உள்ளடக்கத்துக்குச் செல்

இலட்சிய வரலாறு/மரண சாசனம்

விக்கிமூலம் இலிருந்து

மரண சாசனம்

திராவிடர் கழகத்திலுள்ள தோழர்கள் ஒவ்வொருவரும், தயாரித்துக்கொள்ள வேண்டிய மரண சாசனம் இது. வீழ்ச்சியுற்ற இனத்தை எழுச்சி பெறச் செய்துவிட்டோம்; எந்த விலை கொடுத்தேனும், விடுதலையைப் பெற்றுத் தீரவேண்டிய கட்டத்தில் வந்துவிட்டோம்.

வெட்டும் குத்தும், இனி நம்மை விரைந்து தேடி வரும்; வாழ்வுக்கும், சாவுக்கும், இடையே அமைந்துள்ள ஊஞ்சலிலேயே நாம் உலாவ வேண்டியவர்களாக இருப்போம். வைகைக் கரையிலே சென்ற கிழமை நடந்த அமளி, நமக்கு அறிவுறுத்தும் பாடம் அதுதான்; நாம் இருக்குமட்டும் நமது ஆதிக்கத்துக்கு ஆபத்துத்தான் என்பதை ஐயந்திரிபற அறிந்துகொண்ட வர்ணாஸ்ரமம், நாம் செத்தால் மட்டுமே, தான் இன்னும் கொஞ்ச காலத்துக்கேனும் ஜீவித்திருக்க முடியும் என்று நன்கு தெரிந்து கொண்டு, நம்மைக் கொல்லக் கோர நாட்டியம் செய்தது. நமது இரத்தத்தையும் கொஞ்சம் குடித்து ருசி பார்த்தது. நமது வளர்ச்சியின் அறிகுறி நமக்குமட்டுமல்ல, பிராமண சேவா சங்கத்தாருக்கும் தெரிந்திருக்கிறது. அவர்களின் மகஜர், நமது வளர்ச்சிக்கு ஆரியம் தரும் நற்சாட்சிப் பத்திரம்.

எல்லாம் சரி, ஆனால், இத்தகைய அறப்போரில் சேதம் நேரிடுகிறதே. இரத்தம் வீணாக்கப்படுகிறதே என்று எண்ணுகிறார்கள் சிலர். அவர்களுக்கு ஒரு வார்த்தை ! நாம் எடுத்துக்கொண்டுள்ள மகத்தான காரியத்தின் தன்மையை ஒரு கணம் சிந்திக்கவேண்டும்.

யுகயுகமாக இருந்துவருவதாகக் கூறப்படும் ஏற்பாடுகளை நாம், திருத்தி அமைக்க விரும்புகிறோம். மமதை மலைக்கு வேட்டு வைக்கிறோம். நம்மீது சிறுசிறு துண்டுகள் சிதறி விழுந்து, மண்டையைப் பிளக்கின்றன என்றால், நாம் வைத்த வேட்டு ம்வையைப் பிளந்து வருகிறது என்று பொருள் மலையைப் பிளக்கும் காரியத்தில் இறங்கிவிட்டு, மலர் தலைமீது விழும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா ?நம்மை நாமாகவே இந்தக் காரியத்துக்கு ஒப்படைத்துவிட்டோம். உலகில் பாகங்களிலே, இதற்கு ஒப்பான காரியம் செய்யப் புகுந்தவர்கள் பட்ட பாடுகள், இன்று பல்கலைக் கழகங்களின் பாடப் பத்தகங்களாகி விட்டன. அன்று சாக்ரடீஸ் குடித்த விஷம், இன்றுவரை, சாகா நிலையைச் சாக்ரடீசுக்குத் தந்துவிட்டது. பழியையும் இழிவையும், எதிர்ப்பையும் ஆபத்தையும், தலைமீது ஏற்றுக்கொண்டு, பணி புரிந்து சென்று, அந்தப் பணியின் பலனைப் பின் சந்ததியார் அனுபவிக்கச் செய்யும் பரம்பரையில், நாம், சேர்ந்திருக்கிறோம். நமக்கு, இன்னலும் இடையூறும் இருக்கத்தான் செய்யும்; ஆனால் நமது உழைப்பு ஒருநாளும் வீண் போகாது !

கடு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டோர், காரிருட் சிறையில் ஆயுட்கால முழுதும் தள்ளப்பட்டோர், கல்லால் அடித்துத் துரத்தப்பட்டோர், சிலுவையில் அறையப்பட்டோர். சிறுத்தைக்கு இரையாக்கப்பட்டோர், கழுத்து நெரிக்கப்பட்டோர். கனலில் தள்ளப்பட்டோர், கண்டதுண்ட மாக்கப்பட்டோர். நாட்டு மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டோர், நாதியற்றுப் போனோர் என்று இவ்விதமாகத்தான் இருக்கும், சமூகப் புரட்சிப் பணியிலே ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை வரலாறுகள். நாம் அந்த இனம். அவர்களெல்லாம் இன்று அறிஞர்; உலகின் அணிமணிகளாயினர். நம்மையும், பின்சந்ததி மறவாது.

காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிய காலம், கட்டிப்போட்டு வீட்டுக்குத் தீயிட்டகாலம், கிணற்றில் தள்ளிக் கல்விட்ட காலம், கண்களைத் தோண்டி எடுத்த காலம், நாவைத் துண்டித்த காலம், கழுவிலேற்றிய காலம், தலையைக் கொய்த காலம், தணலில் தள்ளிய காலம்— இவையெல்லாம் இருந்தன. சீர்திருத்தம் பேசியோர் இவைகளிலேதான் உழன்றனர். பெரும்பாலானவர்கள் சாகவில்லை; கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டதாலேயே அவர்கள் இன்று சாகாதவராக உள்ளனர். எனவேதான், மரணசாசனம் தயாரித்துக்கொண்டு இந்த மகத்தான போராட்டத்திலே இறங்கவேண்டும் என்று கூறுகிறோம்.

