இறைவர் திருமகன்/காலைச் சேவலின் கூவல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
15. காலைச்சேவலின் கூவல்

இயேசுநாதர் தம் சீடர்களுடன் ஆலிவ் மலையடிவாரத்தில் நடந்து கொண்டிருந்தார். செல்லும் வழியில் அவர் தம் சீடர்களை நோக்கி, “இன்றிரவு என்னால் நீங்கள் அனைவரும் துன்பத்திற்காளாவீர்கள். ஏனெனில் ஆட்டிடையனாகிய நான் கொல்லப்படுவேன் என்றும், என் ஆட்டு மந்தைகள் சிதறிவிடும் என்றும் எழுதப் பெற்றிருக்கிறது. என்னைத் தனியாக விடுங்கள். யாரும் துணையில்லா விட்டாலும் என் தந்தை யாகிய இறைவன் என்றும் என்னருகில் இருப்பான்" என்றார்.

இதைக்கேட்ட பீட்டர், “பெருமானே ! எல்லாரும் உங்களைப் பிரிந்து சென்றுவிட்டாலும் நான் பிரியமாட்டேன். சிறைச்சாலைக்கானாலும், இறப்பின் வரையிலேனும் நான் உங்களைத் தொடர்ந்து வரக் காத்திருக்கிறேன்” என்று கூறினான்.

"பீட்டர், நான் இப்போது சொல்லுகிறேன். காலைச் சேவல் கூவு முன்னால் இன்றிரவிலே என்னைத் தெரியவே தெரியாதென்று மூன்று முறை கூறப்போகிறாய்" என்று அவனை உற்று நோக்கியவாறு உரைத்தார் இயேசு நாதர்.

"பெருமானே, தங்களோடு சேர்ந்து சாக நேரிட்டாலும், நான் உங்களை மறுத்துரைக்க மாட்டேன்" என்று உறுதி நிறைந்த குரலில் கூறினான் பீட்டர். அதுபோலவே மற்ற பத்துச் சீடர்களும் உறுதி கூறினார்கள்.

நடந்துகொண்டிருந்த இயேசுநாதர் ஓரிடத்தில் நின்றார். "நண்பர்களே நீங்கள் இந்த இடத்தில் இருங்கள். நான் சிறிது அப்பால் சென்று தொழுகை செய்துவிட்டு வருகிறேன்" என்றார். எட்டுச் சீடர்கள் அங்கேயே நின்று கொண்டார்கள், பீட்டர், ஜேம்ஸ், ஜான் என்ற மூவர் அவரைத் தொடர்ந்து நடந்தார்கள்.

மற்றும் ஓர் இடத்தில் அவர்களை நிறுத்தினார் அவர். "நீங்கள் இங்கேயே இருந்து என்னைக் கவனித்துக் கொண்டிருங்கள்" என்று கூறிவிட்டுச் சிறிது தொலை சென்றார்.

தரையில் மண்டியிட்டு, இறைவனை நோக்கித் தொழுதார். "இறைவா, என் தந்தையே! எல்லாம் உன் எண்ணப்படியே நடக்கட்டும்!" என்று கூறித் தொழுதார். அவரைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டிய சீடர்களோ, தரையில் விழுந்து கண்ணயர்ந்து தூங்கிவிட்டார்கள்.

திரும்பிவந்து பார்த்த அவர், அவர்களை எழுப்பி, ஒரு மணி நேரம் கூட உங்களால் விழித்திருக்க முடியவில்லையா ? என்று கேட்டார். மீண்டும் அவர் சென்று தொழுகை புரிந்து விட்டுவந்தார். அப்போதும் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை எழுப்பிவிட்டு மூன்றாம் முறையாகத் தொழுகை செய்யச் சென்ற போதும் அவர்கள் மீண்டும் தூங்கத் தொடங்கி விட்டார்கள்.

அமைதியாயிருந்த அந்தக் காட்டின் இடையிலே தீடீரெனப் பல பேர் ஓடிவரும் காலடி யோசை கேட்டது. தீவட்டிகளின் ஒளிக்கதிர்கள் மரங்களின் இடைவெளிகளில் ஊடுருவிக் கொண்டு வந்தன. சீடர்கள் திடுக்கிட்டு எழுந்தார்கள். இயேசு நாதரைச் சூழ்ந்து கொண்டார்கள். தீவட்டி வெளிச்சத்தில் போர்வீரர்கள் நடந்துவரும் காட்சியைக் கண்டார்கள். அந்தப் போர்வீரர்களை நடத்திக் கொண்டு வந்தான் ஜுடாஸ் இஸ்காரியட்.

