உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்கியத் தூதர்கள்/அதியமான் அனுப்பிய தூதர்

விக்கிமூலம் இலிருந்து

4. அதியமான் அனுப்பிய தூதர்

அதியமான் சிறப்பு

கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த கொடை வள்ளல்கள் எழுவருள்ளே அதியமான் நெடுமான் அஞ்சி என்பானும் ஒருவன். அவன் அதியர் என்னும் குறுநில மன்னர் குடியிற் பிறந்த சிறந்த கொற்றவன். அவன் தனது ஈகை நலத்தாலும் வீர வலத்தாலும் இணையற்று விளங்கினான். அதனால் அதியர் குடிப்புகழ் சிறப்புற்று ஓங்கியது. குடிப்பெருமையைப் பெருக்கிய அதியமானைப் புலவர் பலரும் அதியமான் நெடுமான் என்று அகமகிழ்ந்து போற்றினர்; அவனது இயற்பெயர் அஞ்சி என்பதே. அவன் மழவர் என்னும் வீரர் குலத்திற்குத் தலைவனாதலின் மழவர் பெருமகன் என்றும் அழைக்கப்பெற்றான்.

நாடும் நகரும்

சேலம் மாவட்டத்தில் இற்றை நாளில் தர்மபுரி என்று வழங்குறும் தகடூரைத் தலைநகராகக் கொண்டு அதியர் என்னும் அரச மரபினர் ஆண்டு வந்தனர். அவர்கள் சேர மன்னருடன் பேருறவு பூண்டு ஒழுகு பவராதலின் அச்சேரர்க்குரிய பனம்பூ மாலையையே தாமும் மாலையாகப் புனைந்து கொள்வர். பெறுதற்கரிய இனிமை வாய்ந்த கரும்பைப் பிற நாட்டினின்றும் முதன் முதல் தமிழகத்திற்குக் கொண்டு வந்த பெருமை இவ்வதியர்க்கு உரியதே. குதிரை மலையும் அதனைச் சூழ்ந்த கொல்லிக் கூற்றமும் இவருக்குரிய நாடாய் இருந்தன. வீரமும் புகழும்

இத்தகைய பெருமை சான்ற அதியர் மரபிலே பிறந்த அஞ்சி எவர்க்கும் அஞ்சாத ஆண்மையுடையான்.

“பிறைமருள் வான்கோட்டு அண்ணல் யானை
சினமிகு முன்பின் வாமான் அஞ்சி”

என்று அதியமான் படைவலத்தைப் பாராட்டிப் பேசினார் ஆசிரியர் மாமூலனார். இவனுக்கு எழினி என்ற மற்றொரு பெயரும் வழங்கும். இக்கோமானைப்பாடிய கொழி தமிழ்ப் புலவர் பலராயினும் பாரியைப் பாடிய கபிலரைப் போலவும் ஆயைப் பாடிய மோசியைப் போலவும் இவன் புகழொளி எங்கும் பெருகுமாறு விரிவாகப் பாடியவர் ஔவையார் ஒருவரே.

ஔவையார் அமைச்சராதல்

அதியமான் நெடுமான் அஞ்சியின் படைவலத்தையும் கொடை நலத்தையும் பலர் வாயிலாகக் கேட்டுவந்த தமிழ் மூதாட்டியாராய ஔவையார் அவன் வாழும் தகடூரை நாடிச் சென்றார். அவனைக் கண்டு தண்டமிழ்ப் பாக்களால் அவன் புகழைப் பாடினார். ஔவையாரின் செவ்விய புலமையையும் செய்யுள் நலனையும் கண்டு அதியமான் கழிபேருவகை கொண்டான். அவரைத் தன் அரசவைப் புலவராகவும் அமைச்சருள் ஒருவராகவும் ஏற்றுப் போற்றி மகிழ்ந்தான்.

அதியமான் ஔவையார் நட்பு

அதியமான் தன் படைவலியால் பன்னாட்டுமன்னரையும் வென்று பகைவரைப் பெருக்கி வைத்திருந்த காரணத்தால் ஔவையாரின் அறிவுரை அவனுக்கு மிகவும் இன்றியமையாததாக இருந்தது. அதனை உணர்ந்த அதியமான் அவரை அமைச்சராக ஏற்றுக் கொண்டதில் சிறிதும் வியப்பில்லையன்றோ? அதனாலேயே அவன் ஔவையாரைச் சிறுபொழுதும் பிரிதற்கு விழைந்தானல்லன். அவர் எப்பொழுதும் அருகிருந்து அறிவுரையும் ஆறுதலுரையும் தனக்குக் கூறிக்கொண்டிருத்தலைப் பெரிதும் விரும்பினான்.

