உள்ளடக்கத்துக்குச் செல்

இருட்டு ராஜா/14

விக்கிமூலம் இலிருந்து

14

முத்துமாலை உள்ளத்தினுள் ரொம்பவும் நொறுங்கிப் போனான். ‘சீ, என்ன மனுசங்க, என்ன வாழ்க்கை’ என்ற அலுப்புச்சொற்களை அடிக்கடி மனசிலும், வெளிப்படையாகவும் உச்சரித்தான்.

திரிபுரசுந்தரியின் இறந்தகால வாழ்க்கையும், நிகழ் காலமும் எப்படிப்பட்டதாக இருந்திருப்பினும், இனி அவளுடைய எதிர்காலம் ஒளி நிறைந்ததாக இருக்காது என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது. அவள் புருஷன் அவளுடைய ஊரில் அவமானப்பட்டதற்காக அர்த்தமற்ற கோபமும் எரிச்சலும் கசப்பும் கொண்டு, அவளைப் பழிவாங்குவது போல் செயலாற்றுவான் என்றே அவன் மனசுக்குப்பட்டது. அவளுக்காக அவன் மிகுதியும் அனுதாபப்பட்டான்.

அந்த ஊர் அம்மன் கோயிலில் திருவிழாப் பந்தல் தீப்பற்றி எரிந்து சாம்பலாகி விட்டதும், அதைத் தொடர்ந்து பெரிய கோயிலில் சிலைகளைத் திருடும் முயற்சி நடைபெற்றதும் முத்துமாலையை வெகுவாகப் பாதித்தன. இது ஊருக்கு நல்லதில்லை, எல்லாம் கேடு காலத்துக்குத்தான் என்று அவன் மனம் குழம்பித் தவித்தது. அவனுக்கு எதிலுமே பிடிப்பில்லாமல் போய், அவனுள் ஒரு வெறுமை உணர்வு கப்பிக் கொண்டது. இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்தபோதும் தங்கராசு ஊரில் இல்லை. மனைவியை அழைத்து வருவதற்காக வெளியூர் போயிருந்தான். ஊர் திரும்பியதும் அம்மா கதையாகச் சொன்னாள். அடடா, நான் இல்லாமல் போயிட்டேனே என்று அவன் வருத்தப்பட்டான்.

அன்று ராத்திரி அவன் முத்துமாலையைச் சந்தித்தான். “துாங்கி வழிகிற இந்த ஊரிலும் பரபரப்பான சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தானிருக்குன்னு சொல்லு” என்று தமாஷ் பண்ண முயன்றான்.

ஆனால் முத்துமாலை உற்சாகமாக இல்லை. “ப்சா என்னத்துக்குத்தான் இப்படி எல்லாம் நடக்குதோ?” என்றான். அதில் விரக்தியும் வேதனையும் கலந்திருந்தன.

“நாரம்புநாதன் இனிமேல் திரிபுரத்தை கூட்டிக்கிட மாட்டான். அவன் இஷ்டம் போல் வடக்கேயே தங்கி விடுவான்னு பொம்பிளைகளெல்லாம் பேசிக்கிடுதாளாம். அம்மா சொன்னா...” என்று தங்கராசு கூறினான்.

“அந்த அயோக்கியன் அப்படியும் செய்வான், அதை நினைக்கையிலே தான் என் மனசு சங்கடப்படுது” என்று முத்துமாலை வருத்தப்பட்டான்.  “அப்படி நடக்கணும்னு இருந்தா நடந்திட்டுப் போகுது! யாரு என்ன பண்ண முடியும்? எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் அடிக்கடி சொல்லுவாரு—புருசனோடு வாழ முடியாம தன் வீட்டோடு வந்துவிட்ட மகளைப் பத்திப் பேசையிலே தான் சொல்லுவாரு . வீட்டிலே இருந்துட்டுப்போறா. சாப்பாட்டுக்கு தயக்கமில்லே. நிலம் விளைஞ்சு நெல்லு வரும். குடியிருக்க வீடு இருக்கு. செலவுக்குப் போதுமானபடி பணமும் இருக்கு. பின்னே என்ன? ஏன் வீணாக் கவலைப்படனும்? குமரி என்கிற குறை இல்லாதபடி கல்யாணம் நடந்தாச்சு. மலடு என்கிற வசை ஏற்படாதபடி பிள்ளைக பிறந்தாச்சு. அது போதும்னு சொல்லுவாரு திரிபுரத்துக்கும் இது பொருந்துமே” என்றான் தங்கராசு.

