இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்/ஒரு பிடி கடுகு
2. ஒரு பிடி கடுகு
கெளதமைக்குத் தன் குழந்தை மேல் அளவு கடந்த அன்பு உண்டு. இரண்டு வயதுள்ள ௮க்குழந்தையின் நகைப்பும், களிப்பும் அவளுக்கு மகிழ்ச்சியை ஊட்டின. அதன் ஓட்டமும், ஆட்டமும் அவளுக்குப் பெருங்களிப்பை யுண்டாக்கின. அதனுடைய மழலைப் பேச்சு அவள் காதுகளுக்கு இனிய விருந்து. களங்கமற்ற அக்குழந்தையின் இனிய முகம், அவள் கண்களுக்கு ஆனந்தக் காட்சி. அந்தக் குழந்தைதான் அவளுக்கு நிறைந்த செல்வம். அதற்குப் பால் ஊட்டுவதில் பேரின்பம். ௮க்குழந்தையை அவள் கண்மணி போல் கருதிச் சீராட்டிப் பாராட்டி, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தாள்.
மற்றைக் குழந்தைகளுடன், தன் குழந்தையையும் விளையாட விட்டு மகிழ்வாள். நாய், பூனை, காக்கை, கோழி, குருவி, ௮ணில் முதலியவற்றைக் காட்டி, அதற்கு மகிழ்ச்சியூட்டுவாள். வானத்தில் நிலவைக் காட்டி, அதை அழைக்கச் சொல்வாள். பாட்டுகள் பாடித் தூங்க வைப்பாள். தலை நிறையப் பூக்களைச் சூட்டுவாள். விளையாடுவதற்குப் பொம்மைகளை வாங்கித் தருவாள். அக்குழந்தை அவளுக்கு உயிராக இருந்தது. முதற் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கு இஃது இயற்கைதானே!
வளர்பிறை போல வளர்ந்த ௮க்குழந்தைக்கு, ஒரு நாள் நோய் கண்டது. கெளதமை மனவருத்தம் அடைந்தாள். மருத்துவர்களைக் கொண்டு, மருந்து அளித்தாள். ஆனால், நோய் அதிகப்பட்டது. கடைசியில், ௮ந்தோ! ௮து இறந்து விட்டது. கெளதமை பெருந்துயரம் அடைந்தாள். தன் குழந்தையைப் பிழைப்பிக்க வேண்டும் என்று விரும்பினாள். “என் கண்மணி பிழைக்க மருந்து கொடுப்போர் இல்லையோ” என்று அரற்றினாள்.
இறந்த குழந்தையைத் தோள் மேல் வளர்த்திக் கொண்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம், “குழந்தையைப் பிழைப்பிக்க மருந்து கொடுப்போர் யாரேனும் இருக்கிறார்களா?” என்று கேட்டாள்; இவள் நிலைமையைக் கண்டு எல்லோரும் மனம் இரங்கினார்கள்; பரிதாபப்பட்டார்கள்; “அம்மா! செத்தவரைப் பிழைப்பிக்க மருந்து இல்லை. வீணாக ஏன் வருந்துகிறாய்?” என்று ஆறுதலோடு அறிவுரை கூறினார்கள்.
கெளதமைக்கு : அவர்கள் கூறியது ஒன்றும் மனத்தில் ஏறவில்லை. எத்தனை பெரியவர்கள் இருக்கிறார்கள்! எத்தனை முனிவர்கள் இருக்கிறார்கள்! செத்தவரைப் பிழைப்பித்த முனிவர்கள் உண்டென்று கதைகள் கேட்டும், படித்தும் இருந்த கெளதமைக்குத் தன் குழந்தையைப் பிழைக்கச் செய்யும் பெரியவர்கள் கிடைப்பார்கள் என்று தோன்றியது. ஆகவே அவள் இறந்த குழந்தையைத் தோள் மேல் சார்த்திக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களிடம் “குழந்தைக்கு உயிர் கொடுப்பவர் எங்கிருக்கிறார்?” என்று கேட்டாள். எல்லோரும் “பாவம்! செத்த குழந்தைக்கு மருந்து கேட்கிறாள்; பைத்தியக்காரி” என்று. சொல்லி அவள் மேல் மனம் இரங்கினார்கள்.. அவர்களில் ஒருவராவது, இறந்த குழந்தைக்கு உயிர் கொடுக்கும் பெரியவரைக் காட்டவில்லை.