பாணர்குலப் பாவையர்

அதியமான் அவையில் அமைச்சராகவும் அரசவைப் புலவராகவும் விளங்கிய ஔவையார் பாணர் மரபில் தோன்றிய பாவையாராவர். பாணர் குலத்தில் உதித்த மகளிரைப் பாடினியர், விறலியர் என்னும் பெயர்களால் குறிப்பர். பண்ணமையப் பாடும் இன்னிசை வல்ல மகளிர் பாடினியர் எனப்படுவர். பாணர் பாடும் பாடலுக்கேற்ப இனிதாடும் இயல்பினர் விறலியராவர். பாடினியர் தாமே பாடிக் கொண்டு ஆடும் பண்புடையாராவர்.

ஔவையார் பரிசில் வாழ்க்கை

ஔவையார் இளமையிலேயே ஆடலும் பாடலும் வல்ல அரிவையராய்ப் புலமை மிக்கு விளங்கினார். அவருடைய அறிவும் திறலும் கண்ட ஆடவர் ஆவரை மணஞ் செய்து கொள்ள அஞ்சினர் போலும்! அன்றித் தம் புலமையையும் திறமையையும் உலகிற்கு நன்கு பயன்படுத்த வேண்டும் என்ற அருள் உள்ளத்தால் அவர் இல்லற வாழ்வைக் கொள்ளாதிருந்தனரோ? இன்னதென அறியோம்.அவர் இளமையிலேயே துறவுநெறி பூண்டு தூய வாழ்வை மேற்கொண்டு ஒழுகினார். நல்லிசைப் புலமை மெல்லியலாராய் நாடெங்கும் சுற்றி மன்னர்களையும் வள்ளல்களையும் இன்னிசைப் பாக்களால் புகழ்ந்து பாடினார். அவர்கள் அன்புடன் வழங்கிய கொடைப் பொருளைப் பெற்றுத் தம் வாழ்வைத் தடையிலாது நடத்தி வந்தார்.

அமுத நெல்லிக் கனி

இத்தகைய பரிசில் வாழ்க்கையையுடைய பைந்தமிழ் மூதாட்டியாரை அதியமான் தனக்கு அறிவுரை வழங்கும் அமைச்சராகப் பெற்றான். அவனுக்கு ஒரு நாள் அருமையானதொரு கெல்லிக்கனி கிடைத்தது. அஃது அவன் நாட்டு மலையொன்றன் உச்சியில் மக்கள் ஏறுதற்கொண்ணாத உயரத்தில் அமைந்த பிளவில் முளைத்த நெல்லி மரத்தினின்று அரிதாகக் கிடைத்தது. அக்கனி பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை பழுப்பதாய சிறப்புடையது. அதனை உண்டவர் நெடுநாள் உடலுரத்துடன் ஊறின்றி வாழ்வர்.

ஔவையாருக்குக் கனியை அளித்தல்

அத்தகைய அருங்கனியைப் பெற்ற அதியமான் தன் அரசவையில் வீற்றிருந்த அருந்தமிழ் மூதாட்டியாரை நோக்கினான். இதனை இப்பெருமாட்டியார் உண்டு பல்லாண்டு வாழ்வாராயின் எத்தனை எத்தனை உண்மைகளை மக்கள் உய்யுமாறு உதவுவார்! இதனை நாம் உண்டு நெடுநாள் வாழ்ந்தோமாயின் அடுபடைகொண்டு அளவற்ற உயிர்களைக் கொன்று குவிப்போம். ஆதலின் இதனை ஔவையாரே அருந்த வேண்டுமெனத் துணிந்தான். உடனே அதனை ஔவையார் கரத்திற் கொடுத்து உண்ணுமாறு வேண்டினான். ஔவையாரின் வியப்பு

பிறர் அன்புடன் அளிக்கும் பொருள் எதுவாயிலும் இன்புடன் ஏற்றுக் கொள்ளும் நல்லியல்பினராகிய ஔவையார் அதனை இகழாது மகிழ்வுடன் வாங்கி உண்டார். அதனை உண்டபின் அதன் அமுதனைய அருஞ்சுவையினைக் கண்டார். நல்லமுதனைய இந்நெல்லிக்கனியின் இனிய சுவை புதுமையாக வன்றோ இருக்கின்றது என்று வியந்தார்.

