இலக்கியத் தூதர்கள்/தோழர் விடுத்த தூதர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

3. தோழர் விடுத்த தூதர்

பெரிய புராணத்தின் பெருமை

தமிழில் தோன்றிய புராணங்களுள் பழைமையும் தலைமையும் வாய்ந்த அரிய நூல் பெரிய புராணம் ஆகும். இறைவன் திருவருள் துணைகொண்டு செயற்கரிய செயலைச் செய்து பெரியராய சிவனடியார்கள் அறுபத்துமூவரின் அருள் வரலாற்றை விரித்துரைக்கும் பெருமை சான்றது அந்நூல். முக்கட் பெருமானாகிய சிவபிரானுக்குச் செங்கதிர் வலக்கண் என்று மதிக்கப் பெறும் மாண்புடையது. தெய்வ மணக்கும் செய்யுட்களால் பத்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடப் பெற்ற பான்மையுடையது. இடைக்காலச் சோழப் பேரரசனாக இலங்கிய அநபாய குலோத்துங்கனின் அரும்பெறல் முதலமைச்சராகிய சேக்கிழார் பெருமானால் ஆக்கப்பெற்ற அருமையுடையது. இடைக்காலத்தில் எழுந்த அருந்தமிழ் இலக்கியங்களுள் சொல்நயம் பொருள் நயங்களால் இணையற்ற நூலாக இலங்குவது. தமிழகத்தின் இருண்ட கால வரலாற்றை விளக்கும் கலங்கரை விளக்கமாக விளங்குவது. தமிழகத்தின் ஐந்நூறு ஆண்டுச் சரிதத்தை அறிவிக்கும் வரலாற்று நூலாகவும் வயங்குவது. சைவ சமயத் தோத்திர நூல்களாம் பன்னிரு திருமுறையுள் இறுதித் திருமுறையாகத் திகழ்வது. தில்லைக் கூத்தனாகிய இறைவனே ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்க, அதனையே முதலாகவும் நடுவாகவும் இறுதியாகவும் கொண்டு பாடப்பெற்ற தெய்வ மாண்புடையது. ‘திருத்தொண்டர் புராணம்’ என்றும் வழங்கும் பெருமை பெற்றது. வரலாற்றுச் சமய நூல்

இத்தகைய பெரியபுராணம் பழங்கதை பாடும் பான்மையவும், இல்லது புனைந்துரைக்கும் இயல்பினவுமாய பிற புராண நூல்களைப் போலன்றி உண்மை வரலாற்றை உறுசுவை கனியத் தக்க சான்றுகளுடன் திண்மையுறப் பேசும் பெற்றியுடையது. மேலும் இந்நூல் சைவ சமய உண்மைகளை இனிது விளக்கும் தெய்வக் காவியமாகவும் திகழ்வதாகும்.

வித்திட்ட வித்தகர்

இந்நூல் தோன்றுதற்கு முதன்முதல் வித்திட்ட வித்தகர் ஆலால சுந்தரர் என்னும் சமய குரவராவர். அவர் பாடியருளிய திருத்தொண்டத் தொகைப் பதிகமே பெரிய புராணம் எழுதற்கு அடிகோலியது. அவர் உலகில் தோன்றுதற்கு உற்றதொரு காரணத்தை உரைக்கப் புகுந்த சேக்கிழார்,

“மாத வம்செய்த தென் திசை வாழ்ந்திடத்
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்
போது வார் அவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்.”

என்று கட்டுரைத்தனர்.

ஆலால சுந்தரர் அவதாரம்

‘தென்றிசைத் திருநாடு பெருந்தவம் செய்த பெற்றியுடையது; அஃது இறையருள் நிறைந்து இனிது வாழ வேண்டும்; அதற்கு ஆங்குள்ள மக்களைத் திருவருள் நெறியிற் செலுத்தவல்ல ஞானச் செல்வர்கள் ஆண்டுத் தோன்றல் வேண்டும்; தங்கலம் எண்ணாது பிறர்நலமே பேணிப் பணி செய்து கிடப்பதே கடனாகப் பூண்ட திருத்தொண்டர்கள் வரலாற்றை அன்னார் அறிதல் வேண்டும்; அவர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு வாழ்வினை அருள் பெருக்கும் திருநெறியிலும், அறம் பிறழாப் பெரு நெறியிலும் செலுத்த வேண்டும்; இதற்காகவே இறையருள் உந்த ஆலால சுந்தரர் உலகில் தோன்றியருளினார்’ என்பர் சேக்கிழார்.

