உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்கண வரலாறு

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




இலக்கண வரலாறு

புலவர் இரா. இளங்குமரன்

மணிவாசகர் பதிப்பகம்

55, லிங்கி தெரு, சென்னை-600 001.

முதற்பதிப்பு : ஜூலை, 1988

பக்கங்கள் 448 + 44

விலை ரூ. 40-00


கிடைக்குமிடம்

மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608001
14, சுங்குராம் தெரு, பாரிமுனை, சென்னை - 600001
55, லிங்கிச்செட்டி தெரு, சென்னை - 600001
28-A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625001
3/4 ராஜ வீதி, கோயமுத்தூர் - 641001
20, நந்திக்கோயில் தெரு, திருச்சி - 620002


சென்னை போன் : 512996. சிதம்பரம் போன் 2799



அச்சிட்டோர்: கற்பகம் அச்சகம், சென்னை-600 002

இலக்கணச் செல்வம்

ச. மெய்யப்பன், எம். ஏ.,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

மணிவாசகர் பதிப்பகம் நல்ல நூல்களை நாட்டுக்கு வழங்கும் பதிப்பகம் என்பது வரலாறு ஆகிவருகிறது. துறைதோறும் சிறந்த நூல்களைப் பதிப்பித்துப் பலரின் பாராட்டையும் பரிசையும் குவித்து வெற்றிக் கொடி நாட்டி வீறுநடை போடுகிறது. அடிப்படை நூல்கள் பல வெளியிட்டுச் சிறந்த மொழிப்பணி ஆற்றி வருகிறது.

தமிழ்மொழி வரலாறு, நாட்டுப்புற இயல் வரலாறு, திருக்கோயில் வரலாறு, சிற்றிலக்கிய வரலாறு, தமிழகக் கலை வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு என வரலாற்று வரிசை வெளியிட்டு மொழிப்பதிவேடுகள் பல பதிப்பித்த பெருமை மணிவாசகர் பதிப்பகத்தின் தனிச் சிறப்பாகும்.

இலக்கிய வரலாற்றுடன் இலக்கண வரலாறும் வெளியிடும் பேறும் பெற்றுத் திகழ்கிறது. தமிழில் இலக்கியவரலாறுகள் பல உள:

கா. சுப்பிரமணியபிள்ளை
சீனிவாச பிள்ளை
பூரணலிங்கம் பிள்ளை
வையாபுரிப் பிள்ளை
தி. வை. சாதசிவ
பண்டாரத்தார்
ஈ. எஸ். வரதராச அய்யர்
ஔவை துரைசாமி பிள்ளை
மேயர் ராமசாமி நாயுடு
டாக்டர் மு. வ.
மு. அருணாசலம்
சோமசுந்தர தேசிகர்

எம். ஆர். அடைக்கலசாமி
சி. பாலசுப்பிரமணியம்
மது. ச. விமலானந்தம்
தமிழண்ணல்
ஸ்ரீசந்திரன்
மு. கோவிந்தசாமி
ஜேசுதாஸ்
சாமி முத்து
அருள்சாமி
பூவண்ணன்
சோம. இளவரசு
ரா. சீனிவாசன்





ஆகியோர் இலக்கிய வரலாறு எழுதியுள்ளனர்.

இலக்கண வரலாறு பேராசிரியர் கவிஞர் மு. அண்ணாமலை அவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி என் இனிய நண்பர் சோம. இளவரசு அவர்கள் முதன் முதலில் 1961-இல் சிறப்பாக எழுதினார்கள். அதனைத் தொடர்ந்து இப்பொழுது நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின் அறிஞர் இளங்குமரன் அவர்கள் மிக விரிவாக இலக்கண வரலாறு எழுதியுள்ளார்கள். அரிய நூல்கள் வெளியிடும் திட்டத்தில் இந்த விரிவான இலக்கண வரலாறு வெளிவருகிறது. ஆராய்ச்சிக்கு அருந்துணையாக அமையும் இவ்வகை நூல்களை வெளியிடுவதன் மூலம்தான் பதிப்பகம் தமிழ் மொழிக்குத் தலையாய தொண்டு செய்ய முடியும் என்று கருதுகிறேன். நல்லாசிரியர் எழுதும் அரிய நூல்களைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இடையறாது வழங்கவேண்டும் என்ற இனிய இலட்சிய நோக்கில் இலக்கண வரலாறு வெளியிடப் பெறுகிறது.

இந்நூலில் இலக்கணத்தின் இயல்பும் பயனும் மொழிக்காப்பும் மிக விரிவாக நுட்பமாக விளம்பப்பெற்றுள்ளன. முந்து நூல்களின் அமைப்பும் அழகும் அழகாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. மறைந்த இலக்கணங்களின் மாட்சியும் வழக்கில் இல்லாத இலக்கண நூல்களின் இயல்பும் இலக்கணம் படைத்த ஆசிரியர்களின் பேரறிவும் பேராற்றலும் நன்கு விளக்கப்பெற்றுள்ளன. இலக்கணங்களைத் தம் உரைகள் மூலம் காத்த உரையாசிரியர்களின் உயர்வற உயர்ந்த அறிவு நலன்களையும் ஆசிரியர் தக்க சான்றுகளுடன் நிறுவிய திறன் கற்கும்தோறும் கற்கும்தோறும் களிப்பு நல்குவன. வளமான மொழிக்கு அமைந்த பல்வகை இலக்கணங்களின் வரலாற்றையும் வளமான தமிழில் வகுத்தளித்து வழங்கியுள்ளார். அவற்றின் சீர்மையும் சிறப்பும் விளக்கப் பெற்றுள்ளன. தமிழ் இலக்கணம் வளர்ந்த வரலாறு வரலாற்று நோக்கில் ஆராயப்பெற்றுள்ளது. ஒரு சீரிய இலக்கண வரலாறு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்விலக்கணங்களுக்கு ஏற்ப இவ்விலக்கண வரலாறு அமைந்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இலக்கண வல்லுநர்களின் மொழி இயல் அறிஞர்களின் கூட்டு முயற்சியால் ஆறு இலக்கணக் கருத்தரங்குகளைச் சீரோடும் சிறப்போடும் நடத்தியது. கருத்தரங்கில் பங்குபெறும் போதெல்லாம் விரிவான இலக்கண வரலாற்றின் வளர்ச்சியை நான் உணர்ந்தேன். இலக்கணக் கொள்கைகளின் வளர்ச்சியை வரலாற்று முறையில் விளக்கும் நூல் தேவை என்பதையும் நன்கு உணர்ந்தேன்.

பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் வழி இருபதாண்டுகளாக வெளிவரும் ஐம்பத்தாறு ஆய்வுக் கோவைகளிலும் இலக்கணம் உரையாசிரியர் பற்றிய பல நூறு சிந்தனைகள் சிதறிக் கிடப்பதையும் சிந்தித்தேன்.

காலத்தின் வளர்ச்சிக்கேற்ப அறிவியல் அணுகு முறையில் இலக்கண வரலாறு ஒன்று உருப்பெறுதல் நன்று என்று கருதி அதற்குரியார் யாரெனத்தேடி இளங்குமரனாரே தக்கார் எனத் தேர்ந்து இப்பெரும் பணியினைச் செய்து தரும்படி வேண்டிக்கொண்டேன். இலக்கண வரலாறு காலத்தின் கட்டாயம். இற்றை ஆய்வாளர்களுக்குக் கருத்துச் சுரக்கும் அமுத சுரபியாகும்.

இந்நூலை எழுதிய அறிஞர் இளங்குமரன் அவர்கள் இலக்கணப் புலவர். இலக்கியச் செல்வர், தமிழ் மரபு காக்கும் மரபினர். நுழைபுலம் மிக்க ஆய்வாளர், கற்றது விரித்துரைக்க வல்ல பேராசிரியர். கற்றபடி நிற்கும் சான்றோர். குறள்கூறும் செந்நெறியில் ஒழுகும் செம்மல். பீடு நடையினர், பெருமித வாழ்வினர். தமிழ்ப்பணியையே தலையாய பணியாகக் கொண்டு வாழும் திருமகனார். மொழி ஞாயிறு பாவாணர் வழியில் வேர்ச்சொல் ஆராயும் வித்தகர். தமிழ்க்கல்வி இயக்கம் கண்ட தலைமைசால் பேராசிரியர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் வழியில் சொல்லாக்கம் செய்பவர். பேச்சால் எழுத்தால் வாழ்வில் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு. அவர்கள் எழுதிய இலக்கியவகை அகராதி சிற்றிலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்குக் கிடைத்த கருவூலம்; கருத்துக் களஞ்சியம்.

பாவாணர் ஆராய்ச்சி நூலகம் நடத்துபவர் இளங்குமரனார். அவரே ஒரு நடமாடும் நூலகம். தொடர்ந்து தமது அரிய ஆய்வு நூல்களை வெளியிட வாய்ப்பளித்து வரும் ஆசிரியப் பெருமகனார்க்கு நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வாய்வு நூலுக்கு மூதறிஞர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் மிக நுட்பமான ஆராய்ச்சி முன்னுரை வழங்கியுள்ளார்கள். இலக்கண வரலாறு பெற்ற தமிழின் சிறப்பினை அவர்கள் எடுத்து விளக்கும் திறன் தனி நூலாக விரியும் தகைமை சான்றது. நாளும் தமிழ் வளர்க்கும் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் தொல்காப்பியத் தகைஞராக அவர்கள் விளங்குகிறார்கள். எழுத்ததிகாரத்திற்குத் தெளிவான விளக்கவுரை வரைந்துள்ளார்கள், இலக்கணப் புலமையில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி, தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழியக்க ஆளுநர் எங்கள் பேராசிரியர் வ. சுப. மா. அவர்களின் ஆய்வுரை, நூலுக்கு நுழைவாயிலாக, தோரண வாயிலாக அமைந்துள்ளது.

உரையாசிரியர் என்னும் பெருநூலைப் படைத்து, பேரும் புகழும் பெற்றுப் பொன்னும் பொருளும் பெற்ற சிந்தனையாளர் பேராசிரியர் மு. வை. அரவிந்தன் அவர்கள் ஆராய்ச்சி உரை வழங்கியுள்ளார்கள், மதி நுட்பம் நூலோடு வாய்ந்த அரவிந்தன் நூலின் பன்முக நலன்களை மனம் உவந்து பாராட்டியுள்ளார். நூலின் கட்டமைப்பை, கருத்துகளின் வலிமையைச் சமன்செய்து சீர்தூக்கியுள்ள திறன் வியந்து பாராட்டுதற்குரியது. இது போன்ற பெருநூல்கள் வெளியிடத் தமிழ் மக்களின் தொடர்ந்த நல்லாதரவை வேண்டுகிறோம்.

அணிந்துரை

மூதறிஞர் செம்மல்

வ. சுப. மாணிக்கம் பிஎச்.டி., டி.லிட்டு.,

எல்லா மொழிக்கும் இலக்கிய வரலாறு எழுதமுடியும், ஆனால் இலக்கண வரலாறு எழுதும் தகுதிப்பேறு ஒரு கை விரலினும் குறைந்த மொழிகட்கே யுண்டு. வடமொழியும் தமிழும் இலக்கண வரலாறு எழுதத்தக்க அருட்செல்வமுடையவை. இவ்விரண்டனுள் வடமொழிக்கோ இலக்கண வரலாற்றில் வளர்ச்சியில்லை. வழக்கிலா மொழி வடமொழியாதலின், பழையன கழிதல் புதியன புகுதல் என்ற இலக்கணப்போக்கு வரவிற்கு இடனில்லை. அதன் வரலாறு பல நூற்றாண்டுகட்கு முன்பே நடுகல் போல நின்றுவிட்டது. சில இந்திய மொழிகட்கு இலக்கண வரலாறு கி. பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தியதாகும். ஞால மொழியுள்ளும் இந்திய மொழியுள்ளும் தொன்மை புதுமை இடையறவு படாத்தன்மை எல்லாம் தழுவிய இலக்கண வரலாறு தமிழ்மொழி ஒன்றுக்கே உரியது.

