உள்ளடக்கத்துக்குச் செல்

இலட்சிய வரலாறு/இலட்சிய வரலாறு

விக்கிமூலம் இலிருந்து

இலட்சிய வரலாறு



"நான், திராவிடர் கழகத்தை அது ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரோடு இருந்தகாலத்தில் இருந்ததுபோல் இது ஒருகட்சியல்லவென்றும், திராவிடர் கழகம் ஒரு பிரச்சார இயக்கம் என்றும் பத்து ஆண்டுகளாகச் சொல்லிவருகிறேன். அதனாலேயே திராவிடர் கழகத்தை, மக்கள் ஒரு கட்சி என்று கருதாமல் இயக்கம் என்றே கருதவேண்டும் என்பதற்காக, அதற்கு ஏற்றபடி கழகத்தை ஒரு பிரச்சார ஸ்தாபனமாகச் செய்துவருகிறேன். ஏனென்றால், 1925-இல் நாம் ஆரம்பித்து நடத்திவந்த சுயமரியாதை இயக்கம்தான், ஜஸ்டிஸ் கட்சியைக் கைப்பற்றி இயக்கப் பிரச்சாரம் செய்து வருகிறதே ஒழிய, இது ஒரு தனிக்கட்சியாளர் கையில் இல்லை. சுயமரியாதை இயக்கத்தின் திட்டங்களில், ஏதாவது ஒருசிறு மாறுதல் காணப்படலாமே ஒழிய, சுயமரியாதை இயக்க அடிப்படையிலும் அதன் தலையாய கொள்கைகளிலும் திராவிடர் கழகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. இதைச் சேலம் மாநாட்டிலேயே அண்ணாதுரை தீர்மானம் தெளிவுபடுத்தி ஆய்விட்டது. ஆகவே ஜஸ்டிஸ் கட்சி எந்த மக்களுக்காக என்று தோற்றுவித்து நடத்திவரப்பட்டதோ, அந்த மக்கள் (திராவிட மக்கள்) சுயமரியாதை இயக்கத்ததை அப்படியே ஒப்புக்கொண்டு பெரிதும் சுயமரியாதைக்காரர்களாக ஆகிவிட்டார்கள் என்பதும், சுயமரியாதைக்காரர்கள் அல்லாதவர்களாய் இருந்தவர்கள் மெல்ல நழுவிவிட்டார்கள் என்பதும்தான் கருத்தாகும். எனவே, சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் என்னும் பேரால், பெரிதும் தன்இயக்கப் பிரச்சார வேலையே செய்து வருகிறது என்று சொல்லலாம். அதனால்தான் நான் அடிக்கடி திராவிடர்கழகம் ஒரு பிரச்சார இயக்கம் என்றும், இது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோஷியலிஸ்ட், இந்துமகாசபை, வருணாஸ்ரம சுயராஜ்ய சங்கம், பிராமண பாதுகாப்புச் சங்கம், மிதவாத சங்கம், முஸ்லீம் லீக், கிறிஸ்தவ சங்கம், தாழ்த்தப்பட்டவர்கள், ஷெடியூல் லீக் முதலாகியவைபோலும் ஒருகட்சி ஸ்தாபனமல்ல என்றும் சொல்லுகிறேன். எப்படி எனில், இக்கழகம் மக்கள் அறிவுத்துறையிலும், சமுதாயத்திலும், மதத் துறையிலும், கடவுள் துறையிலும், நீண்டநாட்களாக இருந்துவரும் மடமைகளையும், முன்னேற்றத் தடைகளையும், குறைபாடுகளையும் நீக்கவும், மக்கள் யாவரையும் ஒன்றுபடுத்தி ஒருசமுதாயமாக ஆக்கவும், சிறப்பாக நமக்கு- திராவிடமக்களுக்கு- இருந்துவரும் சமுதாய இழிவு, மத மூட நம்பிக்கை, ஜாதிப்பிரிவு வேறுபாடு அடியோடு அழிக்கப்பட்டு, ஆரியக்கொடுமையிலிருந்து மீளவுமே பாடுபட்டு வரும்படியான- அதாவது, மக்களுக்கு வலியுறுத்திவரும்படியான- ஒரு ஸ்தாபனமாகும்.