முத்துமாலை பெருமூச்செறிந்தான். “ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் எப்படி எப்படியோ கழியுது!இதெல்லாம் ஏன் இப்படியிருக்குன்னு புரிஞ்சுக்கிடவும் முடியலே...”

சிறிது நேரம் ரெண்டு பேரும் மவுனமாகவே நின்றார்கள்.

தங்கராசுதான் பேசினான்: “முத்துமாலை, இன்னும் ரெண்டு நாளிலே நான் திரும்பவும் வேலைக்குப் போயிருவேன்.பிறகு இந்த ஊருக்கு எப்போ வருவேனோ எனக்கே தெரியாது. வருஷக் கணக்கிலே ஆனாலும் ஆகலாம்!”

“அடுத்த தடவெ நீ இங்கே வாற போது நான் இருக்கேனோ என்னவோ! உன்னை நான் திரும்பவும் பார்க்க முடியாமலே போயிரலாம்!” இதை முத்துமாலை விளையாட்டாகப் பேசவில்லை என்பதை அவனுடைய குரலே அறிவித்தது.

“ஏன், வேறே எந்த ஊருக்காவது போய்விடத் திட்ட மிட்டிருக்கியா?” என்று நண்பன் கேட்டு வைத்தான்.  “இந்த ஊரை விட்டு என்ன, இந்த உலகத்தை விட்டே நான் போய்விடலாம்...”

"“என்னடே முத்துமாலை, உனக்கு தொண்ணுறு வயசா ஆச்சு கிழவன் மாதிரி பேசுதியே?”

“சாவுக்கு வயசு ஒரு கணக்கா? பழம் உதிரப் பூ உதிரப் பிஞ்சு உதிரன்னு எல்லாம் உதிர்ந்துக் கிட்டுத் தானே இருக்கு!”

“அதுக்காக?”

“இந்த உலகத்திலே இருந்து நான் என்ன தான் செய்யப் போறேன்னு எனக்குள்ளேயே ஒரு சலிப்பு வளர்ந்து வருது. சாமியாரு பள்ளிக் கூடத்திலே நாம் படிச்சபோது அறநெறி வகுப்பிலே ஞானப்பிரகாசம் சாமியார் அடிக்கடி சொல்வாரே, அது என் ஞாபகத்திலேயே இருக்கு இறைவனால் நேசிக்கப்படுகிறவர்கள் இளம் பிராயத்திலேயே இறந்து போகிறார்கள் என்பார். நான் இறைவனாய் நேசிக்கப்பட வில்லைன்னு எனக்குத் தோணும். அப்படி இருந்தால் தான் நான் ரொம்பச் சின்ன வயசிலேயே செத்துப் போயிருப்பேனேயின்னு நான் நினைத்துக் கொள்வேன்...”

“முத்துமாலை நீ ஏன் இதுமாதிரி எல்லாம் நினைக்கணும்? சந்தோஷமான விஷயங்களை நினைச்சுப்பாரு. எல்லோரும் சந்தோஷமா இருக்கும்படியான காரியங்களைச் செய்யணும்னு ஆசைப்படுவியா, அதை விட்டுப்போட்டு...”

முத்துமாலை திடீரென்று புறப்பட்டு விட்டான். “சரி நல்லபடியா போயிட்டு வா. எங்கே இருந்தாலும் என்னை நினைச்சுக்கோ. இதுதான் நம்ம கடைசிச் சந்திப்போ என்னமோ!” என்று சொல்லிப் போனான்.  இருட்டில் அவன் மறைகிற வரை, அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்றான் தங்கராசு. அவனுள்ளும் ஏதோ ஒரு குழப்பம், தெளிவில்லாத ஒரு வேதனை, சூழ்ந்து கனப்பதை உணர்ந்தான்.நெடுமூச்சியிர்த்தான்.

