இலக்கியத் தூதர்கள்/இராமன் விடுத்த தூதன்
தமிழுக்குக் கதி
‘தமிழுக்குக் கதி, கம்பரும் திருவள்ளுவரும்’ என்று கற்றோர் போற்றும் புலவர்களுள் ஒருவராகிய கவியரசர் கம்பர் பெருமானல் ஆக்கப்பெற்ற அரிய காவியம் இராமாயணம் ஆகும். சுவைகள் அனைத்துக்கும் நிலைக்களமாக விளங்கும் அப்பெருங்காவியத்தை ஆக்கி யுதவிய கம்பநாடரின் பெருமையினைத் தமிழுலகமேயன்றி, ஏனைக் கவியுலகங்களும் கண்டுணர்ந்து கொண்டாடுகின்றன. ‘கல்விசிறந்த தமிழ்நாடு-புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று பாடிய கவிஞர் பாரதியாரின் கவிநயம் எண்ணியெண்ணி இன்புறுதற்கு உரியதாகும்.
அரசகேசரியின் பாராட்டு
ஓர் உயர்ந்த கவியின் இயல்பை அளத்தற்கு மற்றொரு கவியுள்ளமே சிறந்த கருவியாகும். அம்முறையில் இரகுவமிசம் என்னும் பெருங்காவியத்தை அருந்தமிழிற் பாடிய அரசகேசரி என்னும் புலவர்,
- “கற்றார் கல்வியிற் பெரிதாந் தமிழ்க்கம்ப நாடன்
- உற்றாங் குரைத்தான் உரையாதன ஓது நிற்பாம்”
என்று கவியரசராகிய கம்பர் பெருமையில் ஈடுபட்டுப் பாராட்டுவாராயினர்.
மூவகை நான்முறை
உயர்ந்த கருத்துக்களை எடுத்துரைத்துக் கேட்போரைச் செயற்படுத்தும் நெறியில் ஒரு பொருளை மறைநூல் கூறுதல், தலைவன் தன் பணியாளனுக்கிடும் கட்டளையினையொக்கும். அதனையே அறநூல் கூறுதல், ஓர் அன்பன் தன் நண்பனுக்குக் கூறுவதனையொக்கும். அதனைக் காவியம் கூறுதல், காதலியொருத்தி தன் இனிய காதல் தலைவனுக்குக் கூறுவதை யொக்கும். இம்மூவகை முறையுள் இறுதியிற் கூறப்பட்டதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இலகுவது கம்பராமாயணமாகும்.
கம்பன் காவிய அமைப்பு
சங்கத்துச் சான்றோர் பாக்களுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி முதலிய செந்தமிழ்க் காவியங்கள் தோன்றின. இவை கதை தழுவிய தொடர்நிலைச் செய்யுட்களாதலேயன்றிப் பாநலம் பழுத்துப் பயில்வார்க்கு இன்பஞ் செய்யும் இன்சுவையு முடையன ஆதலின் அறிவுடையோரால் மிக விரும்பிக் கற்கத்தகும் மாண்புடையனவாகும். இவற்றுள் சிந்தாமணிக் காவிய நடையினை மேற்கொண்டு, திருக்குறள் தமிழ் மறையின் அரிய கருத்துக்களில் தோய்ந்து, இனிய ஓசை நயந் தோன்றப் பிற்காலத்தில் எழுந்த அரிய கதைச் செய்யுள் நூல் கம்பராமாயணமே ஆகும்.
காவியச் சிறப்பு
ஒரு சிறந்த இலக்கியத்தை அஃது எழுந்த காலத்துவாழ்ந்துவந்த மக்களுடைய வாழ்க்கை ஓவியமாகவும், அம்மக்களின் அரிய பண்பாட்டைத் தன்னுட் கொண்டு காட்டும் கண்ணாடியாகவும் கற்றோர் போற்றுவர். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் கம்பராமாயணமோ இனிமை, எளிமை, ஆழம் ஆகிய மூன்று குணங்களையும் கொண்ட தண்டமிழ்ச் செய்யுள் நடையான் இயன்றது. இது மக்க ளுடைய வாழ்வில் நிகழும் பற்பல செய்திகளையும் தக்க இடங்களில் பொற்புறவும் மெய்ப்பாடு தோன்றவும் கூறும் திட்பமுடையது. வரலாற்று மாந்தர் இயல்புகளைத் தக்கவாறு அவர் தம் வாய்மொழியில் வெளிப்படுத்துந் திறன் வியத்தற்குரியது. ‘செவ்விய மதுரம் சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர்’ என்று கம்பர் குறிப்பிடும் கவிஞர் இலக்கணத்திற்கு அவரே ஓர் அரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
அனுமன் செய்தி அறிதல்
இத்தகைய அருஞ்சுவைமிக்க பெருங்காவியத்தில் இராமன், சீதை, அனுமன் முதலான காவிய மாந்தர்களின் இயல்புகள் நயம்பெறவும் தெளிவுறவும் கட்டுரைக்கப்படுகின்றன. வில்லின் செல்வனாகிய இராமன் சொல்லின் செல்வனாகிய அனுமனைத் தன் தேவியாகிய சீதையைக் கண்டு வரும் பொருட்டுத் தென்றிசை நோக்கித் தூது போக்கினான். அந்நாளில் அனுமனைத் தனியே யழைத்துச் சீதையை உணர்ந்துகொள்ளும் பொருட்டு, உற்ற அறிகுறிகள் பலவற்றை உரைத்தான். ஐயமகற்றும் அடையாளங்கள் பலவற்றை அறிவுறுத்தினான். இறுதியில் ஒளிபொருந்திய கணையாழி யொன்றையும் அளித்து வாழ்த்தி வழியனுப்பினான். அனுமன் இராமனை வணங்கி விடை பெற்றுத் தென்றிசை நோக்கிச் சென்றான். அவன் செல்லும் வழியில் சம்பாதியைச் சந்தித்து சீதையைப் பற்றிய செய்தியைத் தெரிந்தான். அப்பிராட்டியை இராவணன் தனது இலங்கை மாநகரில் சிறை வைத்துள்ளான் என்பதை உணர்ந்தான். வானர வீரர்களுடன் அச் செய்தியைப்பற்றி ஆராய்ந்தான். இலங்கை சென்று இவ்வுண்மையினை அறிந்து வரத் தக்கவன் அனுமன் ஒருவனே என்று அனைவரும் முடிவு செய்தனர்.
