உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்கியத் தூதர்கள்/மாதவி யனுப்பிய தூதர்

விக்கிமூலம் இலிருந்து
5. மாதவி யனுப்பிய தூதர்

தமிழில் முதற் காவியம்

நற்றமிழ் மொழியில் இற்றை நாள் வரையில் தோன்றியுள்ள காவியங்கள் எண்ணற்றவை. அவற்றுட் பெருங்காவியங்கள் சிலவே. சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி யென்னும் ஐந்தனையும் ஐம்பெருங் காவியங்கள் என்று ஆன்றோர் சிறப்பாகக் குறிப்பர். அவற்றுள் ஒன்றாகிய சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதற் பெருங்காவியமாகும். அது தோற்றத்தான் மட்டுமன்றி ஏற்றத்தானும் முதன்மை பெற்ற காவியமாகும்.

முத்தமிழ்க் காப்பியம்

இந்நூல் முதன் முதல் தமிழிலேயே ஆக்கப் பெற்றது. பிற மொழியினின்று மொழி பெயர்க்கப் பெற்ற வழிநூலன்று. இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் விரவப்பெற்ற இணையற்ற இனிய காவியமாகும். இடையிடையே உரைநடையும் மருவிய உயர்ந்த இலக்கியமாகும். ஆதலின் ‘முத்தமிழ்க் காப்பியம்’ என்று மூதறிஞர் போற்றும் ஏற்றமுடையது. நாடகத்திற்கு அமைய வேண்டிய இயல்பெல்லாம் நன்கமைந்த காவியமாதலின் ‘நாடகக் காப்பியம்’ என்றும் இதனை நல்லோர் ஏத்துவர்.

பாவலர் பாராட்டு

இந் நூலின் இனிமையில் மனத்தைப் பறிகொடுத்த உரிமைக் கவிஞராகிய பாரதியார்,

-“நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரம்என் றோர்மணி
யாரம் படைத்த தமிழ்நாடு”

என்று பாராட்டினர். கற்பவர் கேட்பவர் உள்ளமெல்லாம் கொள்ளை கொள்ளும் பேராற்றல் அப்பெருங் காவியத்திற்குண்டு என்று நன்றாகக் கண்டு கூறினார் அந்நல்லியற் கவிஞர். இக்காவியத்தின் கனிந்த சுவையில் ஈடுபட்ட கவிமணி தேசிகவிநாயகர், தமிழர் இன்றியமையாது கற்க வேண்டிய ஐம்பேரிலக்கியங் களுள் இதனையும் ஒன்றாக அறிமுகம் செய்து வைக்கிறார்,

‘தேனிலே ஊறிய செந்தமி ழின்சுவை
தேரும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர், உள்ளள வும்நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே’

என்பது அக்கவிஞரின் கவிதையாகும். தேனில் ஊறிய தீந்தமிழின் சுவையான பகுதிகளையெல்லாம் தேர்ந்தெடுத்துத் தொகுத்ததொரு பெருநூலே சிலப்பதி காரமாகும். அதனைத் தமிழர் வாழ்நாள் முழுதும் பலகால் ஓதி வளமான இன்பத்தைப் பெறுதல் வேண்டுமென அறிவுறுத்தினர் அக்கவிஞர்.

இளங்கோவின் ஏற்றம்

இத்தகைய நறுஞ்சுவைப் பெருங்காவியத்தைத் தமிழுலகிற்குத் தந்தருளிய செந்தமிழ் வல்லார் சேர நாட்டுப் பேரரசன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இளைய மகனராவர். இளங்கோவாகிய அவர் இளமையிலேயே துறவு பூண்டு இளங்கோவடிகளென விளங்கிய பெருங்கவிஞராவர்; தூய்மையான துறவு நெறியில் நின்ற வாய்மையாளர்; அறிவு நலங் கனிந்த அரசத் துறவியார். அவர் தமது புலமை நலத்தையெல்லாம் சிலப்பதிகாரக் காவியம் ஒன்றற்கே பயன்படுத்தினார். ஆதலின் முதன் முதல் தமிழில் அவரால் உருவாக்கப் பெற்ற பெருங் காவியமாகிய சிலம்புச் செல்வம் பல்லாற்றானும் முதன்மை பெறும் நல்லியல்புற்றது.