தமிழ் மொழிக்கு இலக்கிய வரலாறு இலக்கண வரலாறு என்ற இரட்டையாறு என்று தோன்றியதெனக் காலக்குறி செய்வதற்கில்லை. இறையனார் அகப்பொருளுரையில் வரும் சங்கக் குறிப்புக்கள் மிகையன என்றாலுங்கூட, பொதுப்பட்ட உண்மைகளை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். தலைச் சங்கத்துக்கு நூல் அகத்தியம் எனவும், இடைச்சங்கத்துக்கு நூல்கள் அகத்தியம் தொல்காப்பியம் மாபுராணம் இசை நுணுக்கம் பூதபுராணம் எனவும், கடைச்சங்கத்துக்கு நூல்கள் அகத்தியம் தொல்காப்பியம் எனவும் இலக்கண நூல்களைச் சுட்டுவதிலிருந்தே தமிழின் இலக்கணத் தொன்மையும் ஆதிக்கமும் போதரும். மேலும் இன்றுள்ள தொல்பனுவல்களுள் தொல்லிது தொல்காப்பியம் என்பதனால், இலக்கியப் பனுவல்களைக் காட்டிலும் இலக்கண நூலைப் போற்றிக் காத்த புலவோர்தம் உரப்பாடு பெறப்படும். காலத்தால் அழியாது சீரிளமைத் திறங்குன்றாது இன்றும் விளங்கும் கன்னி மொழியாகத் தமிழ் வாழ்வதற்கு, வரம்புடைய இலக்கணக் கரைகளே வேலியாகும். இவ்வுண்மையை உணரமாட்டாத அறிவறைகள் இலக்கணக் கரைகளை உடைத்து ஏனைச் சின்மொழிகளைப்போலச் செந்தமிழையும் கறைப்படுத்த முயல்வர்; இதுவே முற்போக்கு எனவும் மருட்டுவர். இங்ஙனம் மயங்குவாரை இலக்கணப் பெரும் புலவர் இளங்குமரன் சீர்பட எழுதியிருக்கும் இந்த இலக்கண வரலாறு திருத்தும், உண்மையுணர்த்தும் என நம்புகின்றேன்,

பல இலக்கியப் பனுவல்கள் அழிந்தன, அழிக்கப்பட்டன போலவே பல இலக்கண நூல்களும் உரைகளும் அழிவுபட்டன. அழிவுற்ற நூல்களுள் பெயர்களும் தெரியாமற் போயினவும் உண்டு. இவை தகுதியின்மையால் இறந்தன என்று ஊகிப்பதற்கில்லை; படியெடுத்துக் காப்பார் இன்மையாலும் அழியப் பார்ப்பார் இருந்தமையாலும் புதையுண்டன. இன்றுங் கூட அச்சிட்ட பல தமிழ் நூல்களின் கதி இதுவே.

நல்லூழால் நமக்குக் கிடைத்திருக்கும் இலக்கண நூல்களும் உரைகளும் தஞ்சைப் பெருவுடையார் கோபுரம் கோயில் போலத் தமிழின் இலக்கணச் சிறப்பினைக் காட்டும் சான்றுகளாக உள. இவற்றுள் தொல் காப்பியத்தை ஒரு தட்டிலும், ஏனைய நூல்களையெல்லாம் மற்றொரு தட்டிலும் வைத்துச் சீர்தூக்கினால், தொல்காப்பியத்தட்டே பொருட்பளுவால் தாழ்ந்து சிறக்கும் என்பது வெளிப்படை. ஆதலின் இவ்விலக்கண வரலாற்றில் தொல்காப்பியம் 130 பக்கங்கள் இடங்கொண்டிருப்பது உரிமையாகும்.

புலவர் இளங்குமரன் ஆழ்ந்த பலதுறைப் புலமையோடு தமிழ்ச்சொற்களின் வேர்களையும் வேரொப்புமைகளையும் கூர்ந்து ஆராயும் நுண்மதி பெற்றவர்; சிதறிக் கிடந்த நூற்பாக்களைத் தேடித் திரட்டிக் காக்கை பாடினியம் என்ற நூலை உருப்படியாக்கி, விரிந்த உரையும் வரைந்த இலக்கணப் பணியாளர். தமிழின் மொழியாற்றலை உறுதிப்படுத்தும் திறம் இவர் எழுத்தாண்மைக்கு உண்டு. உள்ளும் புறமும் ஒத்த தமிழ்த் தொண்டர் இவர். இலக்கண வரலாறு எனப்பெயரிய இந்நூற்கண், முந்து நூல், அகத்தியர், தொல்காப்பியர் சமயம், ஐந்திரம், இளம்பூரணர் சமயம், நச்சினார்க்கினியரின் மாட்டேறு, தெய்வச்சிலையாரின் உரைத்தன்மை, நாவலர் புத்துரை, குழந்தையுரையின் வைப்புக்கேடு என்ற பல அரில்களை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கக் காண்கின்றோம்.

'பிந்து நூல்களின் முந்து நூல்கள்' என்பது சுவையான அவலமான தலைப்பாகும். பாதி மறைந்தும் பாதி மறையாமலும் உள்ள அவிநயம் முதலான நூல்கள் இவ்வகையைச் சார்ந்தன. தொல்காப்பியத்தை அடுத்து இலக்கணிகளைக் கவர்ந்த நூல் நன்னூல் ஆதலின் இவ்வரலாறு அதற்குச் சிறப்பிடம் அளித்திருப்பது பொருத்தமே. உரைபெற்றது, உரைபெறாதது; பரவியது, பரவாதது; சிறப்பினது, சிறப்பிலது; யாப்பு வடிவினது, உரைவடிவினது; முழுமையது, குறையது என்ற பாகுபாடுபாராமல் எல்லா இலக்கண நூல்களையும் இவ்வரலாற்றில் தழுவியிருப்பது ஆசிரியரின் சமனிலைக்குச் சான்றாகும்.

தமிழிலக்கண வரலாறு எழுதுவோர் அகத்தியம் தொடங்கி எழுதுவது ஒரு மரபாக வந்திருக்கின்றது. இது எனக்கு உடன்பாடன்று. தொல்காப்பியத்துக்கு முன்பு இலக்கண நூல்கள் பலவிருந்தன. இதில் ஐயமில்லை . ஆனால் அகத்தியம் என ஒரு நூல் இருந்தது. அதுவே முந்து நூல் எனப் பனம்பாரனாரால் சுட்டப்பட்டது என்ற வழிவழிக் கருத்துக்கு என்னானும் கரியில்லை. ஒப்பிலா மலடி என்றாங்கு, இல்லை என்று சொல்ல வேண்டிய ஒரு நூலுக்கு மகத்துவம் வாய்ந்த அகத்தியம் என்று பெயர் கூறித் தமிழிலக்கண வரலாற்றைப் புராண மயமாகத் தொடங்குவதைக் காட்டிலும், காலத்தை வென்று வாழும் தொன்மையான தொல்காப்பியத்தை முதலாவதாக வைத்து இவ்வரலாறு தொடங்கப்படுவதே அறிவுமுறை என்பது என் கருத்து.

தமிழிலக்கண நூல்கள் நூற்பாவும் உரையுமாக இருநூற்றுக்கு மேலாக இருந்தாலும், அற நூல்களில் திருக்குறள் போல, சில இலக்கண நூல்கள் தரமிக்கவை, அடிப்படையானவை, களஞ்சியச் செல்வமுடையவை, என்றும் குறிக்கொண்டு போற்றத்தக்கவை. தொல்காப்பியமும் அதன் தொல்லுரைகளும் ஒருபுறம் இருப்ப, நன்னூலும் அதன் உரைகளும் உரை விளக்கங்களும் இன்னொருபுறம் இருப்ப, ஏனையவற்றுள் வீரசோழியமும் யாப்பருங்கலவுரையும் நன்கு மதிக்கத்தக்கவை; ‘வடநூல் மரபும் புகன்று கொண்டே’ என்று வெளிப்படச் சொன்னபடி, வீரசோழியம் சொல்லாலும் பொருளமைதியாலும் வடமொழித் தாக்கம் உடையதாக இருந்தாலும், அதை இருமொழி ஒப்பிய நூல் என மதிக்கவேண்டும். இந்நோக்கில் அதன் வெற்றியைக் காண்பது நன்றாகும். பிரயோக விவேக நூலார் வன்கண்மையாகச் செய்தது போல், தமிழின் அடிப்படைகளைப் புத்த மித்திரனார் வடமொழிக்கு அடிமைப்படுத்தவில்லை. 'சார்ந்த வழக்கொடு தப்பா வடவெழுத்தைத் தவிர்ந்து தேர்ந்துணர் வார்க்கும் இனிமையைத் தந்து' என்ற காரிகையால் வீரசோழியத்தின் தமிழ்க்காப்பு தெளிவாகும்.

தமிழிலக்கணச் செல்வங்களுள் யாப்பருங்கலவுரைக்கு ஈடிணையில்லை. இறையனாரகப்பொருள் நூல் அதன் உரையால் மன்னியதுபோல, யாப்பருங்கலமும் அதன் பேருரையால் மன்னலாயிற்று. எத்துணையோ இலக்கண நூல்கள் மறைந்தொழியிலனும் அந்த இழப்புக்கெல்லாம் ஈடு செய்யவல்லதாக இக்கலத்தின் உரை விளங்குகின்றது. இவ்வுரை கல்லாதவன் தமிழிலக்கண வாயில் நுழையாதவன். இந்த உரை நூல் கிடைத்திராவிட்டால் தமிழிலக்கண வரலாறு விரிவாக எழுதமுடியுமா? இலக்கணக் கொள்கைகள் தொடைவிடையாட முடியுமா? மறைந்துபோன இலக்கணங்களேயன்றி இலக்கியப் பெயர்களும் செய்யுட்களும் ஒளிப்பட்டிருக்குமா? எவ்வளவு வரலாற்றுக் குறிப்புக்கள், இசைப்பாடல்கள், யாப்பு வழக்குகள், நாட்டுப்பாடல்கள் இவ்வுரையில் கொட்டிக் கிடக்கின்றன! 'அறிதோறு அறியாமை கண்டற்றால்' என்ற கருத்து இவ்வுரையைக் கற்குங்கால் தெரியவரும். இத்தகைய பெறலரும் உரை பன்னோக்கில் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. இது நம் ஆய்வுப் போக்கின் நடுக்கத்தையும் நொசிவையும் வெளிப்படுத்துகின்றது.

புதிய தமிழுக்கு ஆக்கமும் நல்ல நூலாளர்க்கு ஊக்கமும் வழங்கி, மொழித் தொண்டாற்றி முன்னணியில் நிற்கும் மணிவாசகர் நூலகம் இலக்கண வரலாறுபோலும் தகுதி வாய்ந்த நூல் வரிசைகளைத் தொடர்த்து பதிப்பித்துப் பல் புகழ் பெறுக என வழுத்துகின்றேன்.

