இலங்கைக் காட்சிகள்/பொலன்னறுவை
10
பொலன்னறுவை !-இலங்கைச் சரித்திரத்தில் மிகவும் சிறப்பான காலத்தின் அடையாளச் சொல் இது. பெருவீரனும், தன் குலத்தை மீட்டும் நிலை நிறுத்திக் கோயிலும் குளமும் ஏரியும் அமைத்து, இலங்கை முழுதும் ஆண்டுவந்தவனுமாகிய மகா பராக்கிரம பாகுவின் புகழைப் புலப்படுத்தும் சின்னம் இது. சிற்பக்கலையும் ஓவியக் கலையும், வேளாண் திறமும் ஆட்சித்திறமும், சமயமும் அரசியலும், சைவமும் பௌத்தமும் இணைந்து நின்ற அழகு நகரம் பொலன்னறுவை சரித்திரத்தையும் இன்றுள்ள சின்னங்களையும் வைத்து ஆராய்ந்தால் இந்த மகாநகரம் நாகரிகச் சிறப்பு வாய்ந்ததாய், சிறந்த அரண்மனையும், ஆஸ்தான மண்டபமும், கோயில்களும், குளங்களும் உடையதாகி விளங்கியது என்பதை அறிந்துகொள்ளலாம். இன்று நாற்புறத்திலும் காடுகள் சூழ இடையே இடிந்த மண்டபமும் கோயிலும் நிரம்பிய பாழுராகக் கிடக்கிறது.
சிகிரியாவிலுள்ள ஓவியங்களைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நேரே பொலன்னறுவைக்கு வந்து சேர்ந்தோம். காட்சியின்பத்தின் பொருட்டு வருகிறவர்களுக்குப் பயன்படும்படி அரசாங்கத்தார் இங்கே ஒரு விடுதியை நடத்துகிறார்கள். அங்கே தங்கவும் உணவு கொள்ளவும் வசதிகள் செய்திருக்கிறார்கள்.
பராக்கிரம சமுத்திரம் என்ற பெரிய ஏரியின் கரையில் அந்த விடுதி அமைந்திருக்கிறது. நல்ல காற்று வரும் இடம். சுற்றிலும் பழமையை நினைவுறுத்தும் சின்னங்களுக்கிடையே இந்த விடுதி ஒன்றுதான் புதுமையின் விளைவாக நிற்கிறது. உணவு உண்டு சிறிது நேரம் இளைப்பாறியவுடன் இடிந்த நகரத்தைக் காணப் புறப்பட்டோம்.
பொலன்னறுவை கொழும்பு நகரத்திலிருந்து 158-மைல் தூரத்தில் இருக்கிறது. இருபத்தைந்து மைல்கள் காட்டினூடே செல்லவேண்டும். காடாக இருந்தாலும் நல்ல சாலை அமைந்திருக்கிறது. பல ஆண்டுகளாகப் பொலன்னறுவை காட்டிற்குள் மறைந்து கிடந்தது. நாகரிக மக்களும் மன்னரும் வாழ்ந்த இடத்தில் புலியும் யானையும் நரியும் பாம்பும் வாழ்ந்தன. இலங்கைச் சரித்திரத்தின் சிறந்த பகுதிக்குரிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த இந்த இடம் 1901-ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு வந்தது. அதுமுதல் இடத்தைக் சுத்தப்படுத்திக் காடு திருத்திச் சாலை போட்டுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு வேண்டிய முயற்சிகள் நடைபெறத் தொடங்கின.
11-ஆவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை முழுவதும் சோழ சாம்ராஜ்யத்துக்கு உரியதாக இருந்தது. முதலாவது இராஜராஜ சோழன் தஞ்சையில் இருந்து அரசாட்சி புரிந்த காலம் அது. அப்பால் அவனுடைய மகனாகிய இராஜேந்திர சோழன் காலத்தில் அவ்வரசன் இலங்கையரசனைச் சிறைப்படுத்தினான். அக்காலத்தில் இலங்கையில் இந்தப் பொலனறுவையே தலைநகரமாயிற்று. இந்த நகரத்துக்குச் சனநாதபுரம் என்ற புதிய பெயரை வழங்கிச் சோழ ஆட்சி பீடமாக்கினான் இராஜேந்திர சோழன். அந்தக் காலத்தில் பொலன்னறுவையில் இரண்டு சிவாலயங்களைக் கட்டியிருக்கிறார்கள்; ஒன்று முழுவதும் கல்லால் அமைந்தது; இன்றும் மேல் விமானமும் உள்ளே சிவலிங்கமும் வெளியே நந்தியும் இருப்பதைக் காணலாம். இங்கே கிடைத்த செப்பு விக்கிரகங்களைக் கொழும்புக் காட்சிச் சாலையில் வைத்திருக்கிறார்கள்.
