இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெருமைக்குரிய பெரியார்

விக்கிமூலம் இலிருந்து

பெருமைக்குரிய பெரியார்

இதுவரை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகப் படித்தோம். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? பெரியார் பல போராட்டங்களை நடத்தினார் சங்கிலித் தொடர்போல அவர் நடத்திய போராட்டங்கள் அமைந்தன.

வகுப்புரிமைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், இராமர் படம் எரிப்புப் போராட்டம், நீதி மன்றக் கண்டனப் போராட்டம், கம்பராமாயணத்தைக் கொளுத்தும் போராட்டம், பிராமணாள் ஓட்டல் என்ற பெயரை அகற்றும் போராட்டம். இப்படித் தம் வாழ்நாள் முழுவதும் போராடிப் போராடி வெற்றி பெற்றார்.

இவற்றிலிருந்து நாம் அறிவது என்ன? பெரியார் தமிழ்மக்களின் இழிவைத் துடைத்து ஏற்றம் தரவே இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார். இங்கு யாரும் இந்த முயற்சியைச் செய்யாததால் தான் என் கடமையாக ஏற்றுக் கொண்டு செய்தேன் என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

தீண்டாமை ஒழிய வேண்டும். தாழ்த்தப் பட்டோர் மக்களாக நடத்தப்பட வேண்டும்.

மக்கள் எல்லாரும் சமமாக வாழ வேண்டும். ஒருவரை யொருவர் ஏமாற்றியோ சுரண்டியோ வாழக் கூடாது.

சட்டமன்றம், நீதிமன்றம் ஆகியவை மக்கள் நல்வாழ்வுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மக்களை மோசம் செய்பவர்களுக்குத் துணையாய் இருக்கக் கூடாது.

இப்படிப்பட்ட நல்ல எண்ணங்கள் படைத்தவர் பெரியார்.

தந்தை பெரியாரை நாம் இழந்த நாள் 24- 12– 1973.

டில்லியிலும், உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும், மகாராஷ்டிராவிலும், வங்காளத்திலும், குஜராத்திலும், ஆந்திராவிலும் கேரளாவிலும் இப்படி மற்ற மாநிலங்கள் அனைத்திலும் உள்ள தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பெரியாரை நன்றியோடு நினைக்கிறார்கள். அவர் தங்களுக்காகப் போராடியதை எண்ணி அவரைப் பெருமைப் படுத்துகிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் இன்று உள்ள அரசு 'பெரியார் சதுக்கம்' என்ற ஒர் இடத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய அயந்து பெரும் தலைவர்களுக்குச் சிலை வைத்துப் பெருமைப்படுத் தியது. அதில் நம் பெரியாரும் ஒருவர்.

இன்று நம் தமிழர் தலைவராக விளங்கும் தளபதி வீரமணி அவர்கள், ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத்தினருடன் சென்று. அந்த விழாவில் கலந்து கொண்டு, அந்த மக்களின் நன்றி உணர்வைக் கண்டு பூரித்துப் போய்விட்டார்.

இப்படி நாடெல்லாம் போற்றும் பெரியாரை நாமும் போற்றுவோம்.

அவர் காட்டிய வழியில் நின்று, கடவுள். மதம், சாதி, வேதம், புராணம், சாஸ்திரம் ஆகிய தீமைகளை ஒழித்துக் கட்டுவோம். அறிவு வழி நடப்போம்.

மக்கள் யாவரும் சமம் என்ற எண்ணத்தோடு யாவரும் ஒன்றாக ஒற்றுமையாக நன்றாக வாழுவோம்!

வாழ்க பெரியார்!
வாழ்க மாந்தர் நேயம்!
வாழ்க தமிழ்நாடு!