காவியத் தலைவர் சுந்தரர்

சைவ சமய குரவருள் ஒருவராய ஆலால சுந்தரரே பெரியபுராணக் காவியத்தின் தலைவராவர். மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலமாகிய ஆதிசைவ மரபில் சடையனார்க்கும் இசைஞானியார்க்கும் அரும்பெறல் மகவாய்ச் சுந்தரர் அவதரித்தருளினர். நம்பியாரூரர் என்னும் பிள்ளைத்திருநாமத்துடன் அவர் பேரழகின் கொழுந்தாய் வளர்ந்து வந்தார்; கண்கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர்விரிப்ப, விண்கொள்ளாப் பேரொளிப் பெருவடிவினராய் விளங்கி வந்தார்.

அரசிளங்குமரர் சுந்தரர்

அவருடைய எழில் நலங்கண்ட திருமுனைப்பாடி நாட்டு மன்னனாய நரசிங்க முனையரையன், பெற்றவர் பால் வேண்டித் தன் மகனாகக் கொண்டு அரசிளங் குமரனாக வளர்த்து வந்தான். அதனால் நம்பியாரூரராய சுந்தரர் மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க வீறுசால் ஏறென விளங்கினர். இவரைத் திருவாரூர்த் தியாகேசர் ‘தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்’ என்று கூறியருளித் தமக்குத் தோழராக ஏற்றுக்கொண்டார். அதனால் சுந்தரரைச் சிவனடியார்கள் எல்லாம் ‘தம்பிரான் தோழர்’ என்றே தலைக்கொண்டு போற்றினர். பரவையார் சங்கிலியார் மணம்

இத்தகைய சிவபிரான் தோழராய சுந்தரர், திருவாரூர்ப் பெருமான் திருவருளால் அப்பதியில் தோன்றியருளிய பரவை நாச்சியாரைத் திருமணம் புரிந்து பெருமகிழ்வுடன் வாழ்ந்து வந்தார். இடையிடையே பல தலங்கட்கும் சென்று சிவபிரானைத் தரிசித்துச் செந்தமிழ்ப் பதிகம் பாடிவரும் பண்பினராய அவர் ஒருகால் திருவொற்றியூர் என்னும் சிவத்தலத்தையுற்றனர். ஆங்கு எழுந்தருளியுள்ள சிவபிரானுக்கும் தியாகேசன் என்பதே திருநாமம். திருவாரூர்த் தியாகன் திருவருளைப் பெரிதும்பெற்ற அருளாளராய சுந்தரர் ஒற்றியூர்த் தியாகனின் திருவருளையும் பெறுதற்குத் திருக்கோவிலுட் புகுந்தார். ஆங்குப் பூமண்டபத்தில் தங்கி இறைவனுக்குத் திருப்பள்ளித் தாமம் கொடுத்துக் கொண்டிருந்த சங்கிலியாரென்னும் மங்கை நல்லாரைக் கண்டு காதல் கொண்டார். அவரைத் திருவொற்றியூர்ப் பெருமானின் திருவருட் பெருந்துணை கொண்டு மணம் புரிந்து மகிழ்ந்தார்.

திருவாரூர்ப் பெருங்காதல்

ஒற்றியூரில் மற்றொரு மணம் பூண்ட சுந்தரர் பங்குனி யுத்தரத் திருநாள் நெருங்குவதை உணர்ந்தார். திருவாரூரில் பங்குனி யுத்தரத் திருநாள் பெருமுழக்கொடு நடக்கும். அவ்விழாவில் ஆரூர்த்தியாகேசன் அத்தாணி வீற்றிருக்கும் அழகு, கண்கொள்ளாக் காட்சியாகும். அந்நாளில் பெருமான் திருமுன்பு அவரின் காதல் மனைவியாராய பரவையாரின் ஆடலும் பாடலும் அணிபெற நிகழும். அவற்றையெல்லாம் பலகாற் கண்டு களித்த தொண்டராகிய சுந்தரருக்குத் திருவாரூர்க் காதல் கரைகடந்து பெருகியது. ‘முத்தும் முழு மணியும் ஒத்த திருவாரூர்ப் பெருமானை எத்தனை நாள் பிரிந்திருப்பேன்? ஏழிசையாய், இசைப்பயனாய், இன்னமுதாய், என்னுடைய தோழனுமாய், யான் செய்யும் துரிசுகளுக்கெல்லாம் துணையிருந்து, மாழையொண்கண் பரவையைத் தந்து ஆண்டானை எத்தனை நாள் ஏழையேன் பிரிந்திருப்பேன்?’ என்று ஏங்கிப் புலம்பியவாறே திருவாரூரை நோக்கிப் புறப்பட்டார்.