திராவிடர் கழகத்திற்கு சுயராஜ்யம் பெறவேண்டும் என்கிற ஒரு கற்பனைத்தத்துவமோ, தேர்தலுக்கு நின்று மெஜாரிட்டியாகி, "அரசியலைக்" கைப்பற்றவேண்டும் என்கிற தப்புப் பாவனையோ இல்லை. ஏனென்றால், இன்று நாட்டில்நடப்பது சுயராஜ்யம் என்றுதான் சொல்லப்படுகிறது. அன்னியனான வெள்ளையன் (பிரிட்டிஷார்) ஆதிக்கம் போய்விட்டது. திராவிட நாட்டுக்குத் திராவிட மக்களே முதல் மந்திரி, இரண்டாம் மந்திரி, மொத்தத்தில் 13-இல் 10 மந்திரி திராவிடர்கள் என்று சொல்லும்படியான திராவிட மெஜாரிட்டி மந்திரிசபையாக இருக்கும்போது, இனிச் சுயராஜ்யம் பெறுவது என்பதற்கு வேறு கருத்து என்ன இருக்கமுடியும்? யார் பெறுவது? அரசியலைக் கைப்பற்றுவது? யாரிடமிருந்து யார் கைப்பற்றுவது? திராவிட மக்கள் அல்லாதவர்கள் கைக்கு இனி அரசியல் எப்படிப்போகும்? ஆகவே, சுயராஜ்யம் பெறுவது என்பதோ, அரசியலைக் கைப்பற்றுவது என்பதோ இனி அர்த்தமற்ற பேச்சுகளாகும்; அர்த்தமற்ற காரியங்களுமாகும்.

இந்த மாகாணத்தில் இனி நாம்தான் 100-க்கு 90-க்கு மேற்பட்ட ஓட்டர்களாகவும் ஆக்கப்படப்போகிறோம். பெரும்பாலான மந்திரிகள், உத்தியோகஸ்தர்கள் திராவிடர்களாகத்தான் இருக்கப்போகிறார்கள். அதில் சந்தேகம் இருக்க நியாயமில்லை. ஆனால், இதில் என்ன குறை சொல்லலாம் என்றால், இதனால் திராவிடநாடு பிரிந்து கிடைக்குமா? திராவிடர் கழகக் கொள்கைகள், திட்டங்கள் நடைமுறைக்கு வருமா? என்பதுவேயாகும். சுலபத்தில் வராது என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், நாம்- திராவிடர்கழகத்தார்- சட்டசபைக்குப் போய்விடுவதாலோ, அரசியலைக் கைப்பற்றுவதாலோ, மந்திரிகளாய் விடுவதாலோ, திராவிடநாடு வந்துவிடுமோ, திராவிடர் கழகக் கொள்கைகளும், திட்டங்களும் அரசியல் மூலம் நடத்தப்பட்டு விடுமோ? என்று பார்த்தால் இன்றைய நிலைமையில் அவை சுலபத்தில் ஆகக்கூடிய காரியங்கள் அல்ல என்பதே நமது கருத்து.

வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது

"நம் இழிவு நீக்கம், நம் முன்னேற்றத் தடைநீக்கம், ஆரியத்தில், மூடநம்பிக்கையில் இருந்து விடுபடுதல், பகுத்தறிவாளர்களாக, மானமுள்ள சமுதாயமாக ஆவது, இப்படிப்பட்ட நம் வேலை நெருப்போடு பழகுவதுபோல் பாமர மக்களிடம் பழகுவதாகும். அவர்கள் நம்பிக்கையைப் பெறவேண்டும். அவர்களைத் திருத்தியே ஆகவேண்டும். இதற்கு நல்ல பிரச்சாரம் வேண்டும், ஒத்துழைப்புவேண்டும், ஒன்றுபட வேண்டும். நிலைகுலைந்து சின்னாபின்னப்பட்டுக் கிடக்கும் மக்களை ஒன்றுசேர்த்து யாவர் பலத்தையும் ஒன்றாய்த்திரட்டி ஒருமூச்சுப் பார்த்தாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இனி நாம் சூத்திரர்களாக வாழமாட்டோம் என்பதே நமது இலட்சியச்சொல், நமது மூச்சு.

வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது. அது கானல் நீரல்ல. கருத்தும் கவலையும் இருந்தால் கண்டிப்பாக அடைந்தே தீருவோம் என்கிற உறுதி எனக்கு உண்டு."

தலைவர் : பெரியார்.