அதியமான் அன்பும் பண்பும்

ஔவையாரின் வியப்பினைக் கண்ட அதியமான் அதன் சிறப்புக்களை விரித்துரைத்தான். “இச்செய்திகளை முன்னரே யான் மொழிந்திருப்பேனாயின் நீர் இக் கனியினை அருந்தியிருக்க மாட்டீர்; நும்மைப் போலும் நுண்ணறிவாளர் பன்னெடுங்காலம் இப் பாருலகில் வாழ வேண்டும் என்னும் பேரார்வத்தாலேயே அதனை நுமக்களித்தேன்” என்று உவகையுடன் உரைத்தான். அதியமானின் பண்புமிக்க அன்புரைகளைக் கேட்டு அகமுருகிய தமிழ் மூதாட்டியார் அவனது உயர்ந்த பண்பை உளமாரப் பாராட்டிச் சிறந்ததொரு செந்தமிழ்ப் பாவால் அவனை வாழ்த்தினார்.

“போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கீத் தனையே”

“பகைத் தெழுந்த போரில் எதிர்த்து வந்த மன்னரை வென்று வெற்றிமாலை புனையும் அஞ்சியே! பால் போலும் வெண்மையான பிறைமதியைச் சடை முடியில் அணிந்துள்ள ஆலமுண்ட நீலகண்டனைப் போல நீ எந்நாளும் மன்னி வாழ்வாயாக பெரிய மலையின் அரிய பிளவில் தோன்றிய நெல்லி மரத்தில் பல்லாண்டுகட்கு ஒரு முறை பழுப்பதாய கனியின் சிறப்பினை என்பாற் சிறிதும் குறிப்பிடாது மனத்தின் கண் மறைத்தவனுய் யான் இறவா திருக்குமாறு அருளுடன் ஈந்தனையே! நினது அன்பை என்னென் பேன்!” என்று அவனை வாயார வாழ்த்தி மகிழ்ந்தார்.

புலவர்கள் போற்றுதல்

அதியமான் அறிவிற் சிறந்த ஔவையாருக்கு அமுத நெல்லிக்கனி அளித்த அருஞ்செயலைப் பிற புலவர்களும் வியந்து பேசினர். ‘மால்வரைக், கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி, அமிழ்து விளை தீங்கனி ஔவைக்கு ஈந்த அதிகன்’ என்று நல்லுரர் நத்தத்தனார் என்னும் புலவர் நயந்து போற்றினார். இனிய கனியைப்பற்றிக் கூறவந்த உரையாசிரியராகிய பரிமேலழகர், ‘ஔவையுண்ட நெல்லிக்கனி போல அமிழ்தாவனவற்றை என்று பாராட்டினர்.

ஔவையாரின் அரசியற் பணி

கொடை வள்ளலாகிய அதியமான் உடல்வலியும் படைவலியும் பெரிதும் படைத்தவன். அதனால் அவன் போர்வேட்கை மிக்க பெருவீரனாய் விளங்கினான். அவனுக்குப் பகைவரும் பலராயினர். அப்பகைவரால் அதியமானுக்கு ஊறு நேராவாறு காப்பதைத் தமது கடமையெனக் கருதினார் ஔவையார். தம்மைப் பேணும் மன்னனும் அவன் நாட்டு மக்களும் அமைதியான நல்வாழ்வை நடத்த வேண்டுமே என்று கருத்துட் கொண்டார். ஆதலின் தகடூர் நாட்டின் மீது படையெடுக்க முற்படும் பகைவர்களைப் பரிசிலாள ரைப் போல் சென்று கண்டு நல்லுரை சொல்லி வருவார். அதியமான் படைவலியை எடுத்துரைத்துப் பகைவரை அச்சுறுத்தி வருவார். அம்முறையில் ஔவையார் அதியமான் பகைவர்க்குக் கூறிய அறிவுரைகள் பலவாகும்.