முத்துமாலைக்கு “மனசு சரியில்லை” என்ற நோய் பற்றிக் கொண்டது எதிலும் சலிப்பும் வெறுப்பும், எதுவுமே பிடிக்கவில்லை, ஒன்றுகூட அவனுக்கு திருப்தி அளிக்கக் கூடியதாகத் தோன்றவில்லை.

அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்காரர்களையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் அவன் எண்ணாத நேரமில்லை. அப்படி எண்ணிப் பார்க்கிறபோது, அவனுடைய மனம் மேலும் மேலும் குழம்பித் தவித்தது. ஏன் மனிதர்களுடைய வாழ்க்கை இப்படி இருக்கிறது? எதற்காக எல்லோரும் இவ்வாறு கஷ்டப்பட நேரிடுகிறது என்ற ரீதியில், விடை கிடைக்காத கேள்விகள் அவன் உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்தன.

ரொம்பப் பேர் சாப்பாட்டுக்கும் அவசியமான செலவுகளுக்கும் பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். காசு காசாக எண்ணி எண்ணிச் செலவு செய்ய வேண்டிய நிலையில் திண்டாடுகிறார்கள். அதே வேளையில் நாறும் பூநாதனைப் போன்றவர்கள் நூறு ரூபாய் நோட்டுடன் அலட்சியமாக செலவு பண்ண முடிகிறதே! ஐநூறு ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொன்னதுமே, அவன் அஞ்சு நோட்டுக்களை உடனே எடுத்துக் கொடுக்க முடிந்ததே! என்ன திமிர், எவ்வளவு அலட்சியம்...

இந்த நினைப்பு முத்துமாலையை ஓயாது அலைக் கழித்தது.

அந்த இடத்திலிருந்து கிளம்பிப் போனவன் எங்கே போனானோ என்ன செய்தானோ என்றும் நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்,  எங்கே போவான்? இதே மாதிரி ஒதுக்குப்புறமான கோயில் இருக்கக் கூடய ஊர் எதையாவது தேடித்தான் போயிருப்பான். கூட்டாளிகள் அங்கங்கே இருப்பார்கள். பணம் திரட்ட வேணுமல்லவா?

தொடர்ந்து அவன் மனம் திரிபுரத்துக்காக வருத்தப்படும். அவனுள் இன்னது என்று புரிந்து கொள்ள முடியாத ஒரு வேதனை கவிந்து வளரும்.

“தங்கராசு குறிப்பிட்டது போல, நாரம்பு திரிபுரத்தை அழைத்துக் கொள்ளாமலே இருந்து விடுவானோ?” என்ற சந்தேகமும் அடிக்கடி தலை துக்கியது.

அப்படி நடந்தால், திரிபுரமும் “வாழா வெட்டி” என்ற பட்டத்தைப் பெறுவாள். இந்த ஊர் வாழாவெட்டிகளுக்கு பேர் போனது! இப்பவே பலபேர் அந்த நிலையில் இருக்கிறார்கள். பத்தோடு பதினொண்ணு; அத்தோடு இதுவும் ஒண்ணு என்று திரிபுரமும் சேர்ந்து கொள்ளுவாளோ என்னமோ!

அந்தநிலை ஏற்பட்டால், அதுக்கு அவளா பொறுப்பு என்று கேட்டது முத்துமாலையின் மனம், பெண்களே குற்றம் செய்து விட்டதுபோல் தான் ஊர்காரர்கள் பழிக்கிறார்கள்; பரிகாசம் பண்ணுகிறார்கள். உண்மைக் காரணம் வேறாகத்தான் இருக்கும். புருஷன்காரன். மாமியார், அவர்கள் சொந்தக்காரர்கள், அவர்களுடைய குணங்களும் போக்குகளும் என்று பலப்பல கோளாறுகள் இருக்கும்...

அதை எல்லாம் எண்ணி எண்ணி மனம் குழம்பினான் முத்துமாலை. அவனது மனக் கலக்கத்தை அதிகப்படுத்துவது போலவே ஊரிலும் சம்பவங்கள் நிகழ்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/14&oldid=1143557" இலிருந்து மீள்விக்கப்பட்டது