இறைவர் திருமகன்/அடுத்தவன் என்றால் யார்?
இயேசுநாதரின் திருவுரைகள் ஏராளமான மக்களைக் கவர்ந்தன. அவர் தமக்குள்ள அற்புதமான இறையருளால், தம்மை வந்து சார்ந்தோரின் குறைகளையெல்லாம் நீங்கச் செய்தார். நாள்தோறும் அவரைத் தேடி வந்த கூட்டத்தின் அளவு பெருகிக் கொண்டே போயிற்று. ஒரு நாள் அவர் ஒரு மலையின் மீது ஏறிச்சென்று ஓரிடத்தில் அமர்ந்தார். அவருடைய சீடர்கள் அவரைப்பின்தொடர்ந்து சென்றார்கள். தம்மைச் சூழவந்து நின்ற சீடர்களை நோக்கி அவர் பல புதிய பொருள்களைக் கூறிப் போதித்தார். இறையருளைப் பெற அவர் போதித்த அறநெறிகள் புதுமையானவையாகவும், பொருத்தமானவையாகவும், விரும்பிப் பின்பற்ற ஏற்றனவாகவும் இருந்தன. அவர் திருவாயிலிருந்து வெளி வந்த அந்த வாசகங்கள் மனித சமுதாயத்தையே மேன்மைப்படுத்துவனவாக இருந்தன.
அவர்தம் போதனைகளை முடித்தபின் கீழே இறங்கி வந்த போது அவரைத் தொடர்ந்து ஏராளமாக மக்கள் பின்பற்றிச் சென்றார்கள். துன்பமுற்று அவரை நாடி வந்தவர்களின் துன்பத்தை அவர் துடைத்தருளினார்.
வேதநூல்களை எழுதிப் பேணி வந்தவர்களும், மதபோதகர்களுமாகிய பழமை விரும்பிகள், இயேசுநாதரின் செல்வாக்கு, மக்களிடையே வளர்வதைக் கண்டு வெறுப்பும் பொறாமையும் கொண்டனர். மோசஸ் முதலான இறையருள் பெற்ற முன்னறிவிப்போர்களின் நெறிமுறைகளைப் பின்பற்றி வந்த அந்தப் பழைமைவாதிகள் அப்பெரியோர்களே இயேசு நாதரின் வருகையை அறிவித்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டனர். அவர்களில் சிலர் இயேசுநாதரைக் குற்றம் உடையவராக எடுத்துக் காட்ட வேண்டுமென எண்ணினர். அதற்காக கூட்டத்தோடு கூட்டமாக அவர்களும் வந்து கலந்து கொண்டு நின்றனர். அவ்வப்போது, இயேசுநாதரைக் குதர்க்கமான கேள்விகள் கேட்டுச் சோதனைகள் செய்யத் தொடங்கினர்.
அந்த பழமைவாதிகள் மோசஸ் பெருமான் அருளிய நெறிமுறைகளை வாழ்வில் ஒழுங்காகக் கடைப் பிடித்து வந்தனர். தங்கள் வருவாயில் பத்தில் ஒரு பகுதியை ஏழை மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தனர். குறிப்பிட்டநாட்களில் நோன்பிருக்க அவர்கள் சிறிதும் தவறியதேயில்லை. எல்லோருக்கும் கேட்கும்படியாகக் குரலெடுத்து அவர்கள் நாள்தோறும் இறைவனைத் தொழுது வந்தார்கள். கடமை தவறாத அவர்கள் நல்லொழுக்கத்தினைப் பிறர் பாராட்டினாலும் யாரும் அவர்களைப் பின்பற்றியதில்லை. அவர்கள் போதனைகளைக் கேட்கயாரும் விரும்பி வந்ததில்லை. குழந்தைகள் அவர்கள் அருகில் செல்லவே பயப்பட்டார்கள்.
இயேசுநாதரோ ஏழை பணக்காரர் என்ற வேறுபாடின்றி யாவரோடும் கலந்து உறவாடினார். தம்மைச் சார்ந்தவர்கள் யாராயினும் அவர்களோடு அன்பு கனியப் பேசினார். தொல்லை யுற்று வந்தவர்களின் துன்பத்தைப் போக்கி அவர்களை எல்லையற்ற மகிழ்ச்சியடையச் செய்தார். சின்னஞ்சிறு குழந்தைகளும் அவரைக் கண்டால் அச்சஞ் சிறிதுமில்லாமல் பாய்ந்தோடிச் சென்று அவருடைய கைகளை அன்போடு பற்றிக் கொள்ளும். யாரையும் புன்சிரிப்புடன் வரவேற்று அன்புடன் பேசி மகிழ்வார்.
