இராமச்சந்திரக் கவிராயர் தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இராமச்சந்திரக் கவிராயர் தனிப்பாடல்கள்

பாடல் 45 தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 119 முதல் 127

பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்

1, 2, 3[தொகு]

வணக்கம் வருஞ்சில நேரங்குமர கண்ட
வலிப்பு வருஞ்சில நேரம் வலியச் செய்யக்
கணக்கு வருஞ்சில நேரம் வேட்டை நாய் போல்
கடிக்க வருஞ்சில நேரம் கயவர்க் கெல்லாம்
இணக்கம் வரும்படித் தமிழைப் பாடிப் பாடி
எத்தனை நாடிரிந்து திரிந்து உழல்வேன் ஐயா
குணக்கடலே அருட்கடலே அசுரரான
குரைகடலை வென்ற பரங்குன்று உளானே. (1)
மாசற்றிடு திருமேனியின் மறுவுற்றது போல
மாரப்பயல் கணை தைத்திட வந்து எய்தனன் ஐயோ
காசத்தனை புண்ணானது துட்டத்தனை அளவாய்க்
கையத்தனை ஆனான் மகண் மெய்யெத்தனை நோமோ
வாசற்படி கடவாதவண் மனது எப்படி ஆனான்
மதனன் சிலுகறியா தவண் மயல் எப்படி ஆனாள்
ஆசைப் படுவாரோ புருடரின் மேன் மடவார்கள்
அருணாசல ராயா தமிழ் அறியும் பெருமானே. (2)
புல்லுக் கட்டும் விறகும் சுமந்தபேர் பூர்வ காலத்துப் புண்ணிய வசத்தினால்
நெல்லுக் கட்டும் பணக் கட்டும் கண்டபின் நீலக்கல்லில் கடுக்கனும் போடுவார்
சொல்லுக் கட்டும் புலவரைக் கண்டக் காற்றூறிப் பாய்ந்து கதவை அடைத்து எதிர்
மல்லுக் கட்டும் மடையரைப் பாடவோ மலைச் சாரலில் வாழ் பெரியம்மையே. (3)

4,5,6[தொகு]

வெண்ணெய்க் கட்டியும் சீனியும் ஊட்டலாம்
விக்கிக் கொள்வதற்கு என்செய்யலாம் ஒரு
பெண்ணைக் கட்டிக் கொடுத்திடலாம் பிள்ளை
பெறுவதற்கும் உடன் படுவார்களோ
பண்ணைக் கட்டிய மென் மொழியாளும் தம்
படுக்கை வீட்டில் வந்தாளே யவள் தனைக்
கண்ணைக் கட்டி யணையாமல் ஏன்விட்டீர்
கழனி சூழும் பழனியில் வேலரே. (4)
ஏதிலே வறியர்க்கும் இனியகவிப் புலவருக்கும் இரங்கி யந்தப்
போதிலே தனம் கொடுக்கும் தஞ்சை நகர்க் குருவப்ப பூபனெற்குக்
கோதிலே கிடந்து உழலும் பலரிடத்திற் சென்று தமிழ் கூறா வண்ணங்
காதிலே யொட்டிட்டுத் தாடையின் மோதக் கடுக்கன் தானிட்டானே. (5)
வம்பிறைக்கும் கடம்பிறைக்கும் பெரும்பிறைக்கு நிகராக வளர்ந்த ஒற்றைக்
கொம்பிறைக்கும் தாதையராங் கடனாகைக் காரோணர் கொன்றை நல்கார்
அம்பிறைக்கும் விழிப்பரவை ஆயர்குழல் கொல்லனுலை அனலில் காய்ந்த
செம்பிறைக்கும் வெண்பிறைக்குங் கரும்பிறைக்கும் ஒருத்தி தனித்து என்செய்வாளே. (6)

7,8,9[தொகு]

மூங்கிலிலே ஒளித்து இருந்தான் முக்கண் சாமி
முதிய கடல் போய் படுத்தான் முகுந்த சாமி
தாங்கமலப் பொகுட்டு உறைந்தான் தலைநாற் சாமி
தடவரையில் உழன்று நின்றான் தகப்பன் சாமி
வாங்கி உண்ண வழி வகுத்தான் வயிற்றுச் சாமி
வாணருக்கு இங்கு உதவுவரார் மற்றோர் சாமி
ஓங்கியசீர் மயிலையிற் பொன்னப்ப சாமி
உதவிய வேங்கட சாமி உசித வேளே. (7)
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்காருள்ளே
அஞ்சரண மூன்றானை மறை பொழி நால் வாயானை யத்தனாகித்
துஞ்சவுணர்க் கஞ்சானைச் சென்னியணி யாறானைத் தகளெழானைச்
செஞ்சொன் மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வாம். (8)