மாதவியின் மாண்பு

கண்ணகியின் கற்பு மாண்பைப் பொற்புற விளக்க வந்த இப்பெருங்காவியத்தில் வரும் சிறப்புடை உறுப்பினர் பலர். அவருள்ளே கண்ணகிக்கு இணையாக வைத்து எண்ணத்தக்க கற்பரசியாய் மாதவியென்னும் மங்கை நல்லாள் விளங்குகின்றாள். சோழ நாட்டுப் பெருநகராக விளங்கிய காவிரிப் பூம்பட்டினத்து நாடகக் கணிகையருள் ஒருத்தியாகிய சித்திராபதி யென்பாட்கு மகளாகப் பிறந்தவள் இம் மாதவி. இவள் ஆடல், பாடல், அழகு என்னும் மூன்று துறையிலும் ஒரு குறையுமின்றி நிறைவுற்று விளங்கினாள். ஐந்தாவது வயது தொடங்கிப் பன்னிரண்டாவது வயது வரையில் ஆடலும் பாடலும் அருந்தமிழ்க் கல்வியும் நன்கு பயின்று தேர்ந்தாள். பன்னிரண்டாண்டுப் பருவத்தில் மாதவி கலைநலஞ் சான்ற எழில்நிறை தலைவியாய்க் காட்சியளித்தாள்.

மாதவியின் கலையரங்கேற்றம்

கரிகாற் பெருவளத்தானாய சோழ மன்னன் முன்னால் மாதவியின் கலையரங்கேற்றம் கவினுற நடைபெற்றது. நாடக அரங்கம் மிகச்சிறந்த முறையில் அமைக்கப் பெற்றிருந்தது. அஃது ஓவியத் திரைகளாலும், ஒளி நிறை விளக்குக்களாலும், வியத்தகு விதானங்களாலும், மணந்தரு மாலைகளாலும் அணி செய்யப்பட்டிருந்தது. நாட்டிய ஆசிரியன், இசையாசிரியன், தமிழாசிரியன், தண்ணுமை ஆசிரியன், குழ லாசிரியன், யாழாசிரியன் ஆகியோர் அரங்கில் உடனிருந்து துணைபுரிந்தனர். மாதவி அவ்வரங்கிலே வலக்காலை முன் வைத்து ஏறி, வலத்தூணைப் பொருந்தி நின்றாள். மங்கல இசை முழங்கியது. அவள் பொன்னலாகிய பூங்கொடி பாங்குற ஆடுவது போல் நாட்டிய நூலின் இலக்கணமெல்லாம் நன்கு கடைப்பிடித்து ஆடினாள்.

கலையரசி பெற்ற சிறப்பு

மன்னன் அவள் கலைத்திறங் கண்டு வியத்து மகிழ்ந்து போற்றினன். ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்னைப் பரிசாக அளித்தான். ‘தலைக்கோல் அரிவை’யென்னும் தலைசிறந்த விருதினை வழங்கினான். பச்சை மணிமாலை யொன்றையும் இச்சையோடு அளித்து இன்புற்றான். இவ்வாறு மாதவியின் ஆடற்கலை அரங்கேற்றம் அழகுற நடைபெற்றது. சித்திரா பதியும் அவளைச் சேர்ந்தோரும் சிந்தை மகிழ்ந்தனர். மாதவி கலையரசியாகத் தலைசிறந்து விளங்கத் தொடங்கினான்.