நாங்கள் முதலில் விருந்தினர் விடுதிக்கு அருகில் உள்ள ஒரு பாழடைந்த மண்டபத்தைப் பார்த்தோம். அது இங்கே அரசாண்ட நிச்சங்க மல்லளென்னும் அரசனுடைய ஆஸ்தான மண்டபம் இருந்த இடமாம். இப்போது இங்கே வெறும் அஸ்திவாரம் மட்டுந்தான் இருக்கிறது. இது பராக்கிரம சமுத்திரத்தின் கரையைச் சார்ந்தே அமைந்துள்ளது. மற்றச் சின்னங்கள் விடுதிக்குக் கிழக்கே பரந்து கிடக்கின்றன. அவற்றுக்கும் விடுதிக்கும் இடையே மோட்டார் போகும் சாலை இருக்கிறது. அந்தச் சாலையைத் தாண்டி நாங்கள் சென்றோம்.
லங்கா திலகம் என்ற பெயருடைய புத்தர் ஆலயத்துக்குச் சென்றோம். அதை இப்போது ஜேதவன ஆராமம் என்று சொல்கிறார்கள். அங்கே 170 அடி உயரமுள்ள செங்கற் சுவர்கள் நிற்கின்றன. மேற் பகுதிகளெல்லாம் இடிந்து போயின; வெறும் சுவர்களே இருக்கின்றன. இங்கே ஒரு பிரம்மாண்டமான புத்தர் திருவுருவம் நின்ற கோலத்திலே உள்ளது. சுதையினால் ஆன திருவுருவம் அது. கட்டிடத்தின் தலையாகிய விதானம் மறைந்தது போல இந்தத் திருவுருவத்தின் திருமுடியும் இப்போது காணப்படவில்லை. இத் திருக்கோயிற் சுவர்களில் பல ஓவியங்கள் மங்கியும் மாசு படிந்தும் இருக்கின்றன. புத்த ஜாதகக் கதைகளை விளக்கும் அழகான ஓவியங்கள் அவை. இந்தக் கோயில் பராக்கிரம பாகுவால் கட்டப்பெற்றது. சோழர்களுடைய ஆட்சியைத் தன் வீரத்தால் மாற்றி விறல் கொண்டவன் முதலாம் விஜயபாகு என்ற மன்னன். அவன் 1070-ஆம் ஆண்டு முதல் 1114-ஆம் ஆண்டு வரையில் ஆண்டானாம். அவன் காலத்தில் இங்கே சில டகோபாக்களும் ஆலயங்களும் மண்டபங்களும் தோன்றின. அவனுக்குப் பிறகு சில மன்னர்கள் ஆண்டார்கள். அப்பால் கி. பி. 1137-ஆம் வருஷம் முதல் 1186-ஆம் ஆண்டு வரையில் பராக்கிரமபாகு ஆட்சி புரிந்தான். அவன் காலத்திலேதான் இந்த நகரம் பல அரிய மண்டபங்களையும் திருக்கோயில்களையும் உடையதாக விளங்கியது. அவன் கட்டியதே இந்த ஜேதவன ஆராமம். அவன் காலத்தில் இங்கே அமைந்த கட்டிடங்களும் எழுதிய ஓவியங்களும் பெரும்பாலும் சோழர் சிற்பங்களையும் ஓவியங்களையும் தழுவியனவாகவே இருக்கின்றன.
ஜேதவன ஆராமத்தைப் பார்த்துக் கொண்டு கல் விகாரம் என்ற இடத்துக்குப் போனோம். அங்கே இயற்கையாக அமைந்துள்ள துறுகல்லில் மிகவும் அழகாகத் திருவுருவங்களை அமைத்திருக்கிறார்கள். அங்கே புத்தர் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் இரண்டு உருவங்களும், நின்ற திருக்கோலத்தில் ஒன்றும், கிடக்கும் கோலத்தில் ஒன்றுமாக நான்கு திருவுருவங்களைக் கண்டோம். அமர்ந்த
அடுத்து, நிற்கும் கோலத் திருவுருவமும் அதனைச் சார்ந்து கிடந்த கோலத் திருவுருவமும் உள்ளன. தம்முடைய குருநாதராகிய புத்தர்பிரான் பரிநிர்வாணம் அடைந்த துயரத்தோடு நிற்கும் ஆனந்தருடைய திருவுருவமே நிற்கும் உருவம் என்று சிலர் சொல்கிறார்கள்.
சயனக் கோலத்தில் உள்ள புத்தர் உருவத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தோம். 44 அடி நீளமுள்ள நெடிய திருவுருவம். வலப் பக்கமாகத் திரும்பித் தலையணையின்மேல் வலக்கையை மடித்து வைத்துத் துயிலும் கோலம், கல்லிலே உள்ள தலையனையா அது? அது மெத்தென்ற பஞ்சுத் தலையணையல்லவா? தலை வைத்த இடத்தில் அமுங்கியிருக்கும் படி சிற்பி அதை வடித்து அமைத்திருக்கிறான். புத்தர் பிரானுடைய பாதங்களில் கமல முத்திரை இருக்கிறது.