அறிஞர் ஒருவர் கெளதமையின் துயரத்தைக் கண்டார். இவளுடைய மனோநிலையை யறிந்தார். “அளவு கடந்த அன்பினாலே, இவள் மனம் குழம்பியிருக்கிறாள்; இந்த நிலையில், இவளுக்கு அறிவு புகட்டி, உலக இயற்கையைத் தெளிவுபடுத்துவது கடினம். இவளைக் கெளதம புத்தரிடம் அனுப்பினால், இவள் குணப்படுவாள்” என்று தமக்குள் எண்ணினார். ௮வர் கெளதமையிடம் வந்து, “அம்மா! உன் குழந்தைக்கு உயிர் கொடுக்கக் கூடியவர் ஒருவர்தாம் இருக்கிறார். வேறு ஒருவராலும் முடியாது. வீணாக இங்கெல்லாம் ஏன் அலைகிறாய்? நேரே அவரிடம் போ” என்று கூறினார்.
இதைக் கேட்டதும், கெளதமைக்கு மனம் குளிர்ந்தது. நம்பிக்கை பிறந்தது. “அவர் யார்? ஐயா! எங்கிருக்கிறார், சொல்லுங்கள்” என்று கேட்டாள்.
“அவர்தாம் பெருமான் புத்தர்; அவரிடம் போ,” என்றார்; இதைத் தெரிவித்ததற்காக அப்பெரியவருக்கு, அவள் வாயால் நன்றி கூற நேரமில்லை. அவள் அவருக்குத் தன் கண்களால் நன்றி கூறி விட்டு, மடமடவென்று நடந்தாள். பகவன் புத்தர் எழுந்தருளி இருந்து அறிவுரை கூறுகிற ஆராமம் அவளுக்குத் தெரியும். ஆகவே, அவள் ஆராமத்தை நோக்கி விரைவாக நடந்தாள்; இல்லை, ஓடினாள். ஓடோடி வந்து, ஆராமத்தை அடைந்தாள். ஆராமத்தில் கெளதம புத்தர் எழுந்தருளியிருக்கும் கந்தகுடிக்குள் நுழைந்தாள். அவர் காலடியில் குழந்தையை வளர்த்தி விட்டுத் தானும், அவர் காலில் வேரற்ற மரம் போல விழுந்து வணங்கினாள். “தலைவரே! என் குழந்தைக்கு உயிர் கொடுங்கள்” என்று கதறினாள்.
புத்தர் பெருமான் இறந்த குழந்தையையும், கெளதமையின் மன நிலைமையையும் உடனே உணர்ந்து கொண்டார். “குழந்தாய் எழுந்திரு” என்று அருளினார். அவர் குரலில் தெய்வத் தன்மை உடைய ஓர் அமைதி இருந்தது. கெளதமை எழுந்து நின்றாள்.
“உன் குழந்தை இறந்து விட்டதா? அதற்கு உயிர் கொடுக்க வேண்டுமா? நல்லது மருந்து கொடுக்கிறேன். கொஞ்சம் கடுகு கொண்டு வா.”
“இதோ கொண்டு வருகிறேன்” என்று கூறிப் புறப்பட்டாள்.
“குழந்தாய்!” என்று கூப்பிட்டார் புத்தர். கெளதமி திரும்பி வந்து, “இன்னும் ஏதேனும் கொண்டு வர வேண்டுமோ?'” என்று வினவினாள். அவளுக்குத் தன் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்னும் நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.
“வேறு ஓன்றும் வேண்டாம். ஒரு பிடி கடுகு மட்டும் வேண்டும். ஆனால், கொண்டு வரும் கடுகு, யாரும் சாகாதவர் வீட்டிலிருந்து கொண்டு வர வேண்டும். ஆணோ, பெண்ணோ, பெரியவரோ, சிறியவரோ இன்றைய வரையில் ஒருவரும் சாகாதவர் வீட்டிலிருந்து வாங்கிக் கொண்டு வரவேண்டும். தெரிகிறதா……?”
“அப்படியே, இதோ கொண்டு வருகிறேன்.”
“குழந்தையைத் தூக்கிக் கொண்டு போ—கடுகுடன் குழந்தையைக் கொண்டு வா.”