அனுமன் இலங்கையை யடைதல்
அவ்வாறே வானர வீரர்களிடம் விடைபெற்ற அனுமன் மகேந்திர மலையின்மேல் ஏறினான். கடலைத் தாண்டி இலங்கையினை அடையும் எண்ணத்துடன் பேருருவங் கொண்டு நின்றான். அப்போது அனுமன் உடல், அண்டத்தின் முடியை முட்டுமாறு ஓங்கி உயர்ந்தது. அதனால் விண்ணவர் நாட்டைக் கண்ணால் கண்ட அனுமன், ‘இதுதான் இலங்கையோ?’ என ஐயுற்றான். அது தேவர்கள் வாழும் திருவிடம் என்பதுணர்ந்து கீழே நோக்கினான். இலங்கை மூதூர் அவனுடைய விழிகட்கு இலக்காயிற்று. அந்நகரின் வாயில், மதில், தெருக்கள் முதலிய அனைத்தையும் கண்ட அனுமன் மகிழ்ச்சி கொண்டான். தன் தோள்களைத் தட்டி ஆரவாரம் செய்தான். வானிற் பறந்து செல்லுமாறு தன் கால்களை மகேந்திர மலையின் முடிமேல் அழுத்தி யூன்றினான். அம்மலையின் முழைகளில் வாழ்ந்த அரவங்கள், அனுமனது உடற் சுமையைத் தாங்கலாற்றாது வெளிப் போந்தன. வானவர் மலர் தூவி வாழ்த்துரை வழங்க அனுமன் மலையிலிருந்து மேலெழுந்தான். திரிகூட மலை தென்கடலை கோக்கிச் செல்வதுபோல் அனுமன் தென்றிசை நோக்கிச் சென்றான். அவன் இலங்கையில் அமைந்த பவள மலையின் மீது குதித்து நின்றான் அனுமன் குதித்தலைத் தாங்காத அம்மலை தன்னிடத்துள்ள பொருள்களுடன் தள்ளாடி நிலைகுலையலாயிற்று. இலங்கையின் எழிலைக் காண்டல்
அனுமன் பவள மலையின்மேல் நின்றபடியே இலங்கை மாநகரை உற்று நோக்கினான். இராவணன் வாழும் இலங்கை மூதூருக்கு வானுலகும் ஈடாகாது என்று எண்ணினான். வேண்டிய வேண்டியாங்கெய்தி வெறுப்பின்றித் துய்க்கும் சிறப்புடைய துறக்கம் இது தானோ என்று வியந்து போற்றினான். எழுநூறு யோசனைப் பரப்புடைய இந்நகரின் எண்ணற்ற காட்சிகளை முழுவதும் காண்டல் அருமை என்று எண்ணினான். நகர் வாயிலைக் கடந்து நகருட் புகுதற்கு விரைந்தான். அந்த வாயிலை அரக்கர்கள் பலர் பலவகைப் படைக்கலங்களுடன் பாதுகாத்து நிற்பதைப் பார்த்தான். இவ்வாயிலிற் புகுந்து செல்வதாயின் அரக்கர்களுடன் போர்புரிய நேரிடும்; ஆதலின் வேறு வழியாகச் செல்லுதலே நேரிது என்று நினைந்து வேறு பக்கமாக விரைந்தான். அந்நகரைக் காத்துநின்ற இலங்கா தேவியை வென்று நகரினுட் சென்றான். இராமபிரான மனத்துள் நினைத்து வணங்கியவாறே இலங்கைமாநகர் வீதிகளில் ஓரமாக கடந்து சென்றான். மலர்களில் தேனைநாடிச் செல்லும் வண்டைப்போல் கண்ட இடமெல்லாம் சீதையைத் தேடிக்கொண்டே சென்றான்
அனுமன் சீதையைத் தேடிக் காண்டல்
அங்குள்ள பொழில்களிலும் தேடிப் பார்க்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் அனுமன் அங்கிருந்த அசோகவனத்தை யடைந்தான். அப் பொழிலின் பல இடங்களிலும் தேடிய அவன் அரக்கியர் நடுவில் சீதை வாடிய தோற்றத்துடன் வருந்தியிருத்தலைக் கண்டான். இராமனைப் பிரிந்த துயரத்தாலும் அச்சத்தாலும் சிறிதும் உறக்கமின்றி ஒளி மழுங்கிய வடிவத்துடன் அவள் புழுவைப் போல் துடித்துக் கொண்டிருந்தாள். கணவனைப் பிரிந்த பிரிவுத் துன்பத்தால் பெருகிய கண்ணிர் அவள் ஆடையை நனைப்பதும், உடலின் வெப்பத்தால் அந்த ஆடை உடனே காய்ந்து போவதுமாக இருந்தது. எவ்விதத்திலும் இராமபிரான் வருதல் கூடும் என்ற நினைவால் அவள் எப்பொழுதும் திக்குகளையே நோக்கிக் கொண்டிருந்தாள். இராமபிரானுடைய இனிய பண்புகள் பலவற்றையும் எண்ணியெண்ணி வருந்திக் கொண்டிருந்தாள்.