௩ ஆனி ௨௲௧௯
17-6-1988

வ. சுப. மாணிக்கம்

இலக்கண வரலாறு

ஆய்வுரை

பேராசிரியர் மு. வை. அரவிந்தன்

தமிழில் இலக்கிய வரலாற்று நூல்கள் பல தோன்றியுள்ளன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்தே அறிஞர் பலர் தமிழிலக்கிய வரலாற்றுச் சிந்தனைகளை உருவாக்கிக் கட்டுரைகளும் நூல்களும் எழுதியுள்ளனர். ஆனால், இன்றுவரை ‘இலக்கண வரலாறு’ ஒன்று மட்டுமே வெளிவந்துள்ளது. அந்த நூலை 1961ஆம் ஆண்டில் தமிழறிஞர் சோம. இளவரசு அவர்கள் எழுதினார்கள். அதனைப் பேராசிரியர் மு. அண்ணாமலை அவர்கள், தமது தொல்காப்பியர் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுப் பெருமைப் படுத்தினார்கள்.

புலவர் சோம. இளவரசு இயற்றிய இலக்கண வரலாறு முதல் நூலாக இருந்தாலும், சிறந்த முறையில் அமைந்தது. அதனை அறிஞர்கள் போற்றினர்; இளைஞர்கள் கற்றுப் பயன் பெற்றனர்; ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டினர்.

அது தோன்றி 25 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பின்னர், இப்போது இரண்டாவது நூலாக 'இலக்கண வரலாறு' வெளிவந்துள்ளது. இதனை இயற்றியவர் ஆராய்ச்சி அறிஞர் இளங்குமரன் அவர்கள்.

தமிழ்நாட்டில் ஒரு சிறந்த பல்கலைக்கழகம் போல் செயலாற்றிப் பல நல்ல நூல்களைத் தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்ற மணிவாசகர் பதிப்பகம். இதனை வெளியிட்டுச் சாதனை புரிந்துள்ளது; தமிழ்த் தொண்டில் 'ஒரு மைல் கல்'லைப் பதிய வைத்துள்ளது.

1. நூலாசிரியரின் தகுதிகள்

இந்த நூலின் ஆசிரியரான புலவர் இளங்குமரன், முறையாகத் தமிழ் பயின்றவர். தனித் தமிழ்ப்பற்று மிக்கவர். கல்வியைச் செல்வமாக மதித்து, கற்றோரைச் சுற்றமாகக் கொண்டு வாழ்பவர்.

இவர், தமிழ் நூற் பரப்பின் எல்லையைக் கண்டவர்; இலக்கிய இலக்கணச் சிந்தனைகளில் மூழ்கி முத்து எடுத்தவர்; ஆராய்ச்சி உலகில் தமக்கென நெறிமுறைகளை அமைத்துக் கொண்டவர் எதைக் கூறினாலும் தெளிவாகவும் முரண் இன்றியும் கூறுபவர்; கருத்துகளை நிரல்பட உரைப்பவர்.

இவருடைய தமிழ்நடை சிக்கல் இல்லாதது; தெளிந்த நீரோடை போன்றது.

ஆராய்ச்சியில் நடுநிலைமையும், காமஞ் செப்பாது கண்டது மொழியும் நேர்மையும் இவர்க்கு இயல்பாக அமைந்த தனிப் பண்புகளாகும்.

இவர் எழுதிய நூல்கள் பல; ஆராய்ச்சி முன்னுரையுடன் தெளிவாகப் பதிப்பித்த இலக்கண இலக்கிய நூல்கள் பல.

இத்தகைய தகுதிகள் பல வாய்க்கப்பெற்ற புலவர் இளங்குமரன் படைத்துத் தந்துள்ள ‘இலக்கண வரலாறு’ தமிழுக்குக் கிடைத்த பெருஞ்செல்வமாகும்.

2. நூலின் அமைப்பும் அழகும்

இந்த நூல், ‘இலக்கண வரலாறு’ என்ற முதற் கட்டுரையுடன் தொடங்குகிறது. இந்தக் கட்டுரை இலக்கணம், வரலாறு ஆகிய இரு சொற்களைப் பற்றியும் விரிவாக ஆராய்கின்றது. அந்தச் சொற்களின் பொருள், வழக்காறு, முன்னோர் நூல்களில் இடம் பெற்றுள்ள பாங்கு ஆகியவை பற்றிய ஆய்வு நம் சிந்தனையைத் தூண்டுகிறது.

இலக்கண வரலாற்றுச் சிந்தனையுடன் நூலுக்குள் நுழைகின்ற நாம், அடுத்த கட்டுரையில் தொல்காப்பியத் திற்கு முன் இருந்த நூல்களைப் பற்றி அறிகின்றோம். பின்னர் அகத்தியரையும், அவர் பெயரால் வழங்குகின்ற போலி நூல்களையும் அறிகின்றோம்.

நூலின் ஆசிரியர் தருகின்ற ஒளியின் உதவியால் தொல்காப்பியர், தொல்காப்பியம், தொல்காப்பிய உரையாசிரியர்கள் பற்றித் தெளிவான செய்திகளை அறிகின்றோம்.

இவற்றிற்குப் பின்னர் இறையனார் அகப்பொருளும் அதன் உரையும் அறிமுகப்படுத்தப் படுகின்றன.

அடுத்து, பிற்காலத்து நூல்களில் குறிப்பிடப்படும் முன்னைய நூல்களைப்பற்றி அறிகின்றோம்.

பின்னர், காலமுறைப்படி தமிழில் தோன்றிய இலக்கண நூல்களையும் உரைகளையும் பற்றி அறிகின்றோம்.

மிக அண்மைக் காலத்தில் தோன்றிய நூல்வரை எல்லா நூல்களின் வரலாற்றையும் அறிந்து, தமிழ் இலக்கணத்தின் பரப்பைத் தெரிந்து கொள்கிறோம்.

இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் இலக்கண நூல் ஒன்றை அறிமுகப்படுத்தும் முறை சிறப்பாக உள்ளது. முதலில் நூலாசிரியர் வரலாற்றை - ஆய்ந்துரைக்கின்றது. அவரது காலம், வாழ்ந்த இடம், வாழ்க்கைக் குறிப்பு ஆகியவை விளக்கப்படுகின்றன. இவற்றை அடுத்து நூலின் அமைப்பு, நூற்பா எண்ணிக்கை, இலக்கணக் கோட்பாடு ஆகியவை விவரிக்கப்படுகின்றன. பின்னர் உரையாசிரியர் வரலாறும், அவரது உரைத்திறனும் ஆராய்ந்து கூறப்படுகின்றன. உரை நலனும், தனிச்சிறப்பும், உரை தோன்றிய காலத்து மக்களின் பண்பாடும் விளக்கப்படுகின்றன.

பல இலக்கண நூல்களைப் பல நாள் முயன்று படிப்பதால் பெறுகின்ற பயனை இந்த ஒரு நூலாலேயே நாம் பெறுகிறோம். நூலைப் படித்து முடித்தவுடன் ஒரு நல்ல ஆய்வு நூலைக் கற்ற மன நிறைவு ஏற்படுகிறது; நெஞ்சத்தில் தமிழ்ச்சுவை நிரம்பி இன்ப மூட்டுகிறது; சிந்தனையில் தெளிவும், புதிய செய்திகளின் ஒளியும் பரவி மகிழ்விக்கின்றன.

3. இலக்கண நூல்களின் அறிமுகம்

இந்த நூலின் ஆசிரியர், ஒவ்வோர் இலக்கண நூலையும் அறிமுகப்படுத்தும் முறை சிறப்பு வாய்ந்ததாகும்.

முந்து நூல்களில் நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே (பக். 14) என்றும்; அது பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல் என்றும் பக், 34) அது பிற்கால இலக்கணப் பகுப்புகளுக்கும் இடம் தருவதாக அமைந்தது (பக். 54) என்றும் தொல்காப்பியத்தைப் போற்றுகின்றார்.

இவ்வாறே இவர் பின்வருமாறு இலக்கண நூல்களை அறிமுகப்படுத்துகின்றார்:

இறையனார் அகப்பொருள்

“தொல்காப்பியத்திற்குப் பின்னர் முழுதிலக்கணம் தழுவாத பகுதியிலக்கண நூல்கள் தோன்றத் தொடங்கின. அவ்வகையில் அகப்பொருள் பற்றிக் கூறும் நூலாகத் தோன்றியது இந்நூல்” (பக். 171).

புறப்பொருள் வெண்பா மாலை

“இந்நூல், புறப்பொருள் இலக்கண உலகில் தனிச் சிறப்புடையதாகும். ஏனெனில் இதற்குப்பின், புறப்பொருள் கூறும் தனி இலக்கண நூல்கள் எவையும் தோற்றமுற்றில; ஐந்திலக்கணம் கூற வெழுந்த நூல்களும் இத்தகைய விதியையும் சிறப்பையும் கொண்டில” (பக். 206),

யாப்பருங்கலம்

“யாப்பாகிய அரிய அணிகலம் என்றும், யாப்பாகிய கடலைக் கடக்க அமைந்த அரிய கலம் (கப்பல்) என்றும் பொருள் கொள்ள அமைந்த அரிய நூல்” (பக். 216).

வீரசோழியம்

“ஐந்திலக்கணம் என்னும் அமைப்பில் வெளிவந்த முதல் நூல் இவ் வீரசோழியமே” (பக். 240).

நேமிநாதம்

“தொல்காப்பியத்திற்குப் பின்னர், எழுத்து சொல் இலக்கணச் சுருக்கப் பயிற்சிக்கு இந்நூலே கருவியாக விளங்கியது” (பக். 263).

தண்டியலங்காரம்

“அணியிலக்கணம் கூறும் நூல்களுள் முதன்மையும் சிறப்பும் வாய்ந்தது தண்டியலங்காரமாகும்”. (பக். 259).

நன்னூல்

“நூல் என்றாலே இலக்கண நூலையே குறித்தல் பழ வழக்கு. நன்னூல் 'நல்ல இலக்கணம்' என்னும் பொருளது” (பக். 278).

“இளம்பூரணர் உரைவழியே நன்னூலார் பலப்பல நூற்பாக்களை இயற்றியுள்ளார்” (பக். 76).

அகப்பொருள் விளக்கம்

“தொல்காப்பியம் அகப்பொருளைக் கூற்றுவகையால் கூறும். இந்நூல் துறை வகையால் கூறுகின்றது” (பக். 315):

இலக்கண விளக்கம்

“முற்பட்ட நூல்கள் ஓரிலக்கணமும் ஈரிலக்கணமும் உடையனவாக இருந்தன. ஐந்திலக்கணமுடைய வீரசோழியம் தமிழ் நெறிக்கு மாறுபட்டுச் சென்றது. பிரயோக விவேகம் இன்னும் அப்பாற்சென்றது. உரைகளும் முரணியும் மயக்கியும் அமைந்தன. இவற்றை எல்லாம் எண்ணிய பட்டறிவாலும் பாடஞ்சொன்ன முறையாலும் முற்றிலும் புதுநூல் செய்யாமல் முற்றிலும் பழமையையே கொள்ளாமல் ஓராற்றான் ஐந்திலக்கணமும் ஒருங்கு கற்கும் ஒரு நூலைப் படைத்தார்” (பக். 369).

“ஆசிரியர் கற்பிக்கும் நோக்கில் பன்னூற் பொருளும் இந்நூல் தொகுப்பில் காணுமாறு செய்தற்குப் பேருதவியாக இருந்திருக்கும்” (பக். 371).

தொன்னூல் விளக்கம்

நன்னூல் எனப் பெயர் கொண்ட அது, அதற்கு முன் வந்த நேமிநாதத்தைச் சின்னூல் என்று வழங்கத் தூண்டிற்று. பின்னூலாக வந்த வீரமாமுனிவரின் இலக்கண நூலைத் தொன்னூல் என்று பெயரிடத் தூண்டிற்று" (பக். 386).