கண்களையிழந்து பெறுதல்

அவர் சங்கிலியாரைத் திருமணம் செய்து கொண்ட நாளில் மகிழடியில் அவருக்களித்த உறுதி மொழியை மறந்து பிரிந்த காரணத்தால் கண்ணொளி யிழந்து கலங்கினார். பிழுக்கை வாரியும் பால் கொள்ளும் பெற்றிமை போல் சிற்றடியேன் குற்றம் பொறுத்துக் குறை நீக்கியருள வேண்டுமென இறைவனை உள்ளங் கரைந்து கரைந்து, ஊனும் உயிரும் உருகத் தேனமுதத் திருப்பாட்டுக்களால் பரவிப் பணிந்து வேண்டினார். மூன்று கண்ணுடைய விண்ணவனே! அடியேன் இரு கண்களையும் பறிப்பது நினக்கு முறையானால் ஊன்று கோலேனும் உதவியருள்வாய் என்று வேண்டி, ஊன்றுகோலொன்றைப் பெற்று, அதன் துணை கொண்டு காஞ்சிமாநகரை அணுகினார். ஆங்குக் கச்சியேகம்பர் கருணையால் இடக்கண் பெற்றுத் திருவாரூரை யுற்றார். அவண் ஆரூர்த்தியாகன் அருளால் மற்றொரு கண்ணையும் பெற்று மகிழ்ந்தார்.

சுந்தார் விருப்பும் பரவையார் வெறுப்பும்

இழந்த கண்ணொளியினை இறைவனாகிய தோழரின் தண்ணருளால் இங்ஙனம் பெற்ற சுந்தரர், தம் முதல் மனைவியாராய பரவையாரைக் கண்டு மகிழும் விருப்பினராய்த் தமது வரவினை அடியார்கள் வாயிலாக அவருக்கு அறிவித்தருளினார். அதற்கு முன்பே சுந்தரர் ஒற்றியூரில் சங்கிலியாரை மணந்த செய்தியறிந்த பரவையார் சினங்கொண்டு மனஞ்சோர்ந்தார். பூம்படுக்கையிற் பொருந்தாது பெருந்துயர் கொண்டு வருந்தினார். அவர் கொண்டது பிணக்கோ பிரிவுத்துயரோ இன்னதென அறியக்கூடவில்லை.

நன்மக்கள் பாவையார் கருத்தைப் பகர்தல்

இவ்வாறு பரவையார் செயலற்று வருந்தும் நாளில் சுந்தரர் திருவாரூர்க்கு வந்த செய்தியைத் தெரிந்தார். அவரது வரவைத் தெரிவிக்க வந்த அடியார்கள் பரவையார் மாளிகையைக் குறுகினர், அது கண்ட பாங்கியர் கதவடைத்து வரவைத் தடுத்தனர். அவர்கள் சுந்தரர்பாற் சென்று பரவையார் நிலையைப் பகர்ந்தனர். அவர் புன் முறுவலுடன் உலகியலறிந்த நன்மக்கள் சிலரைப் பரவையார்பால் தூது விடுத்தனர். அன்னவரும் பரவையாரை அணுகி, இது தகாதெனப் பல வகையான் உலகியல் எடுத்தோதினர். எனினும் அவரது சீற்றம் அகலவில்லை. ‘குற்றம் நிறைந்த அவர் பொருட்டு நீவிர் இத்தகு மொழிகளை யியம்புவீராயின் என்னுயிர் நில்லாது’ என்று வெகுண்டுரைத்தனர். அவ்வுரை கேட்ட நன்மக்கள் அஞ்சி யகன்றனர்; சுந்தரரை யணுகிப் பரவையார் கருத்தை உரைத்தனர்.