அசோகவனத்தில் சீதையும் திரிசடையும்
இத்தகைய நள்ளிரவில் சீதையைச் சூழ்ந்திருந்த அரக்கியர் அனைவரும் தம்மை மறந்து உறங்கலாயினர். அவ்வேளையில் வீடணன் அருமைத் திரு மகளாகிய திரிசடை யொருத்திதான் சீதைக்கு அவண் இனியளாய் அமைந்து, அவள் துயரங்களை ஒருவாறு மாற்றிக்கொண்டிருந்தாள். சீதைக்குச் சில நற்குறிகள் காணப்பெற்றன. அவற்றைத் திரிசடையிடம் தெரிவித்து, அவற்றின் பயனை வினவினாள். நீ விரைவில் உன் கணவனை அடைவது உறுதியெனப் பயனுரைத்த தோழியாகிய திரிசடை, அச்சீதையை நோக்கி மேலும் கூறினாள்; “இப்பொழுது ஒரு வண்டு மெல்லென வந்து உன் காதில் இசை பாடிச் சென்றது கண்டனையோ ? அதன் பயனை ஆய்ந்து நோக்கினால் உன் தலைவனால் உய்க்கப்பெற்ற தூதன் ஒருவன் இங் குற்று உனக்கு நல்ல செய்தி உரைப்பது உறுதி; நான் கனவொன்றனைக் கண்டேன் ; குற்றம் நிறைந்த இந் நாட்டில் காணும் கனவுகள் வீணாவதில்லை” யெனக் கூறித் தான் கண்ட கனவை விளக்கினாள். அதன் பயனாக விரைவில் இலங்கைமாநகர் அழிவது உறுதியென்றும், அரக்கர் குலமே அழிந்தொழியும் என்றும் விளக்கினாள். அதுகேட்ட சீதை, திரிசடையை மீண்டும் உறங்குமாறும், அவள் கண்ட கனவின் குறையையும் கண்டுணர்ந்து கூறுமாறும் வேண்டினாள்.
அனுமன் அடைந்த மகிழ்ச்சி
இச்சமயத்தில் சீதையைக் கண்ட அனுமனுக்குத் துன்பங்கள் எல்லாம் பறந்து போயின. இந்தப் பெண்ணரசியே சீதாபிராட்டியாதல் வேண்டுமென்று எண்ணினான். அவளை யனுகுதற்கு முற்படும் வேளையில் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த அரக்கியர் விழித் தெழுந்தனர். சீதையைச் சூழ்ந்து கொண்டு அவளை அச்சுறுத்தினர். அவர்களைக் கண்டு அஞ்சிய சீதை யாதும் பேசாமல் இருந்தாள். அனுமன் அந்நிகழ்ச்சிகளையெல்லாம் ஒரு மரத்தின்மீது ஏறி மறைந்திருந்து நோக்கினன். அரக்கியர் நடுவண் அமர்ந்திருப்பவள் சீதாபிராட்டியே என்று தெளிந்தான்; மிகுந்த களிப் படைந்தான். “அறம் பொய்த்து விட்டதென்று நான் முன்பு எண்ணினேன். அஃது அப்படியாகவில்லை; நானும் இனிமேல் இறக்கமாட்டேன்” என்று கூறினான். இன்பமாகிய தேனையுண்டு தன்னை மறந்து கூத்தாடினன். “இம்மங்கையர்க்கரசியின் பேரழகு, இராமபிரான் இயம்பிய அடையாளத்திற்குச் சிறிதும் மாறுபடவில்லை , கள்ளச் செயலையுடைய இராவணன் இராமபிரானுடைய உயிர்த் துணைவியாகிய இவளை ஒளித்து வைத்தது, தன்னுயிரை இழத்தற்கே என்பதில் சிறிதும் ஐயமில்லை ; அந்த இராமபிரான் திருமாலே; இப்பிராட்டி செந்தாமரை மலரில் தங்கியிருக்கும் திருமகளே ஆவள்” என்று அனுமன் மரத்தின் மறைவில் தங்கிப் பலவாறு எண்ணிக் கொண்டிருந்தான்.