அவன் ஓடோடி வந்து, “தலைவரே வாழ்க!" என்று கூவிக் கொண்டே இயேசு நாதரை முத்தமிட்டான். அந்தப் போர் வீரர்கள் முன்னேற்பாட்டின்படி முத்தம் பெற்றவர் தான் தாங்கள் பிடித்துப் போகவேண்டிய ஆள் என்று அடையாளம் புரிந்து கொண்டார்கள்.

இயேசுநாதரின் சீடர்களில் ஒருவன், தன் வாளை உருவி அவரைப் பிடிக்க வந்தவர்களில் ஒருவனின் காதை அறுத்து விட்டான். காதிழந்தவன், ஆலயத்துப் பெரிய குருவின் வேலைக்காரன் ஆவான்.

"அன்பனே, கத்தியை உறையில் போடு. கத்தியெடுத்தவர்கள் யாவரும் கத்திக்கே இரையாகி யழிவார்கள்" என்று கூறினார். தொடர்ந்து “அன்பனே, நான் இப்போது இறைவனை வேண்டினால், என் உதவிக்குப் பத்து வெள்ளம் தேவ தூதர்களை அனுப்ப மாட்டார் என்றா நினைக்கிறாய்? ஆனால், எழுதிவைத்திருப்பதெல்லாம் நிறைவேறுவது எப்படி?" என்று கூறினார்.

பிறகு அவர் தன்னைப் பிடித்துப் போகவந்தவர்களை நோக்கி, வாளும் வேலும் தூக்கிக் கொண்டு, ஒரு திருடனைப் பிடிக்கவந்தது போலவா நீங்கள் என்னைப் பிடிக்க வர வேண்டும்? நாள்தோறும் கோயிலில் வந்திருந்தேனே அப்போது பிடிக்கவில்லையே! என்று கேட்டார்.

அவர்களோ, இயேசு நாதரைப் பிடித்துக் கயிற்றினால் கட்டி இழுத்துக் கொண்டு சென்றார்கள். தங்கள் நிலை என்ன ஆகுமோ என்று பயந்த சீடர்கள் அங்கிருந்து ஓடி விட்டார்கள்.

பீட்டர் மட்டும், சிறிது தொலை பின்னால் இருந்தபடியே, அந்தப் போர்வீரர் கூட்டத்தைத் தொடர்ந்து சென்றான்.

இயேசு நாதர் பெரிய குருவின் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஆலயக் குருமார் பலர் இருந்தார்கள். அவர்கள் யாவரும் சேர்ந்து இயேசு நாதரைக் குற்றஞ் சாட்டிப் பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பொய்ச் சான்றுகள் பல கூறி அவர் நாத்திகம் பேசினார் என்று பழித்தார்கள்.

அந்தத் தீயவர்கள் இயேசு நாதரின் முகத்தில் உமிழ்ந்தார்கள்; தலையில் குட்டினார்கள்; கன்னத்தில் அறைந்தார்கள். அத்தனையும் பொறுத்துக் கொண்டு அமைதியின் வடிவமாக அவர் இருந்தார். நடப்பதையெல்லாம் எட்டிப் பார்த்துக் கொண்டு வெளிவாசல் அருகில் நின்றான் பீட்டர்.

வெளியில் குளிருக்காக நெருப்பு மூட்டி, அதிகாரிகளும் வேலையாட்களும் அதைச் சுற்றியிருந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். பீட்டரும் அங்கே சென்று அவர்களோடு கூட அமர்ந்து குளிர் காய்ந்தான். நெருப்புக்கு நேரே தன் கைகளை நீட்டிச் சூடு படுத்திக் கொண்டான். அப்பொழுது பெரிய குருவின் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்த ஒரு வேலைக்காரி பீட்டரைக் கவனித்தாள், நெருப்பு வெளிச்சத்தில் அவள் அவனை அடையாளம் கண்டு கொண்டாள்.

“நீ இயேசுவோடு இருந்தவனல்லவா ?" என்று அந்த வேலைக்காரி கேட்டாள்.

இதைக் கேட்டு அச்சம் கொண்ட பீட்டர் சற்றும் தயங்காது, "நீ என்ன சொல்கிறாய்? எனக்கு அவரைத் தெரியாதே" என்று கூறினான். பிறகு அந்த இடத்தை விட்டுச் சிறிது அப்பால் அகன்று சென்றான்.