அறுவகை இலக்கணம்

மூன்றிலக்கணம் ஐந்திலக்கணமாக வளர்ந்த செய்தி அறிந்ததே. இவண், ஆறாம் இலக்கணமெனப் புலமை இலக்கணம் ஒன்றனையும் சேர்த்து அறுவகை இலக்கண நூல் எழுந்தமை காணலாம் (பக்.423).

உரைத்திறன் அறிவித்தல்

உரையாசிரியர்களிடம் பல வகையான திறன்கள் நிரம்பியுள்ளன. பழந்தமிழ் நூல்களின் அமைப்பு, உட்பிரிப்பு, நூற்பா எண்ணிக்கை, சரியான மூலபாடம் ஆகியவற்றை ஆராய்ந்து கூறிப் பொருத்தமில்லாதவற்றை அகற்றுதல், முன்னைய உரைகளில் உள்ள பொருந்தாத கருத்துகளை மறுத்தல், நூலாசிரியரின் இலக்கணக் கொள்கைகளைத் திட்டவட்டமாக அறிந்து வெளிப்படுத்துதல், பொருத்தமான எடுத்துக்காட்டுகள் தருதல், சொற்பொருள் கூறல், தம் காலத்து மொழி வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுதல் ஒப்புமைப் பகுதி தருதல் ஆகியவை உரையாசிரியர்களின் திறன்களாக மதிக்கப்படுகின்றன.

இத்திறன்கள் யாவற்றையும் அறிந்து இந்த நூலின் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். அவை கீழே தரப்படுகின்றன.

இளம்பூரணர்

தொல்காப்பியம் நமக்குக் கிட்டியமை இளம்பூரணர் உரை கொண்ட நலந்தாலேயே (பக். 67).

சேனாவரையர்

ஆசிரியர் (தொல்காப்பியர் தூற்பா) தொகுக்கும் நயத்தைத் தக்காங்கு எடுத்துரைத்தலில் தனித்திறம் காட்டுகிறார் சேனாவரையர் (பக். 91).

நூலாசிரியர்க்குரிய நெறிகளுள் ஒன்று உய்த்துணர வைத்தல் என்பது. அத்தகைய இடங்கள் சிலவற்றில் சேனாவரையர் நயம்பட உரை வரைகின்றார் (பக். 93).


பேராசிரியர்

பேராசிரியர் ஒரியலுக்கும் அடுத்துவரும் இயலுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார். ஒரு நூற்பாவுக்கும் அடுத்துவரும் நூற்பாவுக்கும் உள்ள தொடர்பைச் சுட்டுகிறார். ஒரே நூற்பாவில் வரும் செய்திகளின் முறைவைப்பையும் உன்னிப்பாக எண்ணி எழுதுகிறார் (பக். 106).

மறுப்புக் கூறுதல் பேராசிரியர் உரையில் தனிச் சிறப்புடையது. மிக விரிவாக ஆய்ந்து படிப்படியாக விலக்கியும் விளக்கியும் மறுத்து ஆசிரியர் கோளை நிலை நாட்டல் அவர்தம் முறைமை (பக்.111).

நச்சினார்க்கினியர்

வலிந்தும் நலிந்தும் சில இடங்களில் இவர் கூறியுள்ள உரை, ஆசிரியர் நூலுக்கும் தமிழர் நெறிக்கும் ஒவ்வாது (பக். 124).

தெய்வச் சிலையார்

(தொல்காப்பியச் சொல்லதிகார) நூற்பாக்களை இடப்பெயர்ச்சி செய்தாருள் முதல்வரெனத் தெய்வச் சிலையார் அமைந்து விடுகின்றார் (பக். 141).

அரிய செய்திகளையும் எடுத்துக்காட்டு நயங்களையும் உடையது, தெவ்வச்சிலையார் உரை (பக். 144).

இறையனார் களவியல் உர

நூலால் உரையும் உரையால் நூலும் ஒன்றை ஒன்று ஒப்பச் சிறப்புறும் என்பதற்கு இறையனார் களவியல் உரை சீரிய எடுத்துக்காட்டாம் (பக். 180).

யாப்பருங்கல விருத்தியுர

விருத்தியுரைகாரர் பல்கலைக்கு மிசில்; பேரறிஞர்; தயத்தக்க உரையாளர், சீரிய நினைவாளர்; நாடு கண்டவர் வரலாற்றுத் தெளிவானர்: பட்டறிவால் முதிர்ந்தவர்; சமயப் பொறையாளர்; சால்பாளர். (பக். 24).

தமிழ் யாப்பிலக்கணப் பரப்பைக் கடலெனப் பரப்பியும், மலையென உயர்த்தியும் காட்டவல்ல உரை, இவ்விருத்தியே (பக். 224).

நேமிநாத உரையாசிரியர்

எடுத்துக்காட்டைச் சிறுகதை போலப் படைத்துக் கூறுவதையும் இவர் மேற்கொள்கிறார் (பக். 261).

நன்னூல் - மயிலைநாதர் உரை

பின்னுரைகள் இவ்வுரையினும் திருத்தமும் தெளிவும் பெற்றுள எனின், இவ்வுரையின் கொடை தந்த வளர்ச்சி என்பதால் இவ்வுரையின் சிறப்பு இனிது விளங்கும் (பக். 291).

களவியற்காரிகை உரை

எடுத்துக்காட்டும் மேற்கோள் இன்ன நூலைச் சேர்த்தது என்பதைக் திட்டமாக உரைக்கும் சீர்மையுடையது உரை. அதனால் ஆய்வுலகம் பெற்றுள்ள நலம் அளப்பரிது (பக். 326).

5. பதிப்புகளைக் குறிப்பிடுதல்

இந்த நூலின் ஆசிரியர், பெரும்பான்மையான இலக்கண நூல்களின் பதிப்புப் பற்றிய விவரங்களைத் தந்துள்ளார். அந்த விவரங்கள் யாப்பருங்கல விருத்தியுரை முதல் அதன் பின் தோன்றிய நூல்களுக்கு எல்லாம் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியம் முதல் புறப்பொருள் வெண்பாமாலை ஈறாக உள்ள நூல்களுக்கும் பதிப்புப் பற்றிய விளக்கம் தந்திருப்பின் மிகவும் பயன் ஏற்பட்டிருக்கும்!

தரப்பட்டுள்ள பதிப்பு விவரங்கள் வெறும் பட்டியலாக இல்லாமல், ஒவ்வொன்றையும் நேரில் கண்டு படித்தறிந்து தரப்பட்ட விளக்கங்களாக உள்ளன. முதன்முதலில் மூலமும் உரையுமாக நூல் அச்சிட்ட ஆண்டு, அதன் தகுதி, பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள், பதிப்புத் தோறும் வேறுபட்ட நிலை ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

இத்தகைய விளக்கங்கள் யாவும், இலக்கண ஆய்வில் விரிவாக ஈடுபட விரும்புபவர்க்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும்; மறு ஆய்வு செய்யத் துணை புரியும்.

பதிப்பு விவரங்களில் நம் சிந்தனையைத் தூண்டும் இடங்களில் சில, அடுத்துத் தரப்படுகின்றன. 1. நம்பி அகப்பொருள் நூலுக்கு, இப்போதுள்ள பாயிரச் செய்யுளே அல்லாமல், 'பூமிசை நடந்த' என்று தொடங்கும் மற்றொரு பாயிரச் செய்யுளும் உண்டு; அது, அ. குமாரசாமிப்பிள்ளை பதிப்பில் உள்ளது (பக். 316).

2. நம்பி அகப்பொருளின் நூலாசிரியரே உரையும் எடுத்துக்காட்டும் செய்த ஏட்டுச் சுவடிகளும், அச்சுவடிகளின் வேறாகப் பழைய உரையுடன் தஞ்சைவாணன் கோவை மட்டுமே எடுத்துக்காட்டாகக் காட்டப்பட்ட சுவடிகளுமாக இருவேறு சுவடிகள் இருந்தன. இரண்டையும் இணைத்துப் பதிப்பாளர்கள் பதிப்பித்து விட்டனர். (பக். 320).

3. ஆறுமுக நாவலரின் நன்னூல் காண்டிகையுரை 1880இல் வெளிவந்தது (பக். 31). 1953இல், 28ஆம் பதிப்பு வெளிவந்தது (பக். 312).

6. வழிகாட்டி

இந்த நூலின் ஆசிரியர் வருங்கால ஆய்வுக்கு வழிகாட்டியாக விளங்கும் வகையில், பல இடங்களில் சிறந்த ஆய்வு நுட்பங்களைச் சுட்டிக் காட்டியுள்ளார். அத்தகைய இடங்கள் கீழே தரப்படுகின்றன.

1. மாணிக்கவாசகர் இயற்றியுள்ள குவலயானந்தம், என்னும் அணி நூல், குன்றக்கூறல் முதலிய பத்துக் குற்றங்களையும் குறிப்பிட்டதோடு நில்லாமல், அவை ஒவ்வொன்றையும் தனித்தனி நூற்பாவால் விளக்கியுள்ளார். (பக், 420).

2. முத்துவீரியம் கூறும் அளபெடைகள் எட்டும் புதியவை (பக். 403).

3. 'அறுவகை இலக்கணம்' என்னும் நூல் கூறுகின்ற எழுத்துகளின் உருவமும் ஒலியும் புதுமையானவை (பக்.425). இந்த நூல் கூறும் 'புலமை இலக்கணம்' இன்றும் என்றும் எண்ணிப் பார்க்கவேண்டியவை (பக். 428).

4. வீரமாமுனிவர், ஏகாரக்கீழ்க்கோடும், ஓகாரக் கீழ்க்கோடும் அமைத்தார் என்னும் கருத்து மேலாய்வுக்கு உரியது. (பக். 389). 5. குமரகுருபரர் இயற்றிய சிதம்பரச் செய்யுட் கோவை, இலக்கியம் காட்டி (அதற்கு) இலக்கணம் காட்டலாக அமைந்திருப்பது புதியதோர் முறை (பக்.360).

7. வரலாற்றுப் புலமை

தமிழ்ப் புலவர்களின் வரலாற்றை அவர்கள் இயற்றிய நூல்களில் உள்ள பாயிரங்கள் கூறும் செய்திகளைக் கொண்டே அறியவேண்டியுள்ளது. இன்னும் சில வரலாற்று நிகழ்ச்சிகளைக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அறிவிக்கின்றன.

தமிழ் ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஆழ்ந்து கற்றுப் புலமை பெறுகின்றனர். அந்தப் புலமை வளத்தால், பல செய்திகள் விளக்கம் பெறுகின்றன.

இந்த நூலின் ஆசிரியர் நூற்பாயிரம் கூறும் புலவர் வரலாறுகளை மட்டுமே அல்லாமல், கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் சிறந்த சான்றுகளாகக் கொண்டு ஆராய்ந்து அரிய செய்திகளை வெளியிட்டுள்ளார். நூலாசிரியர் உரையாசிரியர் ஆகிய இருசாரார் பற்றியும் அறிய அவை துணைபுரிகின்றன. அவர்கள் வாழ்ந்த காலம், இடம், மேற்கொண்ட தொழில், செய்த அறச்செயல், பெற்ற பரிசு ஆகியவை பற்றி விளக்கியுள்ளார்.

இந்த நூலின் தொடக்கத்தில் அகத்தியர் பற்றியும், அவர் பெயரால் வழங்கிவரும் போலி நூல்களைப் பற்றியும் கூறியுள்ள கருத்துகள் நூலாசிரியரின் வரலாற்றுப் புலமைக்குச் சான்றாக உள்ளன (பக். 19-33).