புலியைக் கண்ட மான்
இவ்வேளையில் இராவணன் சீதை இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டு வந்தான். அவனைக் கண்ட சீதாபிராட்டி சிந்தை கலங்கிக் கூற்றுவனைக் கண்ட உயிர் போல நடுநடுங்கினாள். தன்னைத் தின்னுதற்கு வரும் கடும்புலியைக் கண்டு அஞ்சி நடுங்கும் இளம்பெண் மான் போன்று அஞ்சியொடுங்கினாள். அவள் ஏக்கத்தையும் இராவணன் ஊக்கத்தையும் அனுமன் நோக்கி அளவிலாச் சினங் கொண்டான். இராவணன் சீதையைப் பலவாறு புகழ்ந்துரைத்து முடிமீது குவித்த கையினனாய்ப் படிமீது வீழ்ந்து பணிந்தான். அவன் கூறிய சொற்கள் சீதையின் காதுகளில் காராசம் போல் நுழைந்தன. அவள் இருவிழிகளிலும் குருதி ஒழுகியது. அவள் தன் உயிரையும் பொருட் படுத்தாமல் இராவணனைச் சிறு துரும்பினும் கீழானவனாக எண்ணிப் பலவாறு இகழ்ந்துரைத்தாள். அவள் கூறிய மொழிகளைக் கேட்ட இராவணனுக்குப் பெருஞ் சினம் எழுந்தது. அவனுடைய இருபது விழிகளிலுமிருந்து தீப்பொறிகள் பறந்தன. அவன் தன் பத்து வாய்களாலும் அதட்டி ஆரவாரம் செய்தான். அஞ்சாமல் நமக்கொரு பெண் அறிவுரை கூறுவதோ என்று எண்ணினன். அதனால் நாணமும் சினமும் மிகுந்த அவன் ‘இவளைப் பிளந்து தின்பேன்’ என்று எழுந்தான். ஆனால் அச் சீதைமீது அவன் கொண்ட காதலே அச்சிற்றத்தை மாற்றிவிட்டது. அனுமன் சினமும் அரக்கன் ஆணையும்
இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் மறைந்து பார்த்துக் கொண்டிருந்த அனுமனுக்கு அளவிலாச் சினம் பொங்கியது. ‘பிராட்டியை இகழ்ந்துரைத்த இவ்வரக்கனை அழிப்பேன்; இலங்கையைக் கடலினுள் மூழ்கச் செய்வேன் ; இப்பிராட்டியை இங்கிருந்து எடுத்துப் போய்விடுவேன் அவ்வாறு செய்வது இராமபிரானுடைய பெருமைக்கு இழுக்காகுமே’ என்று எண்ணினான். செய்யத் தகுந்தது எது என்று தோன்றாமல் கைகளைப் பிசைந்து கொண்டே பேசாதிருந்தான். சீதையின் மீது கொண்ட காதலால் சினந்தணிந்து இராவணன் மறுமொழி பலவற்றைப் பகர்ந்தான். அவள் உள்ளத்தைத் தன்பால் திருப்புமாறு அரக்கியருக்கு ஆணையிட்டு அவ்விடம் விட்டகன்றான்அரக்கியர் துயிலும் சீதையின் துயரும்
பிராட்டியைக் காணுதற்கு இதுவே ஏற்ற சமயமென எண்ணிய அனுமன் தனது மந்திர வன்மையால் அரக்கியர் உறக்கம் கொள்ளுமாறு செய்தான். உற்ற தோழியாய் அமைந்த திரிசடையும் துயில் கொள்ளலானாள். அவ்வேளையில் தனது துன்பத்திற்கு ஒரு முடிவு காணாமல் சீதை வருந்தினாள். ‘பகைவர் ஊரில் சிறையிருந்தவளாகிய என்னை அத்தூய்மையாளர் சேர்த்துக் கொள்வரோ ? பிறர் என்னை விரும்பியதை உணர்ந்தும் நான் இன்னும் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன்: என்னினும் கொடிய அரக்கியர் உளரோ? கணவனைப் பிரிந்தும் உயிர்வாழ்ந்திருக்கும் பெண்கள் என்னைத் தவிர வேறு யாருளர்?’ இங்ஙனம் பலவாறு நினைந்த சீதை, தன்னை மாய்த்துக்கொள்ளத் துணிந்து குருக்கத்திப் புதரொன்றைக் குறுகினாள். இராம தூதனைச் சீதை காண்டல்
இவ்வேளையில் சீதையின் கருத்தை யுணர்ந்த அனுமன், “இராமபிரானல் அனுப்பப் பெற்ற தூதன் நான்” என்று கூறியவாறே அவளை வணங்கி முன்னே சென்றான். “இராமபிரான் உம்மைத் தேடிக் கண்டு வருமாறு உலகெங்கும் தூதர்களையனுப்பியுள்ளார் ; அவர்களுள் நானும் ஒருவன் நான் நல்வினை செய் துள்ளமையால் உம்மைக் கண்டேன் ; இவண் நீர் இருத்தலை இராமபிரான் அறியார்; அவர் அறிந்திருப்பாராயின் இங்குள்ள அரக்கர்கள் இந்நாள் வரையிலும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்னைக் குறித்துச் சிறிதும் ஐயுற வேண்டாம்; அப்பெருமான் அருளிய அடையாளம் என்பால் இருக்கிறது” என்று கூறி வணங்கினான்.
