இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 4
மறுநாள் காலைப் பொழுது.
மணிமேகலையும் பாமாவும் ஊருக்குப் புறப்பட்டார்கள். ‘பேமிலி பிராப்ளம்-ஸ்டார்ட்’ என்று தன் பெயருக்குக் கணவன் கொடுத்த தந்தி வாசகத்தின் தலையும் புரியாமல் அந்த இரண்டு பெண்களுமே தவித்துப் போனார்கள்.. குடும்பப் பிரச்னை என்றால் என்ன பிரச்னை? சீதாவுக்கு உடம்புக்கு சுகம் இல்லையா? பி.யூ.ஸி. படிக்கும் அவள் ஏடாகோடமாய் நடந்தருப்பாளோ? சின்ன மைத்துனன் பாஸ்கருக்கு ஏதாவது ஏற்பட்டிருக்குமோ ? விஸ்கியும், அது கிடைக்காத சமயத்தில் சாராயமும் போடும் கணவனின் அண்ணனை போலீஸ் பிடித்திருக்குமோ? மாமனாருக்கு பிரஷ்ஷர் அதிகமாய் இருக்குமோ? மூத்தாளுக்கு ஏதாவது.... மாமியாருக்கு ஏதாவது... பேக்டரியில் ஏதாவது... ஒருவேளை அவருக்கே ஏதாவது... அட கடவுளே ! சிக்கனமின்னா இதுவா சிக்கனம்? சிக்கனம், கஞ்சத்தனமா மாறிடக்கூடாதுன்னு ஏன் புரியல? தந்தியில விவரமா சொன்னால் என்ன ? ‘பாவி மனுஷனுக்கு’ இதுகூட தெரியலையே?
மணிமேகலை அந்த நெருக்கடியிலும் தனக்குள்ளேயே சிரித்தாள். அண்ணியுடன் பத்துநாள் தங்கியதில், அவள் புருஷனுக்குக் கொடுத்த ‘பாவி மனுஷப்’ பட்டத்தைத் தானும், தன் கணவனுக்குத் தன்னையறியாமலே கொடுப்பதை நினைத்து கொஞ்சம் அவமானப்பட்டாள்.
பாமாவும் சந்திரனும் மூட்டை முடிச்சுகளை சீராக்கிக் கொண்டிருந்தார்கள். அண்ணனைக் காணவில்லை. அண்ணிக்காரி, இழவு விழுந்ததுபோல் கால்களை வயிற்றோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு முடங்கிக் கிடந்தாள். அப்பா மகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த ஊர் வழக்கப்படி மணிமேகலை உறவினர்களிடம் விடைபெறுவதற்காகப் புறப்பட்டாள். தெருக்களில் நின்று கொண்டிருந்த ஏழைப் பெண்களிடம் சொல்லிக் கொண்டே, உறவினர் வீடுகளில் படியேறிக் கொண்டிருந்தாள். இறுதியாக தூரத்து உறவினரான குமரேசமாமா வீட்டுக்கு வந்தாள்.
குமரேச மாமாவைக் காணவில்லை. அவர் மகன் வெங்கடேசன், புதிதாக வாங்கியிருப்பதுபோல் தோன்றிய ஒரு பின்னல் நாற்காலியில் உட்கார்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்தான். இருபத்தொன்பது வயதாகியும் இன்னும் கல்யாணமாகாமல், குறுந்தாடி மீசையுடன், ஒரு ஞானிக்குரிய தோரணை இல்லாமலும், அதேசமயம் அபிலாஷைகளைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பவன் போலவும் தோன்றிய அவனைப் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது. பிறகு தன்னைப் பார்க்கவும் அந்தகணத்தில் அவளுக்குப் பாவமாக இருந்தது. அவனை ஊருக்கு வந்தபிறகு, பலதடவை பார்த்திருக்கிறாள். ஆனால் அவன் வீட்டுக்குள் நுழையும்போது-மருமகளாக நுழையப்போகும் வீடு என்று அவளே கற்பனை செய்திருந்த அந்த வீட்டின் படிவாசலில் கால் வைத்த போது, நினைவுகள் பின்னால் போயின!
