இருட்டு ராஜா/11
மறுநாள் ராத்திரி,
தங்கராசு முத்துமாலைக்காகக் காத்திருந்தான். அவன் கோட்டைத் தெருவுக்கு வந்ததும் இவன், “முத்துமாலை, கொஞ்சம் நில்லு” என்று குரல் கொடுத்தான்.
முத்துமாலை நின்றான். திண்ணை அருகில் வந்தான். “என்ன வீட்டிலே எல்லோரும் வந்தாச்சா?” என்று விசாரித்தான்.
“இன்னும் வரலே.”
“கொடைக்குக்கூட வரலியா? நீ காயிதம் போடலையோ?”
“போட்டேன் போட்டேன். அவ புறப்பட்டு வரலே... மெதுவா வாறா! இங்கே வந்துதான் என்ன செய்யப் போறா? பொறந்த வீட்டிலே, கூட ரெண்டு வாரம் இருந்துட்டுத்தான் வரட்டுமே!”
“அது சரி...”
“கொடையிலே உன் ஆக்கினைகள்ளாம் ஏக தட புடலா இருந்துதே?” என்றான் தங்கராசு, சிரித்துக் கொண்டே.
முத்துமாலை சும்மா சிரித்தான்.
“நீ பெரிய ஆளுதான் முத்துமாலை”
“என்ன பெரிய ஆளு! ஒரு சின்னப் பொம்பிளை கூட புத்தி சொல்லும்படியா இருக்கு நம்ம நிலைமை!” அவன் குரலில் அலுப்பும் சலிப்பும் கசப்புடன் கலந்து வித்தன. “நேத்துப் பூரா எனக்கு மனசே சரியில்லாமப் போச்சு!”
“ஏன், என்ன விசயம்? ”
“திரிபுரசுந்தரி ஊருக்கு வந்திருக்கா. வீட்டுக்கு கூப்பிட்டா, போனேன். உபதேசம் பண்ண ஆரம்பிச்சிட்டா. இப்படி கெட்ட பேரு எடுத்துக்கிட்டு ஊரைச் சுத்துறதை விட ஊரை விட்டே போயி, எங்காவது மளிகைக் கட, வச்சுப் பிழைக்கலாம்னு வழி காட்டினா...ஊம்ம் நம்ம பிழைப்பு இந்த லெச்சனத்திலே இருக்கு”
ஒகோ, இதுவா சமாச்சாரம் என்று கொக்கரித்தது தங்கராசுவின் மனம். “அப்படியா அவ வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனா, பார்க்கலே, நீ பாத்திட்டியா! எப்படி இருக்கிறா!”
“அவளுக்கென்ன? முன்னாலே ராணி மாதிரி இருத்தாள்னா, இப்போ மகாராணி மாதிரி நடந்துக்கிறா. தோரணைக்கு ஒண்னும் குறைவில்லே, புருஷன்காரன் பணம் நிறையவே சம்பாதிக்கிறான்னு தெரியுது. பட்டுகளுக்கும் நகைகளுக்கும் குறைச்சல் இல்லே...”
“இருக்கலாம். சந்தோஷமா இருக்கிறாளாமா?” என்று தங்கராசு கேட்டான்.
“வசதிகளோடு வாழையிலே,தேவையானது எல்லாம் கிடைக்கையிலே, கையிலே ரொக்கப் பணம் வச்சுக் குலுக்க முடிகையிலே சந்தோஷம் இல்லாமலா போயிடும்? சந்தோஷமாத்தான் இருப்பா!”
“அப்படி இல்லே முத்துமாலை.! சந்தோஷம்கிறது இதுக்கெல்லாம் அப்பாற்பட்டதுன்னு உனக்குத் தெரியாதா என்ன? இதெல்லாம் இருந்தும் பலபேரு சந்தோஷமா இருக்க முடிகிறது இல்லே, இதெல்லாம் எதுவும் இல்லாமலிருந்தும் கூட, சில பேரு எப்பவும் சந்தோஷமா இருக்கிறாங்க, இல்லையா?”