சீதையின் உயிர் காத்த வீரன்
சீதை அவ்வனுமனை நோக்கினாள். அவளுக்கு இரக்கமும் சினமும் ஒருங்கே எழுந்தன. “என் எதிரில் நிற்பவன் அரக்கன் அல்லன் ; நல்லொழுக்க நெறியில் நின்று ஐம்புலன்களையும் வென்றவனாக விளங்குகிறான் ; இல்லையேல் தேவனாக இருத்தல் வேண்டும்; இவன் உரைகள் நல்லறிவைப் புலப்படுத்துகின்றன; இவன் அரக்கனோ, அன்றித் தேவனோ, குரங்கினத் தலைவனோ, யாவனாயினும் ஆகுக. இவண் எய்தி எம்பெருமான் திருப்பெயரைச் சொல்வி என் உள்ளத்தை உருகச் செய்தான் ; எனது உயிரைக் காத்தான். இதனினும் செய்யத்தக்க உதவி வேறுள்ளதோ ? இவன் உரைகள் அரக்கர்களின் இரக்கமற்ற உரையைப் போன்றனவல்ல ; இவன் யாரென உசாவுதற்குரியன்” என்று உள்ளத்தில் எண்ணி “வீரனே ! நீ யாவன் ? ” என்று அனுமனை வினாவினாள்.
- “அரக்கனே யாக, வேறோர்
- அமரனே யாக, அன்றிக்
- குரக்கினத் தலைவ னேதான்
- ஆகுக, கொடுமை யாக
- இரக்கமே யாக வந்திங்
- கெம்பிரான் நாமம் சொல்லி
- உருக்கினன் உணர்வைத் தந்தான்
- உயிரிதின் உதவி யுண்டோ ?”
ஆழி கண்ட சீதை அனுமனை வாழ்த்துதல்
இவ்வாறு உள்ளந் தேறி, ‘வீர ! நீ யாவன்?’ என்று வினவிய சீதைக்கு அனுமன் தன்வரலாற்றைக் கூறி வணங்கினான். அவன் எடுத்துரைத்த இராமபிரான் எழில் நலத்தைக் கேட்டு அவள் இதயம் உருகினாள். இராமபிரான் கூறியனவாக அனுமன் கூறிய அடையாள மொழிகளையும் கேட்டு உள்ளம் உருகினாள். பின்னர், இராமபிரான் அளித்த கணையாழி யொன்றை எடுத்துப் பிராட்டிக்குக் காட்டினான். அதனைக் கண்ட சீதை பெருமகிழ்ச்சி கொண்டாள். அதனை அன்புடன் வாங்கித் தன் மார்பில் வைத்துத் தழுவிக் கொண்டாள் ; தலைமேல் தாங்கினாள்; கண்களில் ஒத்திக் கொண்டாள்; அதனைக் கொண்டுவந்தளித்த அனுமனை வாயார வாழ்த்தினாள். “இராம பிரானின் தூதனாக வந்து எனது உயிரைக் கொடுத்த உனக்கு என்னாற் செய்யக்கூடிய கைம்மாறும் உளதோ ? ஈரேழு உலகங்களும் அழிவடைந்த காலத்திலும் நீ இற்றை நாள் இருப்பது போன்றே எற்றைக்கும் ஒரு தன்மையுடன் வாழ்ந்திருப்பாயாக!” என்று வாழ்த்தினாள். சூளாமணி பெறுதலும் சூழ்ச்சி புரிதலும்
பின்னர்ச் சீதை, அனுமன் தன்னைக் கண்டு பேசியதற்கு அடையாளமாகத் தன்பால் இருந்த சூளாமணி யென்னும் அணிகலத்தை அவனிடம் நல்கினாள். அதனைத் தொழுது வாங்கிய அனுமன் தன் ஆடை யிலே முடிந்து பாதுகாப்புச் செய்து கொண்டான். பிறகு, பிராட்டியிடம் விடைபெற்று அவ்விடம் விட்டுப் பெயர்ந்தான். சிறிது நேரத்தில் அவனது எண்ணம் மாறியது. நான் சீதாபிராட்டியைக் கண்டு பேசிய சிறுசெயலை மட்டும் முடித்துத் திரும்புதல் என் பெருமைக்கு இழுக்காகும். இங்குள்ள அரக்கர்களை யழித்துச் சீதாபிராட்டியை மீட்டுச் சென்று, இராமபிரான் திருவடிகளில் சேர்க்காமல் இருந்தால் நான் இராமபிரானுக்கு அடியவனாவது எங்ஙணம் ? ஆதலின் நான் இப்பொழுது செய்ய வேண்டுவது, இங்குள்ள அரக்கர்களைத் துன்புறுத்தி எனது ஆண்மையினைக் காட்ட வேண்டியதேயாகும். ஆகவே இவ்வரக்கர்களைப் போருக்கு இழுப்பதற்கு யாது செய்யலாம் ?’ என்ற எண்ணமிட்டான். அசோக வனத்தை யழிப்பதே தக்கது என்று நினைந்தான்.
