இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 2
அந்த ஊரும், அதன் ஏரியும், மாந்தோப்பும், வாழைத்தோப்பும், எலுமிச்சை மரங்களில் பட்டு அதன் பழங்களில் உராய்ந்து, வாசனையுடன் வரும் காற்றும்... கல்லூரிக்காரியான பாமாவிற்குப் பிடித்துவிட்டது. குறிப்பாக, ஏரிக்கருகே உள்ள தென்னந்தோப்பும், அந்தத்
சு. சமுத்திரம் + 25
தோப்புக்கருகே மொய்த்திருந்த கரும்புத் தோட்டத்தில் கரும்பை ஒடித்து சந்திரன் கொடுக்கும் நேர்த்தியும், அவளுக்கு அவனிடம் பிடி கொடுக்க வேண்டும் என்கிற அளவுக்குப் பிடித்துவிட்டது. ஊர் விவரங்களோடு, உலக விவரங்களையும் தெரிந்துவைத்திருந்த அவனும், அவள் உணர்ச்சிகளைப் போற்றுபவன் போல் நடந்து கொண்டான்.
அரக்கோணத்திலேயே பிறந்து வளர்ந்து, அங்கே வீசும் தொழிற்சாலையின் கரித்தூள்களை சுமந்து வரும் காற்றாலும், சென்னைக் கல்லூரி விடுதியில், உஷ்ணத்தை உக்கிரப்படுத்தும் காற்றில் வெந்தும் நொந்தும் போயிருந்த பாமா, அந்தக் கிராமத்துக் காற்றில், தங்கு தடையில்லாமல் குமண வள்ளலைப்போல் வீசிய காற்றில் குளிப்பவள்போல், தன்னை மறந்து தலைமுடியை விரித்து அப்படியே மெய்மறந்து நின்றிருக்கிறாள். ஒரு வாரப் பொழுதும் அவளுக்கு ஒரு நாளாகப் பறந்தது.
ஆகையால் அன்றும், பொழுது சாய்கிற சமயத்தில், 'மாட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்த இடத்திலிருந்தே கைவிரித்த மணிமேகலையின் கைகளைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, அவளையும் வலுக்கட்டாயமாக தென்னந்தோப்பை நோக்கி நடக்க வைத்துவிட்டாள்.
இருவரும் ஏரிக்கரை மீது நடந்துகொண்டிருந்தார்கள். மணிமேகலை 'ஒருமாதிரி' இருந்தாள். பாமா கேட்பதற்கு மட்டுந்தான் பதில் சொன்னாளே தவிர அவளாகப் பேசவில்லை.
"ஏன் அண்ணி ஒரு மாதிரி இருக்கிங்க?"
"நான் எங்கே இருக்கேன்? நடக்கல்லா செய்யுறேன்..."
"சும்மா சிரிச்சி மழுப்பாண்டாம். நீங்க செயற்கையாச் சிரிக்கதுக்கும் இயற்கையா சிரிக்கதுக்கும் முகத்துல வித்தியாசம் தெரியும்."
26 + இல்லம்தோறும் இதயங்கள்
"எப்படி?”
"செயற்கையாச் சிரிக்கும்போது, ஒங்க புருவம் உயரும். உதடு குவியும். கன்னம் உப்பும். இயற்கையா சிரிக்கையில, புருவம் வளையும். பல்லெல்லாம் சிப்பிக்குள்ள இருக்கிற முத்துமாதிரி ஜொலிக்கும். அதுசரி, ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க? எங்க அண்ணிக்கு ஒண்ணுன்னால், எனக்கு ரெண்டாக்கும்..."
"ஒண்ணுமில்ல.... ஒங்க அண்ணாவ நினைச்சேன். மனசுக்குக் கஷ்டமா இருக்கு. இதுதான் எங்களோட முதல் பிரிவு. இப்படி ஒரு வாரம் வரைக்கும் பிரிஞ்சதில்ல. பாவம் என்ன பண்ணுறாரோ?”
"அண்ணன் குழந்தையில்ல அண்ணி."
"ஒனக்குத் தெரியாது. சாயங்காலம் பேக்டரியில் இருந்து வீட்டுக்கு வரும்போது டயர்டாய் வருவாரு. உடம்பு வலிக்குது, தலை சுத்துதுன்னு சொல்லுவார். நான் பயந்துபோய் பிளட் பிரஷ்ஷரா இருக்குமோ? சர்க்கரை வந்திருக்குமோன்னு நினைப்பேன். கடைசில பார்த்தால் மத்தியானம் சாப்பிட மறந்திருப்பார். ஓ மை காட்... லஞ்ச் சாப்பிடல'ன்னு சின்னப்பிள்ளை மாதிரி சிரிப்பாரு, இப்போ.. என்ன பண்ணுறாரோ? ஒன்கிட்ட சொல்ல வெட்கமா இருக்கு... யாருகிட்டயும் சொல்லமாட்டீயே?”