மூன்று வெணபா

சலமேதோ சங்கந்தா பூணாரந் தாமே
கலைதா நாற்புங்கவன் மால்காணாப் – புலவுடைய
கங்கரா கோணாகலா மதியக் கோடீர
சங்கரா சோணா சலா. (9)

10,11,12[தொகு]

சீரிலங்கு மாடகூட வீதிவீறு தில்லையான்
திருவிருக்கு மார்பன் எங்கள் திருமலைக்கு முன்பு போய்
நீரிருந்து மாலை கேளுமவன் மறுத்து உரைக்கிலென்
நெஞ்சு சொல்லும் வார்த்தையாக நீங்கள் சொல்லும் வண்டுகாள்
வாரி யொன்று பாயிரண்டு மாலை மூன்று நாலுவேய்
மதியம் ஐந்து கங்குல் ஆறு மாரன் ஏழு வாடையெட்
டாரம் ஒன்பது அன்றில் பத்தடங்கலும் மொறுக்கு மால்
அத்தனைக் கெலாம் இலக்கென் ஆவி யொன்று காணுமே. ((10)
ஓரானை வனத்தே திருவொண்ணாவன் நிழற்கீழ்
உறையும் பெருமான் வீதியுலாவும் பவனிக்கே
நேராக நடப்பேன் வளைபறி போனது கேடபேன்
நில்லென்று தடுத்தால் வகை சொல்லென்று மறிப்பேன்
போரானையை விட்டான் முலையீர் ஆனையை விடுவேன்
பொழியம்பு தொடுத்தால் இருவிழியம்பு தொடுப்பேன்
தோரா வழக்கிட்டால் வகைவாரா வழக்கிடுவேன்
தொல்லைக் கணை கொண்டோ வகை வெல்லப் பெறுவேனே. (11)
அடல்கொண்டு எழுசூலப் படை யாரூர்ப் பெருமானார்
ஐயம் பகரென்றே எமதக வாசலில் வந்தார்
கடுகும்படி சென்றே பலிகொண்டே யெதிர் நின்றேன்
கைவந்தனம் என்றார் இதுகை வந்தனம் என்றேன்
மடவன்னம் அதென்றார் இது மடவன்னம் அதென்றேன்
வல்லோதனம் என்றார் இது வல்லோதனம் என்றேன்
கொடுவந்தனம் என்றார் இது கொடுவந்தனம் என்றேன்
கொள்ளார் பலி சொல்லார் அவர் கோட்பாடு அறியேனே. (12)

13,14,15[தொகு]

வீமனுக்கு மைந்தனார் வேதனாகும் வேதனுக்கு மைந்தனார் ஈசனாகுங்
காமனுக்கு மைந்தனார் வீமன்தம்பி கந்தனுக்கு மாமனார் காமன்றானே
மாமனுக்கு முன்றமையன் தந்தைகாலன் வையகத்தில் இம்முறைமை வழங்கலாலே
ராமனுக்குச் சீதைதங்கை யாகவேண்டும் ராவணனுக்குத் தகப்பன் ராமன்தானே. (13)
வெண்பிள்ளை பிறைநோக்குங் கரும்பிள்ளைக் குறிபார்க்கும் வேதாவென்னும்
மண்பிள்ளை திறந்தரற்றுங் கிளிப்பிள்ளை மொழிபயிற்று மடவார்க்கு எல்லாம்
என்பிள்ளை சிறுபிள்ளை எனக்கவளோ வொருபிள்ளை எளியேன் பெற்ற
பெண்பிள்ளை படுந்துயரம் பெரிய பிள்ளைக் காரெடுத்துப் பேசுவாரே. (14)
விறகு தறிக்கக் கறிநறுக்க வெண்சோற்று உப்புக்கு அடகு வைக்கப்
பிறகு பிளவு கிடைத்த தென்றால் நாலாறாகப் பிளந்து கொள்ளப்
பறகு பறகென்றே சொறியப் பதமாய் இருந்த பாக்கு வெட்டி
இறகு முளைத்துப் போவதுண்டோ எடுத்தீராயிற் கொடுப்பீரே. (15)

