உள்ளடக்கத்துக்குச் செல்

இருட்டு ராஜா/19

விக்கிமூலம் இலிருந்து

19

முத்துமாலைக்குக் குழந்தைகளிடம் மிகுந்த பிரியம். பார்ப்பதற்கு சிறிது வசீகரமாக உள்ள எந்தக் குழந்தையையும் அவன், ஆசையோடு துாக்கி வைத்துக்கொள்வான். கொஞ்சுவான். போகிற இடத்துக்கெல்லாம் எடுத்துக் கொண்டு போவான். அது கேட்கிறதை எல்லாம் வாங்கிக் கொடுப்பான்.

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே, முத்துமாலை பிள்ளைகளிடம் பாசமா, பிரியமா இருக்கிறதுனாலே பிள்ளைகளும் அவன் கிட்டே ஆசையாப் போகுது. மாமா, மாமன்னும், தாத்தா தாத்தான்னும் புள்ளைக அவனை சுத்திச் சுத்தி வரும்” என்று சில ‘அம்மாளுக’ சொல்வார்கள்.

“மாமா, எனக்கு ஏரேப்ளேன் செய்து கொடு” “கப்பல் பண்ணித் தா” “மைக்கூடு செய்யி” என்று குழந்தைகள் தாள்களை அவனிடம் கொடுத்துப் பஞ்சரிக்கும்.

அவனும் விதம்விதமாக அனைத்தையும் செய்து கொடுப்பான். அட்டையில் கிளியும், மயிலும், மனிதனும், மரமும் வரைந்து கத்திரி வைத்து வெட்டிக் கொடுப்பான். வேடிக்கை காட்டி பிள்ளைகளைக் சிரிக்க வைப்பான். குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லுவான்.  ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு குழந்தையின் பேரில் அவனுக்கு அலாதியான பிரியமும் பற்றுதலும் ஏற்பட்டுவிடும். அதை வீட்டுக்கு அழைத்து வருவான். விளையாட்டுக் காட்டி மகிழவைத்து அந்தக் குழந்தை சிரிப்பதைப் பார்த்துத் தானும் களிப்படைவான்.

இப்போது அவனுக்கு மங்கையர்க்கரசியின் மீது பிரியம் வளர்ந்து வந்தது.திரிபுரத்தின் மகள் என்பதனால் மட்டுமல்ல. அது யார் பிள்ளை என்று தெரியாமல் இருந்தபோதே, அம்மன் கோயிலில் தன்னந்தனியாகக் காண நேரிட்ட முதல் சந்திப்பிலேயே, அந்தக் குழந்தையிடம் முத்துமாலைக்கு ஒரு ஒட்டுதல் ஏற்பட்டுவிட்டது. அதனுடைய கூச்சமில்லாத சுபாவமும், தயக்கமின்றிப் பேசுகிற குணமும் அவனை வெகுவாக ஈர்த்தன.

மங்கை அவனைக் காண்கிறபோதெல்லாம் ஒரு பாட்டை நீட்டி நீட்டிப் பாடும்.

"அத்தான் பொத்தைக் கதா அயகுள்ள பூசணிக்கா; மயபெஞ்ச முத்தத்திலே பொத்துன்னு வியந்தாயாம் பட்டுன்னு வெடிச்சாயாம்!”

பாட்டின் முடிவிலே “டோ டோ டோய்” என்று கூவி, கைகொட்டி கலகல என்று சிரிக்கும்.

அப்போது அதன் முகம் மிக வசீகரமான பெரிய புஷ்பம் மாதிரி ஒளிரும். அப்படியே அதை அள்ளி எடுத்து முத்தமிட்டு “போக்கிரி கழுதை!” என்று செல்லமாகக் கன்னத்தை கிள்ளுவான், சிரிப்பான்.