"சும்மா சொல்லுங்க அண்ணி.”
"இப்படித்தான் ஒரு நாளு."
பாமா, மைனாக்குருவி மாதிரி கழுத்தை நீட்டி, 'இப்படித்தான்', 'எப்படித்தான்' ஆகிறது என்பதைப் பார்க்க முடியாவிட்டாலும், கேட்கலாம் என்ற நப்பாசையுடன் நடந்தபோது, எதிர்ப்பக்கமாக நடந்துவந்த வாலிபன்
சு. சமுத்திரம் + 27
முண்டாப்பனியனும், முரட்டு மீசையும் வைத்திருந்த அவன் "மணிமேகலை... சுகமா இருக்கியா? பொழுது சாய்ந்த நேரத்துலயா கம்மாவுக்கு போறது?" என்றான். ஏழ்மையை கம்பீரமாக ஏற்றுக்கொண்டிருப்பதுபோல் தோன்றிய அவனைப் பார்த்து பாமாவுக்கு லேசாக எரிச்சல்கூட ஏற்பட்டது. ஆனால் எட்டாவது வகுப்புவரை பள்ளித் தோழனாகவும், பள்ளியிலேயே முதலாவதாக வந்தும், பணவசதி இல்லாமல் படிக்க முடியாமல் போன அந்த ரத்தினத்தை (பெயரே அதுதான்) பார்த்ததும் மணிமேகலை அங்கேயே நின்றாள். பல் தெரியச் சிரித்து நின்றாள்.
"என்ன ரத்தின அண்ணன்... என்னை வந்து பார்க்கணுமுன்னு ஒனக்குத் தோணல பாத்தியா?”
"இதே கேள்வியை நானும் ஒன்கிட்டே கேட்கலாம் இல்லியா?"
"அப்படீன்னா... நான் ஒன்னை மறந்துட்டால் நீயும் என்னை மறந்துடுவே இல்லியா?”
"சும்மா தமாஷுக்குச் சொன்னேன். என் தங்கச்சிய, பள்ளிக்கூடத்துல தனக்கு வாங்குன நோட்டையும் சிலேட்டையும் எனக்குத் தந்த தங்கச்சிய, நான்தான் முதல்ல பார்க்கணும். அதுதான் முறை. ஆனால் முறை தெரியாத ஒன் அண்ணனால, வரமுடியாமப் போச்சு."
“விவரமாச் சொல்லு."
"ஒண்ணுமில்லம்மா... நான் விவசாயச் சங்கம் வச்சா ஒங்க அண்ணனுக்கு என்னம்மா? அரசாங்கம் கொடுக்கச் சொல்ற குறைந்த பட்சக் கூலி ரூ.7-25ஐ கேக்கறதுக்கும், குத்தகை சட்டத்தை அமல் செய்யுறதுக்கும் சங்கம் வச்சிருக்கோம், 'பள்ளுப் பறையன்களோட ஒனக்கென்னடா வேல' என்கிறார். பள்ளுப் பறையன்கள் மனுஷங்க
28 * இல்லம்தோறும் இதயங்கள்
இல்லியா? எல்லாம் ஒங்க அய்யா முகத்துக்காவ பார்க்கோம். இல்லன்னா சங்கதி வேற..."
"கடைசிவரைக்கும் அதையே பாரு..."
"எதுக்கும் ஒரு அளவு உண்டும்மா. இவருகிட்ட அடியாள் இருந்தால், எங்கிட்ட விவசாயத் தொழிலாளிங்க இருக்காங்க, ஒங்கண்ணன் சேரில குடிக்கப் போவலாம். நான் சேரில போயி, பணக்காரங்க ஒண்ணாச் சேருறது மாதிரி நாம ஏழைங்க ஒண்ணாச்சேரணுமுன்னு சொல்லப் போவக்கூடாதா? இப்போ நாட்ல ஹரிஜனங்களுக்கு, ஐயருங்க புகலிடம் கொடுக்கிறதும், புகலிடமாகிறதுமான காலம் வந்திருக்கு. ஒங்க அண்ணனோட கெட்ட காலம், அவரு இன்னும் அந்தக் காலத்தைப் புரிஞ்சிக்கல. அத புரிய வைக்க எவ்வளவு நேரமாயிடும்? நேற்று டிராக்டர் ஒட்டுன ராமசாமிய கை நீட்டி அடிச்சாராம். போனவாரம் பனையேறுற மாடக்கண்ணுவ செருப்பால அடிப்பேன்னாராம். அவராவது புதுச் செருப்ப, நல்ல செருப்ப வச்சி அடிக்கலாம். இவங்க பழைய செருப்ப வச்சி அடிப்பாங்க. நீ தப்பா எடுக்கப்படாது தங்கச்சி. வயிறு எரியுது. சரி உன் விவகாரத்தைச் சொல்லு, உன் பேக்டரியில தொழிலாளிங்களுக்கு சம்பளம் எப்படி?”
