முன் மகன் ஆட்சி நடத்திய ஏழாண்டுக் கால வாழ்வை மீண்டும் நினைத்தாள். அவனுடைய அருங்குணங்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்தன. இப்படி ஒரு பெரிய பொறுப்பில் இல்லாமல் ஒரு நாட்டுப் புறத்துத் தாயாக இருந்தாலாவது ஒப்பாரி வைத்து அழுது துயரைத் தணித்துக்கொள்ள முடியும் என்று தோன்றியது ராணி மங்கம்மாளுக்கு ரங்ககிருஷ்ணன் செய்திருந்த தான தர்மங்களும், கட்டிய கோயில்களும் நினைவுக்கு வந்தன. அந்தணர்க்குத் தானமாக அளித்த சிற்றூர்களும், மக்கள் பசிப்பிணி தீர அங்கங்கே கட்டிய சத்திரம் சாவடிகளும் ஞாபகம் வந்தன. எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அரண்மனையிலேயே வளர்ந்த சின்ன முத்தம்மாளை மணந்து அவளோடு ஏகபத்தினி விரதனாக அவன் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு வந்தது. விருப்பு வெறுப்பில்லாமல் திரிசிரபுரத்தில் கிறிஸ்தவர்களின் நிலங்களை அவர்களுக்கு அளிக்குமாறு அவன் நீதி வழங்கியது நினைவுக்கு வந்தது.

பதவியேற்று முடிசூடிய புதிதில் மறவர் சீமையின்மேல் படையெடுத்துச் சென்று வெற்றி பெறாமல் திரும்பியிருந்தாலும் பின்னர் தன் தந்தை சொக்கநாத நாயக்கர் காலத்தில் இழந்த பகுதிகளை எல்லாம் மீட்டு வெற்றி பெற்ற மகனின் பெருமை நினைவுக்கு வந்தது.

குறிப்பாக ரங்ககிருஷ்ணன் தலையெடுத்த பின்பே மதுரை வளநாட்டுப் பகுதிகள் ஒவ்வொன்றாக நாயக்க மரபினரின் ஆட்சிக் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் வந்திருந்தன. வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்தது போல ரங்ககிருஷ்ணன் மாண்டு போயிருந்தான். அவன் உயிரோடிருந்து மீட்ட பகுதிகளை அவனுக்குத் தோற்ற ஒவ்வொரு சிற்றரசனும், இப்போது அவனில்லாத நிலைமையில் என்னென்ன நினைப்பான் என்று சிந்தித்தாள் ராணிமங்கம்மாள். நாயக்க மரபின் இந்த இழப்புகளும், சோகங்களும், பலவீனமான நிலைகளும் எதிரிகள் மனத்தில் என்னென்ன எண்ணங்களை ஏற்படுத்தும் என்று அநுமானம் செய்து பார்க்க முயன்றாள்.

மனிதர்களின் சாமர்த்தியங்கள் சில சந்தர்ப்பங்களில் நேர்கின்றன. வேறுசில சந்தர்ப்பங்களோ சாமர்த்தியங்களைத் தேடி அடையவைக்கின்றன. கடலில் இறங்காமல் நீந்த முடியாது; நீந்துவதற்குப் போதுமான ஆழமில்லாத தண்ணீரிலும் நீந்த முடியாது. மங்கம்மாளுக்கு அவள் இளமையிலிருந்தே நேர்ந்த ஒவ்வோர் அதிர்ச்சியும் சாமர்த்தியங்களில் ஒருபடி அவளை உயர்த்தக் கூடியதாகவே அமைந்திருக்கிறது. அவளுக்கு ஏற்பட்ட துயரங்களின் ஆழமே அவளை அவற்றில் நீந்திக் கரைகடக்க முடிந்தவளாகச் செய்திருக்கிறது. பலவீனமானவளாகவும், எந்த அதிர்ச்சியிலும் உடனே தளர்ந்து வீழந்துவிடக் கூடியவளாகவும் அவள் ஒருபோதும் இருந்ததில்லை. அவள் தந்தை இளமையில் பயமறியாதவளாக அவளை வளர்த்திருந்தது தான் காரணம்.

