உள்ளடக்கத்துக்குச் செல்

இருண்ட வீடு/அத்தியாயம்-24

விக்கிமூலம் இலிருந்து


24

இரவு பத்துமணி, தலைவர் திரும்பி வருகிறார்.


எண்ணெய் இன்றி இருண்டன விளக்குகள்;
இருண்ட வீட்டில் இருளும் குழந்தையும்
அன்றி, மற்றை யனை வரும் துயின்றனர்.
குற்றுயிராகக் குழந்தை கிடந்தது !
தூற்றும் பழியை ஏற்க அஞ்சி
நள்ளிருளானது பிள்ளை சாகாமல்
தன் மடிதனிலே தாங்கிக் கிடந்தது
சரியாய் அப்போது - இரவு பத்துமணி;


தலைவர் திரும்பித் தம்வீடு நோக்கினார்
தலைவா சலில்நாய் தான் வரவேற்றது
வீடுமூடியும் விளக் கவிந்தும் இருட்
காடுபோல் இருப்பது கருதிக் கனைத்தார்
கனைப்பதுகேட்டு மனையாள் வந்து, தாழ்
திறப்பாள் அல்லவா? திறக்கவே யில்லை.
நாயை நோக்கி நவீன்றார் தலைவர்;
நீயேன் தெருவில் நிற்கிறாய் என்று !
நாய் அதுகேட்டு ஞய்ஞய் என்றதாம்
அதற்கும் வழியில்லை அழகிய வீட்டில்

கதவைத் தட்டினார் கையின் விரலால்!
பதியத் தட்டியும் பார்த்தார் பிறகு!
அழுந்தத் தட்டினார் அங்கையாலே!
அடித்தார் இடித்தார் படபட வென்றே!
எட்டி உதைத்தார் இருநூறு தடவை!
முதுகைத் திருப்பி முட்டியும் பார்த்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-24&oldid=1534766" இலிருந்து மீள்விக்கப்பட்டது