இருட்டு ராஜா/17
முத்துமாலையும் ராமதுரையும் பஸ் நிலையத்தை நோக்கிப் போய் கொண்டிருந்தார்கள்.
எதிரே வந்த இருவரைப் பார்த்ததும், “ஹே, இவங்க கூட கோயிலுக்கு வாராங்களா!” என்று கிண்டலாகக் குறிப்பிட்டான் துரை.
“நானும் நீயும் கோயிலுக்கு வந்திட்டுப்போறோமே; மத்தவங்க வாறதிலே என்ன ஆச்சர்யம் இருக்கு?” என்றான் முத்துமாலை
“அதுக்கில்லே. இவங்களை உங்களுக்குத் தெரியாது? நம்ம ஊரு அணஞ்ச பெருமாள் பிள்ளை மருமகன் குமர குருவும், அவனோட அம்மா இசக்கியம்மாளும்தான். இவங்க ஒரு பெண்ணை வாழவிடாமல் துரத்தி அடிச்சு புண்ணியம் சம்பாதிச்சிருக்காங்களே! இப்போ கோயிலுக்கு வந்து என்ன வரம் கேட்கப் போறாகளோன்னு நினைச்சேன்.”
“ஒகோ” என்று நீட்டி இழுத்த முத்துமாலை எதிரே வத்து கொண்டிருந்த அம்மாளையும் மகனையும் கூர்ந்து நோக்கினான். அவர்கள் அருகில் வந்ததும், “வாங்கம்மா... வாங்க தம்பி” என்று ரொம்பத் தெரிந்தவன் மாதிரி விசாரித்தான்.
அவர்கள் தயங்கி நின்றார்கள். “ஆமா, நீங்க யாரு, தெரியலியே?” என்று அந்த அம்மாள் வார்த்தைகளை மென்றாள். “சிவபுரம் முத்துமாலை. உங்க சம்பந்தகாரரு ஊரு தான்.”
“ஊம்ம்” என்று அவனை மேலும் கீழும் பார்த்தாள் அம்மாள். குமரகுருவும் கவனித்தான்.
“முருகனை தரிசிக்க வந்திகளாக்கும்?” பரிகாசம் லேசாக தொனித்தது அவன் பேச்சில்.
“உம்ம்” என்று சொல்லி நகரத் தொடங்கினாள் இசக்கி அம்மாள்.
நல்ல காரியம்தான். உங்க மாதிரி பக்தர்கள் வரப் போய்த்தான், கடவுளு கண்ணை மூடிக்கிட்டாரு. உலகத்திலே நடக்கிற அக்கிரமங்களை பார்க்க அவருக்கு மனமில்லைன்னு தோணுது. கடவுளு கண்ணை மூடிக்கிட்டு இருக்கிறதனாலே, மனுசங்க மேலும் மேலும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செஞ்சுக்கிட்டே இருக் காங்கன்னு தோணுது...”
குமரகுரு இப்போது முறைத்தான். “என்னவே வழியை மறிச்சுக்கிட்டு உளறிக் கொட்டுதீரு? நீரு யாரு?” என்று அதட்டினான்.
முத்துமாலை குறும்புத்தனமாகச் சிரித்தான். “பரவால்லியே. உனக்கு ஆம்பிளை மாதிரி அதட்டிப்பேசக் கூடத் தெரியுமா? முழுப் பொட்டைப்பயலா ஆயிடலேன்னு சொல்லு” என்றான்.
“ஏய், என்ன குடிச்சிட்டு கிடிச்சிட்டு வந்திருக்கியா?” குமரகுருவுக்குக் கோபம் வந்தது.
“நான் குடிக்கிறவன் தான். ஆனா இப்ப குடிக்கலே. ஆனா நீ குடிகெடுக்கிற மடையன். குடியும் குடித்தனமுமா வாழ வேண்டிய அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கையை குட்டிச்சுவராக்கின வீணன். உன் அம்மா ஒரு தாடகைன்னு ஊரிலே சொல்றாங்க. அவ சரியான கூனியின்னும் தெரியுது. ரெண்டு பேரும் சேர்ந்து வளர்மதியை வாழவிடாமப் பண்ணியிருக்கீங்க. அதை விடக் கல்யாணமே பண்ணிக்காம இருந்திருக்கலாம். ஒரு பெண்ணை வயிறு எரியப் பண்ணிப் போட்டு, நீங்க சாமி கும்பிட புண்ணிய ஸ்தலம் தேடி வந்திருக்கீகளே! அந்தப் பெண்ணுக்கு நீங்க இழைச்ச கொடுமைகளும் அதுனாலே ஏற்பட்ட பாபமும் எப்படித் தீரும்? நீங்க உருப்பட மாட்டிங்க. போங்க போங்க. படிச்சிருந்தும் புத்தியில்லாத மடச்சாம்பிராணி, இன்னும் அம்மாப் பிள்ளையாகவே தான் இருக்கப் போறியா? உனக்குன்னு தனி யோசனையும் சுய தைரியமும் கிடையாதா?”
குமரகுரு தலையை தொங்கப் போட்டபடி நின்றான். இசக்கி அம்மாள் சுதாரித்துக் கொண்டாள். “வா, குமாரு நடுத்தெருவிலே மறிச்சுக்கிட்டு மரியாதை இல்லாமப் பேசுகிறவன் கூட நமக்கு என்ன பேச்சு? வா வா” என்று அவசரமா நகர்ந்தாள்.