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, தூத்துக்குடி கல்லூரி ஒன்றில், அவள் பி.யூ.ஸி. படித்துக்கொண்டிருந்தாள். அங்கே இன்னொரு கல்லூரியில் பி.ஏ. படித்துக்கொண்டிருந்த வெங்கடேசன், பஸ் நிலையத்தில் அவளிடம் சகஜமாகப் பேசுவான். திடீரென்று ஆங்கில போதனா மொழிக்குள் அகப்பட்டு திக்குத் தெரியாமல் அவள் தவித்தபோது, அவன் திசை காட்டினான். தூரத்து உறவுப் பலத்தில், அவள் வீட்டிற்கு வந்து சகஜமாகப் பேசுவான். அவளும் வில்லங்கம் இல்லாமலே பழகினாள். ஆனால் ஊர் விடவில்லை.
ஊர்க்காரர்கள் இருவரையும் இணைத்துப் பேசப்பார்த்தார்கள். கிழவர்கள் ராம-லட்சுமி என்றார்கள். வாலிபர்கள் ஒரு நடிக–நடிகையைக் குறிப்பிட்டார்கள். செய்தி, அருணாசலத்தின் காதுக்கு அடிபட்டபோது, அவர் மகளைப் பார்த்து “நீ காலேஜுக்குப் போகணு மாம்மா?” என்றார்.
காலேஜ் நிற்கவில்லை. அவள் நின்றாள்.
ஊராரின் ஊதாரித்தனமான பேச்சால் அவள் மனதிலும் ஒரு புள்ளி விழுந்தது. அந்தப் புள்ளியில் வெங்கடேசன் எப்போதாவது, சின்னதாக வருவான். அவனிடம் தனியாகப் பேசுவதுபோல் கற்பனை செய்தாளே தவிர, பேசவில்லை.
இரண்டு மூன்று ஆண்டுகள் வெங்கடேசனை அப்பப்போ நினைத்துக்கொண்டும், தந்தைக்குப் பணி விடை செய்தும், அவள் காலத்தைக் களித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று குமரேசன் பெண் கேட்டார். அருணாசலம் கொடுக்க மறுத்தார். மணிமேகலைக்கு, தன்னை யாரோ தனிக்காட்டில் தனியாக விட்டிருப்பது போல் தோன்றியது. ஒரு ‘பாட்டியை’ அப்பாவிடம் ‘தூது’ அனுப்பலாம் என்று அவள் நினைத்தபோது “நான் படிக்காதவன்னு குமரேச மாமா... அவரு பொண்ண எனக்குக் கேட்டபோது சாக்குப் போக்குச் சொல்லிட்டார். இப்போ நான் மட்டும் என் தங்கச்சிய அவரு மவனுக்கு எப்படிக் கொடுப்பேன்” என்று அண்ணன்காரன் சொல்வதும், “ஓ அவரு மவள நினைச்சிக்கிட்டு இருந்தீரா? அதான பாத்தேன். அதனாலதான் கட்டுன பொண்டாட்டிகிட்ட பேசுறதுக்கு ஒமக்கு கசக்கு” என்று அண்ணி சொல்வதும் அவளுக்குக் கேட்டது.
மணிமேகலை ஒரு முடிவுக்கு வந்தாள்.
அவள் அண்ணன் கொஞ்சம் மக்குதான். என்றாலும் ரோஷக்காரன். மனதார விரும்பிய ஒரு பெண் கிடைக்கவில்லை என்றால், விரும்பிய மனம் என்ன பாடுபடும் என்பதை அவளே அனுபவித்து வரும்போது, வெந்த புண்வேல்போல் வெங்கடேசனை மணந்து அண்ணனைச் சிறுமைப்படுத்த அவள் விரும்பவில்லை. அவளுக்கு தன் மானசீகக் காதலை விட, அண்ணனின் மானமே பெரிதாகத் தெரிந்தது. அதோடு அப்பா எது செய்தாலும் அது நன்மையில் முடியும் என்ற அடிப்படை நம்பிக்கையை அவள் விடவில்லை.
‘அரக்கோணம்’ ஜெயராஜூக்கு, அவள் கழுத்தை நீட்டினாள். வெங்கடேச அத்தானை மறக்க மடியுமா? என்று தனக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்த அவள், காலப்போக்கில் தானே வியக்கும் அளவுக்கு மறந்து விட்டாள். ஆனால் ஊருக்கு வரும்போதெல்லாம், அருகில் உள்ள வீட்டில் இருந்தாலும், அவளைப் பொறுத்த அளவில் தொலைவாய்ப் போன அவன் நினைப்பு, நெஞ்சில் நெருப்புக் கட்டியாவதுண்டு. அவன் தன்னால் தான் திருமணம் செய்ய மறுக்கிறான் என்று உணரும் போது ஒரு தாபம். தன்னையேதான் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்ற நினைவில் ஒரு பெருமிதம். என்றாலும், மனதில் உதித்த அந்த சின்னப்புள்ளி சிறிதாகிக்கொண்டிருந்ததே தவிர, பெரிதாகவில்லை.
