இறைவர் திருமகன்/தொழுவத்திலே பிறந்த இளவல்
ரோமாபுரியின் பேரரசர் ஒர் ஆணையிட்டிருந்தார். டேவிட் அரசரின் பரம்பரையினர் அனைவரும், அவர் பிறப்பிடமான பெத்தலெம் நகரில் சென்று பெயர்ப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பதே அந்த ஆணை.
அந்த ஆணையைக் கேட்டு, பெத்தலெம் நகருக்கு வந்து குவிந்த மக்கள் பலர். சுற்றிச் சூழ்ந்திருந்த பல ஊர்களிலிருந்து மனிதர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். அரச பரம்பரையில் பிறந்தவர்கள் என்று தங்கள் பெயரை எழுதிக் கொள்ள வந்தவர்களின் கூட்டம் பெத்தலெம் நகர் வீதிகளில் இழைந்து கொண்டிருந்தது.
ஜோசப் ஒரு தச்சு வேலைக்காரன். ஆனல் அவனும் அரச வம்சத்தின் வழி வந்தவன். அவன் தன் மனைவி மேரியை ஒரு கழுதையில் உட்கார வைத்து அதை நடத்திக் கொண்டு பெத்தலெமுக்கு வந்து சேர்ந்தான்.
பெத்தலெம் சத்திரத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அங்கு தனக்கும் தன் மனைவிக்கும் தங்குவதற்கு வசதியான ஓர் இடம் கிடைக்குமா என்று ஜோசப் தேடிப் பார்த்தான். சத்திரத்தின் மூலை முடுக்குகளில் கூட ஆட்கள் இடம் பிடித்துக் கொண்டு தங்கியிருந்தார்கள். அத்தனை கூட்டம்! அவ்வளவு பேரும் அரச பரம்பரை!
ஜோசப் சத்திரத்துச் சொந்தக்காரனைப் போய்ப் பார்த்தான். "நான் என்ன செய்வேன்; ஒதுக்கித் தருவதற்குச் சிறிது கூட இடமில்லையே!” என்று சத்திரக்காரன் கையை விரித்துவிட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் ஜோசப் கலங்கி நின்றான். “ஐயா, இன்று இரவு தங்குவதற்கு மட்டும் ஒரு சிறு இடம் கொடுத்து உதவுங்கள்!" என்று கெஞ்சினான்.
சத்திரத்துச் சொந்தக்காரன் சிந்தித்தான். திடீரென்று அவன் முகம் மலர்ந்தது.
“ஐயா, தொழுவத்திலே வேண்டுமானால் சிறிது இடம் ஒதுக்கித் தருகிறேன். இரவுப் பொழுது அங்கே நீங்கள் தங்கிக்கொள்ளலாம்” என்றான்.
ஜோசப் நன்றியறிதலோடு சத்திரக்காரனைப் பின் தொடர்ந்தான். ஒட்டகங்களும் கழுதைகளும் கட்டிக் கிடந்த தொழுவத்தின் ஒரு புறத்தைக் காட்டினான். ஜோசப் மகிழ்ச்சியோடுமேரியை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
தெருவில் நிற்காமல் இந்த இடமாவது கிடைத்ததே என்ற நிறைவு ஒருபுறம்; மனித நெருக்கடியுள்ள சத்திரத்தை விட, தனிமையும் அமைதியுமுள்ள இடம் அல்லவா இது என்ற அமைதி ஒரு புறம், தொழுவத்தில் கிடந்த வைக்கோலை எடுத்து ஓரிடத்தில் பரப்பினான். அதன் மேல் ஒரு விரிப்பை விரித்தான். மேரியை அதன் மீது படுத்துக் கொள்ளச் சொன்னான்.
சுகமான மெத்தைதான். ஆனால், அன்று இரவு அவர்கள் தூங்க முடியாமல்தான் போய் விட்டது. ஏனெனில், நள்ளிரவில், பெத்தலெம் நகர் முழுவதும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த அமைதியான நேரத்தில் மேரி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
அந்தப் பச்சைக் குழந்தையை வெள்ளைக் கந்தைத் துணிகளினால் சுற்றி மூடினாள் மேரி. அதற்குத் தொட்டில் வேண்டுமே! அதை எதிலே படுக்க வைப்பது? என்று எண்ணிய அவள், அங்கிருந்த மரப் புல் தொட்டி ஒன்றை எடுத்துத் தொட்டிலாக்கினாள். காய்ந்த புல் இருந்த அந்த மரத் தொட்டியில் கந்தைகளை விரித்து அதன் மேல் தன் அருமைக் குழந்தையைக் கிடத்தித் தூங்க வைத்தாள்.
