இலங்கையில் ஒரு வாரம்/பதிப்புரை
பதிப்புரை
ஒருநாள் எனது நண்பர் ஒருவர் தலைவிரி கோலமாக ஓடி வந்தார். சந்தோஷத்தால் துள்ளிக் குதித்து ஓடி வந்ததால்தான் அவர் தலையெல்லாம் கலைந்து, அப்படித் தலைவிரி கோலமாகக் காட்சியளித்தது. ஓடி வந்த மனிதர் என்னிடம் ஒரு கேள்வியைப் போட்டார். கல்கி பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீமான் கல்கி இலங்கைக்குப் போனாரல்லவா?...... என்றார்.
“ஆமாம் போனார். போய்விட்டு வந்து தானே ‘இலங்கையில் ஒரு வாரம்’ என்ற தலைப்பில் கட்டுரைகூட எழுதுகிறார். போகாமலேயே எழுதுகிறார் என்று சந்தேகப் படுகிறீரா ?” என்றேன்.
“அதற்குச் சொல்லவில்லை ஐயா! போன மனிதர் ஏன் இப்படித் திரும்பி வந்து விட்டார்” என்றார்.
நான் மிகவும் கோபத்துடன் அவரை முறைத்துப் பார்த்தேன். அவரும் என்னுடைய கோபத்திற்குரிய காரணத்தைப் புரிந்து கொண்டுவிட்டார்.
“இல்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு இலங்கைக்குப் போனாரே! ஒரு வாரத்திலேயே என் திரும்பினார். கூட இரண்டு மூன்று வாரம் இருந்து விட்டு வரக்கூடாதா? நமக்கெல்லாம் இலங்கையைப் பற்றி இன்னும் ஏராளமாக எழுதலாமே!” என்று சலித்துக் கொண்டார்.
‘கல்கி’ அவர்களின் “இலங்கையில் ஒரு வாரம்” கட்டுரையைப் படித்தவர்கள் எல்லோருக்குமே அவர் “இன்னும் எழுத மாட்டாரா? இன்னும் எழுத மாட்டாரா?” என்று ஆவல் ஏற்படத்தான் செய்யும்.
நாம் இலங்கைக்குப் போகவேண்டுமென்றால் பல தொந்தரவுகள் உண்டு . பாஸ்போர்ட் வாங்கவேண்டும். விஸா வாங்கவேண்டும். பாஸ்போர்ட்டுக்கும் விஸாவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிய ஆராய்ச்சி நடத்தவேண்டும். சுங்க அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் எல்லாம் கேட்கும் கேள்விகளைக் கேட்டுப் பைத்தியம் பிடிக்காமல் தப்பிப் பிழைத்துப் போய்ச்சேர வேண்டும்.
ஆயிரம் வருஷங்களுக்குமுன் பழையாறைச் சுந்தர சோழன், சைன்யங்களையும் கொன்றை மரங்களையும் திரட்டிக்கொண்டு இலங்கைக்குப் போய் “ஜனநாத புரத்தை” நிர்மாணிப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளெல்லாம், நாம் பாஸ்போர்ட்டும் விஸாவும் வாங்குதற்குச் செய்யும் முயற்சிகளின் காலில் கட்டியடிக்கக் கூடக் காணாது.
ஆனால் இனிமேல் இலங்கைக்குப்போய் பார்த்து விட்டு வர வேண்டுமானால் ஒருவிதச் சிரமமுமில்லை. நிம்மதியாக நாற்காலியில் சாய்ந்து கொண்டு, கால்மேல் காலைப் போட்டுக்கொண்டு, இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டால் போதும். இலங்கையையும் சேய்நாடாகிய யாழ்ப்பாணத்தையும், சுற்றிப் பார்க்கலாம். அங்குள்ள தலைவர்களுக்குச் ‘சமுகம்’ கொடுக்கலாம். அவர்களுடைய தமிழ்மணம் கமழும் புகை மணத்தை நுகரலாம்.
அடடே! நீங்கள் தான் ஏற்கெனவே புத்தகத்தைக் கையிலெடுத்து விட்டீர்களே. நான் என் குறுக்கே நிற்கவேண்டும்?
1-1-54- தி.நகரம் |
பழ. சிதம்பரன் | ||||