கெளதமி இறந்த குழந்தையைத் தூக்கித் தோளில் சுமந்து கொண்டு, விரைவாக நகரத்திற்குள் சென்றாள். நகரையடைந்தவுடன், முதல் வீட்டில் சென்று, “ஒரு பிடி கடுகு வேண்டும்” என்று கேட்டாள். வீட்டுக்காரி உடனே சென்று, கடுகு கொண்டு வந்து கொடுத்தாள். அப்போது கெளதமி, “அம்மா! உங்கள் வீட்டில் இதற்கு முன், யாரேனும் இறந்திருக்கிறார்களா?” என்று கேட்டாள்.
“ஏனம்மா கேட்கிறாய்? என் மாமனார் இறந்தார்; என் மாமியார் இறந்தார். இவர்களுக்கு முன்பு, இவர்கள் தாய், தந்தையர்கள் இறந்தார்கள்” என்று ௮வ்வீட்டுக்காரி கூறினாள்.
“அப்படியானால் கடுகு வேண்டாம்,” என்று சொல்லித் திருப்பிக் கொடுத்து விட்டு, அந்த வீட்டை விட்டு, அடுத்த வீட்டிற்குச் சென்றாள். அந்த வீட்டுக்காரியும் கடுகு கொடுத்த போது “உங்கள் வீட்டில் யாரேனும் செத்திருக்கிறார்களா?” என்று கேட்டாள் கெளதமை.
“போன வாரம் எங்கள் வீட்டு வேலைக்காரன் செத்துப் போனான்.”
“அப்படியானால், கடுகு வேண்டாம்; செத்தவர் வீட்டுக் கடுகு மருந்துக்கு உதவாது” என்று கூறி விட்டு, அடுத்த வீட்டிற்குள் நுழைந்தாள். :அவ்வீட்டுக்காரியும் கடுகு கொடுத்த போது, “உங்கள் வீட்டில் யாரேனும் இறந்திருக்கிறார்களா?” என்று வினவினாள். இதைக் கேட்டவுடன், ௮வ்வீட்டுக்காரியின் கண்களில் நீர் தாரை தாரையாக வார்ந்தது. விம்மி, விம்மி அழுதாள். “ஐயோ! மூன்றாம் நாள்தானே என் மகள் இறந்து போனாள்; நல்ல வெண்கலச் சிலை போல இருந்தாளே” என்று அழுதாள். “அப்படியானால் கடுகு வேண்டாம்” என்று கூறி விட்டு, அடுத்த வீட்டிற்குச் சென்றாள்.
இப்படியே, அந்தத் தெரு முழுதும், வீடு வீடாக நுழைந்து கேட்டாள். சில வீடுகளில், குழந்தைகள் இறந்திருந்தன. சில வீடுகளில், பெரியவர்கள் இறந்திருந்தார்கள். சில வீடுகளில், கட்டிளமை வயதுடையவர்கள் இறந்திருந்தார்கள். சில வீடுகளில் கருக்கொண்ட மகளிர் இறந்திருந்தார்கள். ஆனால், சாகாதவர் வீடு ஒன்றுமில்லை. கெளதமி அடுத்த தெருவில் நுழைந்தாள். ஒரு வீடு விடாமல் நுழைந்து, கடுகு கேட்டாள். சாகாதவர் வீடு ஒன்றேனும் இல்லை. பல தெருக்கள் சென்று, வீடு, வீடாகக் கேட்டாள். ஒரு வீடு கூட விடாமல், சென்று கேட்டுப் பார்த்தாள். வேண்டிய கடுகு கிடைத்தது; ஆனால், சாகாதவர் வீடுதான் கிடைக்கவில்லை.
அவளுக்கு அப்போதுதான் உண்மை புலப்பட்டது; சாகாத வீடு கிடைக்காது. ஆகவே தன் குழந்தை பிழைக்க, மருந்துக்குக் கடுகு கிடைக்காது என்பதை உணர்ந்தாள். ஆனால், ஏதேனும் ஒரு வீடாவது இருக்காதா என்ற ஆசை அவள் மனத்தில் இருந்தது. ஆகவே, அவள் அந்த சிராவத்தி நகரம் முழுதும், ஒரு வீடு விடாமல், நுழைந்து கேட்டுப் பார்த்தாள். சாகாதவர் வீடு கிடைக்கவே இல்லை. எல்லா வீடுகளும் செத்தவர் வீடுகள்தான். சூரியன் மறைந்தான்; இருள் சூழ்ந்தது. இருளைப் போக்க வீடுகளிலும், தெருக்களிலும் விளக்கேற்றினார்கள்.