எளிய தொழுவத்தில் மேரியின் மணி வயிற்றில் பிறந்த இந்தக் குழந்தை தான், எல்லாம் வல்ல இறைவனின் அருளுக்குரிய திருமகன் என்பதை அறியாமல் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், தேவ தூதர்கள் அறிந்து கொண்டார்கள். அவர்கள் இயேசு நாதர் பிறந்த செய்தியை உலகுக்கு அறிவிக்க வந்த போது வானம் ஒளிமயமாக விளங்கியது.
இனிமையான ஒளி வான் பரப்பிலே தோன்றியதையும், தேவ தூதர்களின் புகழ்ப் பாட்டின் இசை காற்றிலே பரவியதையும் அறியாமல் மக்கள் துயின்று கொண்டிருந்தனர். ஆனால் பெத்தலெம் நகருக்கு வெளியேயிருந்த குன்றுகள் நிறைந்த பகுதியிலே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர் இச்செய்தியை அறிந்தார்கள்.
குளிர் காய்வதற்காக வளர்த்திருந்த நெருப்பைச் சுற்றி, தம் போர்வைகளை இழுத்து மூடிக் கொண்டு பாதி தூங்கியும் பாதி தூங்காமலும் தங்கள் ஆட்டுக் கிடைகளோடு தரையில் படுத்துக் கிடந்த அவர்கள் வானில் தோன்றிய அதியற்புதமான பேரொளியைக் கண்டு வியந்து தலை தூக்கிப் பார்த்தனர்.
அந்தப் பேரொளியின் இடையிலே ஒரு தேவதூதன் தோன்றினான். அவனைக் கண்டு அஞ்சி எழுந்த ஆட்டிடையர்கள் வணங்கித் தொழுதார்கள்.
“அஞ்சாதீர்கள்! எல்லா மக்களுக்கும் இன்பந்தரும் ஒரு செய்தியையே நான் இப்போது உங்களுக்கு சொல்லப் போகிறேன். டேவிட் அரசர் பிறந்த இந்தப் பழம் பெரு நகரிலே இன்று மக்களைக் காக்கவந்த மகன் இயேசு பெருமான் பிறந்திருக்கிறார். புல்யொன்றிலே கந்தைத் துணிகளால் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒரு குழந்தையை நீங்கள் காணலாம், அந்தக் குழந்தையே உங்கள் காப்போன் ஆவார்.”
தேவதூதனின் இந்த அதிசய மொழிகளைக் கேட்டு அந்த ஆட்டிடையர்கள் மலைத்துப் போனார்கள். மேலும் அதிசயமான சில காட்சிகளை அவர்கள் கண்டார்கள். வானக முந்தும் தேவதூதர்கள் பலர் வந்து நின்று வாழ்த்துப் பாடல்கள் பாடினார்கள்.
பாடி முடிந்ததும் தேவதூதர்கள் மறைந்து விட்டார்கள். "வாருங்கள்! நாம் பெத்தலெம் நகருக்கு போவோம். இறைவனால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்த உண்மையை நாம் கண்டு வருவோம்" என்று பேசிக் கொண்டு அந்த ஆட்டிடையர்கள் புறப்பட்டார்கள். பொழுது விடியும் கருக்கல் நேரத்தில் அவர்கள் பெத்தலெம் நகருக்குள் வந்து சேர்ந்தார்கள்.
சத்திரத்தின் சிறிய தொழுவத்தை அவர்கள் கண்டார்கள். மெல்ல மெல்ல அந்தத் தொழுவத்தின் கதவருகே சென்று நின்று எட்டிப் பார்த்தார்கள். மங்கலாக அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில் ஒரு பசுவும் ஒரு கழுதையும் கட்டிக் கிடப்பதைக் கண்டார்கள். ஆண்டவனின் மகனைப் பெற்ற அன்னை மேரியை ஆவலோடு பார்த்துக் கொண்டு நிற்கும் ஜோசப்பை அவர்கள் கண்டார்கள். இக்காட்சிகளுக்கு மத்தியிலே அவர்கள் ஆவலோடு தேடி வந்த அந்தச் சிறு குழந்தையை அப்போது பிறந்த பச்சைக் குழந்தையை மரத் தொட்டியின் நடுவே சாய்ந்திருந்த புல்லின் மேலே படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் இறைவனின் திருமகனைக் கண்டு இன்ப மடைந்தார்கள்.
தாங்கள் கண்ட இந்த இன்பக் காட்சியைத் தங்கள் சுற்றஞ் சூழல் அனைவருக்கும் தெரிவிக்க அவர்கள் திரும்பிச் சென்றார்கள். இறைவன் புகழ் பாடிக் கொண்டே அவர்கள் இன்பம் நிறைந்த உள்ளத்தோடு, தங்கள் ஆட்டு மந்தைகள் இருக்கும் குன்று நோக்கித் திரும்பினார்கள்.