தலைவாசல் அருகே அவன் சென்ற போது அங்கிருந்த ஒரு வேலைக்காரி, “இந்த மனிதன் நாசரத் இயேசுவின் கூட இருந்தவனல்லவா !" என்று வியப்புடன் கூறினாள்.

மீண்டும் பீட்டர் ; “எனக்கு அவரைத் தெரியவே தெரியாது" என்று ஆணையிட்டுக் கூறினான்.

சிறிதுநேரம் சென்ற பின், நெருப்புக் காய்ந்து கொண்டிருந்தவர்களிற் சிலர் அவனருகில் வந்தார்கள். அவர்களில் ஒருவன் பீட்டரைப் பார்த்து, “நீ அவரோடு இருந்தவனே தான். உன் பேச்சே உன்னைக் காட்டிக் கொடுக்கிறது" என்று உறுதியாகக் கூறினான்.

இதைக் கேட்டுக் கோபத்துடன் பீட்டர் அந்த ஆளை நோக்கி, "நீ சொல்லுகிற அந்த மனிதரை எனக்குத் தெரியவே தெரியாது தெரிகிறதா?" என்று கூறினான்.

அவன் கூறி வாய் மூடிய நேரத்தில் எங்கிருந்தோ காலைச் சேவல் ஒன்று கூவியது.

உடனே பீட்டருக்கு இயேசு பெருமானுடன் தான் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அவரோடு சேர்ந்து சாவதாகத் தான் வாக்களித்ததையும், தான் அத்தகைய உறுதியில்லாத கோழை என்பதைச் சுட்டிக்காட்டி "மூன்று முறை நீ என்னை மறுத்துரைப்பாய்!" என்று அவர் கூறியதையும் நினைத்துக் கொண்டான்.

தன் கோழைத்தனத்தை எண்ணி நொந்து அழுது கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்று சென்றான்.

இயேசு நாதரை அடையாளங் காட்டிக் கொடுத்த ஜுடாஸ் இஸ்காரியட்டை அவன் வேலை முடிந்த பின் கவனிப்பார் யாருமில்லை.

இரவு முழுவதும் அவன் எங்கெங்கோ சுற்றியலைந்து கொண்டிருந்தான். அவன் மனமும் அமைதியில்லாமல் சுழன்று கொண்டிருந்தது. தான் செய்த செயல் எவ்வளவு கொடுமையானது என்று எண்ணி எண்ணி நைந்தான்.

உலகைப்புரக்க வந்த உத்தமரைக் காட்டிக் கொடுக்க அவன் ஆசைப்பட்டு வாங்கிய கைக் கூலியான அந்த முப்பது வெள்ளிக் காசுகளும் அவன் பையை மட்டுமல்லாமல் மனச்சாட்சியையும் உறுத்திக் கொண்டிருந்தன. அவற்றைத் தந்த குருமார்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதென்று அவன் முடிவு செய்து விட்டான். அவற்றைத் தான் வைத்துக் கொள்வதோ, செலவழிப்பதோ மேலும் பாவத்தைச் சுமப்பதாகும் என எண்ணினான்.

அதிகாலையில் அவன் குருமார்கள் கூடி யிருந்த அவைக்குச் சென்றான்.

"நான் பாவம் புரிந்து விட்டேன். நல்லவர் ஒருவர்க்கு இரண்டகம் செய்து விட்டேன்" என்று கூவினான்.

"அதனால் எங்களுக்கென்ன வந்தது ?" என்று கேட்டார்கள் அந்தக் குருமார்கள்.

அவன் திருப்பிக் கொடுத்த பணத்தை அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள். மேலும் அவனைக் கடிந்து பழித்துப் பேசினார்கள்.'

ஜுடாஸ் கடுந்துயரத்திற்காளானான். குருக்கள்மார் முன்னால் தன் கையில் இருந்த வெள்ளிக் காசுகளைத் தரையில் வீசி எறிந்து விட்டு அங்கிருந்து விரைந்து சென்றான்.

அன்பே வடிவமான - யாருக்கும் கிடைக்காத அரும்பேறான - ஓர் இனிய தலைவருக்கு இரண்டகம் செய்த தான் உயிர்வாழ்வதற்கே தகுதியற்றவன் என்ற உணர்வுடன் அவன் சென்று கொண்டிருந்தான். இறுதியில் தன்னை யழுத்தும் துன்பத்தைத் தாங்க முடியாமல் தூக்குப்போட்டுக் கொண்டு இறந்து போனான்.