“அப்போ திரிபுரம் பணம், பவிசு, பகட்டுகளோடு வாழ்ந்தாலும் உண்மையிலே சந்தோஷமாக இல்லேன்னா சொல்றே?” என்று ஆச்சர்யத்தோடு கேட்டான் முத்துமாலை.
“அப்படித்தான் தோணுது. அவளுக்கு ஏதோ மனக்குறை இருக்கத்தான்வேண்டும். தன்னுடைய குறைகளை, கவலைகளை, பிரச்னைகளை யாரிடமும் சொல்ல முடியாமல், தனக்குள்ளேயே எண்ணி எண்ணி குமுறிக் குமைந்து, குமைந்து அவளுக்கு நரம்புத்தளர்ச்சி நோயே வந்திருக்கு, ஹிஸ்டீரியா அடிக்கடி தலைகாட்டுதாம். மன சின் வறட்சியை, ஏமாற்றத்தை மூடி மறைக்கத்தான் அவள் பட்டும் பகட்டுமா, சந்தோஷமா இருப்பது மாதிரியான மேல்மினுக்கோடு வெளிச்சமிட்டுத் திரிகிறான்னு எண்ண வேண்டியிருக்கு!”
முத்துமாலை யோசனையில் ஈடுபட்டான்.
“அவளுக்கு என்ன குறை இருக்கப் போகுது தங்க ராசு?” என்று வியப்பாகக் கேட்டான் முத்துமாலை.
“புருஷனைப் பற்றியதுதான். அவன் என்ன பண்ணி, எப்படிப்பணம் சேர்க்கிறானோ? இவளை எப்படி நடத்து கிறானோ? பணம் கொடுத்திட்டாப் போதுமா? உண்மையான அன்பும் ஆசையும் காட்ட வேண்டாமா? எங்கெங்கோ போறான் வாறான். வேறே பொம்பளைக உறவு இருக்கும். எத்தனையோ இருக்கலாம். இதை எல்லாம் திரிபுரம் வெளியே சொல்றது இல்லை!”
“ஓகோ இப்படி ஒரு நிலைமை இருக்குதா!”
“இந்த ஊருக்கு அவள் வரணும்னு ஆசைப்பட்டாலும் அவன் அவளை அனுப்புறதில்லே. அந்தப் பட்டிகாட்டுக்கு என்ன போக்கு என்று அடக்கி விடுகிறான். இங்கே இருக்கிற வீட்டையும் நிலத்தையும் வித்துப் பணமாக்கிக் இட்டுவான்னு சொல்லித்தான் இப்போ அவன் அவளை அனுப்பியிருக்கான். நான் உசிரோடு இருக்கிற வரை எது ஒண்ணையும் பேச முடியாது. நான் கண்ணை மூடின பிற்பாடு என்ன வேண்டுமானாலும் பண்ணிட்டுப் போன்னு திரிபுரத்தின் அம்மா கண்டிப்பாச் சொல்விட்டா. அவ என் அம்மாவிடம் சொல்லித்தான் இவ்வளவு விஷயமும் எனக்குத் தெரியும்” என்று தங்கராசு விவரித்தான்.
“மெட்ராசிலே வீடு வாங்கப் போறதாச் சொன்னா. அங்கேயே வசிக்கப் போறோம். இந்த ஊரு எங்களுக்குப் பிடிக்கலேன்னு சொன்னா...”.
“இங்கே உள்ள வீட்டையும் நிலத்தையும் வித்து அந்தப் பணத்தை வரப் பற்றணும்கிற நெனைப்பிலே தான், மெட்ராசிலே வீடு வாங்கிப் போடுவோம்னு அவன் சொல்லியிருப்பான். பணம் கிடைச்சதும் அவன் என்ன பண்ணுவானோ! அவன் என்ன பிசினஸ் பண்றான்னு யாருக்குத் தெரியுது? சரியான ஃப்ராடுப் பேர் வழியா இருந்தாலும் இருப்பான்”
“இருப்பான் இருப்பான்!” என்றான் முத்துமாலை. “எவனும் எப்படியும் இருந்துட்டுப் போறான். நம்ம பாதையிலே குறுக்கிடாமல் இருந்தால் சரிதான்” என்றும் கூறினான். பிறகு போனான்.
