உள்ளடக்கத்துக்குச் செல்

இல்லம்தோறும் இதயங்கள்/பதிப்புரை

விக்கிமூலம் இலிருந்து

பதிப்புரை

மூகப் பிரச்னைகளையும், அரசியல் அவலங்களையும், அதிகாரிகளின் அத்துமீறல்களையும் நிர்வாக அமைப்புகளின் சீர்கேடுகளைப் பற்றியும் சிரிப்பாகவும், சீறிப் பாய்ந்தும், நலிந்தோர், மெலிந்தோர், வறியோர், வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றியுமே நிறைய தன் கதைகளில் எழுதிவரும் சமுத்திரம் அவர்கள் “இல்லம்தோறும் இதயங்கள்” நாவலில் குடும்பப் பாங்கான கதையோட்டமாக அமைத்து, குடும்ப உறவு மனிதர்கள் சிலரின் குரூர மனங்களை உரசி உறைத்துக் காட்டுகிறார்.

குணக்குன்றான ஒரு இளம் தாய், பிறந்த வீட்டாராலும், புகுந்த வீட்டாராலும், கணவனாலும் பாராட்டப்படும் புகழ் வாழ்வு வாழ்ந்து வந்தவள், ஒரு நோயால் பாதிக்கப்படும் போது கணவனாலும், கணவன் வீட்டு குடும்பத்தாராலும் எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறாள், சீரழிக்கப்படுகிறாள் என்பதைப் படிக்கும்போது கண்கள் குளமாகின்றன. மனித நேயமில்லாமல் இந்த மனிதர்கள் நடந்துகொள்ளும் விதம் நெஞ்சை வெடிக்கச் செய்கிறது.

கடவுள், உலகின் பாவங்களைத் தாங்குவதற்கு தைரியசாலிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் சுமக்கக் கொடுப்பாராம். அப்படிப்பட்ட பாவங் களைச் சுமக்கும் ஒரு பெண்ணின் கண்ணீர்க் காவியம்தான் ‘இல்லம்தோறும் இதயங்கள்’ நாவல்.

இந்நாவலைப் படிக்கும் வாசகர்கள் மனதில் ஒரு கனமான சுமையை இறக்கிவிடுகிறார் ஆசிரியர். பெண்மைக்கு துரோகமிழைக்க நினைப்பவர்களுக்கு சவுக்கடி கொடுப்பதுபோல் அவர் எழுத்து பெண்ணினத்துக்கு ஒரு பாதுகாப்புக் கேடயமாய் அமைந்துவிடுகிறது.

பெண்மைக்கு பெருமை சேர்க்கும் இந்த நல்ல நாவலை வெளியிடுவதில் கங்கை புத்தக நிலையம் பெருமை கொள்கிறது.

கங்கை புத்தக நிலையத்தார்