"உன்னை நான் சிறிதும் அடக்கவோ ஒடுக்கவோ கட்டுப்படுத்தவோ விரும்பவில்லை மகளே! நீ சுதந்திரமாகக் காட்டு மல்லிகைபோல் இஷ்டப்படி வளரலாம். சுதந்திரமாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத்தகுந்த நல்ல கட்டுப்பாடுள்ளவர்களாக மாறுவதும் கட்டுப்பாடாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத்தகாதபடி தாறுமாறாகத் திரிவதும் சகஜம். காடு மலைகளில் அலைகிற தண்ணீர் ஒருநாள் ஓரிடத்தில் கரைகளுள்ள நதியாக மாறிப் பேரும் புகழும் பெற்றுக் கடலை அடையும் தகுதியைப் பெறும் என்பதுதான் நியதி" என்று சிறுவயதில் தன் தந்தை தன்னிடம் கூறிய சொற்களை இப்போது மறுபடி எண்ணிப் பார்த்தாள் ராணி மங்கம்மாள்.

சின்ன முத்தம்மாளுக்குப் பிறக்கப்போகிற குழந்தை ஆணாக இருக்குமா பெண்ணாக இருக்குமா என்று சிந்தித்தாள் அவள். நாயக்க வம்சம் தொடர்ந்து நிலைத்து நீடிக்குமா என்பதே சின்ன முத்தம்மாளுக்குப் பிறக்கப் போகிற குழந்தையைப் பொறுத்து இருந்தது பிறக்கப்போகிற குழந்தை ஆணாக இருந்தால் கூட இன்னும் பல ஆண்டுகளுக்கு அதாவது அந்த ஆண்குழந்தை வளர்ந்து பெரிதாகிறவரை தான் ஆட்சிச் சுமையைக் கட்டிக்காக்க வேண்டியிருக்கும் என்பது அவளுக்குப் புரிந்திருந்தது. பிறக்கப் போகிற குழந்தையும் பெண்ணாக இருந்து விட்டாலோ அப்புறம் நெடுநாட்களுக்கு விடிவே இல்லை என்று தோன்றியது.

"ரங்கா என்னையும் என் வம்சத்தையும் ஏமாற்றி விடாதே! எங்கள் குலம் விளங்க ஒரு செல்வனை அளித்துக் காப்பாற்று" என்று பெருமாளை அவள் வேண்டிக்கொள்ளாத நாளில்லை. விரத்தியில் பைத்தியக்காரத்தனமாக ஏதாவது செய்துகொண்டு விடப் போகிறாளே என்ற பயத்தில் சின்னமுத்தம்மாளைக் கட்டுக்காவலில் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதும் யாராவது பணிப்பெண்கள் அவளுடன் கூடவே இருந்தார்கள். துணைக்கு இருப்பதுபோல் உடனிருந்து, அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார்கள். கணவன் இறக்கும்போதே அவள் நிறை மாதக் கர்ப்பிணி, மனக்கவலைகள், குழப்பங்களில் நாட்கள் நகர்ந்தன.

ராணிமங்கம்மாள் அரங்கநாதப் பெருமானை வேண்டிக் கொண்டது வீண் போகவில்லை. சில நாட்களிலேயே சின்ன முத்தம்மாள் அழகிய ஆண்மகவு ஒன்றைப் பெற்றெடுத்தாள். ராணி மங்கம்மாளுக்குப் பேரன் பிறந்தான். வம்சம் விளங்கி வளர வழி பிறந்தது என்று தெய்வங்களுக்கு நன்றி விசுவாசத்தோடு வணக்கம் செலுத்தினாள் அவள்.