அசோக வனமும் அரக்கர் இனமும் அழித்தல்
இவ்வாறு அரக்கர்களைப் போருக்கிழுக்க எண்ணிய அனுமன் பேருருவங் கொண்டான். தன் கால்களால் அவ்வனத்தை மிதித்துத் துவைத்துச் சிதைத்தழித்தான். ஆங்கிருந்த உயர்ந்த செய்குன்று ஒன்றனையும் தூக்கி இலங்கை நகரத்தின்மீது வீசினான். இதனால் அஞ்சியோடிய அரக்கர்கள், இராவணன் இருக்கும் இடத்தையடைந்து முறையிட்டனர். இத்தனையும் ஒரு குரங்கின் செயல் என்று கூறக்கேட்ட இராவ ணன், அவர்களை எள்ளி நகையாடினான். வலிமை மிக்க அரக்கர்கள் பலரை நோக்கி, அந்தக் குரங்கு தப்பியோடிப் போகாதவாறு அதனைப் பிடித்துக் கொண்டு வருக; கொன்று விடாதீர்கள்” என்று பணித்தான். அப்பணியினைச் சிரமேற் கொண்டு அனுமனை எதிர்த்த அரக்கர் தலைவர் பலர் அழிந்தொழிந்தனர். இறுதியில் இராவணன் மகனாகிய இந்திரசித்து அனுமனை எதிர்த்தான். அவனும் தன்னுடன் வந்த படையெல்லாம் அழிந்தொழியத் தனது தேருடன் விண்ணில் நெடுந்தொலை சென்றான். அங்குநின்று பேராற்றல் வாய்ந்த நான்முகக் கணையினைச் செலுத்தி, அனுமன் தோள்களை இறுகக் கட்டினான்.
கட்டுண்ட அனுமன், இராவணனைக் காண்டல்
அதனால் கீழே சாய்ந்த அனுமன் அக்கட்டினை யறுத்துக்கொண்டு எழவல்ல ஆற்றலுடையனாயினும் நான்முகக் கணையின் தெய்வத்தன்மையை இகழ்ந்து அகலுதல் தகாது என்று எண்ணினான். செயலற்றவனைப் போல் கண்களை மூடிக்கிடந்த அவனது ஆற்றல் அழிந்துவிட்டதென்று நினைந்து இந்திரசித்து அவனை நெருங்கினான். அரக்கர்கள் அவனைப் பிணித்துள்ள கயிற்றைப் பற்றித் தெரு வழியாக இழுத்துச் சென்றனர். இந்திரசித்தும் அனுமனோடு இராவணன் அரண்மனை யடைந்தான். இராவணனுக்கு அனுமனைச் சுட்டிக்காட்டி, “குரங்கு வடிவமாக இருக்கும் இப்பேராண்மையாளன் திருமாலைப் போலவும், சிவபிரானைப் போலவும் வீரம் வாய்ந்தவன்” என்று கூறிக் கைகூப்பி வணங்கினான். அது கேட்ட இராவணன் மிகுந்த சினத்துடன் அனுமனை நோக்கி, “நீ யாவன்? இங்கு வந்த காரணம் யாது? உன்னை இவண் அனுப்பியவர் யார்?” என்று வினவினான்.
அனுமன் அறிவுரை
அமரர் புகழையெல்லாம் வேருடன் விழுங்கிய இராவணன், அனுமனை நோக்கி இவ்வாறு வினவியதும் அவனுக்குப் பல அறிவுரைகளை வழங்கினான். “உனது எல்லையற்ற வரம் முதலியவற்றைத் தனது நீட்டிய பகழியொன்றால் முதலொடு நீக்க நின்றவனாகிய இராமன் விடுத்த தூதன் யான்; அனுமன் என்பது எனது பெயர்; சீதாபிராட்டியைத் தேடி நான்கு திசைகளிலும் வானர வீரர் சென்றுள்ளனர்; தென்பால் வந்த கூட்டத்திற்கு வாலியின் மகனை அங்கதன் தலைவனாவன் ; நான் அவனது ஏவலால் இங்குத் தனியே வந்தேன்” என்று கூறினான்.