குமரகுருவும் தொடர்ந்தான்.
“வாங்க அண்ணாச்சி. கூட்டம் கூடப் போகுது” என்று ராமதுரை முத்துமாலையிடம் மெதுவாகச் சொன்னான்.
முத்துமாலை உரத்த குரலிலேயே அறிவித்தான், “ஏ மூவி அலங்காரி, நீ ஒரு பெண்ணை தள்ளி வச்சிட்டு, உன் மகனுக்கு வேறே இடத்திலே பொண்ணு பார்த்தாலும் பார்ப்பே. எந்தச் சீமையிலேயிருந்து மருமக வந்தாலும் நீ அவளை வாழவிடப் போறதில்லே. சரியான பாதகத்தி நீ உன் கொடுக்கைப் புடிச்சுக் கிட்டுத் திரியிதானே, முதுகெலும்பில்லாத பய, அவன் இந்த நிலையிலே இருக்கிற வரைக்கும் உன் குடும்பம் விளங்காது. நீ கடலாடிவிட்டு முருகனைக் கும்பிடு. அப்புறம் கன்னியாகுமரி, ராமேசுரம்னு எங்கே வேணும்னாலும் போ. நீங்க உருப்படப் போறதில்லே!” ஆத்திரமாக சுடுசொற்களை வீசி எறிந்து விட்டு, திரும்பிப் பாராமலே நடந்தான் முத்துமாலை. “இவங்களுக்கு இது போதாது. இன்னும் சூடாக் கொடுக்கணும். இது அவங்க ஊரும் இல்லே. நம்ம ஊரும் இல்லை. வந்த இடத்திலே வீண் வம்பு என்னத்துக்குன்னு இவ்வளவோடு நிறுத்தி விட்டேன்” என்று ராமதுரையிடம் கூறினான்.
முத்துமாலையின் போக்கு அந்த இளைஞனை பிரமிக்க வைத்தது. அவனுடைய எண்ணங்களும் செயல்களும் வியப்பளிக்கும் விஷயங்களாகவே பட்டன.
ராமதுரை சொன்னான்:
“அண்ணாச்சி, நீங்க செய்த தீர்ப்பு தான் சரியானது, நல்லதுன்னும் எனக்குப் படுது”
“எதைச் சொல்லுதே?” என்று புரியாதவனாய் விசாரித்தான் முத்துமாலை.
“நீலா விவகாரம்தான். யோசிக்கையிலே வேறு எந்த முடிவும் அவளுக்கு நன்மை செய்யாதுன்னுதான் தோணுது. வளர்மதி கதியை நினைச்சுப் பார்க்கையிலே நம்ம சாதி சனம் வசதியான இடம்னு தேடிப் பார்த்துப் பேசி முடிச்சு சிறப்பாச் செய்து விடுகிற கல்யாணமும் சம்பந்தப்பட்ட பொண்ணுக்கு குறைவற்ற வாழ்க்கையையும் குணம் நிறைந்த கணவனையும் கொண்டு தரும் என்று நிச்சயமா நம்பறதுக்கில்லேன்னு தெரியவருது. இப்படியெல்லாம் செய்து பெரியவர்களாப் பார்த்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்கறதைவிட பெண்ணே தன் மனசுப்படி தேடித் தேர்ந்து கொள்கிற துணைவனும் அமைத்துக் கொள்கிற வாழ்க்கையும் மேலானதுன்னு படுது. அது அவளுக்கு சந்தோஷத்தையும் நல்ல எதிர்காலத்தையும் கொண்டு சேர்க்கும்னும் எதிர்பார்க்கலாம் இல்லையா?”
“நம்மகையிலே என்னடே இருக்கு. துரை! ஒவ்வொருவர் வாழ்க்கை எப்படி எப்படியோ அமைஞ்சு போகுது” என்று சுரத்தில்லாமல் பதிலளித்தான் முத்துமாலை.
“அது சரி” என்று ராமதுரை உறுதியாகக் கூறினான். “நான் முடிவு பண்ணிட்டேன். நாம நீலாவை பார்த்ததையோ மூக்கனும் அவளும் தாலி கட்டிக் கொண்டு தனியாப் போயிட்டதையோ நான் அம்மாவிடம் சொல்லப் போறதில்லே. ஊரிலே எவருக்கும் தெரிவிக்கப் போறதில்லே...”
“தெரிவிச்சுத்தான் என்ன ஆகப்போகுது?”
“அதுதான். நன்மை எதுவும் ஏற்படாது, கண்டபடி பேச்சுகள்தான் பரவும். நீங்களும் யாரிடமும் சொல்ல வேண்டாம். எப்பவாவது தானாத் தெரிஞ்சால் தெரிஞ்சிட்டுப் போகுது” என்றான் துரை.
“ஊம். நாங்க அலைஞ்சு திரிஞ்சு பார்த்தோம், நீலா எங்க கண்ணிலே படவேயில்லே. எங்கே போனாளோ என்னா ஆனாளோ தெரியாதுன்னு யாராவது என்ன ஏதுன்னு நம்ம கிட்டே தூண்டித் துளைச்சுக் கேட்டால் சொல்லிப் போடுவோம்” என்று முத்துமாலை ஆமோதித்தான்.