மணிமேகலை, ஏரி மடை ஒன்றில் உட்கார்ந்து, ஏதோ பேசப் போனாள். பாமாவுக்குப் போரடித்தது. அண்ணி இப்போது நகரமாட்டாள் என்பதை அனுமானித்துக் கொண்ட பாமா, ஒரளவு அதற்குச் சந்தோஷப்பட்டவள் போல், "அண்ணி, எனக்குப் போரடிக்குது. நான் தோட்டத்துக்குப் போறேன். நீங்க வாங்க" என்று சொல்லி விட்டு, அவள் எங்கே "நானும் வாரேன்” என்று சொல்லி விடுவாளோ என்று பயந்தவள் போல, அப்படி அவள் சொன்னால்-அந்த வார்த்தைகள் கேட்காத தொலைவிற்குப் போகவேண்டும் என்று நினைத்தவள்போல பாமா திரும்பிப் பாராமலே நடந்தாள்.
சு. சமுத்திரம் + 29
தென்னந்தோப்பு வரப்பு வழியாக-புல் மெத்தை விரித்த, வெட்டுக் கிளிகள் துள்ளி ஓடிய, வண்ணத்துப் பூச்சிகள் அள்ளிப் பருகும் மலர் கொண்ட அந்தத் தோப்புக்குள் நடந்தபோது, தோப்புக்கும் கரும்புத் தோட்டத்திற்கும் இடையே இருந்த வரப்பில், அவள் எதிர்பார்த்ததுபோல் சந்திரன் உட்கார்ந்திருந்தான். பாமாவுக்கு பயமாக இருந்தது. படபடப்பாக இருந்தது. தயக்கமாகவும் இருந்தது. சந்தோஷமாகவும் இருந்தது. மாநிறம் என்றாலும் கவர்ச்சியுடனும் கட்டான உடம்புடனும், எல்லாவற்றிற்கும் மேலாக இதுவரை கோபப்பட்டுப் பார்த்தறியாத குணபாவத்துடன் சிரித்த முகத்துடன் விளங்கும் அவனை இப்போதுதான் தனிமையில் சந்திக்கிறாள். கடந்த ஒருவார காலமாக பலர் நடுவே, அவனை வம்புக்கிழுத்தும், வக்கணை சொல்லியும் வாதாடியும், நிமிடத்திற்கு அறுபது வார்த்தைகள் பேசிய அவள், இந்த இரண்டு நிமிட நேரத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசமுடியாமல்-பேசத் தெரியாமல் அவனருகே நடந்தாள்.
டிரான்ஸிஸ்டர் ரேடியோவைக் கேட்டுக்கொண்டிருந்த அவன், அதை 'ஆப்' செய்துவிட்டு, 'அக்காவ எங்கே' என்றான். பாமாவால் பேச முடியவில்லை. கையைத் துக்கி ஏரிக்கரையைக் காட்டினாள். அவன் புரியாதவன் போல் உதடுகளை கோணலாக்கியபோது "யாரோ ரத்தினமாம்... அந்த ஆள்கூட பேசிக்கிட்டிருக்காங்க. வந்துட்டேன்” என்றாள்.
இருவருக்குமே, எதுவும் பேசத் தெரியவில்லை. சொல்லப் போனால் சந்திரன்தான் அவளைவிட அதிகமாக நாணினான். கோணினான். பிறகு, கரும்பு ஒன்றை ஒடித்து மூன்று துண்டாக்கி, ஒரு துண்டை வாயில் வைத்து பட்டையை உரித்துவிட்டு, அவளிடம்
30 + இல்லம்தோறும் இதயங்கள்
கொடுத்தான். அவள் அதை வாங்காமலே "அரிவாள வச்சி சீவுனால் என்ன? எதுக்காக வாயில கடிக்கணும்?" என்று சொன்னதும் 'ஐ அம் ஸாரி' என்று சொல்லிக்கொண்டே அருகே கிடந்த அரிவாளை எடுத்தபோது, அவள் "பரவாயில்ல! கரும்ப வேஸ்டாக்கக் கூடாது” என்று சொல்லிக்கொண்டே உரித்த கரும்பை வாங்கிக் கொண்டாள்.