வீட்டுப் படிக்கட்டில் முன்னோக்கிச் சென்ற கால்களைப் படியில் தேய்த்து, பின்னோக்கி இழுத்த எண்ணங் களைத் தேய்த்துக்கொண்டே, அவள் அவனருகே போனாள்.
அவன், லேசாக சிரித்தான். அவள் இன்னொரு நாற்காலியில் உட்காருவது வரைக்கும் எழுந்து நின்றான்.
“என்னத்தான் ! பி.எல்.ல கம்ப்ளிட் பண்ணிட்டீங்களாம். ஆனால் பாவம் பெயிலாயிட்டீங்களாமே?”
“இந்தத் தோல்வி ஒரு மைனர் பெயிலுதான்.”“நான் அடுத்த தடவ ஊருக்கு வரும்போது ஒங்கள மாலையும் கழுத்துமா பாக்கணும்.”
“ஒருவனுக்கு ரெண்டு தடவ மால விழும். கல்யாணம் ஆகும்போது-அப்புறம் செத்தபிறகு.... நீ எதைச் சொல்ற?”
“நான் இதுநாள் வரைக்கும் சொல்லாத ஒண்ணநானே நினைச்சிப் பார்க்கவே பயந்த ஒண்ண—இப்போ சொல்றேன். நான் உங்கள விரும்புனது வாஸ்தவந்தான். உங்கள மறக்க முடியாதுன்னு மனசுக்குள்ளேயே அழுததும் உண்மைதான். ஆனால் இப்போ அந்தமாதிரி எண்ணமே வரல. இதனால உங்கள மறந்திட்டேன்னு அர்த்தமில்ல. சொல்லப்போனா அதிகமா நினைக்கேன். என் மூணு வயசுப் பையன் அடம் பிடிக்கும்போதெல்லாம், இந்த இருபத்தொன்பது வயது குழந்த ஞாபகம் வரும். நம்ம மதத்துல ஒரு சாரார், கணவன் அடுத்த ஜன்மத்துல மனைவிக்கே மகனாய்ப் பிறக்கலாமுன்னும், தகப்பன் மகளுக்கே கணவனாகப் பிறக்கலாமுன்னும் சொல்றாங்க. இது உண்மையோ பொய்யோ போகட்டும். ஆனால் இதுல ஒண்ணு தெரியுது. பாசம், எந்த ரூபத்தில வேணுமுன்னாலும் வரலாம். அது ஒரு சக்தி, சக்தியை அழிக்க முடியாது. அதேசமயம் அதை இன்னொரு விதத்துல மாற்றிடலாம். மைன்ட, சூன்யத்தில் நிற்காதுன்னு, நீங்களே காலேஜ்ல பேசியிருக்கீங்க. ஒரு கல்யாணம் பண்ணிக்கங்க. அப்புறம் என்னைமாதிரி ஆயிடுவிங்க.”
வெங்கடேசன், அவளையே உற்றுப் பார்த்தான். வாளிப்பான தேகக்கட்டில் அன்னை தெரேஸாவின் கண்களை ‘டிரான்ஸ்பிளான்ட்’ செய்துகொண்டு அவள் அங்கே வந்திருப்பது போல் அவனுக்குத் தெரிந்தது. அவன் ரசித்த அவளின் அந்த ‘பப்பாளி நிறம்’ இப்போது மதுரை மீனாட்சியின் குங்குமம் போல் தோன்றியது.அவள் பேசியதைக் கேட்டதும், அவனுக்கு புதுத் தெம்பு வந்ததுபோல் தோன்றியது. அவள் சொன்ன கருத்துக்கள் புதிதல்ல. அவன் படித்தவை; சிந்தித்தவை. ஆனால் அப்படிப் படிக்கும்போதும் சிந்திக்கும்போதும் ஏற்படாத தெம்பு, இப்போது ஏற்பட்டது. ஒருவேளை, சொல்கிறவர் சொன்னால்தான் புரியுமோ?