இராவணன் வினாவும் அனுமன் விடையும்
அதுகேட்ட இராவணன் தன் பற்கள் வெளியே தெரியுமாறு நகைத்தான். “வாலியின் மகனால் அனுப்பப்பட்ட தூதனே பேராற்றல் படைத்தவனாகிய வாலி நலமோ? அவனது அரசாட்சி நன்கு நடைபெறுகின்றதோ ?” என்று கேட்டான். இராவணன் வினாக்களைக் கேட்ட அனுமன் தானும் நகைத்தான். அரக்கனே! அஞ்சற்க: வாலி இறந்துபோனான் அவனது வாலும் அன்றே போய்விட்டது; அவன் இராமபிரானுடைய கணையொன்றினாலே இறந்துபோனன் ; இப்போது சுக்கிரீவன்தான் எங்கள் அரசன் ; அவன் இராமபிரானுக்கு இனிய நண்பனானான்; அப்பெருமான் தனது கணையொன்றினால் வாலியைக் கொன்று சுக்கிரீவன் மனைவியை மீட்டுக் கொடுத்தான்; அரசியலையும் அவனுக்கே வழங்கினான்; அவ்வாறு தனக்கு உதவி செய்த இராமபிரானுக்குத் தானும் உதவி செய்ய விரும்பித் தன் படையைத் திசையெல்லாம் அனுப்பிச் சீதாபிராட்டியைத் தேடுமாறு செய்துள்ளான்” என்று அனுமன் கூறினான்.
அனுமன் தூதுச் செய்தி அறிவித்தல்
மேலும், அனுமன் இராவணனை நோக்கி, “நான் சொல்ல வந்த செய்தியைக் கேள்; உனது செல்வ வாழ்வை வீணாக்கிக் கொண்டாய்; அரச தருமத்தைச் சிறிதும் நீ நினைந்தாயல்ல; கொடிய செயலைச் செய்துவிட்டாய்; அதனால் உனக்கு அழிவு நெருங்கியுள்ளது; இனிமேலாயினும் நான் இயம்பும் உறுதியினைக்கேட்டு நடந்தால் உனது உயிரை நெடுங்காலம் காத்துக்கொள்வாய், சீதாபிராட்டியைத் துன்புறுத்திய தீவினையால், தவஞ்செய்து ஈட்டிய நல்வினையை அடியோடு இழந்தாய்; உனது பெருமை முழுவதும் அழிந்துவிட்டது; ‘தீவினை நல்வினையை வெல்லமாட்டாது’ என்னும் பெரியோர் உரையை நீ உளங்கொள்ளாமல் ஒழிந்தாய் ; நேர்மையில்லாத சிற்றின்ப வேட்கையினால் நன்னெறியை மறந்தவர்கள் மேன்மையடைய வியலுமோ ? சிவபிரான் உனக்களித்த வரம் தவறினாலும் இராமபிரானது அம்பு தவறிப் போகமாட்டாது; ஆகையால் உனது செல்வம் அழியாதிருக்கவும், உறவினர்கள் ஒழியாதிருக்கவும் நீ விரும்பினால் கவர்ந்து வந்த சீதையை உடனே விட்டு விடுமாறு சுக்கிரீவன் உன்பால் உரைத்து வரச்சொன்னன்” என்று, தான் தூது வந்த செய்தியினை ஓதி முடித்தான். இராவணன் சினமும் அனுமன் மனமும்
அனுமன் கூறிய செய்திகளை இராவணன் கேட்டான். மலையில் வாழும் குரங்கோ இத்துணை அறிவுரைகளை எடுத்தியம்பியது! என்று கூறிப் பெருநகை புரிந்தான். ‘ஒருவனுடைய தூதனாக இந்நகரம் புகுந்த நீ அழகிய பொழிலை யழித்ததும், அரக்கர்களைக் கொன்றொழித்ததும் ஏன்?’ என்று வினவினான். ‘உன்னைக் காட்டுவோர் எவரும் இன்மையால் அசோக வனத்தை யழித்தேன் என் கருத்தைக்கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் என்னைக் கொல்ல வந்தவர்களை நான் கொன்றொழித்தேன் ; இறுதியில் கட்டுண்டவன் போல் நான் வந்ததும் உன்னைக் காணவே’ என்ருன் அனுமன்.
அனுமன் மகேந்திரம் அடைதல்
அனுமன் மறுமொழி கேட்டுச் சினங்கொண்ட இலங்கைவேந்தன் கட்டளையால் அரக்கர்கள் அவனது வாலில் தீ வைத்தனர். அவன் அத்தீயினால் இலங்கை மாநகரை அழித்து வெளிப்போந்தான். இராமபிரான் திருவடிகளைத் திக்கு நோக்கி இறைஞ்சினான். விண்வழியே பறந்து வந்து இடைவழியில் மைந்நாகமலையில் சிறிது போழ்து தங்கினான். மீண்டும் அங்கிருந்து எழுந்து மகேந்திர மலையிற் குதித்தான். மனக் கவலையுடன் அங்கிருந்த வானர வீரர்கள், அவனது முகக் குறிப்பைப் பார்த்து அகக்களிப்பு அடைந்தனர். அனுமன் அங்கிருந்த அங்கதன் முதலான வானர வீரர்களைக் கண்டு வணங்கினான். அவர்கள் பால் அனுமன் இலங்கை சென்று மீண்டசெய்திகளுள் சிலவற்றை உரைத்தான். அவன் கூறாதவற்றையும் வானர வீரர்கள் குறிப்பினால் உணர்ந்து மகிழ்ந்தனர்.