தோழர் துயரும் இறைவன் தோற்றமும்

இங்நிலையில் சுந்தரர் துயர்க்கடல் நீந்தும் புணையறியாது உள்ளம் இனைந்தார். பேயும் உறங்கும் பிறங்கிருள் யாமத்தே உடனிருந்த அடியவர் குழாமெல்லாம் உறங்கவும் சுந்தரர் உறக்கங் கொள்ளாது தனித்திருந்து இறைவனை நினைந்து வருந்தினார்.

“என்னே உடையாய் ! நினைந்தருளாய்
இந்தயாமத் தெழுந்தருளி
அன்னம் அனையாள் புலவியினை
அகற்றில் உய்ய லாம்அன்றிப்
பின்னை இல்லைச் செயல்” என்று
பெருமான் அடிகள் தமைநினைந்தார்.

அடியார் இடுக்கண் தரியாத இறைவன் தம் தோழராய சுந்தரர் குறையை அகற்றுதற்கு அவர் முன் தோன்றினார். நெடியோனும் காணாத அடிகள் படிதோய நின்ற பரமனைக் கண்ட வன்றொண்டராய சுந்தரர் அந்தமிலா மகிழ்ச்சியினால் உடம்பெலாம் மயிர்க்கூச்செறிய, மலர்க்கைகள் தலைமேற் குவிய அவர் அடித்தாமரையில் விழுந்து பரவிப் பணிந்தார்.

பரவையால் தூது செல்லப் பணிதல்

உடுக்கை இழந்தவன் கையைப் போலத் தோழர்க் குற்ற இடுக்கண் தொலைப்பதன்றோ உண்மைத் தோழரின் உயரிய செயலாகும் ! தம்மைத் தோழராகச் சுந்தரர்க்குத் தந்தருளிய பெருமான் நண்பரை நோக்கி, ! “நீ உற்ற குறை யாது?” என்று வினவியருளினார். “திருவொற்றியூரில் அடியேன் நீரே பேரருள் செய்ய நேரிழையாம் சங்கிலியை மணஞ் செய்த சீரெல்லாம் பரவை அறிந்து, தன்பால் யான் எய்தின் உயிர் நீப்பேன் என்று உறுதி பூண்டாள் ; நான் இனிச் செய்வது யாது? நீரே என் தலைவர் ; நான் உமக்கு அடியேன் ; நீர் எனக்குத் தாயிற் சிறந்த தோழரும் தம்பிரானுமாவீர் என்பது உண்மையானால் அறிவிழந்து உளமழியும் எளியே னது அயர்வு நீக்க, இவ்விரவே பரவையாற் சென்று அவளது ஊடல் ஒழித்தருளும்” என்று வேண்டினார்.

தோழர்க்குத் தூதராய்ப் போதல்

தோழரின் வேண்டுகோளை ஏற்றருளிய பெருமான் “நீ துன்பம் ஒழிவாய்; யாம் ஒரு தூதனாகி இப்பொழுதே பரவைபாற் போகின்றோம்” என்று அருள் புரிந்தார். அது கண்ட சுந்தரர் அளவிறந்த களிப்பினராய்ப் பெருமான் திருவடியில் விழுந்து வணங்கிப், ‘பரவையின் மாளிகைக்கு விரைவிற் செல்வீர்!’ என்று வேண்டினார். தொண்டனார் துயர் நீக்கத் தூதராய் எழுந்தருளிய ஆரூர்ப் பெருமான் பூதகண நாதர்களும் புங்கவரும் யோகியரும் புடை சூழப் புனிதமிகு வீதியினிற் புறப்பட்டார். அவ் வேளையில் திருவாரூரில் உள்ள ஒரு வீதியிலேயே சிவலோகம் முழுதும் காணுமாறு உளதாயிற்று.

ஆதிசைவர் திருக்கோலம்

பரவையார் திருமாளிகையைக் குறுகிய பெருமான் உடன் வந்தார் குழாமெல்லாம் புறத்தே நிறுத்தி, ஆரூரில் தம்மை அர்ச்சிக்கும் ஆதிசைவரின் கோலத்தில் மாளிகையின் வாயிலையடைந்தார். அவண் நின்று ‘பரவாய்! கதவம் திறவாய்’ என்று அவர் அழைத்த வளவில், துயிலின்றி அயர்ந்துழலும் பரவையார், நம்பெருமானுக்குப் பூசனை புரியும் புரிநூல் மணி மார்பர் குரல்போலும் என்று துணிந்தார்; இவர் நள்ளிருளில் இவண் நண்ணியதன் காரணம் என்னையோ ? என்று எண்ணிப் பதை பதைத்து வாயில் திறந்தார். அவரை வணங்கி “முழுதும் உறங்கும் பொழுதில் என்னை ஆளும் இறைவனே எழுந்தருளியது போல நீவிர் எய்தியதன் காரணம் யாதோ?” என்று வேண்டினார்.