அதியமான் பகைவர்க்கு அறிவுரை

அதியமான் தன்பால் வரும் இரவலர்க்கு எண்ணற்ற தேர்களைப் பரிசாக ஈந்து மகிழ்வான். புலவர்கள் அவன் தேர்ப்படைக்கு உவமையாக மாறாது பெய்யும் மழைத்துளிகளைக் குறிப்பர். அங்ஙனமாயின் அவன் தேர்ப்படையின் அளவை என்னால் இயம்பலாகுமோ? அவன் நாட்டுத் தச்சர் ஒவ்வொருவரும் நாளொன்றிற்கு எட்டுத் தேர்களைக் கட்டுற அமைக்கும் தொழில் திறமுடையார். கோடுகளில் செறித்த இருப்புத் தொடிகள் பிளக்குமாறு பகைவர்தம் கோட்டை வாயிற் கதவைக் குத்திச் சிதைக்கும் குன்றனைய யானைப் படையை மிகுதியாகக் கொண்டவன். போர்க்களத்திற் கூடித்தாக்கும் கொடும்படை வீரர்களின் மார்பு குலைந்து பிளந்து சிதையுமாறு மிதித்தோடும் குதிரைப்படையினைப் பெரிதும்பெற்றவன். பகைவரை வெட்டி வெட்டிக் கூர்மை மழுங்கிய வாளையும், குத்திக்குத்திக் கோடும் நுதியுஞ் சிதைந்து செப்பனிடங் பெற்ற வேலையும் தாங்கிய வீரர்கள் அவன்பாற் கடல்போற் பரந்து காணப்படுவர். அவ்வீரர்கள் அடிக்குங் கோலுக்கு அஞ்சாது எதிர் மண்டும் அரவினையொத்த ஆற்றல் படைத்தவர். இத்தகு பெரும் படையினைப் பணிகொள்ளும் பேராற்றல் படைத்தவன் அதியமான். ஆதலால் பகைவர்களே ! அதியமான் இளையன், எளியன் என்று இகழன்மின்! அவனோடு எதிர்த்துப் போரிட்டு வெல்லுவோம் என்று எண்ணன்மின்! உங்கள் நாடும் நகரும் உங்களுக்கே உரியனவாக இருக்க விரும்பின், அவன் வேண்டும் திறை கொடுத்து உய்ம்மின்! மறுப்பின் அவன் விடான். நான் கூறும் இந் நல்லுரைகளைக் கேட்டு நடவா தொழிவீராயின் நீவிர் நுந்தம் உரிமை மகளிரைப் பிரிந்து உயர்ந்தோர் உலகம் புகுவது உறுதி.

அதியமானுக்கு அறிவுரை

இவ்வாறு அதியமானின் பகைவர்பால் அமைதி விளைக்கும் தூதராய்ச் சென்று அறிவுரை கூறிவந்த ஔவையார், அவ்வதியமானுக்கும் அறிவுரை கூறத் தவறினரல்லர். “அரும்போர் வல்ல அதியமானே! வலிமிக்க புலியொன்று சீறியெழுந்தால் அதனை எதிர்த்துத் தாக்கவல்ல மான் கூட்டமும் இம் மா நிலத்தில் உண்டோ? வானில் செங்கதிரோன் வெங்கதிர் பரப்பியெழுந்த பின்னர் இருள் நீங்காது நிற்பதுண்டோ? பாரும் அச்சும் ஒன்றோடொன்று உராயுமாறு மிக்க பாரத்தை யேற்றிய வண்டி மணலில் ஆழப்புதைந்த வழியும் அப்பாரம் கண்டு கலங்காது, மணல் பரக்கவும் கல் பிளக்கவும் செல்ல வல்ல எருதிற்குப் போதற்கரிய வழியிதுவென்று கூறத்தக்க வழியும் உளதோ? இவை போன்றே நீ போர்க்களம் நோக்கிப் புறப்படின் நின்னை எதிர்க்க வல்ல வீரரும் உளரோ?” என்று அதியமானுக்கும் அறிவுரை கூறி, அவனது போர் வேட்கையைத் தணிக்க முயல்வார்.