சேனாவரையர், (பக். 88), யாப்பருங் கலக்காரிகை ஆசிரியர் (பக். 218), தேமிநாதம் இயற்றிய குணவீர பண்டிதர் (பக். 257), நன்னூலை இயற்றிய பவணந்தியார் (பக். 279-282), சிதம்பரப்பாட்டியல் இயற்றிய பரஞ்சோதியார் (பக். 340), பிரயோக விவேகம் இயற்றிய ஆழ்வார் திருநகரி சுப்பிரமணிய தீட்சிதர் (பக். 362), தொன்னூல் விளக்கத்தின் ஆசிரியர் வீரமாமுனிவர் (பக். 387), அறுவகை இலக்கண நூலின் ஆசிரியர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் (பக். 423.424) ஆகியோர் வாழ்ந்த இடமும் காலமும், மற்றச் சிறப்புச் செய்திகளும் மிக விளக்கமாக ஆசிரியரால் ஆய்ந்து கூறப்பட்டுள்ளன.

8. புலமைத் திறன்

டாக்டர் உ. வே. சா. அவர்களால் 1937இல் பதிக்கப்பட்ட ‘தமிழ் நெறி விளக்கம்’ என்னும் அகப்பொருள் இலக்கண நூலில், ‘முக்கண் கூட்டம்’ (நூற்பா , 21) என்ற தொடர் ஒன்று வருகின்றது. அதனை ஆராய்ந்த உ. வே. சா அவர்கள், “முக்கட் கூட்டம் இன்னதென்று விளங்கவில்லை” என்றும் “மக்கட் கூட்டம் என்று இருத்தல் கூடும்” என்றும், “இந்த ஐயமும் வேறு பிறவும் நாளடைவில் தெளிவாகும்” என்றும் கூறியுள்ளார். (முகவுரை. V, VI).

இதனை ஆராய்ந்த இந்நூலின் ஆசிரியர் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

“முக்கட் கூட்டம் என்பதே சரியான வடிவம். கண் இடப்பொருளது. முக்கண் மூவிடம். அம்மூவிடங்கள் 1. இயற்கையால் கூடுமிடம்; 2. தோழியால் கூடுமிடம்; 3. தோழனாற் கூடுமிடம் என்பவை”' (பக்.213).

இந்த ஆய்வுரை ஆசிரியரின் புலமைத் திறனுக்குச் சான்றாய் உள்ளது.

“சார்ச்சி வழி ஒழுகுதல்” என்பதை, “எங்கோ இருக்கும் ஒரு நூற்பாவின் தொடரை, எங்கோ கொண்டு வந்து இயைத்துப் பொருள் கூறுதல்” என்று விளக்கியுள்ளார் ஆசிரியர் (பக். 197). இந்த விளக்கம் ‘மாட்டேறு’ என்பதை நினைவூட்டுகிறது.

9. அயரா உழைப்பும் தளரா முயற்சியும்

இந்த நூலாசிரியரின் அயரா உழைப்பிற்கும் தளரா முயற்சிக்கும் சான்றாய் விளங்குகிறது. ‘பிரபந்தத் திரட்டு’ என்னும் நூலைப் பற்றிய கட்டுரை. அந்த நூல் இன்று வரை அச்சாகவில்லை. உ. வே. சா. நூலகத்தில் ஏட்டுச் சுவடியாகவே உள்ளது. அதனை அறிந்து தேடிச் சென்று படி எடுத்து முயன்று படித்து ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ள ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

10. ஆய்வுத் திறன்

நூலாசிரியரின் ஆய்வுத் திறன் வெளிப்படும் இடங்கள் நூலெங்கும் நிரம்பியுள்ளன. உரையாசிரியர்களைப் பற்றி இவர் கூறும் கருத்து, ஆய்வுத் திறனை வெளிப்படுத்துகிறது.

“பின்னவர் உரைகளால், முன்னவர் விளக்காத பகுதிகள் விளக்கம் பெறுவதும், சிக்கல்கள் அவிழ்க்கப்படுவதும் பட்டறிவால் ஏற்படுவன” (பக். 139).

சிவஞான முனிவரைப் பற்றிக் கூறும்போது, “(தொல்காப்பியம்) முழுமைக்கும் உரை எழுதும் நோக்கினர் அல்லர் இவர் என்பதை அதன் (சூத்திர விருத்தி) விரிவே காட்டுகின்றது”. (பக். 151) என்கிறார்.

இறையனார் அகப்பொருள் உரைபற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்:

“வாய் வழி நடந்து வந்த உரையெனின் இத்துணைப்பேர் வாய் மாற்றங்களில் எத்துணையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்!” (பக். 174).

புறப்பொருள் வெண்பாமாலையைப் பின்வருமாறு போற்றுகின்றார்:

“நூற்பாவும், நூற்பாவின் பொருள் விளக்கும் கொளுவும், அக்கொளுவுக்கு எடுத்துக் காட்டும் என முத்திறத்தானும் முந்நூல்போல் ஒரு நூலாகிய சிறப்பும் இந்நூற்கு உண்டு” (பக். 206).

உரைநெறி பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்:

“ஆசிரியர் இயற்றிய நூலுக்கு மாணவர் உரை எழுதும் மரபு நிலை உண்டே அன்றி, மாணவர் யாத்த நூலுக்கு ஆசிரியர் உரையெழுதும் வழக்கம் இல்லை.” (பக். 234).

நம்பி அகப்பொருள் இலக்கண நூலுக்கு, திருக்கோவையார் வழிகாட்டி இருக்கக்கூடும் என்று ஆசிரியர் கூறுவது, ஆய்வுத் திறனைப் புலப்படுத்தும் (பக். 315).

11. ஒப்பிட்டு ஆய்தல்

தண்டியலங்காரத்தின் தொடக்கத்தில் உள்ள நாமகள் துதியும், பன்னிருபடலத்தில் உள்ள நாமகள் துதியும் பெரிதும் ஒத்துள்ளன என்பதை ஆசிரியர் எடுத்துரைக்கின்றார் (பக். 330).

“தமிழ்நெறி விளக்க அகப்பொருட் பகுதிக்கும் பிற நூல்கள் வழியே அறியப்படும் அகப் பொருட் பகுதிக்கும் சில வேறுபாடுகள் உள” என்று கூறி அவ் வேறுபாடுகளை விளக்கியுள்ளார் (பக். 214).

தண்டியலங்காரம் கூறும் அணிகளின் பெயர்களை வீரசோழியம் கூறும் அணிகளோடு ஒப்பிட்டு ஆராயும் பகுதி சிறப்பாக உள்ளது (பக். 246, 247).

யாப்பருங்கலம், யாப்பருங் கலக்காரிகை ஆகிய இரண்டின் யாப்புக் கோட்பாடுகளை ஒப்பிட்டு நோக்கி வேறுபாடுகளைக் காட்டும் திறன், நூலாசிரியரின் ஆற்றலுக்குச் சான்று பகர்கிறது (பக். 231-233).

12. எதிர்ப்புக் குரல்

தமிழ் மரபுக்கு மாறான போலி நூல்களையும் உரைகளையும் கோட்பாடுகளையும் இந்த நூலின் ஆசிரியர் இனம் கண்டு, அவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை பாராட்டுதற்குரியதாகும்.

அகத்தியர் பெயரால் வழங்கும் போலிச் சூத்திரங்களையும் சில இலக்கண நூல்களையும் ஆசிரியர் விரிவாக ஆராய்ந்து அடையாளம் காட்டியுள்ளார் (பக். 30-33).

தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் புலவர் குழந்தை எழுதியுள்ள உரையில் நூற்பாக்களை முன் பின்னாக மாற்றி அமைத்து, இயல்களை வேறுபடுத்தியுள்ளார். அவற்றை விரிவாக ஆராய்ந்து நூலாசிரியர்,

“இது உரைகாண்பார் மரபன்று. என்ன புதுமை எனினும் நூலைச் சிதறிக் கோலம் தெளிக்கும் உரிமை உரை காண்பார்க்கு இல்லை”

என்று கண்டிக்கின்றார் (பக், 160).

தமிழ் இலக்கண மரபுக்கு மாறான செய்திகளும் வடமொழி இலக்கண மரபைக் கொண்டு வந்து தமிழுடன் கலக்கும் முயற்சியும் வீரசோழியம், பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து ஆகிய மூன்று நூல்களிலும் மிகுதியாக உள்ளன.

இந்த நூலின் ஆசிரியர் அவற்றைக் கண்டிக்கின்றார். வீரசோழிய ஆசிரியர் பற்றி, “அவர் இம்மண்ணின் மரபையே முற்றாக விடுத்து எங்கோ வட்டமிடுவது புலப்படுகின்றது” என்று கூறுகின்றார் (பக், 245).

பிரயோக விவேகம் பற்றிப் பின் வருமாறு உரைக்கின்றார்:

“வடமொழியும் தமிழும் தனித்தனி மொழிகள் அல்ல; ஒரு மொழி என்னும் மயக்கவுணர்வுடன், வடமொழியே தமிழ் மொழி மூலம் என்னும் மாறுபட்ட உணர்வும் கொண்டவர்கள் வாழ்ந்த காலத்தில் தோன்றிய நூல்” (பக். 360).

தமிழுக்கு முற்றிலும் முரணான கருத்துகளைக் கூறும் ‘இலக்கணக் கொத்து’ நூலாசிரியரை, “இப்படியா தட்டுக் கெட்டுப் போகும், கட்டுவிடாக் கல்வித் திறம்?” என்று சுட்டிக் காட்டுகின்றார்.

நன்னூலுக்கு உரை எழுதிய இராமாநுசக் கவிராயர், ‘தொல்லை வடிவின் எல்லா எழுத்தும்’ என்ற நூற்பாவை, சிறிது மாற்றி, “ஆண்டு எய்தும் ஏகாரம் ஓகாரம் மெய் புள்ளி” என்று திருத்தி விட்டார். இந்த மாற்றத்தை உடன்படாத நூலாசிரியர், “எத்தகு சிறந்த பாடம் எனினும் மூலத்தில் கை வைத்தல் கூடாது” என்று கடிந்து உரைக்கின்றார் (பக். 305).

நன்னூல் உரையாசிரியர்களில் ஒருவரான சடகோப ராமாநுசாச்சாரியார், தம் உரையில் “பவணந்தி முனிவர் பிராமண வருணத்தில் தோன்றினார்” என்று எவரும் கூறாத புதிய செய்தியைத் தாமே புனைந்து கூறியுள்ளார். இந்த நூலின் ஆசிரியர் அவர் கொள்கையை எதிர்க்கின்றார்! (பக். 313).

13. காலச்சூழலைச் சுட்டுதல்

இலக்கண நூலும் உரையும் இயற்றும் புலவர்கள் தாம் வாழும் காலத்தின் இயல்புக்கு ஆட்பட்டுத் தவறு செய்துள்ளனர் என்ற கருத்தை, நூலாசிரியர் குறிப்பிடும் இடங்கள் உள்ளன.

1. பாட்டியல் நூல்கள் நால்வருண வேறுபாடுகளை வற்புறுத்தி இலக்கிய வகைகளுக்கு இலக்கணம் கூறியுள்ளன. எழுதுகின்ற ஓலைகளின் அளவிலும் நால் வருணம் புகுந்துவிட்டது! இதனை ஆசிரியர், “எழுத்துக்கும் வருணம்! ஓலைக்கும் வருணம்! வருணக் கொடுமை கொடி கட்டிப் பறந்த சான்றுகள் இன்னவை!” (பக். 253) என்று சுட்டிக் காட்டுகின்றார்.