சமூகத்தில் அடிப்படை மாறுதலை விரும்பும் நாம் கொல்லப்படக்கூடும் என்ற எண்ணத்திற்காக நாம் இப்பணி நமக்கேன் என்றிருந்துவிடினும், 'சாவு' ஓய்வு எடுத்துக்கொள்ளாது. சாந்தம் பேசினாலும் "இன்றைக் கிருப்பாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடமில்லை ஐயோ !" என்று தான் பதிகம் செவியில் ஒலிக்கும். செத்தால், செத்ததுதான்! ஆனால் கடமையைச் செய்கையில் கொல்லப்பட்டால், அது சாகா வரம்பெற்றதாகும்! நாம் வாழ்வோம், நமது உழைப்பின் பலனால் புதுவாழ்வு பெறும், நமது பின் சந்ததியாரின் பேச்சில், பாட்டில். தொட்டிலருகே, பூந்தோட்டத்தருகே, கட்டிலருகே, பட்டி மண்டபத்திலே, நாம் பேசப்படுவோம். "நமக்காகப் பணிபுரிந்தனர் கொல்லப்பட்டனர்" என்று. அப்போது நாம் வாழ்ந்திருப்பதாகத்தான் பொருள். நமக்கென்ன, மரணம் நேரிடுகையில் மாளிகை என்னாகுமோ, மனோஹரிகள் என்ன ஆவரோ, தோட்டம் துரவு என்னகதியோ, தோடு தொங்கட்டம் யாருக்குப் போகுமோ, வாணிபம் குறையுமோ, வட்டித் தொகை கெடுமோ என்ற எண்ணம் குறையப் போகிறதோ? இல்லை ! "ஆரியமே ! என்னைக் கொன்றுவிட்டாய்! நான் உயிருடன் இருந்தால் உனக்கு ஆபத்து என்று தெரிந்து இதனைச் செய்தாய். திருப்தி அடையாதே! திரும்பிப்பார்! பிணமாகாது வேறு பலர் உளர்" என்று கூறிக்கொண்டேதான் இறப்போம். எனவே, மரண சாசனம் தயாரித்துவிடுங்கள் !

மதுரைக்கு மறுகிழமை, குடந்தையில் கூடினர் நமது தோழர்கள், பல ஆயிரக்கணக்கிலே. மதுரையைவிட இங்கு தாய்மார்கள் ஏராளம். இரு நாள் மாநாடுகள், இரு இரவும் நாடகங்கள் ; எழுச்சியின் அளவும் தன்மையும், மதுரைச் சம்பவம், கனவிலே கண்ட காட்சியோ என்று என்ணக்கூடிய வகையினதாக இருந்தது. இதன் பொருள் என்ன? மதுரைச் சம்பவத்தால், மகத்தான நமது இயக்கம் மங்காது என்பதை நமது தோழர்கள் காட்டிவிட்டனர் என்றே பொருள். ஆர்வமும், ஆவேச உணர்ச்சியும்கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், சிலர் மதுரைத் தழும்புகளுடன், அங்கு கூடினர். பணிபுரியத் தயார் என்று முழக்கமிட்டனர். மதுரை ஓய்ந்துவிட்டது. நமது தோழர்கள்மீது கல்வீசியவர்களின் கரத்தின் வலி இன்னும் குறைந்திராது. ஆனால், கல்லடியும் கத்திக்குத்தும் பெற்ற நமது தோழர்கள், புண் ஆறாமுன்பே, என்றும் போலவே பணிபுரியக் குடந்தையில் கூடினர். ஆம் ! மரணசாசனம் தயாரித்துவிட்டே இந்த மகத்தான காரியத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களின் வீரத்தை தியாக உணர்ச்சியை, உறுதியை நாம் பாராட்டுகிறோம்! அவர்களின் வீரத்துக்குத் தலைவணங்குகிறோம். மணலிலே இரத்தம் சிந்திய தோழர்களே ! உங்கள் இரத்தம். வீணுக்குச் சிந்தப்படவில்லை. அந்தச் சேதி எண்ணற்ற தமிழரின் இரத்தத்தில் கொதிப்பேற்றி இருக்கிறது. வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசம் காணமுடியாத மனப்பான்மையைத் தந்துவிட்டது. நாம்கொல்லப்படக்கூடும், ஆகையினால் இருக்கும் இன்றே இன்னும் கொஞ்சம் இன எழுச்சிப் பணிபுரிவோம் என்ற எண்ணத்தை ஊட்டிவிட்டது. கொஞ்சநஞ்சம் நம்மவருக்கு இருந்துவந்த குடும்ப பாசம். பந்தம் ஆகியவைகளையும் நாட்டு கலாச்சாரத்தைக் காக்க ஏற்பட்டுள்ள அறப்போர், போக்கடித்துவிட்டது. இனி இருப்பது நாம் நமது தொண்டு, அதைக் கண்டு துடி துடிக்கும் ஆரியம் அது ஏவும் அஸ்திரம், அது பாயுமுன் பணிபுரிய வேண்டிய அவசரமான நிலைமை— இவ்வளவே ! நாம், மரணசாசனம் தயாரித்துவிட்டு, இந்த மகத்தான போராட்டத்தில், ஈடுபட்டு விட்டோம்! எனவே, நமது இலட்சியம்— குறிக்கோள் எப்படியும் வெற்றிபெற்றே தீருமென்பது உறுதி !