கெளதமையின் மனத்தில் இருந்த மன மருட்சி—இறந்தவர் பிழைக்க மருந்து உண்டு என்னும் .அறியாமை—நீங்கி விட்டது. பிறந்தவர் எல்லோரும் இறக்கிறார்கள். அகவை முதிர்ந்தவர் என்பது மட்டும் அன்று. நடுத்தர அகவையுள்ளவர், கட்டிளைஞர், சிறுவர், குழந்தைகள் எல்லோரும் . இறக்கிறார்கள்- இறந்தவர் மறுபடியும் பிழைப்பது இல்லை என்கிற உண்மை அவள் மனத்தில் தோன்றிற்று. அவள் நேரே சுடுகாட்டிற்குச் சென்றாள். தன் தோள் மேலிருக்கும் குழந்தையின் உடலை அடக்கம் செய்தாள். பிறகு நேரே பெருமான் புத்தரிடம் வந்து அவர் காலில் விழுந்து வணங்கி, எழுந்து நின்றாள்.
“குழந்தாய்! கடுகு எங்கே?”
“கொண்டு வரவில்லை. கிடைக்கவில்லை.”
“ஏன்?”
“பெருமானே, நான் மட்டுந்தான் என் குழந்தையைப் பறி கொடுத்தேன் என்று தவறாக எண்ணினேன். என் குழந்தை மேல் இருந்த அன்பினாலே, இறந்த குழந்தையைப் பிழைக்க வைக்க, மருந்து இருக்கும் என்றும் தவறாக எண்ணினேன். தாங்கள் என்னுடைய மன நோய்க்கு, உண்மையான மருந்து கொடுத்துப் போக்கி விட்டீர்கள். உலகத்திலே சாகாதவர் ஒருவரும் இலர். (கணக்கெடுத்தால், செத்தவர் தொகைதான் மிகும், சாகாதவர் தொகை குறைவாக இருக்கும்.) குடும்பந் தோறும், நாடு தோறும், ஊர் தோறும் இருக்கிறவர் தொகையை விட, இறந்தவர் தொகைதான் அதிகம் என்பதை அறிந்து கொண்டேன்.”
கெளதமை இயற்கைச் சட்டத்தை அறிந்து கொண்டது மட்டும் அல்லாமல், அதற்கு மேற்பட்ட நல்ஞானத்தையடையும் செவ்வியடைந்திருப்பதையும் பெருமான் புத்தர் அறிந்தார். ஆகவே, அவர் இவ்வாறு அருளிச் செய்தார்:
“சாவு என்பது உயிர்களுக்கு ஏற்பட்டுள்ள நீக்க முடியாத சட்டம். அதனை மீற முடியாது. இயமன் என்னும் அரசன், சாவு என்னும் ஆணையைச் செலுத்தி, அரசியல் நடாத்துகிறான். அந்த ஆணையை, உயிர்களால் மீற முடியாது. மக்கள், மாடு, மனை முதலிய செல்வங்களில், மனஞ் செலுத்தி மகிழ்ச்சி கொண்டு, செய்ய வேண்டிய முயற்சிகளைச் செய்யாமல் மனிதர் இருப்பாரானால், தூங்கிக் கொண்டிருக்கும் போது, நாட்டைப் பெருவெள்ளம் அடித்துக் கொண்டு போவது போல, அவரைச் சாவு அடித்துக் கொண்டு போய் விடும்.”
இவ்வாறு, பெருமான் புத்தர், நிலையாமையையும், சாவையும் சுட்டிக் காட்டி, அறநெறியைக் கூறினார். இதனைக் கேட்ட கெளதமை, புத்தரை வணங்கித் தான் பெளத்த சங்கத்தில் சேர்ந்து, துறவு நெறியில் செல்லத் தன் மீது திருவுளம் கொண்டருள வேண்டுமென்று வேண்டினாள். பெருமான் அவளைப் பிக்குணிச் சங்கத்திற்கு அனுப்பித் துறவறத்தில் சேர்ப்பித்தார்.
துறவு பூண்ட கெளதமையார், புகழ்பெற்ற ஏழு புத்த மதப் பெண்மணிகளில் ஒருவராக விளங்கி, இறுதியில் வீடு பேறடைந்தார்.