சிவஞான முனிவர் வாழ்ந்த காலத்தை, “கண்டனமும் மறுப்பும் கவித்து ஆடிய காலம்” என்கிறார் (பக். 377).

16, 17-ஆம் நூற்றாண்டுகளில் புறப்பொருள் பற்றிய இலக்கண இலக்கியங்கள் தோன்றாத காலச்சூழல் இருந்தது. அதனை ஆசிரியர் பின் வருமாறு சுட்டிக் காட்டுகின்றார்.

“பிற்காலங்களில் புலவர்களின் நிலை ஒடுங்கியது. அரண்மனையுள்ளும் அரசவையுள்ளும் இருந்து களிப்பூட்டும் பாடல்களை – குறிப்பாக அகத்துறைப் பாடல்களைப் பாடுபவராக அமைந்தனர். அதனால் புறப் பொருள் இலக்கணமும் இலக்கியமும் பெருகுதலின்றி நின்றன” (பக். 407).

இவையே அன்றி ஆசிரியர் கீழே கூறுகின்ற கருத்தும் காலச்சூழல் பற்றிய ஆய்வில் தோன்றியதாகும். “யாப்பியல் நூல் பெருக்கக் காலம் ஒன்றிருந்தமை யாப்பருங்கல விருத்தியால் அறியப்படுவதுபோல, பாட்டியற் பெருக்கக் காலம் ஒன்று இருந்ததைப் பன்னிரு பாட்டியல் காட்டுகிறது” (பக். 331).

14. சேர்க்க வேண்டிய செய்திகள்

இந்த நூலில் சேர்க்க வேண்டிய செய்திகள் சில

1. “கூழங்கைத் தம்பிரான் நன்னூலுக்கு இயற்றிய உரை வெளிவந்திலது” என்று இந்த நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் (பக். 301). ஆனால், ஏழு ஆண்டு களுக்கு முன்னரே அந்த உரை நூல் வெளிவந்துள்ளது.

மேற்கு ஜெர்மனியில் உள்ள ஹைடல்பெர்க் பல்கலைக்கழகம், 1962-ஆம் ஆண்டில் தொடங்கிய தெற்காசியக் கழகத்தில் 1980இல் கூழங்கைத் தம்பிரானின் நன்னூல் உரை பதிப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பல்கலைக் கழகத்தில், தமிழ்த்துறையில் பணியாற்றி வரும்

தமிழறிஞர் அ. தாமோதரன் அவர்கள் பின்வரும் செய்தியைக் கூறியுள்ளார்கள்:

“தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களால் மறைந்து விட்டதென உறுதியாக நம்பப்பட்டு வந்த கூழங்கைத் தம்பிரானின் நன்னூல் காண்டிகையுரையைக் கண்டு பிடித்து, காலந் தாழ்த்தாது (1980இல்) தமிழுலகிற்கு வழங்கியதை ஒரு பெருமையாகவே தெற்காசியக் கழகம் கருதுகிறது”

வெளிவந்துள்ள கூழங்கைத் தம்பிரானின் நன்னூல் உரை பற்றிய செய்திகள், இந்த நூலின் இரண்டாம் பதிப்பில் இடம் பெறும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

2. சில இலக்கண நூல்கள், ஆசிரியரின் நினைவுக்கு வராமல் போய்விட்டன! மு. அருணாசலம் பதிப்பித்த ‘பிரபந்த மரபியல்’, டாக்டர் சுந்தரமூர்த்தி பதிப்பித்த ‘உவமான சங்கிரகங்கள் மூன்று’, திருக்கோயில் இதழில் தொடர்ச்சியாய் வெளிவந்து பின்னர் நூலாக வடிவம் பெற்ற ‘வண்ணத்தியல்பு’, செந்தமிழ் இதழில் (14-ஆம் தொகுதியில்) வெளிவந்த ‘இலக்கண தீபம்’ முதலிய இலக்கண நூல்கள் இலக்கண வரலாற்றில் இடம் பெற வேண்டும்.

15. நிகண்டுகள், இலக்கண நூல்களே!

தமிழில் காலந்தோறும் நிகண்டு நூல்கள் பல தோன்றியுள்ளன. அவை யாவும் இலக்கண வகையைச் சேர்ந்த நூல்களே ஆகும். அவற்றின் தோற்றமும் வளர்ச்சியும் வகையும் இலக்கண வரலாற்றில் இடம் பெறுதல் வேண்டும்.

பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் உள்ள எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் பிற காலத்தில் தனி நூல்களாக வளர்ச்சி பெற்றன. பொரு


●ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்–மதுரை–1981; (பக். 218); கட்டுரை—‘மேற்கு ஜெர்மனியில்— தமிழ்’; அ. தாமோதரன். ளதிகாரத்தில் உள்ள அகத்திணையும் அகப்பொருள் இலக்கணம் கூறும் மற்ற இயல்களும் தனி நூல்களாயின. புறத்திணை தனி இலக்கணமாக வளர்ச்சி பெற்றது. செய்யுளியல், யாப்பிலக்கண நூல்களில் அடங்கியது. உவமவியல், அணி நூல்கள் ஆயிற்று.

சொல்லதிகாரத்தில் உள்ள உரியியலும் இடையியலும், பொருளதிகாரத்தில் உள்ள மரபியலும் சேர்ந்து இடைக்காலத்தில் நிகண்டு நூல்களாயின.

நிகண்டு நூல்கள், இலக்கண நூல்களே என்ற கருத்து நன்னூலார்க்கு உண்டு. நன்னூலார் உரிச்சொற்களைப் பற்றிக் குறிப்பிடும் போது பிங்கல நிகண்டை நினைவூட்டியுள்ளார். ஆனால், தமிழ் உலகம் நிகண்டு நூல்களை இலக்கண நூல்களாக இன்னும் கருதவே இல்லை! அவற்றை இலக்கண வகைகளுள் ஒன்றாகக் கருதும் கொள்கை தோன்றவே இல்லை. இலக்கண வரலாறு எழுதும் ஆசிரியர்களிடமும் இத்தகைய பார்வை ஏனோ தோன்றவில்லை. இது ஒரு பெருங்குறையாகும். இந்தக் குறை இந்த நூலிலும் உள்ளது. இதன் இரண்டாம் பதிப்பில், நிகண்டு நூல்களை இலக்கண நூல்களாகக் கொண்டு ஆயும் கட்டுரை இடம் பெற வேண்டும்!

16. மறு ஆய்வு செய்ய வேண்டிய கருத்துகள்

இந்த நூலில் மறு ஆய்வு செய்ய வேண்டிய கருத்துகள் சில உள்ளன. அவற்றைச் சுட்டிக் காட்டி நூலாசிரியர் கவனத்திற்குக் கொண்டு வருவதால் ஆய்வுலகில் உண்மை ஒளி பரவும்.

1. நற்றத்தனார்—நத்தத்தனார்

“தத்தனார் என்னும் பெயருடையார், 'நல்' என்னும் சிறப்புப் பெயர்பெற்று நற்றத்தனார் என வழங்கப்பட்டுப் பின்னர் ‘நத்தத்தனார்’ என்று ஆகி இருக்கக்கூடும்”(பக்-193) என்கிறார் ஆசிரியர். இவரது கருத்திற்கு மாறான செய்திகளை நச்சினார்க்கினியரும், டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரும் கூறி உள்ளனர்.

(1) நச்சினார்க்கினியர்

'ந' என்பது சிறப்புப் பொருள் உணர்த்துவதோர் இடைச்சொல்; அது பின்னை, சென்னை, பாலத்தன், கீரன் முதலிய பெயர்களுடன் சேர்ந்து முறையே நப்பின்னை நச்செள்ளை நப்பாலத்தன் நக்கீரன் என்று ஆகும் என்ற கருத்தைச் சீவக சிந்தாமணிப் பாடல் ஒன்றின் (482) உரை விளக்கத்தில் கூறியுள்ளார்.

(2) டாக்டர். உ. வே. சா.

நத்தத்தனார் என்னும் சங்கப் புலவரின் பெயரை ஆராய்ந்த டாக்டர் உ.வே. சா. பின் வருமாறு கூறியுள்ளார்.

“தத்தனார் என்பது இவரது இயற்பெயர் என்றும், கல்வி மேம்பாடு பற்றி நத்தத்தனார் என்ற பெயர் இவருக்குப் பிற்காலத்தில் வழங்கலாயிற்று என்றும் தோற்றுகிறது. ‘ந’ என்பது சிறப்புப் பொருளைத் தருவதோர் இடைச்சொல், நக்கீரர் நப்பாலத்தர் நப்பூதனார் நச்செள்ளையார் முதலிய பெயர்களாலும் இது விளங்கும் (பத்துப் பாட்டு உரை—பாடினோர் வரலாறு —பக். 32).

(3) வேறு சில சான்றுகள்

நப்பசலையார் நக்கண்ணையார் ஆகிய பெயர்களிலும் ‘ந’ என்பது சிறப்பை உணர்த்தும் இடைச்சொல்லாக வந்துள்ளது.

ஆதலின், ந+தத்தன்+ஆர் ஆகிய சொற்கள் சேர்ந்து நத்தத்தனார் ஆகியுள்ளன என்று கொள்வதே பொருத்தமாக உள்ளது.

2. ஐயனாரிதனார்

ஐயனாரிதனார் என்னும் பெயரை, இந்த நூலின் ஆசிரியர், ஐயனார் + இதனார் என்று பிரித்து. ஐயனார்க்கு இனியன் என்று பொருள் கொண்டுள்ளார் (பக். 203).

இதற்கு மாறான கருத்து அறிஞர்களிடம் நிலவி வருகின்றது.

ஐயன் + ஆரிதன் +ஆர் என்று பிரித்து ஆரித கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆதலின் ஆரிதன் என்ற பெயரைப் பெற்றுள்ளார் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இந்த நூலின் - ஆசிரியர் இத்தகைய இடங்களை மறு ஆய்வு செய்து அடுத்த பதிப்பில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.


17. ஆசிரியர் நினைவுக்கு


நூலின் தொடக்கத்திலேயே ஆசிரியர் தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் வளர்ச்சியைப் பற்றி விரிவாக ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதிச் சேர்த்திருந்தால் நூல் மிகவும் சிறப்படைத்திருக்கும்.

தொல்காப்பியர் காலத்தில் எழுத்து சொல் பொருள் என மூன்று பகுதியாக இருந்த இலக்கணம், களவியல் உரை தோன்றிய காலத்தில் யாப்பிலக்கணம் தனியே பிரிந்து நான்கு பகுதிகள் தோன்றின. தண்டியலங்காரம் ஐந்தாவதாகத் தோன்றிய பின்னர், இலக்கண வகைகளைக் கூறுகின்ற பாட்டியல்கள் பெருகின. பாவினங்களும், விருத்தப்பா வகைகளும் தோன்றியபின் அவற்றிற்கும் தனித்தனி நூல்கள் தோன்றின. பெண்களை அடி முதல் முடிவரை வருணிக்கும் முறைபற்றிக் கூறும் உவமான சங்கிரகங்கள் சில தோன்றின. இவற்றிற்கும் மேலாகப் புலமை இலக்கணம் தோன்றியது.

இவற்றிற்கு இடையே நிகண்டு நூல்கள் தோன்றின.

இவற்றின் வரலாறு விரிவாக ஆயவேண்டிய பகுதியாகும்.

இவற்றோடு இலக்கணக் கொள்கைகள் காலத்திற்குக் காலம் எவ்வாறு மாறி அமைந்துள்ளன என்பதை ஆய்ந்து கூறுவது மிகவும் பயன் தரும்.