திரிபுரம் அவனை “அத்தான்” என்று அழைத்ததிலிருந்து, மங்கை இந்தப் பாட்டை பாடத் தொடங்கி யிருந்தது. அதன் உச்சரிப்பில் கடா “கதா” ஆகவும், அழகுள்ள என்பது “அயகுள்ள” என்றும், மழைபெய்த என்பது “மயபெஞ்ச” என்றும், விழுந்தாராம் வந்து “வியுந்தாயாம்” என்றும் மாறிவிட்டன. அந்தப் பிள்ளை அப்படிப் பாடுவதும் தனி இனிமையாகத்தானிருந்தது.

மங்கையின் அப்பா சிலைகளைத் திருடிப் பிடிபட்டு ஓடிப்போன பிறகு முத்துமாலைக்கு அந்தக் குழந்தையின் மீது அனுதாபம் பிறந்தது. ஊர்ப்பிள்ளைகள் அதை “சாமிதிருடி மகள்” என்று பழித்துக் கேலி பண்ணுவது அவன் காதுகளிலும் விழுந்தது.

அவ்வாறு பரிகசிக்கும் பிள்ளைகளை அவன் கண்டித்தான். சில பிள்ளைகளின் காதைப் பிடித்துத் திருகியும், சில குழந்தைகளின் மண்டையில் நறுக்கென்று குட்டியும், “இனிமேல் இப்படிச் சொன்னால் முதுகுத் தோலை, உரிச்சுப் போடுவேன், ஜாக்கிரதை” என்று மிரட்டியும் எச்சரித்தான்.

திரிபுரம் ஊர்பிள்ளைகளின் தன்மைகளை அறிந்து, தன் பிள்ளைகளை அடிக்கடி வெளியே போகக் கூடாது என்று அடக்கி வைத்திருந்தாள். அப்படியும் சில சமயங்களில் மங்கை வேடிக்கை பார்க்க வெளியே வந்து விடும்.

மங்கை இப்போதெல்லாம் நகைகள் அணிவதில்லை. பகட்டான ஆடைகள் உடுத்துவதில்லை, ஒழுங்காகத் தலைவாரிக் கொள்வது கூட இல்லை என்பதை முத்துமாலை கவனித்தான். திரிபுரத்தின் உள்ளமும் உணர்ச்சியும் பாதிக்கப்பட்டிருப்பதின் அடையாளங்கள் தான் இவை எல்லாம் என்று அவன் புரிந்து கொண்டான். அவளுக்காகவும் அவன் அனுதாபப்பட்டான்.

அவளுடைய வீட்டுக்குப் போய் அவளைப் பார்த்து பேசலாமா, கடிதம் ஏதாவது வந்ததா என்று கேட்கலாமா என்று அவன் நினைத்தான். ஆனாலும் போகவில்லை.  மனசுக்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு, அவள் நன்றாகப் பேசமாட்டாள். தன் மீது அவளுக்கு வருத்தம் இருக்கத் தான் செய்யும் என்று உள்ளுணர்வு அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.

ஒரு ராத்திரி வேளையில் முத்துமாலை தெருக்களில் திரிந்து கொண்டிருந்த போது, திரிபுரத்தின் வீட்டுப் பக்கம் வருகையில் உள்ளே சிரிப்பொலி கேட்டது. அது விகாரமாக ஒலித்தது. அதைத் தொடர்ந்து அழுகை எழுந்தது, பொங்கி பொங்கி அழுதது.

திரிபுரம் தான் இப்படி எல்லாம் பண்ணுகிறாள் என்று அவன் உணர்ந்தான். அவளுக்கு அமைதியில்லாமல் மனம் பேதலித்துப் போயிற்றாம், அவ்வபோது ஹிஸ்டீரியா கண்டு சிகிச்சை பெற்றுப் தேறினாளாம் என்று முன்னொரு நாள் தங்கராசு தெரிவித்தது அவன் நினைவில் எழுந்தது.

“பாவம் திரிபுரத்துக்கு திரும்பவும் மனக்கோளாறு ஏற்பட்டு விட்டது போலிருக்கு!” என்று முத்துமாலை எண்ணிக் கொண்டான். அவன் மனமும் அமைதியிழந்தது.