இந்தக் காட்சிகளையெல்லாம் அந்தப் பழைமைவாதிகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அதன் காரணமாகவே அவர் மீது பொறாமை ஏற்பட்டது.
இப் பொறாமையின் காரணமாகவே அவர்கள் இயேசுநாதரைப் பலப்பலவாறு கேள்வி கேட்டுக் குற்றங் கூற வேண்டும் என்று எண்ணினார்கள்.
“மோசஸ் பெருமானின் நெறி முறைகளைக் குலைக்க நான் வரவில்லை; மாறாக அவற்றைப் புதுப்பித்து நிறைவு பெறச் செய்யவே வந்திருக்கிறேன்" என்று இயேசுநாதர் அடிக்கடி கூறினார்.
“கொலை செய்யக் கூடாது" என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. நான் கூறுவேன், நீங்கள் கோபம் கொள்ளவே கூடாது என்று. கொலை செய்தால் எப்படி வேத நெறியை மீறியவர்களாவீர்களோ, அவ்வாறே கோபம் கொண்டாலும் வேதநெறியை மீறியவர்கள் ஆவீர்கள்.
"அடுத்தவனிடம் அன்பு கொள்; பகைவனை வெறு" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நான் கூறுவேன்: பகைவர்களிடமும் அன்பு காட்டுங்கள்; உங்களுக்குக் கேடு செய்தவர்களுக்காகவும் தொழுகை நடத்துங்கள். உங்கள் நல்ல செயல்களை மற்றவர்கள் கண்டு புகழும்படி வெளிப்படையாகச் செய்யாதீர்கள். நீங்கள் நோன்பிருந்தாலும், தொழுகை நடத்தினாலும் ஏழைகளுக்கு உதவி செய்தாலும் எல்லாவற்றையும் மறைவாகவே செய்யுங்கள். விண்ணுலகில் உள்ள தந்தையாகிய இறைவன் அவற்றைக் காண்பார்; உரிய பரிசைத் தருவார்."
இவ்வாறெல்லாம் இயேசுநாதர் உபதேசம் செய்தார். புத்துணர்ச்சிமிக்க இச்சொற்பொழிவுகளை மக்கள் ஆர்வத்தோடும் ஆவலோடும் கேட்டார்கள். மோசஸ் பெருமானின் தூய நெறி முறைகளுக்கு அவர் கொடுத்த அழகான விளக்கங்கள் மக்கள் நெஞ்சைக் கவர்ந்தன. ஆனால், பழமை வாதிகள் தலையை அசைத்து தங்கள் மனக்குறையை வெளிப்படுத்தினர்.
கடினமான கேள்விகளைக் கேட்டனர்.
ஒருமுறை இயேசுநாதர் மக்களுக்கு நன்னெறிகளை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு, நீதி நூல்கற்ற ஒருவன் முன்னால் வந்து நின்றான். இயேசுநாதரை ஒரே கேள்வியில் திணறடிக்க வேண்டும் என்ற முடிவுடன் அவன் முன்வந்திருந்தான்.
“தலைவரே, முடிவற்ற வாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான் அந்த நீதிநூல் அறிஞன்.
“வேதநெறி என்ன கூறுகிறது?" என்று கேட்டார் இயேசுநாதர்.
“இறைவனிடம் மனதார அன்பு செலுத்து; உன்னைப் போலவே அடுத்தவனையும் கருதி அன்பு கொள்! என்று கூறப்பட்டிருக்கிறது" என்றான்.
“சரியான பதில்தான். இவ்வாறே நீ நடந்துவா. முடிவற்ற வாழ்வை நீ பெறுவது உறுதி” என்று களங்கமற்ற இயேசு கூறினார்.
அந்த மனிதனோ, "தலைவரே, இன்னும் சற்று விளக்கம் வேண்டும். அடுத்தவன் என்றால் யார்?" என்று கேட்டான்.
இதற்கு நேரடியான சொற்களில் பதில் கூறாமல் இயேசுநாதர் ஒரு கதையே கூறினார்.
அக்கதை கீழ் வருவது தான் :
ஒரு காட்டுப்பாதை. அந்தப் பாதை கரடு முரடானது. பாறைகளும், மலைக்கற்களும் நிறைந்த அந்தப் பாதை வளைந்து வளைந்து சென்றது. அதில் இடையிடையே இருண்ட மலைக் குகைகளும் இருந்தன. அவற்றில் திருடர்கள் மறைந்திருப்பார்கள்.