மணிமேகலை இயல்பாகக் கேட்டாள்:
“மெட்ராஸ்ல வேலையில இருந்திங்களாமே, ஏன் அத விட்டுட்டிங்க?”
"இப்போ அலுவலகங்களுல ஒவ்வொரு அறையும் ஒரு பொலிடிக்கல் ஹாட்–பெட்டா மாறிட்டு. பாலிடிக்ஸ் இல்லாத ஆபீஸே இல்ல. நாலு சுவருக்குள்ள இருந்து கிட்டே வெளி உலகம் தங்களுக்குள்ளேயே இருக்கதா நினைக்கவங்க. நாலு சுவருக்குள்ள அடிமையாய் வாழ்ந்து, வெளியுலகத்துக்கு போயிடலாமான்னு நினைச்சும் பிள்ளை குட்டிகளுக்காக அவமானத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் முன்னாள் சுயமரியாதைக்காரங்க, ஆபீஸ்ல ‘பேச்சு’ வாங்குனாலும் வெளில ‘நிமிர்ந்து’ நிற்கும் போலிகள். இப்படி குட்டிச் சுவராய் போச்சு. ஒருவனுக்கு உலை வைக்கிறவன், அவனுடன் கேன்டீன்ல டிபன் சாப்புடுறவனாய்தான் இருப்பான். ஒருவன் மேல பெட்டிஷன் போட்டுட்டு, அப்புறம் அவனையே கட்டிப் பிடித்துத் தழுவும் நண்பங்க. இப்படி ஆயிட்டு! பறவைகள் சுதந்திரமாய் இருக்கதாய் நினைக்கோம், ஒரு காக்காவையாவது சிட்டுக்குரு வியையாவது பாரு. உட்காரும்போது நாய் இருக்கா பூனை இருக்கான்னு பார்த்துக்கிட்டேதான் உட்காருது. இது மாதிரிதான் படிச்சவங்க நிலமை, படிக்காதவங்க, அவங்கள சுதந்திரமாய் வாழ்றதாய் நினைக்காங்க. ஆனால் அது காக்காவோட சுதந்திரம். அந்த காகத்துக்கு தப்பிக்கத்துடிக்கும் ஓணானோட சுதந்திரம். அந்த ஓணானிடம் பிடிபட்டு விடக்கூடாதேன்னு நினைக்கிற பல்லியோட சுதந்திரம். அதன் வாயில் விழப்போகும் கரப்பான் பூச்சியோட சுதந்திரம் ! இதுக்குக் காரணமே இந்த படிச்சவங்கதான். படிப்பு ‘நாலேஜாகாது’ என்பதை உணராமல், ‘நாலேஜ் இஸ் பவர்’ என்பதை உணராமல், வெறுமனே அதிகார ஆடம்பரத்திற்காக, ஒவ்வொருவனும் தன்னைச் சுற்றியே ஒரு வலையை பின்னிக்கிட்டான். மொத்தத்துல, பாரதப் பெருங்குடியினரான படிச்ச வங்களுக்கு, ஒரு தேசிய கேரெக்டர் கிடையாது. இந்த சூழ்நிலையில, ஊர்ல. கெளரவம் வரணுமுன்னு, நான் ஆபீஸ்ல அகெளரவப்படத் தயாராய் இல்ல.”
வெங்கடேசன் பேச்சை முடித்துவிட்டு, அவளையே பார்த்தான். அவளும் “காலேஜ் ஞாபகம் வருது அத்தான். சரி நான் வரட்டுமா? ஊருக்குப் போறேன். சொல்லிட்டுப் போகலாமுன்னு வந்தேன். ரயிலுக்கு நேரமாவுது. வரட்டுமா ?” என்றாள்.
வெங்கடேசன், தலையை வலுக்கட்டாயமாக ஆட்டியபோது, மணிமேகலை, முதலில் மெதுவாகவும், பிறகு வேகமாகவும், அந்த வீட்டைத் தாண்டியதும் நிதானமாகவும் நடந்து வீட்டுக்கு வந்தாள். லேசான உள்ளம், இப்போது லேசாகக் கனத்தது.