சந்திரனுக்கு, தைரியம் வந்தது. 'நீங்க' 'நீ'யாகும் அளவிற்குத் தைரியம் வந்தது.
"ஆமா... என்னை ஸ்டேஷன்ல பார்த்ததுமே அடையாளம் கண்டுட்டியே... ஒன்னால எப்படி முடிஞ்சுது?"
"எல்லாம் காமன் சென்ஸ்தான்." "காமன்னால் மன்மதன்னு ஒரு அர்த்தம் உண்டு.” பாமா, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.
அவனோ "அட! சும்மா சொல்லுங்க... சும்மா சொல்லு!” என்று கெஞ்சினான்.
"அண்ணி என் தம்பி, எஞ்ஜின் மாதிரி நிறம். அதாவது டிஸல் எஞ்சின் நிறம். ஒரு பல்லு தெத்துப் பல்லு. ஆனால் அதுவே அழகா இருக்கும். எப்போ பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டு இருப்பான். சிந்தனையே இல்ல என்கிற அளவுக்கு சிரிச்சிட்டு இருப்பான். கூடவே ஒரு கெட்ட பழக்கமும் உண்டு. எப்போ பார்த்தாலும் சட்டைக் காலரைப் பிடிச்சி தேய்த்துக்கிட்டே இருப்பான்னு சொல்லியிருக்காங்க. ஈலியா கண்டுபிடிச்சிட்டேன்."
சட்டைக் காலரைப் பிடித்துக் கழுத்தில் தேய்த்துக் கொண்டிருந்த அவன், திடுக்கிட்டு கையை எடுத்து சட்டைப் பித்தானில் பிடித்துக்கொண்டே, அவளைப் பார்த்தான். உற்றுப் பார்த்தான்.
தக்காளிப் பழ நிறம். கரும்புத் தோகை போல் அடர்த்தியான பின்னல். முன்பல்லில் ஒன்று பெரிது என்றாலும், தெத்து அல்ல. எத்தில்லாத முகம். கொஞ்சம் வளர்ந்திருக்கலாம்... நம்ம உயரத்துக்கு இது போதும்.
திடீரென்று அவன் "ஒங்க கன்னத்துல ஒரு மச்சம் இருக்கு போலுக்கு... இப்பத்தான் பாக்கேன்" என்றபோது, அவளும் அவனை இப்பத்தான் பார்ப்பது போல் பார்த்தாள்.
சிறிது தயக்கத்திற்குப் பிறகு, அவன் அவள் மோதிரக் கையைப் பார்த்துக்கொண்டே முன்னே குவிந்து பின்னால் வளைந்திருந்த மோதிரத்தைக் காட்டி "இந்த மோதிரத்துக்கு என்ன பேரு” என்றான்.
"வங்கி மோதிரம்."
“எனக்குத் தரப்படாதா?”
“சீ... லேடீஸ் தான் போடலாம். ஜென்ட்ஸ் போடக்கூடாது!"
"கையை நீட்டுங்க பார்க்கலாம். நான் இப்படிப்பட்ட மோதிரத்தை இப்பத்தான் பார்க்கிறேன்."
அவளும் 'இப்பதான்' கையை நீட்டினாள். அவன் மோதிரக் கரத்தை லேசாகப் பற்றிக்கொண்டே விரலை அழுத்தினான். விரல் கொண்ட உள்ளங்கையை அழுத்தினான். பாமாவின் பயம் படபடப்பான பேச்சாக மாறியது.
"எனக்கு இந்த ஊர்ல எல்லாமே பிடிச்சிருக்கு. பாரதியார் பாட்ல வருமே காணி நிலம். அந்தப் பாட்டு ஞாபகந்தான் எனக்கு வருது.”
"ஒனக்குத்தான் பட்டிக்காடுன்னா பிடிக்காதே?"
"நோ, நோ... ஐ அம் எ இடியட். பட்டிக்காட்டைப் பற்றி, நான்தான் கதை கட்டுரைங்கள படிச்சதால தப்பா நினைச்சுட்டேன். நகரத்தைவிட ஒருவகைல இங்கதான் நாகரிகம் பண்பாடே இருக்கு. சந்திரன்னு ஒரு பேரு கிராமத்துல இருக்குமுன்னு நான் நினைக்கக்கூட இல்ல. இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே அந்தப் பேரு இருக்குதுன்னா, அது பெரிய விஷயம். ஆமா, உங்க பேரு நிஜமாகவே சந்திரன்தானா?”