பணிப்பெண்ணைப் பணித்தல்

மனையகம் புகுந்த மாதவி, பணிப்பெண் ஒருத்தியை அழைத்தாள். மன்னன் வழங்கிய மரகத மாலையை அவள் கையிற் கொடுத்தான். “இதனைக் கையில் ஏந்திச் செல்வக் காளையர் வந்து சேரும் நாற்சந்தியில் நிற்பாயாக. இம்மாலைக்கு விலையாக ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்னை அளிக்கும் இளைஞனை நமது இல்லத்திற்கு அழைத்து வருக. அவனையே என் காதலனாக யான் ஏற்றுக் கொள்வேன்” என்று கூறியனுப்பினாள். மாதவி மனையிற் கோவலன்

அவளும் நகர நம்பியர் பலரும் உலவும் நாற்சந்தியில் வந்து நின்றாள். அவ்வழியே வந்த கோவலன் அம்மாலையின் விலை, மாதவியின் பரிசமெனத் தெரிந்தான். பணிப்பெண் பகர்ந்தவாறே ஆயிரத்தெண் கழஞ்சுப் பொன்னையும் கொடுத்து மாதவியின் மனையகம் அடுத்தான். அவளது கலையினும் அழகிய காதல் மயக்கினும் மூழ்கினான். அவன் தனது மனையகத்தை அறவே மறந்தான்.

இந்திர விழா

காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இந்திர விழா மிகச் சிறப்பாக நடைபெறும் சித்திரைத் திங்கள் நிறைமதி நாளில் தொடங்கி இருபத்தெட்டு நாட்கள் அப்பெருவிழா நிகழும். விழாவின் முடிவில் முழு நிலா நாளில் நகரமாந்தர் எல்லோரும் கடலாடுதற்குக் களிப்புடன் செல்வர். கோவலன் மாதவியுடன் கூடி வாழும் நாளில் இந்திரவிழா வந்துற்றது.

விழாவில் மாதவி கூத்து

அவ்விழாவில் மாதவி அரங்கேறித் திறம்பட ஆடினாள். திருமாற்குரிய தேவபாணிமுதல், திங்களைப் பாடும் தேவபாணியீறாகப் பலவகைத் தேவபாணிகளைப் பாடினாள். பாரதி, கொடுகொட்டி, பாண்டரங்கம் போன்ற பதினொரு வகைக் கூத்தும் ஆடி மக்களை மகிழ்வித்தாள். அவளுடைய ஆடலும் பாடலும் அழகும் மக்கள் மனத்தை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தின. அது கண்டு கோவலன் ஊடற்கோலம் கொண்டான். இங்கேதான் அவன் மாதவியைப் பிரிதற்குக் காரணமான மனப்பிளவு தோன்றுகிறது. கடற்கரையில் காதலர்

இந்திர விழாவின் இறுதிநாள் வந்தடைந்தது. மாதவியின் ஆடலும் கோலமும் ஒருவாறு முடிந்தன. அவற்றைக் கண்டு வெறுப்போடிருந்த கோவலன் விரும்பி மகிழுமாறு, அவள் தன் கோலத்தை மாற்றிப் புதிய வகையில் தன்னைக் குறைவறப் புனைந்து கொண்டாள். கோவலனோடு இருந்து அவனை மகிழ்வித்தாள். விழாவின் முடிவில் நகர மக்கள் கடலாடச் சென்றனர். மாதவி கடல் விளையாட்டைக் காண விரும்பினாள். கோவலனும் மாதவியும் கடற்கரைப் பொழிலை நோக்கிப் புறப்பட்டனர். கோவலன் கோவேறு கழுதைமீது ஏறிச் சென்றான். மாதவி நன்றாக அலங்கரித்த வண்டியொன்றில் ஏறிச் சென்றான். இருவரும் கடற்கரை யடைந்து, ஆங்குப் புன்னைமர நீழலிற் புதுமணற் பரப்பின்மேல் அமைத்த இருக்கையில் தங்கினர். ஓவியத்திரைகளைச் சூழவிட்டு, மேலே விதானமும் கட்டியமைத்த சிறந்த இருக்கையாக அது திகழ்ந்தது. அதனுள்ளே யானை மருப்பால் அமைந்த வெண்கால்களையுடைய கட்டிலில் மாதவியும் கோவலனும் இருந்தனர்.