அதன் பிறகு வெகு நேரம் வரையில் முத்துமாலைக்கு திரிபுரசுந்தரியின் நினைப்பே உள்ளத்தை அலைக்கழித்தது.
—அப்படியானால் அவள் சந்தோஷமாக இல்லையா? அவள் புருஷன் குணங்கெட்ட குப்பானாக இருப்பான் போலிருக்கு. அவள் பேச்சில் இருந்தே அது ஒரு மாதிரி விளங்கியதே!
அவள் ஊரோடு இருந்திருந்தால், அவன் ஆசைப்பட்டது போல் அவனையே கல்யாணம் செய்து கொண்டிருந்தால், திரிபுரத்தின் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருக்குமா என்றொரு எண்ணம் அவன் உள்ளத்தில் தெரித்தது.
அப்பவும் அவளுக்குச் சந்தோஷம் கிட்டியிருக்காது என்று சொல்லணும். நானும் ஒரு வகையில்—வேறொரு தினுசில் குணம் கெட்ட குப்பானாகத் தானே இருக்கிறேன்! அவளுக்கு இப்போதாவது பட்டுக்கும் நகைகளுக்கும் ருசிருசியான சாப்பாட்டுக்கும் வழி கிடைத்திருக்கிறது. அந்த விதத்தில் அவளுக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. என்னோடு அவளுடைய வாழ்க்கை இணைந்திருக்குமானால், இந்தவகை திருப்தியும் அவளுக்கு ஏற்பட்டிருக்காது.
முத்துமாலை சிரித்துக் கொண்டான்,
—திரிபுரத்தின் மன நிலையும் எளிதில் திருப்தி காண முடியாத ஒன்றுதான். அவள் எனக்கு மனைவியாக வந்திருந்தால், தான் திருப்தியடையாமல் போவதுடன், சதா தொண தொணத்தும் புழு புழுத்தும் எனது நிம்மதியையும் கெடுத்துப் போடுவாள் அப்பவும் அவளுக்கு மனநோய் வராமல் போகாது. உள்ளத்து நோயுடன் உடல் நோயும் வந்து சேரும் அவளே எனக்கு ஒரு நோய் ஆகிப் போவாள். மனைவி என்பவள் ஒருவனின் வாழ்க்கையை அரிச்சு பொக்காகப் போகும்படி பண்ணுகிற ஒரு நோய் தான்; தீராத நோய்தான். நல்லவேளை. நான் தப்பிச்சேன்...
இந்த நினைப்பு அவனுக்குச் சிரிப்பு உண்டாக்கியது. பலமாக சத்தம் போட்டுச் சிரித்தான் முத்துமாலை. இரவில் அது மூலைக்கு மூலை இடியின் உறுமல் மாதிரிப் புரண்டு ஒலித்தது.
வீட்டுக்கள் துாக்கம் பிடிக்காமல் புரண்டு படுத்த தங்கராசு நினைத்துக் கொண்டான். “முத்துமாலை புதுசா என்ன ஹ்யூமரைக் கண்டு கொண்டானோ தெரியலே, இப்படி ரசித்துச் சிரிப்பதற்கு.அவன் விசித்திரமான ஆசாமியாத்தான் இருக்கான்!” அவன் அம்மா “எதுக்குத்தான் கரிமுடிவான் இந்தப் போக்குப் போறானோ அவனுக்குப் பைத்தியம்தான் பிடிக்கப் போகுது கூடிய சீக்கிரம்” என்றுமுணு முனுத்தாள்.