அந்தப்பாதை வழியாக ஒரு வழிப்போக்கன் சென்றான். திடீரென்று, இம்மலைக் குகைகளில் ஒன்றிலிருந்து வெளிப்பட்ட திருடர் கூட்டம் ஒன்று அந்த வழிப் போக்கனைச் சூழ்ந்து கொண்டது. திருடர்கள் அவனை அடித்து உதைத்து அவனிடம் இருந்த பணத்தையும் துணிமணிகளையும் பறித்துக்கொண்டார்கள். பாதி செத்த நிலையில் அவனைப் பாதையோரத்தில் தள்ளிவிட்டு அத்திருடர்கள் போய்விட்டார்கள்.
அந்தத் திருடர்கள் சென்ற சிறிது நேரத்தில் ஜெருசலத்திலிருந்து அந்தப் பாதை வழியாக ஆலயத்துக் குருக்கள் ஒருவர் சென்றார். காயப்பட்டுக் குற்றுயிராகக் கிடக்கும் அந்த மனிதனைக் கண்டார். ஆனால், அவர் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூட இல்லை. நிற்காமல் அவர் தம்வழியே நடந்து சென்று விட்டார்.
சிறிது நேரம் சென்றபின், அந்தப் பாதையில் ஒரு பண்டாரம் சென்றான். அவன் ஒரு கணம், அடிபட்டுக் கிடந்த மனிதனை நின்று பார்த்தான். பிறகு வேகமாக நடந்து சென்று விட்டான்.
அடுத்து அந்த வழியாகச் சென்றவன் சமாரியா நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன். ஒரு கழுதை மேல் நிறையச் சுமை ஏற்றிக் கொண்டுவந்த அம் மனிதன் பாதையோரத்தில் கிடந்த மனிதனைக் கண்டான். அன்பு நிறைந்த அவன் உள்ளம் இரக்கம் கொண்டது. அவன் விரைந்து சென்றான். பாதையோரத்தில் துடித்துக்கொண்டு கிடந்த மனிதனைக் கண்டான். அடிபட்டுக் கிடந்தவன் ஓர் யூதன். யூதர்களுக் கும்சமாரியர்களுக்கும் பிறவிப்பகை. ஆயினும் பகையெண்ணத்தை முற்றும் விலக்கிவிட்டு, அந்த சமாரியன் அந்த யூதனுக்கு உதவி செய்யத் தொடங்கினான். நண்பனோ, அயலவனோ யாராயினும் ஒருவன் துயரத்துக்காளானால் அவனுக்கு உதவி செய்வதே மனிதன் கடமையாகும்.
அந்த சமாரியன் விரைவாகத் தன் மூட்டையை இறக்கி அவிழ்த்தான். திராட்சைச் சாற்றினால், அடியுற்றவனின் காயங்களைக் கழுவினான். பின் அப்புண்களில் அவை ஆறத்தக்க ஒரு எண்ணெய் மருந்தை ஊற்றினான். துணியொன்றைக் கிழித்துக் காயங்களையெல்லாம் கட்டினான். கைத்தாங்கலாக அந்த யூதன் எழுந்திருக்கச் செய்து தன் கழுதையின் மீது உட்கார வைத்தான். மெல்ல மெல்ல அதை ஓட்டிக் கொண்டு பக்கத்து ஊரில் இருந்த சிறு சத்திரத்தை அடைந்தான்.
சத்திரக்காரனை நோக்கி, “ஐயா, இந்த மனிதன் குணமாகும் வரை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள், நான் தரும் இந்தப் பணத்தை அவன் செலவுகளுக்காக வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு மேலும் தாங்கள் அதிகமாகச் செலவு செய்ய நேரிட்டால், மீண்டும் நான் திரும்பி வரும்போது அத் தொகையைத் தந்துவிடுகிறேன்" என்று கூறிச் சென்று விட்டான்,
இக்கதையைக் கூறி முடித்த இயேசுநாதர், "திருடர்களிடம் அகப்பட்டு அடிப்பட்டவனுக்கு இந்த மூவரில் யார் அடுத்தவன் என்று நினைக்கிறாய்?" என்று கேட்டார்.
"அவனுக்கு இரக்கங் காட்டியவனே!" என்றான் அந்த நீதிநூல் அறிஞன்.
"அவனைப் போல் நீயும் நடந்துவா” என்று கூறினார். இயேசு நாதர். அந்த நீதி நூல் அறிஞன் நல்லறிவு பெற்றுச் சென்றான்.