யாழைத் திருத்தி யளித்தல்

அவ்வேளையில் தோழியாகிய வசந்தமாலை கையில் மகர யாழை வைத்துக் கொண்டு நிற்பதை மாதவி கண்டாள். அதனைத் தொழுது வாங்கிய மாதவி அதன் நரம்புகளைக் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் தடவி இசையெழுப்பிப் பார்த்தாள். இசை நூலில் வகுத்துள்ள இலக்கண வகையில் யாழ் பொருந்தத் திருந்த அமைந்திருப்பதைக் கண்டாள். கோவலன் கையில் அந்த யாழைக் கொடுத்தாள். காதற் குறிப்புடன் கனியிசை

அவ்யாழைக் கையில் வாங்கிய கோவலன் காவிரியைப் பற்றிய ஆற்றுவரிப் பாடல்களும் கானல்வரிப் பாடல்களும் பாடி, மாதவின் மனம் மகிழுமாறு யாழிசைக்கலானான். அவன் இசைத்த பாடல்கள், காதலன் ஒருவன் தன் காதலியை நோக்கிக் கூறும் காதற் கருத்துக்கள் நிறைந்தனவாக இருந்தன. அவற்றைக் கேட்ட மாதவி, அவன் நிலை மாறியிருப்பதாக நினைந்தாள்; வேறு மாதிடத்தே காதல் கொண்டிருப்பதாகக் கருதினாள்; அதனால் மகிழ்ந்தவள் போல் நடித்து மனத்தகத்தில் ஊடல் கொண்டாள். அவன் கையிலிருந்த யாழைத் தன் கையில் வாங்கி இசைக்கத் தொடங்கினாள். கோவலன் பாடியது போலவே, தானும் காதற்குறிப்புக் கொண்டவளைப் போலக் காதற் கருத்துக்கள் நிறைந்த பாடல்களைக் கனிந்த இசையொடு குழைத்துப் பாடினாள். அவள் நிலமகள் வியக்குமாறும் உலகமக்கள் உவக்குமாறும் யாழிசையோடு பொருந்த இனிமையாகப் பாடினாள்.

ஊழ்வினையால் உற்ற பிரிவு

மாதவி பாடிய பாடல்கள், காதலியொருத்தி காதலன்பிரிவுக்கு ஆற்றாமல் வருந்தியுரைக்கும் காதற் கருத்துக்கள் அமைந்தனவாக இருந்தன. அவற்றைக் கேட்ட கோவலன், ‘இவள் வேறோர் ஆண்மகனிடத்துக் காதல் விருப்பங் கொண்டு இவ்வாறு பாடினாள் ; மாயப் பொய் பல கூட்டும் மாயத்தா ளாதலின் இவ்வாறு பாடினாள்’ என்றெண்ணி மனம் மாறினான். அதனையே காரணமாகக் கொண்டு, ஊழ்வினை வந்து உருத்தமையால் உடனே மாதவியை விட்டுப் பிரிந்தான். ஏவலாளர் சூழ்ந்துவரக் கோவலன் அங்கு நின்றும் அகன்றான். அது கண்டு மனம் சோர்ந்த மாதவி வண்டியில் அமர்ந்து, தனியே சென்று மனையை அடைந்தாள்.

மாதவியின் கடிதம்

இவ்வாறு இவர்கள் பிரிந்தது இளவேனிற்பருவம். அதனைப் பொதியத் தென்றலும் குயிலின் குரலும் அறிவித்தன. கோவலன் பிரிந்த காரணத்தால் வருந்தித் திரும்பிய மாதவி வானளாவிய மேன் மாடத்து நிலா முற்றத்தில் ஏறியமர்ந்தாள். யாழைக் கையில் எடுத்து இனிய இசையைத் தொடுத்துப் பாடினாள். வெவ்வேறு பண்ணை விரும்பி இசைத்தாள். அவள் உள்ளம் அமைதி இழந்தமையால் இசை மயங்கியது. கோவலனுக்குக் கடிதம் எழுதி அழைக்க வேண்டுமெனக் கருதினாள். மாதவி, சண்பகம், பச்சிலை, கருமுகை, வெண்பூ, மல்லிகை, செங்கழுநீர் ஆகியவற்றால் அடர்த்தியானதொரு மாலையைத் தொடுத்தாள். அவற்றின் இடையே அமைந்த தாழையின் வெண்ணிறத் தோட்டில் பித்திகை (சிறு சண்பகம்) அரும்பை எழுத்தாணியாகக் கொண்டு, செம்பஞ்சிக் குழம்பில் தோய்த்து உதறி எழுதினாள்:

‘மன்னுயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்னிள வேனில் இளவர சாளன்
அந்திப் போதகத் தரும்பிடர்த் தோன்றிய
திங்கட் செல்வனும் செவ்வியன் அல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதிடைப் படுப்பினும்
தணங்த மாக்கள் தந்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல்
இறம்பூ தன்று இஃதறிந் தீமின்.’