16,17,18[தொகு]

கட்டளைக் கலித்துறை

இரவலனே யுனக்கு இல்லாத தென்ன விதயம் என்ன
பரவுண வேதுசுவை யற்றதென்ன சொற்பானமை என்ன
தரவுரை செய்திட வென்றான தற்கொன்றுஞ் சாற்றிலன் யான்
வரதிரு வேங்கடநாதா வென்றேன் பொன் வழங்கினனே. (16)

விருத்தம்

கல்லாத வொருவனை நான் கற்றாய் என்றேன்
காடெறியும் அவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத வொருவனை நான் நல்லாய் என்றேன்
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்
மல்லாரும் புயம் என்றேன் சூப்பற்றோளை
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னே னுக்கில்லை என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே. (17)
ஆவீன மழை பொழிய வில்லம் வீழ
அகத்தடியாண் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுது என்று வதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டு ஒருவன் எதிரே செல்லத்
தள்ள வொண்ணா விருந்து வரச் சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்களோ தட்சணைகள் கொடுவென்றாரே. (18)

19,20,21[தொகு]

கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா
அல்லைத்தான் சொல்லித்தான் அரைத்தானோ அத்தானையோ வெங்கும்
பல்லைத்தான் றிறக்கத்தான் பதுமத்தான் புவியிற்றான் பண்ணினானே. (19)
வஞ்சகர்பால் நடந்தலைந்த காலில் புண்ணும்
வாசல் தொறும் முட்டுண்ட தலையிற் புண்ணுஞ்
செஞ்சொல்லை நினைந்து உருகும் நெஞ்சில் புண்ணுந்
தீருமென்றே சங்கரன்பாற் சேர்ந்தேன் அப்பா
கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்
கொடுங்காலால் உதைத்த புண்ணுங் கோபமாகப்
பஞ்சவரில் ஒருவன் வல்லால் அடித்த புண்ணும்
பாரென்றே காட்டி நின்றான் பரமன்றானே. (20)
கள்ளிக்கேன் முள்வேலி கழுதைக்கேன் கடிவாளங் கறுப்பில்லாத
உள்ளிக்கேன் பரிமளங் களுவர் நிலத்துக்கேன் விதைகள் ஒடித்துப்போடும்
கள்ளிக்கேன் கோடாலி துடைப்பத்திற்கேன் கவசஞ் சம்மா போகும்
பள்ளிக்கேன் அதிவீர மழவரங்க பூபனெனும் பட்டந்தானே. (21)

22,23,24[தொகு]

கயக்காவி நாறுங் குழம்பிற் பிரசண்டா
காரார் கொடைச் செங்கை யாரோ தன்மைந்தா
இயக்கா நின் மார்பில் செழும் புன்னை யந்தார்
இப்போதுநீ நல்கிலென் பேதை மார்பில்
சயக்காம வேளம் புதையாது முத்துத்
தாமஞ் சுடா சந்தனம் பூசினாலும்
செயக்காது வேயோ செவிக்கும் பொறுக்கும்
தீயென்ன மீளாது திங்கட் கொழுந்தே. (22)
சொன்னமன்னம் ஆடைதந்தான் வீதியில் வெற்றிலை மடித்துச் சுருளும் தந்தான்
கன்னவின் மோதிரம் தந்தான் சரப்பணி தந்தான் இரட்டைக் கடுக்கன் தந்தான்
செந்நெல் விளையூர் தந்தான் பேர்தந்தான் மல்லையில் வாழ் சிவந்தானுங்கட்
கென்ன தந்தான் என்றவர்கட்கு எத்தனை யுத்தரந் தந்தானி யம்பலத்தானே. (23)

நடுவெழுத்தலங்காரம்

அத்திரம் வேலாவலயம் இராசி யொன்றிற்
கமைந்த பெயர் மூன்றினிடை யக்கரத்தால்
மெத்த நடுக்கற்று உனை வந்தடைந்தேன் இந்த
விதனம் அகற்றிடு மற்றை எழுத்து ஓராறில்
பத்து உடையானைத் தடிந்து பெண்ணாச் செய்து
பரிவின் நுகர்வோன் இருதாள் பணிந்து போற்றும்
சித்தசனே தெளிய சிங்கன் தவத்தில் தோன்றுஞ்
சீதாராம ப்ரபல தியாகவானே. (24)

25,26,27[தொகு]