ஔவையாரின் துணிவும் நாட்டமும்

ஔவையார் கூறும் அறிவுரைகள் சில சமயங்களில் அதியமான் செவியில் ஏறுவதில்லை. ‘பகைவரை அச்சுறுத்திப் பணிய வைத்தல் தகாது ; ஆதலின் அவரைப் போரில் வீறுடன் எதிர்த்தே வெல்லுவேன் என்று அவன் வெகுண்டுரைப்பான். அவன் அவ்வாறு வெகுண்ட போதும் ஔவையார் அவனுக்கு அறிவுரை கூற அஞ்சுவதில்லை. நாட்டின் அமைதியையும் மக்கள் நலனையுமே பெரிதாகக் கருதிய பெருமாட்டி யாருக்கு அவனது வெகுளி சிறிதும் வேதனையை விளக்கவில்லை. இங்ஙனம் அதியமானுக்கும் அவன் பகைவர்க்கும் அறிவுரை கூறி நாட்டின் அமைதியைக் காப்பதில் நாட்டத்தைச் செலுத்தினார்.

தொண்டைமானிடத்துத் தூது போதல்

அந்நாளில் காஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை யாண்ட மன்னன் தொண்டைமான் என்பான். அவன் அதியமானிடத்துப் பகைமை கொண்டு போருக்குப் படை திரட்டினான். அவன் தன்பால் படைவலி மிக்கிருப்பதாக எண்ணிச் செருக்குற்றான். அவனது அறியாமையைத் தெரிந்த அதியமான், போரின் கொடுமையையும், தன்னை எதிர்த்தால் அவன் வலியிழந்து அழிவது உறுதியென்பதையும், அதனால் நாட்டிற்கும் மக்களுக்கும் நேரும் கேட்டையும் தெளிந்துகொள்ளுமாறு அவனுக்கு அறிவுறுத்த நினைந்தான். அவன்பால் தூது சென்று அச்செயலைச் செம்மையாகச் செய்து வருதற்குத் தகுதியுடையார் ஔவையாரே என்று எண்ணினான். அவ்வாறே தன் கருத்தை அவர்பால் தெரிவித்து அவரைத் தொண்டைமானிடத்துத் தூது விடுத்தான். அயல்நாட்டு அரசன் ஒருவன்பால் பெண்ணொருத்தி தூதுசென்று ஓதினாள் என்னும் பெருமை உலகிலேயே முதன்முதல் தமிழகத்திற்கும் தமிழ் மூதாட்டியாராகிய ஔவையாருக்குமே வாய்த்தது.

அரசியல் தூதர் ஔவையார்

தலையாய தூதருக்கு அமையவேண்டிய நிலையாய பண்புகளெல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற ஔவையார் அதியமான் தூதராகக் காஞ்சிமாநகரம் புகுந்தார். அவர் தூதராக வந்தாலும் அருந்தமிழ்ப்புலமை சான்ற பெருமாட்டியார் என்பதை நன்குணர்ந்த தொண்டைமான் அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். அவர் தன்பால் வந்துள்ளதன் நோக்கத் தையும் குறிப்பால் உணர்ந்துகொண்டான். அதியமானினும் மிகுதியான படைவலியுடையோம் என்பதை அவருக்கு அறிவுறுத்தி விட்டால் அவர் ஒன்றுமே பேசாது சென்றுவிடுவார் என்று எண்ணினான். அவன் தனது எண்ணத்தை வாயாற் கூற விரும்பவில்லை. அவருக்குத் தன் அரண்மனை முற்றும் சுற்றிக் காட்டுவானைப்போல அவரை அழைத்துச் சென்று பல இடங்களையும் காட்டினான். படைக்கலங்களைத் திருத்தி அணிசெய்து வைத்திருக்கும் தன் படைக்கலச் சாலைக்குள்ளும் அவரை அழைத்துச் சென்றான். ஆங்கே அணியணியாக அடுக்கி வைத்திருக்கும் படைக்கலம் அனைத்தையும் பார்க்குமாறு செய்தான்.