வீட்டு முன்னால், ‘டாக்ஸி’ நின்றது. பாமாவும், சந்திரனும் மாம்பழக் கூடையையும், பலாப்பழக் கூடையையும் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கனகம், இன்னும் முடங்கிக் கிடந்தாள். அப்பா, சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து, எதையோ வெறித்துப் பார்த்தார். எங்கேயோ போய்விட்டு வந்த அண்ணன், சந்திரனைப் பார்த்து “ஏண்டா, அனாவசிய செலவு எதுக்குடா ? டிராக்டர்லயே போகலாமே?” என்றபோது, கிழவர், பொங்கிய ஆத்திரத்தை அடக்கும் பொருட்டு, மாந்தோப்புப் பக்கமாகப் போனார்.
மணிமேகலை, ‘தூங்கிக்’ கொண்டிருந்த அண்ணியின் அருகே, குத்துக்காலிட்டு உட்கார்ந்து “நான் போயிட்டு வாரேன் அண்ணி.” என்றாள். கனகம், ‘உம்’ என்றாள். சிறிதுநேரம் அப்படியே மணிமேகலை உட்கார்ந்தாள். அந்தப் பக்கம் வந்த அண்ணனுக்கே மனசு கேட்கவில்லை. “போயிட்டு வாரேன்னு சொல்றாள். எழுந்திருச்சி வழி அனுப்பேமிழா. அறிவு கெட்ட தடி மாடு” என்று அவன் சொன்னபோது, கனகம், கிட்டத்தட்ட தடிமாடு மாதிரியே எழுந்தாள்.
பாமா, சந்திரன், மணிமேகலை பின்னால் உட்கார்ந்து கொண்டார்கள். அங்கே தற்செயலாக வந்த ‘கூத்து’ கோவிந்தன், ரயில் நிலையத்தில் ஒத்தாசை செய்வதற்காக, முன்னால் உட்கார்ந்தான்.
டாக்ஸி புறப்பட்டது.
மணிமேகலை, அப்பாவைத் தேடினாள். அவர் அங்கே இல்லை. ஏதோ ஒரு மாமரத்தின் முனையில், பூமியைத் துளைப்பவர் போலவும், ஆகாயத்தைத் துழாவுகிறவர் போலவும், குறுக்கும் நெடுக்குமாக உலவிக் கொண்டிருந்தார். மணிமேகலை, அப்பாவைக் கூப்பிடவில்லை.
வழிநெடுக தெரிந்தவர்களிடமெல்லாம் ‘போயிட்டு வாரேன்’ என்று அவள் கும்பிட, சீக்கிரமா வரணும் என்று அவர்கள் பதிலுக்குக் கைகூப்புவதுமாக, டாக்ஸி, திருச்செந்தூர் சாலைக்கு வந்தது.
“அடுத்த பிரசவத்த இங்க வச்சிக்க” என்றாள் தங்கம்மா பாட்டி.
சந்திரன், அக்காவைப் பார்த்து “டிராக்டர்ல போகச் சொல்றான். இவன் பெண்டாட்டி, பக்கத்து ஊர்ல இருக்கிற அப்பன் வீட்டுக்குப் போறதுக்கு மட்டும், தூத்துக்குடில இருந்து டாக்ஸி வரணுமாம். எனக்கு வந்த கோபத்துக்கு...” என்றான்.
பாமா சீண்டினாள்.
“ஓங்க கோபம் எனக்குத் தெரியாதா? பாரு அண்ணி, கனகக்கா என்னைப் பற்றிப் பேசும்போது, இவரை தள்ளாத குறையா அனுப்பி, பதிலுக்கு ஏதாவது பேசுங் கன்னு சொன்னேன். ஆசாமி, பிள்ளையார் மாதிரி இருந்துட்டு, இப்போ சின்ன விஷயத்துக்கு குதிக்காரு.”
“அண்ணன்மேல கோபப்படாதடா. அவன், டிராக்டர்ல போகச் சொன்னதுல எனக்குக் கோபம் வரல. நம்ம ரத்தினம் அண்ணன்கிட்ட போனா நிறைய விஷயம் புரியுது. டிராக்டர்லயா போறதுன்னு கோபப்படுறது, பாலுக்கு சர்க்கரை இல்லையேன்னு கஞ்சிக்கு உப்பில்லா தவங்கிட்ட சொல்றது மாதிரி. அதோட, அண்ணன் எனக்காக அண்ணிய திட்டுனதையும் பார்க்காண்டாமா ? பாமா, எங்க அண்ணி பேசுறதை தப்பா நினைச்சுக் காதம்மா.”
“நான் ஏன் நினைக்கேன்? இந்த வீட்டுக்கு நிரந்தரமாய் வந்த பிறகு, அவங்க பேசுறதுக்கு இப்போ ஒத்திகை பார்க்காங்க, கனகக்காவை, ஒரு கேரக்டரா நினைச்சி ரசிச்சேன்...”