அன்று இரவு பூராவும் அவன் சீட்டி அடித்தவாறே. திரிந்தான். தனது மனக் கொதிப்பை எல்லாம், உள்ளக் குமைதல் முழுவதையும், ஊதி ஊதியே கரைத்து விட விரும்பியவன் போல அவன் உதடுகளைக் குவித்து சீட்டி அடித்தவாறே வறண்ட காற்றென அங்குமிங்கும் சுற்றி வந்தான். அந்தச் சீட்டி ஒலி உருக்கமாகத் தொனித்தது. கேட்டோரின் செவி உட்புகுந்து உள்ளத்தில் இனம் புரியாத ஒரு வேதனையைப் பாய்ச்சுவதாக இருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்திவேளை. இருட்டு இன்னும் கீழிறங்கி வந்து கலியவில்லை. முத்துமாலை அம்மன் கோயிலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். ஒரு தெருவின் திருப்பத்தில் ஒரு பிள்ளை நின்று அழுது கொண்டிருந்தது.

“யாரது? மங்கை மாதிரி இருக்கு” என்று அவன் மனம் அறிவித்தது.

மங்கை தான். அவன் பதறினான். ஏன் இந்த நேரத்தில் இந்தப் பிள்ளை இப்படிப் அழுதுகிட்டு நிற்குது?

அதன் அருகில் போய் “மங்கை, ஏன் அழுதே? என்ன விசயம்? நீ எப்படி இங்கே வந்தே?” என்று அன்பாக விசாரித்தான் முத்துமாலை.

மங்கை விக்கி விக்கி அழுதது. விரல்களை மடக்கிக் கொண்டு கைகளின் பின்புறத்தால் கண்களைத் தேய்த்த படி அழுது நின்றது.

அவன் அதை வாரி எடுத்தான். “இருட்டப்போற நேரத்திலே நீ ஒத்தையிலே இங்கெல்லாம் வரலாமா? நீ வந்தது உன் அம்மாவுக்குத் தெரியுமா?” என்று பிரியமாக விசாரித்தான்.

“அம்மா என்னை அடி அடின்னு அடிச்சா, தொலைஞ்சு போ சனியனேயின்னு புடிச்சுத் தள்ளினா. அம்மாவை பாக்கவே எனக்கு பயமா இருந்தது. ஒடியாந்துட்டேன்” விம்முதல் விக்கல்களுக்கிடையே சிறிது சிறிதாக விஷயத்தைக் கூறியது அந்த பிள்ளை.

ஐயோ பாவம் என்று இரங்கியது அவன் மனம். கடைக்குப் போய் இரண்டு வேர்க்கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்தான். “வீட்டுக்குப் போகலாம். இருட்டிட்டுதுன்னு சொன்னா, அப்புறம் பயமா இருக்கும். வீட்டுக்குப் போற வழி தெரியாமப் போயிடும்.” என்று கூறியவாறே திரிபுரத்தின் வீடு நோக்கி நடந்தான்.

கதவு திறந்திருந்தது. பிள்ளையை திண்ணையில் இறக்கிவிட்டு. “உள்ளே போ கண்ணு. போறையா?” என்று பேசினான் முத்துமாலை.  வீட்டுல் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. திண்ணையிலும் ஒரு விளக்கு எரிந்தது.

அப்போது அங்கே வந்து நின்ற திரிபுரத்தைப் பார்க்கவும் “திக்கென்றது” அவனுக்கு.

தலை பரட்டையாகக் காட்சி தந்தது. தலைமுடிக்கு எண்ணெய் தடவிப் பல நாட்கள் ஆகியிருக்க வேண்டும். நெற்றி நடுவில் “டேஞ்சர்லைட்” மாதிரி சிவப்புக் குங்குமம் பெரிசாகத் தீட்டப்பட்டிருந்தது. அது வட்டப் பொட்டாகவுமில்லை, விபூதிப் பூச்சு மாதிரி நெற்றி பூராவும் இழுக்கப்பட்டிருக்கவுமில்லை; இருந்தாலும், முகத்துக்கு ஒரு கோரத்தன்மை அளிப்பதாய் நெற்றியில் பாதியை அடைத்துக் கொண்டு பளிச்சிட்டது. அது அவளுடைய கண்களில் குளுமை இல்லை; இயல்பான ஒளி சுடரிடவில்லை. வெறி கலந்த தனி ரகப் பார்வை தேங்கியிருந்தது.