‘உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தத்தம் துணையோடு புணர்த்து மகிழ்விக்கும் இளவேனில் அரசாள் கிறான். இந்நாளில் மாலைப்பொழுதில் தோன்றும் மதியாகிய செல்வனும் நேர்மையாளன் அல்லன். கூடினோர் இடையே ஊடினாலும், பிரிந்தவர் துணைகளை மறந்தாலும் மாரன் மணமுள்ள மலர்க்கணையால் அவர் உயிரைக் கொள்ளை கொள்ளுவான். இஃது அவனுக்கு இயல்பேயன்றிப் புதிய செயலன்று. இதனை நீர் அறிந்தருள வேண்டும்.

வசந்தமாலை தூது

இவ்வாறு அறுபத்துநான்கு கலைகளும் இசைக் தொழுக, இசையைப் பழித்த இனிய மொழியில் விளைந்த மழலையாற் பலகாற் சொல்லிச் சொல்லி, மாதவி தன் காதற் பனுவலை எழுதினாள் பிரிவுத் துயரால் பசந்த மேனியொடு வசந்தமாலையை அழைத்தாள். அவளிடம் மாலையைக் கொடுத்து, “இம் மலர் மாலையிற் பொதிந்த பொருளையெல்லாம் கோவலனுக்கு எடுத்துரைத்து அழைத்து வருக” என்று பணித்தாள்.

கோவலன் மறுப்பு

மாலையைப் பெற்ற வசந்தமாலை கூலமறுகில் கோவலனைக் கண்டு அதனைக் கொடுத்தாள். அவன், ‘நாடக மகளாதலின் பல வகையாலும் நடித்தல் அவட்கு இயல்பு’ என்று வெறுப்புடன் கூறி அதனை வாங்க மறுத்தான். அதனால் வாடி வருந்திய வசந்தமாலை, மாதவியிடம் சென்று செய்தியை ஓதினாள். அது கேட்ட மாதவி, ‘இன்று மாலை வாராமற் போயினும் நாளைக் காலையில் வரக் காண்போம்’ என்று தளர்ந்த மனத்தோடு மலர்ப்படுக்கையிற் பொருந்தாது வருந்தினாள்.

“மாலை வாரார் ஆயினும் மாணிழை
காலேகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தானென்.”

மாதவி பெருந்துயர்

மறுநாட் பொழுதுபுலர்வதற்கு முன்னே கோவலன் கண்ணகியோடு புறப்பட்டுப் பெற்றோர்க்கும் தெரியாமல் நகரைவிட்டுப் பெயர்ந்தான். அவனைத் தேடி ஏவலாளர் பலர் பல திசைகளிலும் விரைந்தேகினர். இச்செய்தியை அறிந்த வசந்தமாலை ஓடோடியும் வந்து மாதவியிடம் அதனை ஓதினாள். அதைக் கேட்டதும் மாதவி பெருந்துயருற்று வருந்தினாள். அவளுடைய பெரு மாளிகையின் ஒருபால் படுக்கையில் விழுந்து கிடந்து வெதும்பினாள். அவள் அடைந்த துயரைப் பற்றிக் கேள்வியுற்ற கோசிகன் என்னும் அந்தணாளன் மிகவும் வருந்தி ஆறுதல் கூறச் சென்றிருந்தான்.

கோசிகன் தூது

அக் கோசிகனைக் கண்ட மாசிலா மாதவி துயரக் கோலத்தோடு அவனைத் தொழுது வேண்டினாள். ‘என் ஆற்றொணாத் துயரை நீரே ஆற்றுதல் வேண்டும்; நான் எழுதித் தரும் கடிதத்தை என் கண்மணியனையாரை எங்கேனும் தேடிக் கண்டு அவரிடம் சேர்க்க வேண்டும்’ என்று வேண்டினாள்.