தூதரின் உரையாடல்

தோழர்க்குத் தூதனாய் வந்த பெருமான், “நங்கையே! நான் வேண்டுவதனை நீ மறுக்காது செய்யின் வந்த காரியத்தை விருப்போடு உரைப்பேன்” என்றார். “நீர் வந்த காரியத்தைக் கூறி யருளும்; அஃது எனக்கு இசையுமாயினும் இயலமாயினும் செயல் புரிவேன்” என்று பரவையார் மறுமொழி பகர்ந்தார். ‘நங்கையே ! நம்பியாரூரர் இங்கு வருதற்கு நீ இசைய வேண்டும்’ என்றார் இறைவன். “மிகவும் நன்று! நும் தகவுக்கு இம் மொழி அழகிதே ! பங்குனித் திருநாளுக்குப் பண்டு போல் வருவாராய் ! என்னைப் பிரிந்து ஒற்றியூரை உற்று, அங்குச் சங்கிலியாற் கட்டப் பெற்றவர்க்கு இங்கொரு சார்பும் உண்டோ ? நீர் இந் நள்ளிருளில் வந்து நவின்ற காரியம் நன்று நன்று” என்று பரவையார் இயம்பினர்.

பரவையார் மறுப்புரை

அவர் மொழிகேட்ட துரதர், “நங்கையே ! நம்பியாரூரர் செய்த குற்றங்களை மனத்திற் கொள்ளாமல் நீ கொண்ட வெகுளி நீங்கி, இருவர் துயரையும் களை வதற்கன்றோ நான் நின்னை வேண்டிக்கொண்டேன்; ஆதலின் நீ மறுப்பது சிறப்பன்று” என்று குறிப்பிட்டார். அது கேட்ட பரவையார் பெருஞ் சினங் கொண்டு, “நீர் இங்கு வந்த காரியம் இஃதேயாயின் நும் பெருமைக்குப் பொருந்தாது; ஒற்றியூரில் மற்றொருத்திக்கு உறுதி நல்கியவர் இங்கு வருதற்குச் சிறிதும் இசையேன்” என்று மறுத்துரைத்தார். இறைவன் திருவிளையாடல்

பரவையாரின் மறுப்புரை கேட்ட பரமன் தமது உண்மைக் கோலத்தைக் காட்டாமல் உளத்துள் நகைத்து அவ்விடத்தை விட்டு அகன்றார். தோழரின் காதல் வேட்கையைக் காணும் விருப்பினராய் விரைந்து வெளிப்போந்தார். தம்பிரானைத் தூதனுப்பிய நம்பியாரூரரோ அவரது வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார். “நான் அறிவில்லாமல் இறைவனைப் பரவைபால் புலவி நீக்கத் தூது விடுத்தேனே” என்று எண்ணிப் புலம்பினார். ‘அப்புண் ணியர் அவள் மனையில் நண்ணி என் செய்தாரோ? பெருமானே என்பொருட்டுத் தூது வந்திருப்பதைக் கண்டால் அப்பேதைதான் மறுப்பாளோ? அவளது ஊடலை ஒழித்தாலன்றி அவர் மீளார்’ என்று தம்முட் பேசித் தூதரை எதிர்கொள்ள எழுந்து வெளியே செல்வார். அவரது வரவைக் காணாது அயர்வுடன் மயங்கி நிற்பார். கண்ணுதற் பெருமான் காலந் தாழ்த்தனரே என்று கவல்வார்.