பாட்டனாராகிய சொக்கநாத நாயக்கரின் பெயரைக் குழந்தைக்கு வைக்க விரும்பினாள். மகனின் ஞாபகமும் எழுந்தது. பாட்டனாரின் அரசியல் தோல்வியும் மகன் ரங்ககிருஷ்ணனின் வாழ்க்கைத் தோல்வியும் இந்தக் குழந்தைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற தயக்கம் எழவே, இருவர் பெயரோடும் விஜய் என்ற அடைமொழியையும் சேர்த்து விஜயரங்க சொக்கநாதன் என்ற புதுப் பெயரைச் சூட்ட முடிவு செய்தாள். குழந்தை பெரியவனாகி எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்புக்கும் முன்னடையாளமாக விஜய் என்பதைப் பேரில் முதலில் இணைத்திருந்தாள்.

அந்தக் குழந்தை பிறந்த தினத்தன்றே இந்தப் பெயரைத் தன் மருமகளும், குழந்தையின் தாயும் ஆன சின்ன முத்தம்மாளிடம் கூறிப் பெயர் அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்று அபிப்ராயம் கேட்டாள். பெயர் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சின்ன முத்தம்மாள் மறுமொழி கூறினாள். குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆருயிர்க் கணவனை இழந்த துயரத்தை அவள் முற்றிலும் மறந்து தேறிவிடுவாள் என்று ராணி மங்கம்மாள் கருதினாள். அவளுக்கு நியமித்திருந்த கட்டுக்காவல்களையும் படிப்படியாகத் தளர்த்தினாள்.

"சின்னமுத்தம்மா இனி உனக்கு ஒரு கவலையும் இல்லை. உன் கணவன் ஆளக் கொடுத்து வைக்காத சாம்ராஜ்யத்தை மகன் ஆளுவான். மகனை வளர்த்துப் பெரியவனாக்கும் பொறுப்பு உனக்கு இருக்கிறது. நீ தைரியமாகவும், கவலையில்லாமலும் இருந்தால்தான் குழந்தையை நன்றாக வளர்க்க முடியும்" என்று அவளை உற்சாகப்படுத்த முயன்றாள் ராணி மங்கம்மாள்.

இதனால் எதிர்பார்த்த உற்சாகம் சின்ன முத்தம்மாளிடம் விளையவில்லை என்பது மங்கம்மாளுக்கு வியப்பளித்து. குழந்தை பிறந்த மகிழ்ச்சியை விடக் கணவனை இழந்துவிட்ட கவலையிலேயே அவள் மனம் குமைந்து கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.

"உன் மகன் பெரியவனாகி முடிசூடி இந்த நாட்டை ஆளும்போது கவலையெல்லாம் பறந்து போகுமடி பெண்ணே!"

"அதற்குள் என் கவலைகளே என்னைக் கொன்று தின்றுவிடும் போலிருக்கிறது மகாராணி!"

"நீ கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்துவதால் போனவன் திரும்பி வந்துவிடப்போவதில்லை பெண்ணே போனவனுக்குக் கவலைப்பட்டு உருகுவதைவிட வந்து பிறந்திருப்பவனுக்காக மகிழ்ச்சிப்படுவதற்குப் பழகிக்கொள் அம்மா!"

"எவ்வளவோ முயன்றும் என்னால் அது முடியவில்லை, மகாராணி என்னை மன்னித்து விடுங்கள்."

"உன் மகனின் பச்சிளம் முகத்தைப் பார்! உனது கவலைகள் தானே பறந்துபோகும்."

சின்னமுத்தம்மாள் இதற்கு மறுமொழி கூறவில்லை. அவளுக்குக் குழந்தை பிறந்த இரண்டாம் நாளும் இதே நிலையில்தான் இருந்தாள். மூன்றாம்நாள் சரியாகிவிடும் என்று ராணி மங்கம்மாள் நினைத்தாள். மூன்றாம் நாளும் சின்ன முத்தம்மாளிடம் எந்த உற்சாகமான மாறுதலும் நிகழவில்லை.