சார்பு எழுத்துகள் பற்றிய கொள்கை வேறுபாடு, அகத்திணைக் கோட்பாடு, மரபு மாற்றங்கள், புறத்திணை வளர்ச்சி, இலக்கிய வகைகளின் பெருக்கமும் பாட்டியல் நூல்களும் ஆகியவை பற்றி விளக்குதல் வருங்கால ஆய்வுக்குத் துணை செய்யும்.

தமிழ் இலக்கணத்தின் மீது, வடமொழியின் செல்வாக்குப் பரவியதால் ஏற்பட்ட மாற்றம் குறிப்பிட வேண்டிய செய்தியாகும்.

இத்தகைய செய்திகள் இந்த நூலில் இடம் பெற்றிருந்தால், நூல் இன்னும் சிறந்து விளங்கி இருக்கும்!

‘மடாதிபதி’ என்னும் தொடரை இந்த நூலாசிரியர், ‘திருமடத்தலைவர்’ என்று வழங்கியுள்ளார், (பக். 379 - 380).

மடம்+ தலைவர் என்பது ‘மடத்தலைவர்’ என்று புணருமாயினும், பொருட் சிறப்புக் கருதி

‘மடம்+அத்து+ தலைவர்’

என்று அத்துச்சாரியை சேர்த்து,

‘மடத்துத் தலைவர்’

என்று வழங்குவது சிறப்பாக இருக்கும்!

இலக்கண வரலாறு

முகப்பு

“ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்” என்பது நூல் வழக்கும் உலக வழக்குமாம். ஆனால், அவ்வாற்றுக்குக் கரையில்லாவிடின், ஊரே பாழ் என்பதை உலகம் அறியும்.

ஆற்றங்கரையின் மரமும், வெள்ளப் பெருக்கால் வேரொடு சாய்ந்து வெள்ளத்தொடு போதல் கண்கூடு. கரை மரத்திற்கே அந்நிலையாயின், கரை இலா ஆற்றின் மரத்திற்கு எந்நிலையாகும்?

ஒரு நாள் வெள்ளமன்று; ஒரிடத்து வெள்ளமன்று, பல்கால் பற்பலவிடத்து வெள்ளம் உடையது மொழியென்னும் ஆறு! பல்லாயிரம் ஆண்டாகத் தொடரும் கால வெள்ளம்! பொது மக்கள், அரசு, சமயம், கலை, பழக்க வழக்கம், நாடு, இனம், வட்டாரம், போக்கு வரவு இன்னனவெல்லாம் ஓயாமல் ஒழியாமல் தாக்கும் புதுப்புது வெள்ளங்கள்! இவற்றுக்கு எல்லாம் காப்பாகி—வளர்ச்சியாகி—வாழ்வாகித் திகழ வாய்த்த மொழியாற்றின் கரை — திண்கரை — காலந்தொறும் கண்காணிக்கப் பட்டும் — வலுப்படுத்தப்பட்டும் — சீர்திருத்தப்பட்டும் வரவேண்டிய நலக்கரை — இலக்கணமே!

“அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளா
கோடின்றி நீர் நிறைந் தற்று”

என்பது வள்ளுவம். கோடு (கரை) இன்றி நீர் நிறைந்தால், நன்மை செய்யும் நீரே தீமை செய்தற் சான்று. மொழிக்குக் கரையின்மை, நன்மைக்கு அமைந்த மொழி தீமைக்கு இடமாகிப் போதலாய் முடியும்.


உலகெல்லாம் நோக்கினால் ஆட்டத்திற்குத் தனியிடம் இருத்தல் தெளிவு. ஆட்டம் என்பது விளையாட்டு! எத்தனை எத்தனை ஆயிரம் பேர் என்னும் நிலையில்லை. தொலைக்காட்சி வந்த பின், கோடி கோடிப் பேர் என்னல் வேண்டும்! இருந்த இடத்தில் இருந்து, ஆடற்களத்தை நோக்கிக் களிப்புறுகின்றனர்! அவ்வாடற் களத்திற்கு எத்தனை நிலவரைகள் — கோடுகள் — குறிகள்! அவ்வாடற் கலைக்கு எத்தனை சட்ட திட்டங்கள்! நெஞ்சத்தின் ஆடலாய், நாவின் ஆடலாய், கையின் ஆடலாய், குறிப்பின் ஆடலாய்த் திகழும் மொழிக்கு வரைகளும் விதிகளும் இல்லையேல் என்னாம்? மொழியென ஒன்றுண்டோ ? மொழியின் சிறப்பு நாம் உணர வேண்டுமா?

எந்த இடத்திற்கும் பெயரில்லை; எந்தப் பொருளுக்கும் பெயரில்லை; பார்க்கும் எதற்கும் பெயமில்லை; செய்யும் எதற்கும் பெயரில்லை; சொல்லே இல்லாத உலகம்—அந்த உலகத்திலே நாம் நம் கருத்தை வெளிப்படுத்த வகை என்ன ?

கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் கற்றறிந்தும் எத்தனை எத்தனை கோடிப் பேர்கள், எத்தனை எத்தனை கால காலங்களாக, உருவாக்கியும் திருவாக்கியும் வைத்தது மொழிவளம்! அவ்வளத்தின் அடிப்படைச் சிறப்பையும் அறியாமையாலேயே — விடுதலையின் விலைமானத்தையும் விழுப்பத்தையும் அறியாமையால் நிகழும் நிகழ்ச்சிக் கேடுகள் எத்துணை! அவற்றைப் போலேயே — மொழிச் சிதைவையும் கேட்டையும் செய்து வரும் சிறுமைச் செயலரும், காலந்தோறும் பல்வேறு பெயரில் வடிவில் வந்துளர்! இவற்றுக்கெல்லாம் ஈடுதந்து வெற்றி கண்டு வாழ்தற்கு அமைந்தது இலக்கணக் கட்டுக் கோப்பே!

சான்றோர் ஒழுகும் ஒழுக்கமும், அவர்களின் சீரிய பண்பாடுகளுமே ஒழுக்க நூலாகவும், சட்டமுறைகளாகவும்

கிளர்ந்தன, அவ்வாறே சான்றோர் கொண்ட மொழித் தேர்ச்சிக் கருத்துகளே, இலக்கண நூலாய் எழுந்தன. இக்குறிப்பை என்றும் போற்ற வேண்டும் என்றே,

“உலகம் என்ப துயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட் டாக லான”

என முன்னை நூலோன் மொழிந்தனன் என்க,

இலக்கணம் என்பது முழுமை அல்லது பிண்டப் பெயர். அது கிளர்ந்து வளர்ந்த வரலாறு பெரிது. அதன் பரப்பும் — அழியாமல் காக்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை ஒரு பாதிதானும் இல்லையெனினும் — பெரும் பரப்பே! அப்பரப்பைக் கால வரிசையில் பார்ப்பது இலக்கண வரலாறு.

கால வரிசைப் பார்வை, தனிமாந்தர் வரலாற்று நிலையில் போக்குகளைத் தெளிவிக்க உதவும். அது போல் காலவரிசைச் சமுதாயப் பார்வை, ஓரினத்தின் வாழ்ச்சி வீழ்ச்சிக் களங்களைத் தெளிவிக்கும். இவ்வகைப் பார்வை இலக்கணத்திற்கும் பார்க்குங்கால், அதன் வளர்நிலை — தளர் நிலைகளும், செய்தக்கன, செய் தகாதன என்பனவும் தெளிவிக்கும்.

இயல், இசை, நாடகம் என முத்தமிழ்க்கும் இலக்கணம் ஒருமொத்தமாக இருந்தது என்பது உரைக் குறிப்புகளே. தனித்தனி இலக்கணம் இருந்தன என்பதற்கே சான்றுகள் உண்டு. இயற்கையும் அதுவே.

நரம்பின் மறையைச் சுட்டும் — தொல்காப்பியர் அதனை, அம்மறையில் கண்டு கொள்ள ஏவினாரே அன்றி விரித்தார் அல்லர். நுவல்வதும் பொருந்தாது எனக் கொண்டார் என்பது அந்நூற்பா நடையால் புலப்படுதலும் ஒருதலை.


“அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்”
.(தொல். 33)


“அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃதிவண் நுவலா தெழுந்து புறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவு நுவன் றிசினே”

                                                                         (தொல். 102)

என்பவற்றை அறிக. தமக்கு முன்னரே 'நரம்பின் மறை' (இசை நூல்) தனித்திருந்தமையும் 'அந்தணர் மறை' தனித்திருந்தமையையும் அவற்றை இவண் கூறவில்லை என்றும் கூறியமையையும் தெளிக.
இனி, வெளிப்படத் தெரிந்த வகையான் தமிழ் இலக்கணம் முக்கூறு பட நடந்தது என்பதே.
தொல்காப்பியம் வழக்கும் செய்யுளும் ஆய்ந்து செய்த நூலாகலின், அந்நூலுக்கு முந்து நூல்களும் அம்முக்கூறு பட நடந்தன என்பதே உண்மையாம்.
பொருளதிகாரம் வாழ்வியல் கூறு மல்கியது. விரிவுக்கு இடனாகியது. செய்யுளியல் பொருளதிகாரப் பரப்பில் மிகப் பெரியது. அச்செய்புளியலை மட்டும் தனியே வாங்கிக் கொண்டு நூல் செய்யும் வழக்கு, தொல்காப்பியத்திற்கும் யாப்பருங்கலத்திற்கும் இடைப்படப் பெருகியிருந்தமை வெளிப்பட விளங்குகின்றது.
சங்கயாப்பு, பல்காயம், அவிநயம், காக்கை பாடினியம், சிறுகாக்கை பாடினியம், பெரியபம்மம், மயேச்சுரம், நற்றத்தம், பனம்பாரம், பரிமாணம், வாய்ப்பியம், அடிநூல் இன்னவெல்லாம் யாப்பிலக்கண நூல்களே: ஆகலின், செய்யுளியல் தனியே ஓர் இலக்கணமாக - யாப்பாக — வளர்ந்த நிலை இது. ஆதலால், இறையனார் களவியலுரை எழுத்தும் சொல்லும் யாப்பும் வல்லாரைத் தலைப்பட்டும் பொருள் வல்லாரைத் தலைப்படாமை பற்றிக் கூறலாயிற்று. ஆதலால், தொல்காப்பியருக்குப் பின் முதற்கண் யாப்பிலக்கணம் தனியே பிரிந்து நூற்-