தூதர் ஓதிய செய்தி

தூது சென்ற இறைவன் துன்னும் பொழுதில் சுந்தரர் அணைகடந்த வெள்ளம் போல் ஆர்வம் பொங்குற எழுந்து சென்று அவரை எதிர்கொண்டு தொழுதார். பெருமான் திருவிளையாட்டை அறியாத தோழர், “முன்னாளில் என்னை நீர் ஆட்கொண்டதற்கு ஏற்பவே இன்று அருள் செய்தீர்” என்று மகிழ்வொடு புகன்றார்.அதுகேட்டுப் புன்முறுவல்கொண்ட புரிசடைப் பெம்மான், “நின் விருப்பின் வண்ணம் நங்கைபால் நண்ணி நாம் எத்தனை சொல்லியும் ஏற்காமல் வன்சொல்லே வழங்கி மறுத்தாள்” என்றார். சுந்தார் கொண்ட வெந்துயர்

இறைவன் இவ்வாறு இயம்பிய மொழி கேட்டுத் தோழர் துணுக்குற்றார், “நும் உரையையோ அடியாளான பரவை மறுப்பாள்? நாங்கள் யாருக்கு அடிமை யென்ற உண்மையை இன்று நீர் கன்று அறிவித்தீர்! அமரர்கள் உய்யவேண்டி ஆலத்தை உண்டருளினர்! திரிபுரத்தை அழித்து அவுணரைத் தவிர்த்து ஆட்கொண்டீர்! மார்க்கண்டனுக்காகக் காலனைக் காலாற் கடிந்து கருணை செய்தீர்! இன்று யான் உமக்கு மிகையானால் என் செய்வீரோ? நீர் என் அடிமையை இன்று விரும்பாவிடின் அன்று வலிய ஆட்கொண்டது எற்றுக்கு? என் துயரெல்லாம் நன்குகண்ட நீர் நங்கைபாற் சென்று அவள் சினம் தணித்து என்னை மனம் கொள்ளுமாறு செய்யீராகில் உயிர்விடுவேன்” என்று உரைத்துப் பெருமான் திருவடியில் விழுந்தார்.

மீண்டும் ஆண்டவன் தூது

நம்பியாரூரர் தளர்ந்து விழும் நிலைமையினை நம் பெருமான் கண்டருளினார். ‘நாம் மீண்டும் பரவைபால் சென்று வேண்டி நீ அவளை அடையுமாறு செய்வோம், துயர் நீங்குக’ என்று கூறித் திரும்பவும் புறப்பட்டார். அவர் அருளிய இன்சொல்லாகிய நல்லமுதம் தோழர்க்குப் புத்துயிர் நல்கியது. அடியவனைப் பயங்கெடுத்துப் பணி கொள்ளும் திறம் இஃதன்ருே!’ என்று போற்றிப் பணிந்தார். நம் பெருமான் பரவையார் மாளிகை நோக்கி கடந்தார்.

மாளிகையில் அதிசயம்

இஃது இங்ஙனமாகப் பரவையார் மாளிகையில் ஆதிசைவராகத் தூது வந்தவர் ஆரூர்ப் பெருமானே யென்னும் உண்மை புலனாகுமாறு அதிசயம் பல தோன்றின. அது கண்டு வியந்த பரவையார், “எம்பிரானே தம்பிரான் தோழர்க்குத் தூதராய் எழுந்தருளவும் அதனை அறியாது உரைமறுத்தேனே! ஐயோ! பாவியேன் என் செய்தேன்?” என்று ஏங்கியவராய் வாயிலில் வந்து நின்று பாங்கியரோடு கலங்கினார்.

மாளிகை-கயிலை மாமலை

அவ்வேளையில் கொன்றை வேணியார், தம்மை பறியும் செம்மைக் கோலமுடன் தேவரும் முனிவரும் பூத நாதரும் புடைசூழ வந்து, பரவையார் மாளிகை புட் புகுந்தார். இவ்வாறு,

‘பேரரு ளாளர் எய்தப்
பெற்றமா ளிகைதான் தென்பால்
சிர்வளர் கயிலை வெள்ளித்
திருமலை போன்ற தன்றே

என்று பாராட்டிணார் சேக்கிழார். பரவையார் திரு மாளிகை கயிலைத் திருமலையெனக் காட்சியளிக்கப் பெருமானை எதிர்கொண்டு வரவேற்ற பரவையார் மெய்யுறு நடுக்கத்தோடும் மிக்கெழும் மகிழ்ச்சியோடும் அவர் அடியிணையில் விழுந்து பணிந்தார்.

பாவையார் பணிவுரை

அப்போது தூதராய் வந்த பெருமான், “நம்பியாரூரன் உரிமையோடு என்னை மீளவும் ஏவியதனால் உன்பால் வந்தோம்; நீ முன்புபோல் மறுக்காமல் அன்புடன் நின்பால் அவன் வருதற்கு இசைதல் வேண்டும்” என்று வேண்டியருளினார். ஆரூர்ப் பெருமான் அருள்மொழி கேட்ட பரவையார் விழிநீர் பொழியத் தொழுது விண்ணப்பம் செய்தார்.