மாதவியின் கடிதம்

‘அடிகளின் திருவடிகளுக்கு வணக்கம். பொய்ம்மை நீங்கிய மெய்யறிவுடைய பெரியோய்! என் திருந்தாச் சொற்களைத் தங்கள் திருவுளத்திற் கொள்ளவேண்டும். பெற்றோரின் கட்டளையில்லாம லும் உயர்குலமகளாகிய துணைவியோடு இரவிலேயே பிரிந்து சென்றதற்குக் காரணமான என் பிழையை ஒரு சிறிதும் அறியாமல் கலங்கி நிற்கும் என் கெஞ்சத்தின் கவலையை மாற்றியருள வேண்டும்.’

‘அடிகள் முன்னர் யான்அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி யன்றியும் குலப்பிறப் பாட்டியோடு
இரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி’

என்று ஓலையொன்றில் எழுதித் தன் கூந்தலால் முத்திரையும் இட்டாள்.

கோசிகன் முயற்சி

மாதவியின் காதல் தூதனாகக் கோவலன்பாற் புறப்பட்ட கோசிகன் அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு பல வழியிலும் திரிந்து அவனைத் தேடினான். மதுரைக்குச் செல்லும் வழியில் ஒரு பார்ப்பனச்சேரியின் பக்கமாகக் கோசிகன் போய்க் கொண்டிருந்த போது, ஊருக்கு வெளியே வழியோரத்தில் அமைந்த நீர்நிலை யொன்றைக் கண்டான். அதை நோக்கிக் கோவலனைப் போன்ற ஒருவன் போய்க்கொண்டிருப்பதையும் கூர்ந்து நோக்கினான். கற்பு மனையாளொடும் கான் வழியில் நடந்து வந்ததை நினைந்து நினைந்து வருந்தி உடல் மெலிந்து வாடி, உருவம் வேறுபட்டிருந்த காரணத்தால், அவனைக் கோசிகனால் எளிதிற் கண்டுகொள்ள முடியவில்லை. எனினும் தன் ஐயத்தை அகற்றிக் கொள்வதற்காக ஒரு முயற்சி செய்தான். அந்தணன் ஐயந்தெளிதல்

அக்கோசிகன் ஒருபாற் படர்ந்திருந்த குருக்கத்திக் கொடியின் அருகே நெருங்கினான். அதன் மற்றொரு பெயராகிய ‘மாதவி’ என்பதைச் சொல்லி விளித்தான். மாதவிக் கொடியே! நீ இந்த வேனிலால் வெதும்பிக் கோவலனைப் பிரிந்து கொடுந்துயர் அடைந்து வருந்தும் மாதவியைப் போன்றே மலரிழந்து வாடுகின்றனையே!” என்றான்.

‘கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய
மாமலர் கெடுங்கண் மாதவி போன்றில்
வருந்திறல் வேனிற் கலர்களைங் துடனே
வருந்தினை போலும் நீ மாதவி!’

என்று கோசிகன் அக்கொடியை நோக்கிக் கூறினான்.

கோவலன் கோசிகன் உரையாடல்

இச்சொற்களைக் கேட்டதும் கோவலன் திரும்பிப் பார்த்தான். கோசிகனை நோக்கி, “நீ இப்பொழுது இயம்பியது என்ன?” என்று ஆவலொடு வினாவினான். உடனே கோசிகன் ஐயம் நீங்கி, அவனே கோவலன் என்று தெளிந்து நெருங்கிச் சென்று நிகழ்ந்தவற்றையெல்லாம் மொழிந்தான்.

