உள்ளடக்கத்துக்குச் செல்

இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 3

விக்கிமூலம் இலிருந்து
3
றுநாளும் மாலைப் பொழுது.

மணிமேகலை, ஒரு கடிதத்தை ரசனையோடு எழுதி விட்டு, கவரில் போடப் போனாள். அப்போது மாந்தோப்பில் உட்கார்ந்து ஒரு நாவலைப் படித்து விட்டு, முன்னறைக்கு வந்த பாமாவிடம் “எம்.பி.பி.எஸ்ஸும், பி.ஈ.யும் ஒரே படிப்பு. எம்.பி.பி.எஸ்ஸுக்கு டாக்டர்னு பெயருக்கு முன்னால போடலாம். எஞ்சினியர் ஜெயராஜுன்னு போட முடியல பாரு” என்று மணிமேகலை சொன்னாள்.

“யாருக்கு அண்ணி லட்டரு? அண்ணனுக்கா?”

“நாம் ரயில் பெட்டியில் இருந்தத பார்த்துட்டும், அந்த மாமா ‘எப்பமா வந்தேன்னு’ கேட்டதச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பியே, இப்போ நீ மட்டும் வேற மாதிரியா கேட்கிற?”

“அண்ணி, அண்ணி! நானும் அண்ணனுக்கு ரெண்டு வரி எழுதறேன். ஒட்டிடாதிங்க அண்ணி."

மணிமேகலை, சிறிது நாணினாள். பிறகு அப்பா அங்கே இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு “எந்தப் பெண்ணும் புருஷனுக்கு எழுதற லட்டரை காட்ட மாட்டாள். நீ கேட்கிறது அதை விட அதிகம்.”

 “எங்க அண்ணனுக்கு நான் எழுதக்கூடாதா? நீங்க கர்நாடகம்.”

“இப்போ நான் சொல்றது ஒனக்குப் புரியாது. ஒனக்கும் சந்திரனுக்கும் கல்யாணமாகி, நீ பிரசவத்துக்கு அரக்கோணம் வரும்போது, புருஷனுக்கு லட்டர் எழுதுவே. அப்போ நான் ‘என் தம்பிதானே? நானும் ரெண்டு வரி எழுதறேன்னு’ சொல்லும்போதுதான் என் சங்கடம் ஒனக்குப் புரியம்.”

பாமா, தனக்குத் திருமணமாகி, கர்ப்பமும் தரித்துவிட்டதுபோல் நாணினாள். பிறகு அண்ணியிடம் மேற்கொண்டும் ரசனையான வார்த்தைகளை எதிர்பார்ப்பவள்போல் அங்கேயே நின்றாள்.

ஆனால் மணிமேகலையோ திடீரென்று எழுந்து, சுவரில் மாட்டப்பட்டிருந்த காலண்டரை உற்றுப் பார்த்து விட்டு, “ஆல் ரைட்! இன்னும் ஒரு மணி நேரத்துல ராகு காலம் வரப்போவுது. நான் பெரியவங்களோட, ஒரு சுபகாரியத்தைப் பற்றிப் பேசனும்...இந்தா இந்த லட்டரை போட்டுட்டு தோப்புல போய் உட்காரு” என்றாள்.

மணிமேகலை கொடுத்த கடிதத்தை பாமா வாங்கிக் கொண்டாள். தானும் ஏன் சந்திரனுக்கு இப்பவே ஒரு கடிதம் எழுதக்கூடாது என்ற சிந்தனையுடன், அவள் முதலில் நாணிக்கொண்டும் பிறகு துள்ளிக்கொண்டும் வெளியேறினாள்.

மணிமேகலை உள்ளே போனாள். அண்ணன்காரன் ஒரு பட்டுப் பாயில் உட்கார்ந்திருந்தான். அண்ணிக்காரி சமையலறை வேலையை முடித்துவிட்டு, ‘அப்பாடா’ என்று சொல்லிக்கொண்டே, கர்ப்பிணி வயிற்றை லேசாகத் தடவிக்கொண்டே உட்கார்ந்தாள். அப்பாக்காரர், பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். 

மணிமேகலை யோசித்தாள். ஆரம்பித்துவிட வேண்டியதுதான். முதலில் பொதுப்படையாகவும், பிறகு வெளிப்படையாகவும் பேச வேண்டும். அவளுக்கே கொஞ்சம் வெட்கம். கல்யாணம் நடக்கிற வயசுதானே தவிர, அதை நடத்துற வயசில்ல. பரவாயில்ல... எப்படிப் பேசுறது.... பேசிப்பிடலாம்.

“எங்க பாமாவுக்கு இந்த ஊரு பிடிச்சி போயிட்டு அண்ணி.”

“எங்க பாமான்னு ஏன் பேசுற? நம்ம பாமா தங்கமான பொண்ணு.”

“அவங்க வீட்ல கல்யாணத்துக்கு பேசிக்கிட்டு இருக்காங்க.”

“மாப்பிள்ளை பார்த்தாச்சா?” என்றார் அண்ணன். “இன்னும் முடிவாகல... நம்ம ஊர்ப் பக்கமா பார்க்காங்க.”