“ஒளிவளர் செய்ய பாதம்
வருந்தவோர் இரவு மாறா
தளிவரும் அன்பர்க் காக
அங்கொடிங் குழல்வீ ராகி
எளிவரு வீருமானால்
என்செய்கேன் இசையா(து)”

என்றார். ‘தோழராம் அடியவர் பொருட்டு நடுநிசிப் பொழுதில் இருமுறை எளியராய்த் தூது வருவீராயின் அடியேன் இசையாது என் செய்கேன்’ என்று பணிந்த மொழி பகர்ந்து நின்றார்.

தோழரின் துயரை நீக்கல்

அது கேட்ட பெருமான், “நங்கையே! நின் தன்மைக்கேற்ற நன்மொழியே நவின்றாய்” என்று பரவையாரின் பண்பினைப் பாராட்டி எழுந்தார். தூது சென்ற காரியத்தைத் தீதின்றி இனிது முடித்த இறைவன் விரைந்து திருக்கோவில் தேவாசிரிய மண்டபத்தைக் குறுகினார். அவரைத் தூதாக விடுத்துத் துயில்கொள்ளாமல் துயருடன் உழன்றுகொண்டிருக்கும் தொண்டரை அணுகினார். ‘நம்பியாரூர ! நங்கையின் சினத்தைத் தணித்தோம்; இனி நீ போய், அவளை எய்துவாய்’ என்று அருள்புரிந்தார். அது. கண்டு சிங்தை களிகூர்ந்த சுந்தரர், “எந்தை பிரானே! எனக்கு இனி இடர் ஏது?” என்று அவர் அடிமலரில், விழுந்தார். சேயிழைபாற் செல்லுகவென அருள் கூர்ந்து ஆரூர்ப்பெருமான் திருக்கோவிலுட் புகுந்தார்

மாளிகையில் சுந்தார்க்கு வரவேற்பு

நம்பியாரூரர் எம்பிரான் இன்னருளை வியந்து மகிழ்ந்தவராய்ப் பரவையார் திருமாளிகைக்குப் புறப்பட்டார். காலப்பொழுதில் கடிமணத் தென்றல் எதிர்கொண்டு வரவேற்க, அடியவராய சுந்தரர் நறுமணப் பொருள்களும் கன்மணிப் பூண்களும் பொன்னவிர் ஆடைகளும் பரிசனம் ஏந்திச் செல்ல இனிது கடந்து சென்றார். இவரது வருகையை எதிர்நோக்கிய பரவையாரும் தம் திருமாளிகையை அணி செய்து நெய்விளக்கும் நிறைகுடமும் நறுந்தூபமும் நிரைத்து வைத்தார். வீதியிற் பூவும் பொற் சுண்ணமும் வீசிப் பாவையர் பலர் பல்லாண்டிசைத்துச் சுந்தரரை வரவேற்கப் பரவையாரும் மாளிகையின் மணிவாயில் முன்பு வந்து அன்போடு எதிரேற்றார்.

சிரிந்தவர் கூடினர்

வன்றொண்டர் தம் வாயிலில் வந்து நின்றபோது கண்ட பரவையாரின் உள்ளத்தில் காதல் வெள்ளம் கரைபுரண்டது. நாணும் அச்சமும் பெருகக் கரங் கூப்பிக் கணவரை வணங்கினார். சுந்தரரும் அவர் சேந்தளிர்க் கரம்பற்றிச் சந்தமுற மாளிகையுட் சார்ந்தார். இருவரும் தம்பிரான் திருவருள் திறத்தைப் போற்றி மகிழ்ந்து இன்ப வெள்ளத்துள் இனிது மூழ்கினர். ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் இருவரும் உயிர் ஒன்றேயாயினர். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ ?

சிவபிரான் தலைத் தூதர்

இவ்வாறு தம்பிரான் தோழராய சுந்தரருக்குக் காதல் தூதராய்ப் பரவையார் மனைக்கு நள்ளிருளில் இருமுறை கடந்து சென்று அவர்களை ஒன்று சேர்க்க முயன்ற சிவபிரான் திருவருள் திறத்தை என் னென்பது !