அனுமனைக் கண்ட இராமன்
இராமபிரானுக்குச் செய்தி கூறும் பொருட்டு எல்லோரும் புறப்பட்டனர். அனைவர்க்கும் முன்னே அனுமன் விரைந்து சென்றான். இராமபிரான் சுக்கிரீவனுடன் உரையாடிக் கொண்டிருந்தான். சிறிது போழ்தில் அனுமன் இராமபிரான் இருக்கும் இடத்தையடைந்தான். அவன் அங்கு இராமபிரானை வணங்கவில்லை. சீதை இருக்கும் திக்கை கோக்கி வணங்கி வாழ்த்தினான். குறிப்பறிவதில் வல்ல இராமபிரான் அனுமனது செயலை உற்று நோக்கினன். சீதை நலமாக உள்ளாள் ; இவ்வனுமன் அவளைப் பார்த்துவிட்டு வந்துள்ளான் அவளுடைய கற்பும் கலங்காது இலங்குகின்றது என்று அறிந்து கொண்டான். அவனுக்கு உற்ற துயர் நீங்கியது; உவகையால் தோள்கள் பூரித்தன.
சொல்லின் செல்வனாய அனுமன் உரை
இவ்வேளையில் அனுமன் இராமனை நோக்கி, “தேவர்கள் தலைவனே! கண்டேன் கற்பினுக்கணியாம் சீதாபிராட்டியை இலங்கையிலே; இனி நீவிர் ஐயமும் துயரும் அறவே நீக்குவீர்! என் பெருந்தெய்வம் போல் திகழும் அவர், நும் பெருந்தேவியென்னும் தகுதிக்கும், நும்மைப் பெற்ற தசரத மன்னரின் மருமகள் என்னும் வாய்மைக்கும், சனக மன்னரின் மகள் என்னும் தகைமைக்கும் ஏற்பச் சிறப்புடன் விளங்குகின்றார் ; வில்லில் வல்ல வீரனே நான் இலங்கைமாநகரில் சீதா பிராட்டியாரைக் காணவில்லை; ஆனால், உயர்குடிப் பிறப்பும் பொறுமையும் கற்பும் ஒரு பெண்ணுருவம் கொண்டு களிநடம் புரிதலைக் கண்டேன்; நீர் அப்பிராட்டியின் கண்ணிலும் கருத்திலும் வாயிலும் எப்பொழுதும் இருக்கின்றீர்; அங்ஙனமாகவும் பிராட்டி நும்மைப் பிரிந்தார் என்பது பொருந்தியதாகுமோ? நான்முகன் கொடுத்த சாபத்தால் இராவணன் சீதாபிராட்டியைத் தொடுதற்கஞ்சி நிலத்தொடு பெயர்த்தெடுத்துச் சென்றான் , அப்பிராட்டியின் கற்புச் சிறப்பால் தேவ மாதர்கள் யாவரும் மிகுந்த சிறப்புற்றனர்” என்று பலவாறு சீதையின் கற்பு மாண்பினைப் பொற்புற விளக்கினான். ‘இன்னும் ஒரு திங்கள் வரையிலும் உயிரோடிருப்பேன்; அதற்குள் இராகவன் இங்கே வாரா தொழியின் உயிரிழப்பேன்’ என்று கூறிப், பின் தன் ஆடையில் மறைத்து வைத்திருந்த சூளாமணியை எடுத்து, நும்பால் கொடுக்குமாறு அப்பிராட்டி என் கையில் தந்தருளினர் என அனுமன் உரைத்துச் சூளாமணியை இராமபிரான் கையில் கொடுத்தான். அதனைப் பெற்ற இராமன் களிப்பென்னும் கடலில் மூழ்கித் திளைத்தான்.
இருவகைத் தூதுக்கு ஒருவன்
இங்ஙனம் இராமன் விடுத்த தூதனாய அனுமன் அவ்விராமனைப் பிரிந்த சீதைக்குக் கணவன் விடுத்த காதல் தூதனாகமட்டும் தொண்டாற்றவில்லை. தன் பெருந்தலைவனாகிய இராமன் விடுத்த போர்த்தூதனாகவும் இலங்கை வேந்தனைக் கண்டு, அவனது உள்ளமும் துளங்குமாறு செய்து மீண்டான். அதனாலேயே கவியரசராகிய கம்பர், அவ்வனுமனைச் ‘சொல்லின் செல்வன்’ என்று தம் காவியத்தில் போற்றிப் புகழ்கின்றார். எனவே, அவ்வனுமன் தலைமைத் தூதனுக்குரிய தகுதியெல்லாம் பெற்றுச்சிறந்து திகழ்கின்றான்.