இந்த நான்கு திருவுருவங்களையும் பார்த்து விட்டுப் பொத்கல் விகாரம் என்ற இடத்துக்குப் போனோம். அங்கே இயற்கையாக உள்ள பாறையில் சிற்பி தன் கைநலம் தோன்றச் செதுக்கிய ஓர் உருவத்தைக் கண்டோம். "இதுதான் இந்த நகரத்திலிருந்து ஆண்ட பராக்கிரம பாகுவின் திருவுருவம்” என்றார் உடன் வந்த அதிகாரி. இந்த உருவம் ஒன்றரை ஆள் உயரத்தில் நின்ற திருக்கோலமாக இருக்கிறது. இரண்டு கைகளாலும் ஏதோ ஒன்றை ஏந்திக்கொண்டிருக்கும் நிலை அதில் தோற்றுகிறது. எதிரே உள்ள புத்தர் கோயிலில் இருக்கும் புத்த பகவான் முன் பராக்கிரமபாகு நின்று, "இனி நான் வாளைக் கையால் தொடமாட்டேன். போர் செய்தது போதும்" என்று சொல்லி வாளை அதை வைக்கும் பெட்டியுடன் சமர்ப்பிப்பதைக் காட்டுவது இது என்று சிலர் சொன்னார்கள். அந்தத் திருவுருவத்தின் முன்னே நின்று கூர்ந்து கவனித்தேன். சடைமுடியும் தாடியும் தாழ் காதும் உடைய இவ்வுருவம் எவரேனும் முனிவருடைய திருவுருவமாக இருக்க வேண்டும்” என்று எனக்குத் தோன்றியது. "கையிலே வைத்திருப்பது ஏட்டுச் சுவடி என்று சிலர் சொல்கிறார்கள்” என்று சிற்பப் பாதுகாப்பு அதிகாரி சொன்னர்."பொலன்னறுவா என்பது புலஸ்திய நகரம் என்பதன் சிதைவு. அந்த உருவம் புலஸ்தியருடையது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது" என்று ஓர் அறிஞர் சொன்னார். 'இவ் வடிவத்தில் யாவாவிற் காணப்பட்ட அகத்திய முனிவரது வடிவத்தில் உள்ள சிற்ப இயல்புகள் அமைந்திருக்கின்றன' என்று கலைஞர் திரு க. நவரத்தினம் எழுதியிருக்கிறார்.
பராக்கிரம பாகுவின் அரண்மனையைப் பார்த்தோம். இடிந்த அரண்மனைதான். இங்கே ஏழு
சிவாலயம்
பராக்கிரமபாகுவின் அரசிருக்கை மண்டபம் மேற்கூரையின்றிச் சில கல் தூண்களோடு இடிந்து கிடக்கிறது. நடுவிலே மன்னன் அமரும் இடம் உயர்ந்து இருக்கிறது. இருபாலும் அமைச்சரும் சேனாதிபதிகளும் அமர்வதற்குரிய ஆசனங்கள் உயரமாக அமைந்திருக்கின்றன. இதற்குள் நுழையும் வாயிலில் உள்ள படிக்கட்டில் அழகான சிற்ப வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். அரண்மனையைச் சார்ந்து நீராட்டு மண்டபமும் அதற்கருகில் நீராடும் வாவியும் இருக்கின்றன. அவற்றின் அமைப்பே தனிச் சிறப்புடையதாக உள்ளது.
மற்றோரிடத்தில் வட்ட டாகெ என்ற புத்தர் திருக்கோயில் இருக்கிறது. இங்கேயும் மேல் விதானம் இல்லை. கோயில் வட்டமாக இருப்பதில்லை வட்ட டாகெ என்று வழங்குகிறார்கள். நான்கு திசைகளிலும் நான்கு வாயில்களும், உள்ளே ஒவ்வொரு வாயிலையும் நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் புத்தர் திருவுருவங்களும் இருக்கின்றன. இதனை அடுத்து வேறு பல மண்டபங்களும் கோயில்களும் காணலாம். ஒரு நீண்ட கல்லில் பெரிய சாஸனம் ஒன்று இருக்கிறது. அதைக் கல்புத்தகம் என்று சொல்கிறார்கள்.