“இந்த வீட்டுக்கு நிரந்தரமாய்...” என்று சொன்னபோது, முன்னிருக்கையில் உட்கார்ந்திருந்த கோவிந்தன், சுவாரஸ்யமாகத் தலையைத் திருப்பினான். இதைப் பார்த்த மணிமேகலை “பார்த்துப் பேசும்மா. நம்ம கோவிந்தன் ஊர்ல, பவளக்கொடிக்குப் பதிலா, பாமாக் கொடின்னு ஒரு கூத்தே போட்டுடுவான்” என்றாள்.
உடனே கோவிந்தனும் “இந்த சமாச்சாரம் எனக்குப் புது சில்லம்மா. என்னைக்கி அர்ச்சுன ராசதுரை சிரிச்சாரோ, அன்னைக்கி பவளக்கொடி விழுந்துட்டாள். என்னைக்கு கரும்புத் தோட்டத்துப் பக்கத்துல, சந்திரன் பாமாக்கொடியோட மோதிரக் கையை அழுத்துனாரோ, அன்னைக்கே கழுத்துல தாலி விழப்போறது எனக்குத் தெரியும்.”
மற்றவர்கள் அசந்துவிட்டார்கள். இந்த கோவிந்தனுக்கு, எப்படித் தெரியும்? கேட்டால் எப்படியோ தெரியும் என்பான். சொல்லமாட்டான்.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. எதிரே வந்த டிராலி வண்டியில் மோதப்போன சந்திரனை ‘பாத்துடா’ என்றாள் அக்கா.
“முன்னெல்லாம் ஒன்னை வழியனுப்பும்போது ஒரே ஒரு கண்ணுதான் போனதுமாதிரி தெரியும். இன்றைக்கு, ரெண்டு கண்ணும் போனதுமாதிரி தெரியும். எப்படி பார்க்கதாம்?” என்றான் சந்திரன். அவன் சிரித்துக் கொண்டே பேசினாலும், பாமாவின் கண்கள், பார்வையை மறைக்கும் அளவுக்குக் குளமாயின. தோளில் வைத்திருந்த மருமகனை, சந்திரன் பாமாவிடம் நீட்டிய போது, ரயில் ஊளையிட்டது.
ஊதிக்கொண்டே போன ரயிலில் குலுங்கிக் கொண்டிருந்த மணிமேகலைக்கு, மீண்டும் புருஷன் வீட்டு ஞாபகம் வந்தது. பேமலி பிராப்ளம் என்றால் எதுவா இருக்கும்? ஒருவேளை இந்த பாமாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்குமோ? அது எப்படி பிராப்ளமாகும்? அந்த வீட்ல, நல்லதும் பிராப்ளம்தான்... கெட்டதும் பிராப்ளம்தானே... ஒருவேளை பாமாவுக்கு வேறு இடத்துல உறதியாகி இருந்தால் அட கடவுளே...
மணிமேகலை, தன் பயத்தை உள்ளடக்கிக் கொண்டே, எங்கேயோ லயித்திருந்த பாமாவின் கையைத் திருகி “பாமா, சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொல்றேன். சந்திரனை நீ கட்டிக்க, நம்ம வீட்டு பெரியவங்க சம்மதிக்கலன்னு வச்சுக்கோ... என்ன பண்ணுவே?” என்றாள்.
பாமா, இருக்கையில் இருந்து, ஆவேசமாக எழுந்தாள். சீறிப் பேசினாள்.
“அண்ணி, இந்த மாதிரி பேச்சுக்குக்கூட சொல்லாதிங்க. நான் உங்களை மாதிரி குடும்பப் பெண் அல்ல. என் வாழ்க்கைக்கு நான்தான் எடிட்டர். எனக்கு இப்பவே இந்த ரயிலுல இருந்து குதிக்கலாம்போல தோணுது.”
மணிமேகலை, பாமாவை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். இதர பிரயாணிகள் அவர்களை விநோதமாகப் பார்ப்பதைப் பொருட்படுத்தாமலே, அந்த அணைப்பை விடாமல் இருந்தாள்.
ரயில், இனிமேல் திரும்பிவரப் போவதில்லை என்பது மாதிரி, குதிப்பதுபோல ஓடிக் கொண்டிருந்தது.