ஔவையாரின் பழிப்பும் பாராட்டும்

தொண்டைமான் உள்ளக்குறிப்பைத் தெள்ளிதின் உணர்ந்து கொண்டார் ஔவையார். தொண்டைமானே தூது வந்த மூதாட்டியாருக்குத் தக்க அறி வூட்டினோம் என்ற பெருமித உணர்ச்சியுடன் நின்றான். அதனைக் கண்ட ஔவையார், “அரசே! இங்குள்ள வேற்படையெல்லாம் எத்துணை அழகுடனும் ஒளியுடனும் விளங்குகின்றன! பீலியும் மாலையும் சூட்டப் பெற்றும், திரண்ட காம்பு திருத்தப் பெற்றும், நெய் பூசப்பெற்றும் ஒளியுடன் திகழ்கின்றன. இவையெல்லாம் காவலையுடைய கோவிலின் கண் அழகாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதியமானுடைய வேற்படைகளோ காவல் மனையில் வைக்கப்படவில்லை. அவையெல்லாம் பகைவரைக் குத்திக் குத்திக் கங்கும் நுனியும் முறிந்து சிதைந்தவை. அவை செப்பனிடுதற்காகக் கொல்லன் உலைக் களமாகிய சிறிய கொட்டிலில் எந்நாளும் கிடக்கும்” என்று கூறித் தொண்டைமானை இகழ்ந்து நோக்கினார்.

‘இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண் திரள் நோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடு துதி சிதைந்து
கொற்றுறைக் குற்றிலம் மாதோ என்றும்
உண்டாயின் பதங்கொடுத்
தில்லாயின் உடனுண்னும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணலெங் கோமான் வைந்துதி வேலே’

என்ற அரிய பாடலைப் பாடினார்.

தூதரின் காலம்

அது கேட்ட தொண்டைமான் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது. நம் கருத்தையும் படைப் பெருக்கயுைம் ஔவையார் நன்றாகத் தெரிந்து கொண்டார்; இனி அதியமான் நமக்கு அஞ்சி அடிபணிவான் என்று தவறாகக் கருதினான். ஔவையாரோ அவனது அறியாமைக்கு இரங்கினார். அதியமான் அனுப்பிய தூதராக வந்த அம்மூதாட்டியார் தம் கடமையைச் செவ்வனே தவறாது செய்துவிட்டார்.

வஞ்சப் புகழ்ச்சி

அவர் தொண்டைமான் முன்னர்ப் பாடிய பாடல் வஞ்சப் புகழ்ச்சியாக அமைந்தது. அது தொண்டைமான் படைக்கலப் பெருக்கைப் பாராட்டுவது போலத் தோன்றினாலும் பழிப்புரையே. அதியமான் படைக் கலங்களை இகழ்ந்துரைப்பது போல இருந்தாலும் புகழ்ந்துரைக்கும் பொன் மொழியாகவே அப்பாடல் அமைந்தது. தொண்டைமான் படைக்கலங்கள் என்றும் போரிற் பயன்படுத்தப்படாதவை; காவற் கூடத்தை விட்டு ஒரு நாளும் அகலாதவை ; போர்க் களத்தையே கண்டறியாதவை; அதனால் அவை என்றும் கூர்மை மழுங்காது அழகுடன் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன என்று புலப்படுத்தி, அவனது ஆண்மையை நயமாக எள்ளி நகையாடிய ஔவையாரின் நாவன்மையை என்னென்பது !

ஔவையார் தலைத்தூதர்

இவ்வாறு தொண்டைமான் படைக்கலத்தைப் பழித்துரைத்த பைந்தமிழ் மூதாட்டியார் அதியமான் படையாற்றலைப் பாராட்டாதிருக்கவும் இல்லை. அத்தொண்டைமான் எதிரிலேயே அதியமான் படைக்கலங்கள் அடியும் நுனியும் சிதைந்து கொல்லன் உலைக்களத்தில் கிடக்கின்றன என்று கூறினார். அதனால் அதியமான் படைகள் போரிற் பலகாற் பயன்படுத்தப்பட்டவை ; பகைவர் படைகளைத் தாக்கித்தாக்கிப் பழுதுற்றவை; மீண்டும் போர்வரின் பயன்படவேண்டும் என்பதற்காகக் கொல்லன் உலைக்களத்தில் வந்து குவிந்துள்ளன என்று புலப்படுத்தி அவனுடைய போராற்றலையும் படை வலியையும் பழிப்பது போன்று குறிப்பாகப் பாராட்டிய மூதாட்டியாரின் அரசியல் நுண்ணறிவை என்னென்று போற்றுவது! இவரைத் தலையாய தூதர் வரிசையில் ஒருவராக மதிப்பதில் தடையும் உண்டோ ?