“அவளைக் கட்டுறவன் கொடுத்து வச்சவன்...” என்றாள் அண்ணி.

“அப்படின்னா, நம்ம சந்திரன் கொடுத்து வச்சவன்தான்.”

அண்ணி, திடுக்கிட்டவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். அண்ணன் வாயில் கிடந்த வெற்றிலையைக் காறித் துப்பிவிட்டு, ‘சம்மணம்’ போட்டு உட்கார்ந்தார். அப்பா, பேப்பரில் இருந்து கண்களை விலக்கினார்.

சிறிது நேர மெளனம். அண்ணிக்காரி, காலை மடக்கிப் போட்டு உட்கார்ந்துகொண்டு பேசினாள்.

“பெரிய விஷயத்த எவ்வளவு சாதாரணமாய்ப் பேசிட்டே... பொருத்தம் பார்க்காண்டாமா? நகை நட்டு பேசாண்டாமா? நல்லது கெட்டது யோசிக்காண்டாமா? நாலையும் பார்க்காண்டாமா?”

“பார்க்கலாம் அண்ணி. குடும்பம் கோத்திரம் பார்க்க வேண்டியதில்ல. எனக்கு, நீங்க எவ்வளவு போட்டீங்களோ, அவ்வளவும் அவங்க போடுவாங்க.”

அண்ணிக்காரியின் வாயில் நெருப்பு வீசியது.

“அவ்வளவு தொலைவுல, எதுக்காக பெண் எடுக்கணும்? ஒன்னைக் கொடுத்துட்டு, எப்பொ பாக்கலாம் எப்பொ பாக்கலாமுன்னு நாங்க படுற பாடு போதாதா?”

“நாம பொண்ணு எடுக்கிறமே தவிர, கொடுக்கலியே? பாமா இங்கதான் வரப்போறாளே தவிர, சந்திரன் அங்கேயா போகப்போறான்?”

அண்ணிக்காரி, புருஷன் காதில் ஏதோ கிசுகிசுத்தாள். அந்த வேகத்தில் அவர் காது ஆடியதே தவிர வாயாட வில்லை. என்றாலும் புருஷனின் மெளனத்தை தன் கட்சிக்கு சம்மதமாக அனுமானித்துக்கொண்டு, கனகம் பேச்சில் காரத்தைச் சேர்த்தாள்.

“மணிமேகல! இந்த விஷயத்துல நீ தலையிடாத ஒன் தம்பிக்கு, என் தங்கச்சிய கொடுக்கிறதா எங்க அப்பா சொல்லிட்டாரு.”

“ஒங்க அப்பா சொன்னால், நாங்க கேட்கணுமுன்னு நீங்க வற்புறுத்துறது தப்பு அண்ணி.”

கனகம், இப்போது தன் நிஜத்தைக் காட்டினாள்.

“அண்ணன் தம்பி ஒற்றுமையாய் இருந்தால் ஊர்ல பெருமை. நாங்க கடைசி காலம் வரைக்கும் ஒற்றுமையாய், ஒரு பானையில ஆக்கி, ஒரு இலையில சாப்பிடலாமுன்னு  நினைச்சுக்கிட்டு இருக்கோம். இதுக்காவே நானே அப்பாகிட்ட வாதாடி சம்மதம் வாங்கியிருக்கேன். நாங்க ஒற்றுமையா இருக்கது ஒனக்குப் பிடிக்கலியாக்கும். இதக் கெடுக்கதுக்காவ மெனக்கெட்டு ரயில் ஏறி வந்தியாக்கும்?” மணிமேகலை திகைத்துப் போனாள். கல்யாணம் ஆகுமுன்னால் அண்ணிக்காரியிடம், இப்படிப்பட்ட சுடு சொற்களை அவள் வாங்கி இருந்தாலும், இப்போது அவள் பேசியது, அவள் சுயமரியாதையை எரித்தது. அண்ணன்காரன் வேறு சும்மா இருந்தார். எதோ காரமாகப் பேசப் போன மணிமேகலை, அப்பாவைப் பார்த்தாள். அந்த முகத்தைப் பார்த்ததும் அவளால் பேச முடியவில்லை.

அந்த நெடிய-கொடிய மெளனத்தில், அருணாசலம் தலையைப் பிடித்துக்கொண்டே யோசித்தார்.

பல தென்னந் தோப்புக்கள், மாந்தோப்புக்கள், ஊருக்கே உணவளிக்கும் அளவுக்கு நிலபுலனும் கொண்ட தன்னைவிட, செல்வச் செருக்கில் அவருக்கு அடுத்தபடியான அளவுக்கு வசதியுள்ள குமரேசன், தன் மகன் வெங்கடேசனுக்கு பெண் வீட்டார்தான் முதலில் கேட்க வேண்டும் என்ற வரம்பையும் மீறி மணிமேகலையைக் கேட்டார். ‘இவன் நமக்கு ஜோடியா’ என்று மனதுக்குள்ளே நினைத்த இதே இந்த அருணாசலக் கிழவர், மகளை அரக்கோணத்தில் ஒரு எஞ்ஜினியருக்குக் கட்டிக் கொடுத்தார்.