“பின்னே என்னவாம்? எங்கப்பா இதைவிட நல்ல பேரு வைக்கணுமுன்னு சொன்னாராம். அம்மாதான் சந்திரன்னாங்களாம்.”
“பொய்! சுத்தப் பொய்! இவன் பேரு ஹரிச்சந்திரன். இவனே ஹரியை இன்னொரு அவதாரம் எடுக்கச் சொல்லிட்டு, சந்திரன்னு எஸ். எஸ்.எல்.சியில் மாத்திக்கிட்டான்.”
இருவரும் திடுக்கிட்டுத் திரும்பியபோது, மணிமேகலை அங்கே சிரித்துக்கொண்டு நின்றாள். சந்திரனுக்கு, தான் பற்றி இருந்த மோதிரக்கையை விட வேண்டும் என்ற சுரணை வரவில்லை. பாமாதான் தன் கையை வன்முறைப் பிரயோகத்தால் விடுவித்துக் கொண்டு கையை நான்கைந்து தடவைகள் உதறினாள். மணிமேகலை மேலும் சிரித்தாள். பாமாவைப் பார்த்துக்கொண்டே, “என்ன பண்றது... காதல்னு வந்துட்டால் ஹரிச்சந்திரன் கூட பொய் சொல்லுவான் போலுக்கு... ஆனால் இது பாசத்தால் வந்த பொய். நன்மை ஏற்படுறதாய் இருந்தால் பொய் சொல்லலாமுன்னு திருக்குறள்ல படிச்சிருக்கோம். இவன்... படித்தபடி நடக்கிற பையன்” என்றாள்.
“சின்ன விஷயத்துக்கா பொய் சொல்றது” என்று பாமா சிணுங்கியபோது, “ரொம்பவும் அலட்டிக்காதம்மா.. ஒரு காலத்துல ஹரிச்சந்திரன்மாதிரி நடக்கிறவங்களப் பார்த்துச் சிரிச்சாங்க. இப்போதான் காலம் முன்னேறிட்டே. ஹரிச்சந்திரன் என்கிற பேரை வச்சிருக்கிறவங்களைப் பார்த்து சிரிக்கிற அளவுக்கு முன்னேறியிருக்கு. இருந்தாலும் நீ இப்படி கையை நீட்டியிருக்கக் கூடாது.”
“அவருதான் இந்த மோதிரத்தைப் பார்க்கலானார்.”
“டேய் சந்திரா... ஹரிச்சந்திரா... நீ இந்த வங்கி மோதிரத்தைப் பார்த்ததே இல்லியா? எனக்குப் போன வருஷம் இதேமாதிரி வாங்கித் தாரேன்னு சொன்னே. நான் வேண்டாமுன்னு சொன்னேன்... ஞாபகம் இல்லியாடா?”
இருவரும் ஞாபகப்பிரக்ஞை இல்லாதவர்கள்போல் தங்கள் தலைகளை, தங்கள் கைகளாலேயே உருட்டியபோது, மணிமேகலை பல் தெரியச் சிரித்து, பாநயம் போல் பேசினாள்.
“கவலப்படாதிங்க என் பிரச்னையும் முடிஞ்சிட்டதுல எனக்கு சந்தோஷம். என் பையனோட ஜாதகத்தைப் பார்த்த ஜோஸ்யர், என் மவன் ஒண்ணு தாய்மாமா மகளைக் கட்டுவான். இல்லன்னால் அத்தை மகளைக் கட்டுவான்னு சொன்னாரு. கடைசி காலத்துல நானும் அவரும் ‘அத்த பொண்ணா, மாமா பொண்ணா’ன்னு சண்டை போட வேண்டியதிருக்குமோன்னு பயந்தேன். இப்போ பிரச்னை தீர்ந்துட்டு.”
சந்திரனும், பாமாவும் நாணத்துடன் அவளைப் பார்த்தார்கள். மணிமேகலை, தாயின் கருணையுடன் அவர்களைப் பார்த்துக்கொண்டே பேசினாள்.
“நான் ஒங்க இரண்டு பேரையும் இணைத்து வைக்கறதுக்கு பெரியவங்ககிட்ட சொல்லப் போறேன். சம்மதந்தானே ? வாயைத் திறந்து சொன்னால்தான் ஏற்பாடு பண்ணுவேன்.” “அக்கா” என்று அவனும், “அண்ணி” என்று அவளும், மணிமேகலையின் இரு கரங்களையும் அழுந்தப் பற்றிக் கொண்டார்கள். வாய்கள் பேசாததை, கைகள் ஆணித்தரமாகப் பேசின.