உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கைக் காட்சிகள்/கண்டி மாநகர்

விக்கிமூலம் இலிருந்து

8
கண்டி மாநகர்

ண்டியில் நிகழ்ந்த விழாவிலே கலந்துகொண்ட அன்று அந்த நகரத்தில் உள்ள காட்சிகளைக் காண முடியவில்லை. இலங்கையில் உள்ள முக்கியமான இடங்களையும் காட்சிகளையும் காணவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை (16-9-51) விழா நடைபெற்றது. மறுநாள்தான் உடுஸ்பத்தைக்குச் சென்று கதிரேசன் கோயிலைத் தரிசித்தேன். அடுத்த நாள் செவ்வாய்க் கிழமை முதல் இலங்கைக் காட்சிகளைக் கண்டு இன்புறத் தொடங்கினேன்.

முதல் முதலில் கண்டிமா நகரத்தைக் கண்டேன். நண்பர் கணேஷ் தம்முடைய காரை என்னுடைய யாத்திரைக்கென்றே ஒதுக்கிவிட்டார். தம்முடைய வேலைகளையும் புறக்கணித்துவிட்டு என்னுடைய உசாத் துணைவராகவும் வழிகாட்டியாகவும் பாதுகாவலராகவும் இருந்து வந்தார். அவருக்கு நன்றாகச் சிங்கள மொழி பேச வரும். நாங்கள் சென்ற காருக்கு ஓர் இளைஞன் சாரதியாக இருந்தான். அவன் சிங்களவன்; தமிழ் பேச வராது. சிரித்துச் சிரித்துப் பேசுகிறவன். "சிங்களவர்களே உயர்தரமான நகைச்சுவை தெரிந்தவர்கள்" என்று கணேஷ் சொன்னர். வழியில் கணேஷும் அந்தச் சாரதியும் பேசிக்கொண்டே போவார்கள். இருவரும் அடிக்கடி சிரிப்பார்கள். எனக்கு ஒன்றும் விளங்காது. "என்னைப் பரிகாசம் செய்யவில்லையே!" என்று கேட்டேன். அப்போது தான் சிங்களவரின் ஹாஸ்யத்தைப்பற்றிக் கணேஷ் சொன்னர். சாரதியின் பெயர் தர்மசேனன். அந்தப் பெயரைக் கேட்டவுடன், "இது நல்ல பெயர்" என்றேன். "ஏன்?" என்று கேட்டார் நண்பர். அப்பர் சுவாமிகள் சில காலம் அருக சமயத்திலே புகுந்து அவர்களுடைய ஆசாரிய புருஷராக இருந்தார். அக்காலத்தில் அவருக்குத் தர்மசேனர் என்ற பெயர் வழங்கியது. இவனுடைய பெயர் அப்பர் சுவாமிகளை நினைப்பூட்டுவதனால் நல்ல பெயர் என்று சொன்னேன்" என்று கூறினேன்.

கண்டி மாநகரத்தில் பார்க்கவேண்டிய இடங்கள் பல. முதலில் தாலத மாளிகைக்குச் சென்றேன். புத்தர்பிரானுடைய பல்லை இங்கே வைத்துப் பூசிக்கிறார்கள். இது பௌத்தர்களின் கோயில் என்பதை இதன் அமைப்பைப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம். இந்தக் கோயிலைச் சுற்றிப் பாதியளவுக்கு ஓர் அகழி இருக்கிறது. கோயிலிற்குள் நுழைந்தவுடன் புறச்சுவர்களில் உள்ள ஓவியங்களைக் காணலாம். பாவம் செய்தவர்கள் நரகத்தில் அநுபவிக்கும் தண்டனைகளைக் குறிக்கும் சித்திரங்கள் அவை, மாளிகையின் முகப்பில் இந்தப் படங்களை எழுதியிருப்பது, தீய எண்ணங்களோடு உள்ளே புகக்கூடாது என்பதை நினைவுறுத்தப் போலும். தாலத மாளிகைக்குள் எல்லாச் சமயத்தினரும் சாதியினரும் போய்ப் பார்க்கலாம். உள்ளே இரண்டு பக்கங்களிலும் இரண்டு கண்ணாடிக் கூண்டுக்குள் இரண்டு விளக்குகள் எரிந்துகொண்டே இருக்கின்றன. வெளியிலிருந்து எண்ணெய் விடுவதற்கு ஏற்றபடி அவ் விளக்குகள் அமைந்திருக்கின்றன. தாலத மாளிகையின் மூலக்கிருகத்திற்குமுன் கதவுக்கு அருகில் உள்ள படியில் பக்தர்கள் மலரைச் சொரிந்து மண்டியிட்டு வணங்குகிறார்கள். இந்த மாளிகைக்குள் ஒரு பெரிய ஏட்டுப் புத்தகசாலை இருக்கிறது. அதில் வடமொழியிலும் பாளியிலும் எழுதிய பழைய நூல்கள் பல இருக்கின்றனவாம்.

