இருட்டு ராஜா/கதையைப் பற்றி

விக்கிமூலம் இலிருந்து



கதையைப் பற்றி...

‘இருட்டு ராஜா’வின் கதாநாயகன் முத்துமாலை ஒரு சுவாரஸ்யமான பேர்வழி - ‘இன்ட்டரஸ்டிங் கேரக்டர்’. ஆனாலும் அவன் ஒரு சாதாரண சமூக மனிதன்.

எந்த மனிதனும் முழு அயோக்கியனில்லை. பரிபூரண நல்லவன் எவனும் இல்லை. கொடியன், தீயவன், ரொம்பவும் கெட்டவன் என்று பழிக்கப்படுகிற மனிதனிடமும் நல்ல பண்புகள் கலந்து கிடக்கின்றன. புனிதன், யோக்கியன், மிக நல்லவன் எனக் கருதப்படுகிற மனிதனுள்ளும் சில தீய குணங்கள் பதுங்கி வாழ்கின்றன.

பொதுவாக ஒவ்வொரு மனிதனுள்ளும் இயற்கையாகவே நல்ல குணங்களும் தீய பண்புகளும் கலந்தே இருக்கின்றன.

ஒருவன் கயவனாக, அதமனாக, மோசமானவனாக மாறுவதும், நல்லவனாகவே வளர்வதும் அவனுடைய சூழ்நிலைகள், அவனை பாதிக்கிற இதர மனிதர்கள், கால நிலைமைகள், இவற்றால் தாக்குறுகிற அவனது மனநிலை முதலியவற்றைப் பொறுத்து அமையும்.

முத்துமாலை சிந்திக்கத் தெரிந்தவன். அவன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறுவது போல, ‘வாழ்க்கை மனுசங்களோடு விளையாடுது. மனுசங்களை வச்சும்விளையாடுது.’ வாழ்க்கையினால், சமூகத்தினால், ஊரார் போக்கினால் பாதிக்கப்பட்ட அவன் ‘நாமும் வாழ்க்கையோடு-வாழ்க்கையை வச்சு-விளையாட வேண்டியதுதான்’ என்று துணிந்து விட்டான்.

ஊர்க்காரர்களே சான்று கூறுவது போல, அவன் ‘நன்மையை நெனச்சு நல்லதுகளை செய்யனுமின்னு  தான் அலைஞ்சான்’. அதற்கென தனக்குத் தானே அவன் வகுத்துக் கொண்ட தர்மங்களும், கையாண்ட போக்குகளும் விசித்திரமானதாகத் தோன்றலாம்.

இருட்டில், மறைவாக நிகழ்கிற அக்கிரமங்கள், அநியாயச் செயல்களில் தலையிட்டு, நீதி வழங்க வேண்டியது-தண்டனை கொடுப்பது அல்லது சமரசம் செய்து வைப்பது—தனது பொறுப்பு என்று நம்பியவன் போல் ஊர் விவகாரங்களில் குறுக்கிட்டு ஆக்கினைகள் செய்வதில் உற்சாகமாக ஈடுபட்டான் அவன்.

முத்துமாலை எந்தக் காலத்து மனிதனோ அல்ல. எனது சமகால மனிதன் அவன். அவன் செயலில் அமானுஷ்யமோ, அதீதமோ எதுவும் இல்லை.

அவன் நிகழ்த்தியதாக விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் கதைச்சுவைக்காக தொடர்பாக எழுதப்பட்டிருக்கின்றனவே தவிர, எனது ‘அனுபவ ஞானத்தில்’ வெவ்வேறு கால கட்டங்களைச் சேர்ந்தவை அவை.

முத்துமாலையின் விசிலடிப்பும் அவனது செயல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவை—வசீகரிக்கக் கூடியவை.

‘இருட்டு ராஜா’போன்ற நல்ல புத்தகங்களை அழகிய முறையில் வெளியிடும் நண்பர் ராமலிங்கம் அவர்களின் கவனிப்பில் நர்மதா வெளியீடு ஆகப் பிரசுரம் பெறுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இது ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என நம்புகிறேன்.

24–12–’85
—வல்லிக்கண்ணன்