“ஐயனே! இருநிதிக் கிழவனான நின் தந்தை மாசாத்துவானும், மனைமாட்சி மிக்க தாயும் நின்னைப் பிரிந்து மணியிழந்த நாகம் போன்று ஒளியிழந்து வருந்துகின்றனர். உயிரிழந்த உடலைப் போன்று உன் உறவினரெல்லாம் செயலற்றுத் துயர்க் கடலில் மூழ்கினர். தந்தை நின்னைத் தேடிக்கொண்டு வர ஏவலாளரை எங்கும் அனுப்பினான். தந்தையாகிய தயரதன் சொல்லைக் காத்தற்காகக் கானகம் புகுந்த மானவனாம் இராமனைப் பிரிந்த அயோத்தி போன்று, புகார் நகரம் உன் பிரிவாற் பெருந்துயருற்றுப் பொலிவிழந்தது. மாதவியின் கடிதத்தை நீ மறுத்ததாக வசந்தமாலை சொன்னதும் அவள் மேனி பசந்து நெடுநிலை மாடத்தின் இடைநிலத்தின் ஒருபால் அமைந்த படுக்கையில் நின்னை நினைந்து வருந்தி வீழ்ந்தாள். அவள் அடைந்த துயர்கேட்டு அவளுக்கு ஆறுதல் கூறுதற்காக யான் சென்றேன். அவளோ என் இரண்டு அடிகளையும் தொழுது, ‘எனக் குற்ற துயரத்தைத் தீர்ப்பாயாக!’ என்று தனது மலர்க்கையால் இந்த ஓலையை எழுதி, ‘என் கண்மணியனைய கோவலருக்கு இதனைக் காட்டுக!’ என்று தந்தாள். இதனை எடுத்துக்கொண்டு நின்னைக் காணமல் எங்கெங்கோ தேடியலைந்தேன்” என்று கூறி, மாதவியின் ஓலையைக் கோவலன் கையிற் கொடுத்தான்.

கோவலன் குற்றம் உணர்தல்

ஓலை மடிப்பின் புறத்தே மாதவி தன் கூந்தலால் இட்ட இலாஞ்சனை இனிய நெய் மணம் கமழ்ந்தது. அது கோவலன் முன்பு நுகர்ந்த நறுமணமாதலின் பழைய நினைவை உணர்த்தியது. அதைக் கைவிடாமற் பிடித்திருந்து, பின்னர் அவன் ஓலையைப் பிரித்து நோக்கினான். மாதவி எழுதிய மொழிகளே உணர்ந்து வருந்தினான். ‘இஃது அவள் குற்றமன்று, என் குற்றமே’ என்று மனங் குழைந்து நிகழ்ந்ததை எண்ணி நெக்குருகினான். ஒருவாறு தளர்வு நீங்கி, ‘அந்தணாள இந்த ஓலையின் பொருள் என் பெற்றோருக்கு யான் எழுதுவது போலவும் பொருத்தமாக அமைந்துள்ளது. ஆதலின் இந்த ஓலையையே அவர்கட்குக் கொண்டு காட்டுக! அவர்கள் மலரடி வணங்கினேன் என்று எனது வணக்கத்தைச் சொல்லுக! நின் நடுக்கத்தை யொழித்து என் பெற்றோரின் நன்மனத்திற் பொருந்திய பெருந்துயரைக்களைய விரைந்து செல்லுக!’ என்று கூறிக் கோசிகனைச் செல்ல விடுத்தான்.

மாதவியின் மாளாத் துயரம்

அவன் தன் முயற்சி பயன்படாமை உணர்ந்து வருந்திக் காவிரிப்பூம்பட்டினத்திற்குத் திரும்பினான். மாதவியிடம் கோவலன் மனப்பாங்கை எடுத்துரைத்தான். அவள் இன்னது செய்வதெனத் தெரியாது திகைத்து இன்னலுற்றாள். தான் பிறந்த குலத்தையும், கணிகையர் வாழ்வையும், கற்ற கலையையும் பழித்துத் தன்னையே நொந்து கொண்டாள்.

கடைத் தூதர் இருவர்

இங்கே மாதவியின் காதல் தூதாக வசந்தமாலையென்னும் அவள் தோழியைக் கண்டோம்; கோசிகன் என்னும் அந்தணாளன் ஒருவனையும் கண்டோம். இவர்கள் இருவரும் ஓலை கொடுத்து நிற்பாராய கடைத் தூதர் இனத்தைச் சார்ந்தவராகக் காட்சி தருகின்றனர். மேலும் கோசிகன், கோவலனுக்கும் தூதாய் அமைகின்ற சிறப்பை இங்குக் காண்கின்றோம்.