மாப்பிள்ளை வீட்டார், முப்பது வருடத்திற்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காக அரக்கோணம் போய், இரண்டு மூன்று வீடுகளுடனும், ஒரு சின்ன தொழிற்சாலையுடனும், காரோடும் பங்களாவோடும் இருப்பதில், இப்போது அவருக்குப் பெருமையில்லை. ஆண்டுக்கணக்காக மகளை வளர்த்துவிட்டு, இப்போது ஆண்டுக்கு ஒருமுறை மகளைப் பார்க்கும்

துர்ப்பாக்கிய நிலையில் இருக்கும் அவர், பாமாவை சந்திரனுக்குக் கட்டிவிட்டால், அரக்கோணத்தாருடன் உறவு பலப்படும் என்றும், அந்த பலத்தில் மகள் அடிக்கடி வரலாம் அல்லது குறைந்த பட்சம் அவளைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வரும் என்று நினைத்தார். அதோடு பாமா நல்ல பொண்ணு; அதோடு இந்த கனகத்தோட தங்கச்சியும் இவள் மாதிரிதான் இருப்பாள். இவள் சூர்ப்பனகை... அவள் தாடகைப் பிராட்டியாம். ஒரு தடவை குட்டுப்பட்டது போதும்!

எல்லோரும் அந்தக் கிழவரைப் பார்த்தார்கள். அவர் நிதானமாக எழுந்து செருப்பைப் போட்டுக்கொண்டே “எம்மா, ஆயிரம் பேரு ஆயிரம் சொன்னாலும், பாமாதான் இந்த வீட்டுக்கு மருமகள். அடுத்த மாசம் ஆவணில வச்சிடலாம். மாப்பிள்ளையோட கலந்து பேசி தேதிய எழுது...” என்று சொல்லிவிட்டு மருமகளை ஜாடையாகப் பார்த்துக்கொண்டே வெளியேறிவிட்டார்.

கனகத்தால் தாங்க முடியவில்லை. கைகளை நெறித்தாள். மணிமேகலைக்கே அவள்மீது அனுதாபம் ஏற்பட்டது.

“என்னை மன்னிச்சிடுங்க அண்ணி. போன தடவ வந்திருக்கும்போது என்கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருந்தால், நான் இந்தப் பேச்சையே எடுத்திருக்க மாட்டேன். எந்த விஷயத்தையும் மூடிமூடி வச்சால் நிலைமை இப்படித்தான் முடியும்.”

“இப்பகூட நீ நினைச்சால் எதாவது பண்ணலாம்.”

“நிலைமை என்னையும் மீறிட்டு அண்ணி! பாமாவும் சந்திரனும் ஒருவர ஒருவர் மனசார விரும்புறாங்க. இப்போ நம்ம விருப்பத்த அவங்க விருப்பம் விழுங்கிட்டு. கவலப்படாதிங்க, ஒங்க தங்கச்சிக்கு நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறது என்னோட பொறுப்பு.” கனகம், தலையில் கை ஊன்றிக்கொண்டாள். புருஷன் மீது லேசாகச் சாய்ந்துகொண்டாள். ஒப்பாரி வைக்காத குறையாக முழங்கினாள்.

“எனக்கு அப்பவே தெரியும். அவ தளுக்கி மினுக்கும் போதே தெரியும். பட்டணத்து முண்ட, அவள் புத்தியக் காட்டிட்டாள். சினிமாக்காரி மாதிரி வந்து, வீட்டயே சினிமா கொட்டகயா மாத்திட்டா, பாவி மனுஷா! ஏன் இப்படி கல்லு மாதுரி இருக்கியரு? படிச்ச வீட்டு சம்பந்தம் வரப்போவுது. எல்லாரும் ஒம்ம தலையில மிளகாய் அரைக்கப் போறாவ. நீரு தலய நீட்டும். நீரு மாடா உழச்சி நாயா திரியுறியரு. ஒம்ம தம்பியும் அந்த சினிமாக்காரியும் ஒய்யாரமாச் சுத்தப் போறாவ! பாவி மனுஷனுக்கு வாக்கப்பட்டு பாழாப் போயிட்டேனே.... பாழாப் போயிட்டேனே...”

அருவருப்படைந்த மணிமேகலை, வேகமாக எழுந்து அதிவேகமாக வெளியே வந்தாள். அங்கே கனகம் பேசுவதைக் கேட்டுக்கொண்டு, கல்லாய் சமைந்தவர்கள் போல் பாமாவும் சந்திரனும் நின்றார்கள். சந்திரன், முதல் தடவையாகக் கோபப்பட்டு முன்னேறப் போனான்.

இதற்குள் தபால்காரர் வந்து ஒரு தந்தியைக் கொடுத்தார். இதனால் சந்திரன் ஆவேசம் தணிந்து நின்றபோது, தந்தியைப் பிரித்துப் படித்த மணிமேகலை திகைத்து நின்றாள்.