முத்துமாலையைப் பார்த்ததும் அவள் சிரித்தாள். ஆரோக்கியமான சிரிப்பு அல்ல. அது ஒரு பெண்ணின் அறிமுகப் சிரிப்பு இல்லை. நளினமான வரவேற்பு நகைப்பும் இல்லை.

அவள் சிரிப்பும் முகந்தோற்றமும் முத்துமாலைக்கே மனசினுள் ஒரு அரிப்பை உண்டாக்கியது. பேய் பிசாசுகளில் நம்பிக்கை இல்லாதவன்தான் அவன். ஆனாலும் அந்த நேரத்தில் மங்கிய விளக்கொளயில், விசித்திரமாகச் சிரித்து நின்றவளைக் காண்கையில் “பேய் புடிச்சவ மாதிரில்லா தோணுது” எனும் நினைப்பு அவன் மனசுல் நெளிந்து கொடுத்தது.

அவன் பேச்சு கொடுக்கும் முன், அவளே பேசி விட்டாள்;

“வாரும் வே, அதையிள்ளே! இங்கேயும் திருட்டை கண்டு பிடிக்கவந்தீரா?சிலைகள் பதுக்கப்பட்டிருக்கான்னு  பார்க்க வந்தீரா?இந்தப் புள்ளையையும் ஒரு சிலையின்னு, எண்ணி மீட்டு வந்தீரா”

அவள் பேச்சு தோரணை மட்டுமல்ல, அவளது குரலே மாறிப் போயிருந்தது. முத்துமாலைக்கு அப்படித் தான், தோன்றியது.

அவன் பதில் சொல்ல வாய் திறப்பதற்குள், அவள் ஆவேசம் வந்தவள் போல் கத்தினாள்.

“போடா இங்கேருந்து. போ. உடனே போயிடு. என் வாழ்க்கையிலே மண்ணை அள்ளிப் போட்ட சண்டாளா. நான் புருசனோட வாழுறதை சகிக்காத பொறாமைக்காரா, இங்கே ஏன் வந்தே? இன்னும் ஏன் நிக்கிறே. போறையா, உன்னைக் கடிச்சுக் குதறி உன் ரத்தத்தை நான் குடிக்கவா?”

கூப்பாடு போட்டாள் திரிபுரம். தொடர்ந்து வீல் என்று கீச்சிட்டலறினாள். மயங்கித் தடாலென்று கீழே விழுந்தாள்.

முத்துமாலை திகைத்துப் போய் நின்றான்.

இதற்குள் தெருவில் போனவர்களும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் வந்து கூடியிருந்தார்கள். திரிபுரத்தின் அம்மா வீட்டினுள்ளிருந்து வெளியே வந்து, மகள் பக்கத்தில் உட்கார்ந்து, ஒரு விசிறியால் வீசினாள்.

“பேய் புடிச்சிருக்கு அதுதான் இப்படி பைத்தியம் முற்றிப் போச்சு” என்று அவரவர் மனம் போனபடி பேசினார்கள் , மற்றவர்கள். பல்வேறு யோசனைகள் கூறினார்கள்.

“நீ இங்கே எங்கே வந்தே, முத்துமாலை?” என்று விசாரித்தார்கள்.

தான் வந்த காரணத்தை அவன் சொன்னான்.

“பாவம் திரிபுரம்!” என்று அனுதாபப்படத்தான் முடிந்தது அவர்களால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/19&oldid=1143566" இலிருந்து மீள்விக்கப்பட்டது