தாலத மாளிகைக்கு எதிரே ஒரு தோட்டத்தினிடையே பத்தினி கோயில் இருக்கிறது. கண்ணகியின் கோயிலைப் பத்தினி தேவாலய என்று இலங்கையில் சொல்கிறார்கள். கண்டியிலுள்ள பத்தினி தேவாலயத்தின் விமானம் தமிழ்நாட்டுக் கோயில் விமானத்தைப்போல இருக்கிறது.

தாலத மாளிகையைப் பார்த்துவிட்டுச் சிறிது தூரத்தில் உள்ள இலங்கைச் சர்வகலாசாலைக் கட்டிடங்களைப் பார்க்கச் சென்றேன். இவ்விடத்திற்குப் பரதேனியா என்று பெயர். இலங்கையில் அரிவரி முதல் காலேஜ் படிப்பு வரையில் கல்வி இலவசமாகவே கிடைக்கிறது. அரசாங்கத்தினர் கல்விக்காகப் பத்துக் கோடிக்குமேல் செலவு செய்கிறார்கள்.

இங்கே நாம் ஹைஸ்கூல் என்று சொல்வதையே இலங்கையில் பல இடங்களில் காலேஜ் என்று சொல்கிறார்கள். முன் காலத்தில் இலங்கையில் பல்கலைக் கழகம் இல்லை. லண்டன், கேம்ப்ரிட்ஜ் முதலிய வெளிநாட்டுச் சர்வகலாசாலைப் பரீட்சைகளுக்கு மாணவர் படித்து எழுதித்தேர்ச்சிபெற்றனர். சென்னைப்பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தனர். 1942-ஆம் வருஷம் ஜூலை முதல் தேதி இலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பமாயிற்று. அதன் சார்பில் ஓர் இலக்கியக் கல்லூரியும், மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி முதலியவையும் நடைபெறுகின்றன. இப்போதைக்குப் பல்கலைக் கழகம் கொழும்பிலே இருக்கிறது.[1] கண்டிக்கு அருகில் உள்ள பரதேனியாவில் விசாலமான நிலப்பரப்பில் பல்கலைக் கழகத்தை நிறுவவேண்டும் என்ற நோக்கத்தோடு அங்கே மிகச் சிறந்த முறையில் கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். அந்த இடம் சுற்றிலும் இயற்கை யெழில் நிறைந்த இடம். கவிதை உள்ளம் படைத்தவர்களுக்கு உணர்ச்சியை ஊட்டும் இடம். மாணாக்கர்கள் தங்குவதற்கும், பேராசிரியர்கள் தங்குவதற்கும், சொற்பொழிவுகள் நடைபெறுவதற்கும் ஏற்ற வகையில் கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். இலங்கையில் அநுராதபுரம் என்ற இடத்தில் சிற்பச்செல்வம் நிறைந்திருக்கிறது. அங்குள்ளமுறையில் இலங்கைச்சர்வகலாசாலைக் கட்டிடங்களில் சிற்பத்தை அமைத்திருக்கிறார்கள்.

பரதேனியாவில் ஒரு பெரிய தோட்டம் (Botanical gardens) இருக்கிறது. உலகத்து மரம் செடி கொடிகளிலே பலவகைகளை இங்கே மாதிரிக்காக வளர்த்து வருகிறார்கள். கால்நடையாக நடந்து சென்று பார்ப்பதனால் ஒரு நாள் முழுவதும் பார்க்கலாம். நாங்கள் காரில் இருந்தபடியே பார்த்துக்கொண்டு உலா வந்தோம். வானுற ஓங்கி வளர்ந்த மரங்களையும் கண்ணைப் பறிக்கும் மலர்க்கொடிகளையும் கண்டோம். இந்தத் தோட்டத்தைச் சார்ந்து மாவலிகங்கை ஒடுகிறது. அதன்மேல் ஆடும் பாலம் அமைத்திருக்கிறார்கள். அதன் வழியே சென்றால் அக்கரையில் உள்ள விவசாயக் கல்லூரியை அடையலாம். அங்கே இலங்கையிலே விளையும் விளைபொருள்களைப் பண்படுத்தி வாழ்க்கைக்குப் பயனுள்ளனவாகச் செய்யும் முறையைக் கற்பிக்கிறாகள். அந்தப் பகுதிகளையெல்லாம் பார்த்தேன். ஓரிடத்தில் காபிக்கொட்டைகளைச் சுத்தப்படுத்துகிறார்கள்; மற்றோரிடத்தில் கோக்கோ தயார் செய்கிறார்கள்: வேறோரிடத்தில் ரப்பர்ப் பாலை இறுகச் செய்து உருக்கிப் பாளமாக்கி வெவ்வேறு பண்டமாக்க வகை செய்கிறார்கள். இவற்றினூடே புகுந்து பார்த்து இவற்றைப்பற்றிய அறிவைப் பெறுவதானல் சில ஆண்டுகளாவது ஆகும். ஆகவே, மேற்போக்காகப் பார்த்த எனக்கு, அவற்றை முன்பு பாராமல் பார்த்தமையால் உண்டான வியப்புணர்ச்சிதான் மிஞ்சியது.