பெருக்கமும் கொண்டு தமிழ் இலக்கணம் நான்காக நடத்தலாயிற்று. இதன் விரியே யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்பன. இனி, உவமை தொல்காப்பியத்தில் ஓரியலாக இருந்தது. அதன் வகைகள் நூல் வழியாகவும், உரை வழியாகவும் பலவாக விரிந்தன. மெய்ப்பாட்டியல் கூறுகள் சிலவும், யாப்பியல் கூறுகள் சிலவும், சங்க நூல், திருக்குறள் முதலாகிய இலக்கியக் கொடைகள் சிலவுமாக ‘அணியியல்’ என ஓரியல் தனித்துக் கிளர ஏவின. அக்காலத்தை அடுத்தே வடமொழி அணி நற்செய்திகளும் தமிழ்ப் புலவர்களைக் கவர்ந்தன. அவ்வகையில் தண்டியலங்காரம் தனித்து அணியிலக்கணமெனக் கிளர்ந்தது. அதன் வழியிலே சந்திராலோகம், குவலயானந்தம் என்பனவும் தோன்றின. மாறனலங்காரம் என்பதும் பிறவும் வளர்ந்தன. இயல்பாக இருந்த பொருள், அகம் புறம் எனத் தொல்காப்பியப் பகுப்புடையதாக விளங்கியது. அப்பகுப்பிலும் அகப்பகுப்பு விரிவுடையது. அகத்திணையியல், புறத்திணையியல் என்பவை தனித்தனி பகுக்கப்படினும், முன்னதொடு களவியல், கற்பியல், மெய்ப்பாட்டியல், செய்யுளியல் என்பனவும் தொடர்புடையனவாக நின்றன. அப்பகுப்பே, அகப்பொருள் நூல்கள் தனிவடிவங் கொள்வதற்கு மூலமும் முடிபுமாக நின்றன. அகத்திணை இயல் அப்பெயராலேயும், களவியல் கற்பியல் என்பனவும் அவ்வப்பெயர்களாலேயும் இம்மூவியல்களும் ஒரு நூலாகவும் அமைந்தன. அவ்வகையில் இறையனார் களவியல் ஓராற்றாற் செல்லினும், முற்றாக நம்பியகப் பொருள் செல்வதாயிற்று. திருக்குறள் போலும் இலக்கியமும் களவியல் கற்பியல் பகுப்பைப் போற்றின. அகத்திணைப் பொருள் சார்ந்த ஐந்திணை நூல்களும், ஐந்திணைத் தொகை நூல்களும் எடுத்துக்காட்டாகப் பெருகி விளங்கின. இவற்றால் அகப்பொருள் தனிப்பிரிவாக விளங்கிற்று. அவ்வகையில் களவியல், அகப்பொருள் விளக்கம், களவியல் காரிகை, மாறன் அகப்பொருள் இன்னவை சுட்டத்தக்கன. புறப்பொருள் பற்றியும் தனி நூல்கள் உண்டாயின. அவை விரிவுடையன அல்ல எனினும், பன்னிரு படலம் என்பதும், புறப்பொருள் வெண்பாமாலை என்பதும் குறிப்பிடத்தக்கன. புறநானூறும் பதிற்றுப்பத்தும் புற இலக்கியமாக விளங்கின. பாட்டு தொகைப் பரப்பில் இவ்விரண்டே புறப்பொருளாதல் போல, பிற்கால இலக்கணப் பரப்பில் சுட்டிய இரண்டே புறப்பொருள் இலக்கணமாக அமைந்தன. அதன் காரணம் நூலின் அகத்தே ஆயப்படுதலைக் கண்டு கொள்க. இனி, பாட்டியல் என்பது பழையது ஒருபாலும், புதுவது ஒருபாலும் ஆகிய ஒரு வகைப்பட்ட நூல் ஆயிற்று. பழையது என்றது பள்ளு, குறவஞ்சி, பாடாண், செவியறிவுறூஉ என்பன போன்ற நூல்வகை விரிவு, தொல்காப்பியக் குறிப்பு, திணை, துறை முதலியவற்றைத் தனித்தனி வாங்கிக் கொண்டு விரித்தவை. அப்பகுதி இலக்கியவகைப் பெருக்கத்திற்கு உதவின. ஆனால், பொருத்தங்கள் என்று கண்டு, எழுத்துகளுக்கும் வருணச் சாயம் பூசி, அமுதும் நஞ்சும் ஏற்றி, நாளும் கோளும் ஊற்றி, ஆக்கமாவதுபோல் அழிவுக்கு வகை செய்த நூல் வகை அது. பன்னிரு பாட்டியல், வெண்பாப்பாட்டியல் முதலாகப் பாட்டியல் நூல்கள் பல்கின. யாப்பருங்கலத்திற்கு முன்னே யாப்பு நூல் எத்துணைப் பெருக்கம் கொண்டதோ அதனிலும் விஞ்சிய பெருக்கத்தைப் பாட்டியல் நூல்கள் பின்னே கொண்டன. அதனினும் கேடு, அப்பிற்கால நூற்பொருள் கொண்டு, முற்கால நூல்களையும் பார்த்து மதிப்பிடும் ஒரு பார்வை! பாட்டியல் தனியே வரினும், ஐந்திற்கு மேல் ஆறாம் இலக்கணம் எனப் பெயர் பெற்றிலது. அதனைச் செய்யுளியலொடு அல்லது யாப்பியலொடு சார்த்தி வைக்கும் அளவிலேயே நின்றது. தனி இலக்கண வடிவு பெற்றும் எண் பெறாத இலக்கணமாக அமைந்தது அது. ஆறாம் இலக்கணம் எனப் புலமை இலக்கணத்தைக் கொண்டார் தண்டபாணி அடிகளார். அதிலுள்ள சில செய்திகள் பாயிரம் பற்றி வருவன (நூலாசிரியன் பற்றியன). எனினும் அடிகளார் பார்வை தனிப் பெரும் பார்வை. அவர் தம் நூலின் பெயர் அறுவகை இலக்கணம் என்பது. ஏழாம் இலக்கணமும் அடிகளார் இயற்றினார் என்பதை,


“ஆழா அரிய அனேக விதிநிறீஇ
ஏழாம் இலக்கணம் எனவுமொன் றியம்பினன்”

என்று பூவை கலியாணசுந்தரர் கூறும் சிறப்புப் பாயிரத்தால் அறியலாம். அதனைப் பொதுமை இலக்கணம் என்பர்.

இவ்விலக்கண வரலாறு, தன் பெயர் விளக்கம் முதலாக ஐம்பது பருப்புகளையுடையது. இப்பகுப்புகளில் இடம் பெறாத இலக்கண நூற்பட்டியினை இணைப்பாகக் கொண்டது. சிறப்புப் பெயர் அடைவும் இணைப்பாகக் கொண்டது.

தெரிந்த வகையான் கால அடைவில் வருவது. காலம், ஆய்வால் மாறுதலும் கூடும். இலக்கண வரலாறு என்பதை உட்கொண்டு, நூலாசிரியரைப் பற்றிய முழு வரலாறும் கொண்டதில்லை. குறிப்பாகச் சில செய்திகளே வரும். இயன்ற வகையால் உரை நயம், நூல் நயம் ஆகியனவும் குறிக்கப்படுகின்றன,

பதிப்பு, பதிப்பாளர் பற்றிய செய்திகளும் அவ்வப்பகுதியிலேயே இடம் பெறுகின்றன. உரையாசிரியர்கள், உரைநயங்கள் என்றெல்லாம் பல நூல்கள் வெளிவந்துள்ளன. திறனாய்வு நூல்கள், இலக்கணக் கட்டுரைகள், இலக்கண ஆசிரியர் வரலாறுகள், புலவர் வரலாறுகள், இலக்கிய அகராதி என்பனவெல்லாம் வெளிவந்துள்ளன.

கால அடைவில் இலக்கிய வரலாறுகள் வெளிவந்துள்ளன; வெளிவந்து கொண்டும் உள்ளன. எனினும் ‘இலக்கண வரலாறு’ என ஒரோ ஒரு நூல் வந்தமையே அறிய வருகின்றது. அது பேரா. சோம இளவரசு அவர்களால் எழுதப்பட்டது. மேலே சுட்டப்பட்ட நூல்கள், இவண் எடுத்துக் கொண்ட இலக்கண நூல்கனின் பல்வேறு பதிப்புகள் ஆகியன இவ்வாய்விற்குப் பயன்பட்டுள்ளன. இவற்றைக் குறைத்து எண்ணினும் முந்நூற்றுக்கு மிகைப்படலால், தனிப்பட்டி தந்திலேன். அச்சில் வாராமல் ஏட்டுச் சுவடி அளவாற் படியெடுத்து வைக்கப்பட்ட-என் கைப்படிகள்-சிலவும், அச்சிட்டும் மறைந்து விட்ட நூல்கள் சிலவும் இவ்வரலாற்றில் இடம் பெற்றுள.

இந் நூலுக்கு மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கனார் அணிந்துரை வழங்கியுள்ளனர். ‘தொல்காப்பியக் கடலாய்’, ‘வள்ளுவமாய்’, ‘தமிழ்க் காத’லாய்த் திகழும் அவர்கள் இந்நாளை, மொழிநலம் காக்கும் நயத்தகு நக்கீரக் காவலர்! இலக்கண வரலாற்றுக்கு அவர்கள் அணிந்துரை வாய்த்துள்ளமை, தனிப்பேறென எண்ணி நெஞ்சார்ந்த நேயத்தைப் படைத்து மகிழ்கின்றேன்.

உரையாசிரியர் என்னும் உரைசால் நூலை வழங்கிய நல்லறிஞர் மு. வை. அரவிந்தனார் இந்நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ளனர். அவர்கள், இந்நூலினை முற்றாக அணுகி ஆய்ந்து கூறியுள்ள திறம் வியப்புறுத்துகின்றது. அவர்கள் கூறியவாறு ‘சேர்க்க வேண்டிய செய்திகள்’, ‘மறு ஆய்வுச் செய்திகள்’ ‘ஆசிரியர் நினைவுக்கு’ என்னும் பகுதிகள் என் உள்ளங்கவர்ந்து உவப்புச் செய்வன. அவற்றுள், ஏற்பன மறு பதிப்பில் செய்யப்படும். ‘நிகண்டுகளின் வரலாறு’ இலக்கண வரலாறு போலத் தனி வரலாறு பெறவேண்டிய ஒன்று என்பது என் உட்கோள். இலக்கணம் கற்பாரால் முற்பட அறியப்பட வேண்டியது, அது வளர்ந்த வரலாறு' எனக் கருதியமையால், முகப்பு'ரையிலேயே அதனைச் சுருங்க உரைத்துள்ளேன் எனச்சுட்டி அமைகின்றேன். நூன் மதிப்பீட்டாளர், இத்தகு “நூனிறை காட்டி நுணங்கரில் உணர்த்தும் மரபு மேற்கொண்டால் மொழிநலம் சிறக்குமென மொழிந்து நன்றி கூறுகின்றேன். 'இலக்கண வரலாறு' என்னும் பெயரிய நூலில் அதன் கோட்பாடுகள், ஆய்வுகள் அனைத்தும் இடம் பெறச் செய்வதாயின்”... என்பதும் எண்ணத் தோன்றுகின்றது!

இவ்விலக்கண வரலாற்றை எழுதத் தூண்டியவர் பேரா. மெய்யப்பனார். அவர்தம் ஆர்வம் பெரிது. அவ்வார்வம் போலவே அன்பும் நண்பும் பெரிது. அவற்றைப் போலவே எறும்பும் சுரும்பும் தோற்கும் சுறுசுறுப்பும் பெரிது. இன்னவெல்லாம் வாழ்வியலுக்கு வளக் கொடைகள்.

இக்கொடைகளைப் பெற்ற ஒருவர் தமிழ்கூறு நல்லுலகக் கொடையாக இந்நூலை வழங்குகின்றார். இக் கொடைக்கு எளியேன் ஒரு பொருளாக இருந்தமை, அன்னைத் தமிழின் கொடையே என்பதை நினைத்து உருகுவதல்லால் ஒன்றறியேன். அவர் வாழி! அவர்தம் அருந்தமிழ்த் தொண்டு வாழி!

தமிழ்ச் செல்வம்,
பாவாணர் ஆராய்ச்சி நூலகம்,
திருநகர், மதுரை-6.

தமிழ்த் தொண்டன்,
இரா. இளங்குமரன்

157
161
166
181
182
186
190
191
193
196
198
200
203
208
211
216
221
229
240
254
256
264
269
278
286
291
294
299
301
302
307
309
312
313
315
323
328
332
336
339
342
350
354
358
361
366
374
378
386
392
394
397
400

"https://ta.wikisource.org/w/index.php?title=இலக்கண_வரலாறு&oldid=1872648" இலிருந்து மீள்விக்கப்பட்டது