கல்லாலயமாந் தேவருமாங் கழுதை கசடர் பொதி சுமக்குங்
கடாவோ உழுது பயரிடற்காங் கட்டம் பன்றிக் கிரையாகும்
புல்லேறீசர் வாகனமாம் பொதியுஞ் சுமக்கும் பிணம் எனிலோ
பூசிமுடித்து மறையோர்க்குப் பொருளை யீந்து புகழெய்தும்
மல்லார் குட்டிச் சுவரெனிலோ மாடு முரைஞ்சு மறைவாகும்
மதியாத் துடைப்பந்தான் எனிலோ மாடகூடந்தனை விளக்கும்
அல்லா துலுத்தன் தனக்கு இணையா யாரை யுரைப்பேன் புவிமீதில்
அவனைக் குறித்துக் கூறுயிடத்து அவனுக்கு அவனே சரிதானே. (25)
வீரவெண்டைய ப்ரதாபர் தியாகராசர் கமலைசூழ்
வீதிகண்டு பவனிகண்டு விந்தைகண்டு பந்தியாய்த்
தூரநின்ற பூவைகாள் அடுத்து நின்ற கிள்ளைகாள்
துன்பமே யலாது பாவி சகம் அறிந்தது இல்லையால்
மாரனம்பு பட்ட காயம் ஆறுதில்லை யிரவெலாம்
மங்கைமார் தொடுத்த சண்டை மாறுதில்லை யென்செய்வேன்
ஆரிருந்தும் உதவி யில்லை யென்றன் ஆசை யொழியுமோ
அதுவும் இல்லை விதியை நொந்தும் ஆவதில்லை காணுமே. (26)

சத்தபங்கி

திமிரமறாத புலாதிகளே தருதேடரிதாய் மாறுஞ்
செனனமகா மால்வசமே மதமுறு சிறுமையின் மதியாலே
குமரசிகா மணியே கனிவாயருள் கூடெனவே கூறுங்
குருபர கோலாகலனே விதியொடு குறுகிய மிடிதீராய்
நமது வியாகதேவ சகோதர நாடொறுமே தேறும்
நவிமகள் சேர் வேடுவனே புதுமண நறுமலர் புனை மார்பா
அமரர் பிரானருள் குஞ்சரி தோள் புணர் ஆடவனே மீறும்
அரகர வேலாயுதனே முதுமறை யறுமுக முருகோனே. (27)

28,29,30[தொகு]

திமிரமறாத புலாதிகளே தரு - தேடரிதாய்
மாறுஞ் செனனமகா மால்வசமே - மதமுறு சிறுமையின் மதியாலே
குமரசிகா மணியே கனிவாயருள் - கூடெனவே
கூறுங் குருபர கோலாகலனே - விதியொடு குறுகிய மிடிதீராய்
நமது வியாகதேவ சகோதர - நாடொறுமே
தேறும் நவிமகள் சேர் வேடுவனே - புதுமண நறுமலர் புனை மார்பா
அமரர் பிரானருள் குஞ்சரி தோள் புணர் - ஆடவனே
மீறும் அரகர வேலாயுதனே - முதுமறை யறுமுக முருகோனே. (28)

நவபங்கி

அரிமருகா கருணாலயனே திடவாரணனே போதன்
னரியிமையோர் சூழ்புனிதா புலவடர் அயிலமர் பொற்கரனே
கரிமுகனேய சகோதரனே படிகாரணனே நாதய
கதியுறவே வானவனே நலமிகு கயிலை யனற்குருவே
குரவலர் நீபமணிப் புயனே வடிகூரமுதே யோதுங்
கருமணிசேர் மாரபினனே யுலகருள் குயிலுத வுத்தமனே
மரகத மாமயில் வாகனனே கொடி வாரணனே கோதின்
மதியகமே வாழ்குமரா குலவிய மயிலை மலைக் குகனே. (29)

நவபங்கி

அரிமருகா கருணாலயனே – திட – ஆரணனே
போதன் னரியிமையோர் சூழ்புனிதா புலவடர் - அயிலமர் பொற்கரனே
கரிமுகனேய சகோதரனே - படி - காரணனே
நாதங் கதியுறவே வானவனே - நலமிகு - கயிலை யனற்குருவே
குரவலர் நீபமணிப் புயனே – வடி - கூரமுதே
ஓதுங் கருமணிசேர் மாரபினனே - உலகருள் - குயிலுத வுத்தமனே
மரகத மாமயில் வாகனனே – கொடி - வாரணனே
கோதின் மதியகமே வாழ்குமரா – குலவிய - மயிலை மலைக் குகனே. (30)

