உள்ளடக்கத்துக்குச் செல்

இரும்பு முள்வேலி/பதிப்புரை

விக்கிமூலம் இலிருந்து

பதிப்புரை


"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என்று கட்டளையிட்டான் மகாகவி பாரதி.

சாத்திரமல்ல, மேனாட்டுச் சரித்திரத்தையே தமிழுக்குக் கொண்டு வந்து காட்டிய பேரறிவாளர் டாக்டர் அண்ணா அவர்களாவார்.

எல்லா நாட்டுச் சரித்திரங்களையும், அதனைத் தழுவிய சுவையான—உருக்கமான சம்பவங்களையும் தமிழ் மக்கள் அறிய வேண்டுமென்ற ஆவலின் காரணமாக பேரறிஞர் அண்ணா அவர்கள் தீட்டிய ஓவியங்கள் கொஞ்சமல்ல.

மேனாட்டு வரலாற்றைக் கதை வடிவில் சொல்வதென்பது சாதாரண விஷயமல்ல; அது ஒரு கலை. அந்தக் கலையில் வல்ல டாக்டர் அண்ணா அவர்கள் படைத்தவற்றில், 'இரும்பு

முள்வேலி' என்னும் தலைப்பிலுள்ள அழகோவியம் தனிச் சிறப்பு மிக்கதாகும்.

இனம் கடந்த, மொழி கடந்த, மதம் கடந்த, ஏன், எல்லாமே கடந்த ஒன்று உலகில் இருக்கிறதென்றால் அது காதலாகத்தான் இருக்க முடியும். வேறு எதற்குமே அந்தச் சக்தி கிடையாது.

அப்படிப்பட்ட ஒரு புனிதமானதொரு ஈர்ப்புச் சக்தி உலகில் படும் உயிர்வதையை, இரு வேறு இனத்தைச் சார்ந்த ஆண்—பெண் இடையே கல்லும் கரையும் வண்ணம் சுவையான கதையாக்கிக் காண்பித்துள்ளார். அதுபோலவேதான் மற்ற இருவேறு கதைகளும்!

அத்தகு சிறப்பும் உயிர்த் துடிப்பும் மிக்க பேரறிஞர் அண்ணா அவர்களின் கதைகளை நாங்கள் வெளியிட்டுக் கொள்ளும் உரிமையைப் பூரணமாக வழங்கி இருக்கும் திருமதி ராணி அண்ணாதுரை அவர்கட்கு எங்களின் இதயபூர்வமான நன்றி.

—பூம்புகார் பிரசுரத்தார்