இலங்கையில் முன்காலத்தில் பல அரசர்கள் ஆண்டு வந்தார்கள். அவ்வப்போது வெவ்வேறு நகரங்களை இராசதானியாகக் கொண்டு ஆண்டார்கள். அநுராதபுரம், பொலன்னறுவை, யாபஹாவா, குரு நகலா, தாபதேனியா, கம்போலா, கேட்டே ஆகிய இடங்கள் அரசிருக்கை நகரங்களாக இருந்திருக்கின்றன. கடைசியில் இராசதானியாக இருந்தது கண்டி. பிற்காலத்தில் இலங்கையில் மற்ற இடங்கள் போர்த்துக்கீசிரியர் ஆட்சியிலும் அப்பால் டச்சுக்காரர் ஆட்சியிலும் வந்தபோதும் கண்டியும் அதனைச் சார்ந்த இடங்களும் தனி அரசருடைய ஆட்சியில் இருந்தன. கண்டியரசரது வரிசையில் கடைசியில் ஆண்டவன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன். இவன் காலத்தில் பிரிட்டிஷார் கண்டிப்பகுதியைக் கைப்பற்றி இவனைச் சிறைப்படுத்தினர். 1815-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் முதல் இலங்கையின் மற்றப் பகுதிகளைப் போலவே கண்டியும்பிரிட்டிஷ் அரசைச் சார்ந்துவிட்டது. கண்டியரசர் சிங்காதனம் இப்போது கொழும்புக் காட்சிச் சாலையில் இருக்கிறது.

கண்டி மத்திய மாகாணத்தின் தலைநகரம். இலங்கை ஒன்பது மாகாணங்களால் ஆனது. அவற்றில் மலைகள் அடர்ந்திருக்கும் மத்திய மாகாணம் கண்டி, மாத்தளை, நுவரா எலியா என்ற மூன்று பகுதிகளை உடையது. இந்த மாகாணம் முழுவதும் இயற்கையெழிலரசியின் நடன மாளிகை. மலைகள் யாவும் இலங்கைக்குப் பொன்னை வாங்கித் தரும் நிதிநிலையங்கள். தேயிலையும் ரப்பரும் இங்கே பயிராகின்றன. கோக்கோவும் மிளகும் விளைகின்றன. உணவுப் பொருளை அதிகப் பணம் கொடுத்து வெளிநாட்டிலிருந்து வாங்கி இலங்கை அரசாங்கத்தார் மக்களுக்கு விலையைக் குறைத்துக் கொடுக்கிறார்கள். அதற்கு இரண்டு காரணங்கள்: முதல் காரணம், நெல் விளைய இடமின்றித் தேயிலை, ரப்பர் என்ற உருவத்தில் பொன்னையே விளைக்கிறார்கள்.[2] இரண்டாவது, நெல்லுக்கு எத்தனை பணம் வேண்டுமானாலும் கொடுத்து வாங்கும் செல்வம் அங்கே இருக்கிறது. அப்படி இருக்கும்போது காசு கொடுத்து நெல்லை வாங்குவதனால் என்ன குறைந்து போயிற்று? இரும்பும் நிலக்கரியுமே விளையும் இங்கிலாந்தில் உள்ளவர்களுக்கு உணவு வகையில் ஏதாவது குறைவு இருக்கிறதோ? இலங்கையும் அப்படித்தான் பணப் பண்டங்களை விளைவித்துப் பிற நாட்டுக்கு அனுப்பிப் பொன்னைச் சேர்க்கிறது; பிற நாட்டிலிருந்து உணவுப் பண்டங்களை வாங்குகிறது.


  1. இப்போது பல்கலைக்கழகத்தின் பெரும்பகுதி பரதேனியா வில் இருக்கிறது.
  2. இப்போது நெல் விளைவிக்கும் திட்டங்களை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.