31,32,33[தொகு]

சத்தபங்கியின் பிரிவு கட்டளைக் கலித்துறை

திமிறமறாத புலாதிகளே தருதேடரிதாய்
குமரசிகா மணியே கனிவாய் அருள் கூடெனவே
நமது விநாயக தேவ சகோதர நாடொறுமே
அமரர் பிரானருள் குஞ்சரி தோள் புணர் ஆடவனே. (31)

கொச்சகம்

தேடரிதாய் மாறுஞ் செனன மகா மால் வசமே
கூடெனவே கூறுங் குருபர கோலாகலனே
நாடொறுமே தேறுந் நவிமகள் சேர் வேடுவனே
ஆடலனே மீறும் அரகர வேலாயுதனே. (32)

கலி விருத்தம்

மாறுஞ் சென்னமகா மால்வசமே, கூறுங் குருபர கோலாகலனே
தேறுந் நவிமகள் சேர் வேடுவனே, மீறும் மரகர வேலாயுதனே. (33)

34,35,36[தொகு]

சிந்தடிவஞ்சி விருத்தம்

மதமுறு சிறுமையின் மதியாலே, விதியொடு குறுகிய மிடி தீராய்
புதுமண நறுமலர் புனைமார்பா, முதுமறை யறுமுக முருகோனே. (34)

குறளடிவஞ்சி விருத்தம்

சிறுமையின் மதியாலே, குறுகிய மிடிதீராய்
நறுமலர் புனைமார்ப, அறுமுக முருகோனே. (35)

வெண்பா

தேடரிதாய் மாறுஞ் செனனமகா மால்வசமே
நாடொறுமே தேறு நவிமகள்சேர்- வேடுவனே
ஆடவனே மீறு மரகர வேலாயுதனே
கூடெனவே கூறுங் குரு. (36)

37,38,39[தொகு]

நவபங்கியின் பிரிவு

அரிமருகா கருணாலயனே, கார்முகனேய சகோதரனே
குரவலர்நீப மணிப்புயனே, மரகத மாமயில் வாகன்னே. (37)
புலவடர் அயிலமர் பொற்கரனே, நலமிகு கயிலை யனற்குருவே
உலகருள் குயிலுத வுத்தமனே, குலவிய மயில மலைக் குகனே. (38)

கட்டளைக் கலித்துறை

அருமகா கருணாலயனே திகழ் ஆரணனே
கரிமுகனேய சகோதரனே படி காரணனே
குரவலர்நீப மணிப்புயனே வடி கூரமுதே
மரகத மாமயில் வாகனனே கொடி வாரணனே. (39)

40,41,42[தொகு]

கொச்சகம்

ஆரணனே போதனரி யிமையோர் சூழ் புனிதா
காரணனே நாதங் கதியுறவே வானவனே
கூரமுதே ஓதுங் குருமணி சேர் மார்பினனே
வாரணனே கோதின் மதியகமே வாழ்குமரா. (40)

சந்த விருத்தம்

போதன்னரி இமையோர் சூழ்புனிதா புலவடர் அயிலமர் பொற்கரனே
நாதங் கதியுறவே வானவனே நலமிகு கயிலை யனற்குருவே
ஓதுங் குருமணி சேர் மார்பினனே உலகருள் குயிலுத வுத்தமனே
கோதின் மதியகமே வாழ்குமரா குலவிய மயிலை மலைக்குகனே. (41)

கலி விருத்தம்

போதன்னரி இமையோர் சூழ்புனிதா
நாதங் கதியுறவே வானவனே
ஓதுங் குருமணி சேர் மார்பினனே
கோதின் மதியகமே வாழ்குமரா (42).

43,44,45[தொகு]

குறளடிவஞ்சி விருத்தம்

அயிலமர் பொற்கரனே, கயிலை யனற்குருவே
குயிலுத வுத்தமனே, மயிலை மலைக்குகனே. (43)


திடவாரணனே, படிகாரணனே
வடிகூரமுதே, கொடிவாரணனே. (44)

வெண்பா

ஆரணனே போதன்னரி யிமையோர் சூழ்புனிதா
கூரமுதே யோதுங் குருமணிசேர்- மார்பினனே
வாரணனே கோதின் மதியகமே வாழ்குமரா
காரணனே நாதங் கதி. (45)