உள்ளடக்கத்துக்குச் செல்

இராணி மங்கம்மாள்/முடிவுரை

விக்கிமூலம் இலிருந்து

முடிவுரை

ராணி மங்கம்மாளின் மரணத்திற்குப் பின் புதிய தளவாய் கஸ்தூரி ரங்கய்யாவும், பிரதானி வெங்கடகிருஷ்ணய்யாவும் கூறிய யோசனைகளின் படி விஜயரங்கசொக்கநாதன் ராஜ்யத்தின் வருவாயைப் பெருக்கக் கருதி கொள்ளையடிப்பதுபோல் மக்கள் மீது அதிக வரிச்சுமைகளைத் திணித்தான். கொடுமைப் படுத்தினான்.

அவன் இட்ட புதிய வரிப்பளுவைத் தாங்க இயலாமல் மதுரைச் சீமை மக்கள் அரசுக்கு எதிராகக் கொதித்து எழுந்தார்கள். கிளர்ச்சிகளும் கலகங்களும் மலிந்தன. ஆட்சி அமைதி இழந்தது. முன்பு தானமாகக் கொடுக்கப்பட்ட இறையிலி நிலங்களுக்குக் கூட இப்போது வரி கொடுக்குமாறு அதிகாரிகளால் மக்கள் வற்புறுத்தப்பட்டார்கள்.

தனது இறையிலி நிலத்துக்கு வரி கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியது பொறுக்காமல் கோயில் பணியாளர் ஒருவர் கோபுரத்தின் உச்சியில் ஏறிக் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

விஜயரங்கனின் ஆட்சித் தொடக்கத்திலேயே நிகழ்ந்த பாட்டி மங்கம்மாளின் மரணமும், கோயில் பணியாளரின் தற்கொலையும் ஆட்சிக்குப் பெரிய அபசகுனங்களாகவும் நேர்ந்துவிட்டன. அந்தக் கெட்ட பெயரே தொடர்ந்து நீடித்தது. பின்பு மனம் மாறித் தளவாயும், பிரதானியும் புதிய வரிகளை நீக்கி மக்களிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி மக்களிடமிருந்து எதிர்பார்த்த நல்ல பெயர் மீளவில்லை. இழந்தவை இழந்தவையாகவே போயின. விஜயனின் திறமைக் குறைவால் நாளடைவில் ஆட்சியின் எல்லைகள் சுருங்கின. ராஜதந்திரக் குறைபாடுகளால் எதிரிகள் பெருகினர். கவலைகள் அதிகமாயின. ஒன்றும் செய்ய இயலவில்லை; மங்கம்மாள் பதினெட்டு ஆண்டுகள் கட்டிக்காத்த ஆட்சியைப் பதினெட்டு மாதங்கள்கூட விஜயனால் நன்றாக ஆளமுடியவில்லை.

விரக்தியாலும் கவலைகளாலும் திடீரென்று பக்திமானாக மாறிய விஜயரங்கன் தன் ஆட்சியின் வசத்திலிருந்த கொஞ்சம் நஞ்சம் சொத்துகளையும் தல யாத்திரைகளிலும், கோயில் திருப்பணிகளிலும் எல்லையற்றுச் செலவழித்தான்; மடாலயங்களுக்குக் கொடைகள் வழங்கினான். அரசியல் கடமைகளை மறக்கும் போக்கிடமாகப் பக்தியைப் பயன்படுத்தியதால் ஆட்சி மேலும் தேய்ந்தது. எங்கும் அதிருப்தி மலிந்தது. ராணி மங்கம்மாள் மறைந்த தினத்தன்று அவனைச் சூழ்ந்த அந்த இருளிலிருந்து மறுபடி அவனுக்கும் அவன் ஆட்சிக்கும் விடிவு பிறக்கவே இல்லை.

முற்றும்