மற்றோரிடத்தில் முழுவதும் கல்லால் அமைந்த சிவாலயம் இருக்கிறது. அந்தக் கோயிலுக்கு வானவன் மாதேவி ஈசுவரம் என்னும் பெயர் வழங்கியது; இது அங்கே உள்ள கல்வெட்டால் தெரியவருகிறது. சிவாலயத்தை நாங்கள் பார்த்தபோது ஓர் ஆங்கிலேயர் பார்ஸிப் பெண்மணி ஒருத்தியுடன் அங்கே வந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார். கையிலே காமிராவை வைத்துப் படம் பிடித்தார். "எங்கிருந்தெல்லாமோ அறிஞர்கள் வந்து இந்தச் சிற்பங்களைக் கண்டுகளித்துச் செல்கிறார்கள்" என்று நாங்கள் பேசிக்கொண்டோம். அந்த ஆங்கிலேயரை அங்கே பார்த்தது பெரிய காரியம் அல்ல. அவரை நாங்கள் எளிதிலே மறந்திருப்போம். ஆனால் அவரை மறக்காமல் நினைக்கும்படியாக ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது.
இரண்டு நாட்கள் கழித்துப் பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. "காட்டுக்குள் சென்று காட்டு விலங்குகளின் படங்களை எடுப்பதில் பெரிய நிபுணராகிய-(பெயர் நினைவு இல்லை) பொலன்னறுவைக்குச் சென்றார். அங்குள்ள காட்சிகளைப் படம் பிடித்தார். பிறகு அருகிலுள்ள காட்டுக்குள் போனார். ஒரு யானையைப் படம் பிடித்தார். பின்னும் நெருங்கிப் படம் பிடிக்கும்போது அந்த யானை அவரைக் கொன்று விட்டது. இதுவரையில் அவர் பலமுறை யாரும் எடுக்க முடியாத நிலையில் கொடிய விலங்குகளைப் படம் பிடித்திருக்கிறார்" என்ற செய்திதான் வந்தது. பொலன்னறுவையில் நாங்கள் கண்டவரே அவர் என்று தெரிய வந்தது. அவரை நாங்கள் பாராமல் இருந்திருந்தால் இந்தச் செய்தியை மேல் எழுந்த வாரியாகப் பார்த்து அப்பால் பத்திரிகையைப் புரட்டியிருப்போம். ஆனால் நாங்கள் அவரைக் கண்டதனால், அந்தச் செய்தியைக் கூர்ந்து கவனித்தோம். மனசில் ஏதோ ஒரு வகை வேதனை உண்டாயிற்று. நாங்கள் அவரை முன்னே கண்டதில்லை. கண்டபோதும் பேசவில்லை. ஆனாலும் அந்த அமானுஷ்யமான காட்டில் நாங்கள் ஆவலோடு பார்க்கும் காட்சிகளை அவரும் ஆவலோடு பார்த்தார். அதனால் அவருக்கும் எங்களுக்கும். ஏதோ ஒட்டுறவு இருப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. அவர் எதிர்பாராத வகையில் கொல்லப்பட்டார் என்பதை அறிந்தபோது அந்த உறவுணர்ச்சி வெளிப்பட்டது. நான் அதை எத்தனையோ பேரிடம் சொல்லிவிட்டேன். கொழும்புமா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான் சொற்பொழிவாற்றும் போதும் அந்த நிகழ்ச்சியைச் சொன்னேன். பொலன்னறுவையில் பழைய அரசுகள் மங்கி மடிந்த சின்னங்கள் நிலவுகின்றன. அவற்றை நினைக்கும்போது அந்த நினைவோடே யானையின் கையிலே முடிவைக் கண்ட போட்டோ நிபுணரின் நினைவும் என் உள்ளத்திலே தோன்றுகிறது.
அப்பால் பல இடங்களைப் பார்த்தோம். தாமரைக் குளம் ஒன்றைக் கண்டோம். அதில் தண்ணீரும் இல்லை; தாமரையும் இல்லை. ஆனால் இன்றும் தாமரைக்குளந்தான் அது; தாமரை வடிவில் கல்லால் அமைந்த அழகிய சிறிய குளம். தாமரை இதழ்களைப் போல அதன் படிகள் அடுக்கடுக்காக இருக்கின்றன. செல்வமும் பதவியும் ஆற்றலும் இருக்கலாம். அவற்றை அநுபவிக்கவும் அநுபவிக்கலாம். ஆனால் எல்லோரும் அதைக் கலைச்சுவையோடு அநுபவிப்பதில்லை. பராக்கிரமபாகு கலைச்சுவை தேரும் மன்னன் என்பதைப் பொலன்னறுவையில் இன்று இடிபாடுகளாகத் தோன்றும் சின்னங்கள் சொல்லாமல்இலங்கைச் சரித்திரத்தின் பொன்னேடு பராக்கிரம பாகுவின் ஆட்சிக் காலம். அதைக் காட்டுக்கிடையே உள்ள இன்றைப் பொலன்னறுவை தன் அழிந்த அங்கங்களால் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.