இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்/வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே
3. வீட்டு நெருப்பை
அயலாருக்குக் கொடுக்காதே
கோசல நாட்டின் தலைநகரமான சிராவத்தி ந௧ரத்திலே மிகாரர் என்னும் செல்வச் சீமான் ஒருவர் இருந்தார். இவருடைய மகன் பெயர் புண்ணியவர்த்தன குமாரன். இவன் காளைப் பருவமடைந்து, திருமணம் செய்வதற்கு உரிய நிலையை அடைந்தான். ஆகவே, பெருஞ் செல்வராகிய மிகாரர் இவனுக்குத் திருமணம் செய்து வைக்க முனைந்தார். முதலில், புண்ணியவர்த்தன குமாரன் தனக்குத் திருமணம் வேண்டாம் என்று கூறினான். இஃது எல்லா இளைஞர்களும் வழக்கமாகக் கூறுகிற வெற்றுப் பேச்சு என்பதைச் செல்வர் அறிவார். ஆகையினாலே, தம் மகனுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாக, அவன் எப்படிப்பட்ட மங்கையை மணம் செய்ய விரும்புகிறான் என்பதை அறிந்து கொண்டார். ஐந்து சிறப்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற மங்கையைத்தான் மணம் செய்ய விரும்புவதாக அவன் தெரிவித்தான். ஐந்து சிறப்புகளாவன, மயிர் அழகு, சதை அழகு, எலும்பழகு, தோல் அழகு, இளமை ௮ழகு என்பன.
மயிர் அழகு என்பது, மயில் தோகை போன்று, அடர்ந்து, நீண்ட கூந்தலைப் பெற்றிருத்தல். கூந்தலை அவிழ்த்து விட்டால், ௮து கணைக்கால் வரையில் நீண்டு தொங்குவதோடு, நுனியில் மேற்புறமாகச் சுருண்டிருக்க வேண்டும். சதையழகு என்பது வாய், இதழ் கொவ்வைக்கனி (கோவைப் பழம்) போலச் சிவந்து, மென்மையாக இருத்தல். எலும்பழகு என்பது முத்துப் போன்ற வெண்மையான பற்கள் ஒழுங்காகவும், அழகாகவும், வரிசையாகவும் அமைந்திருத்தல். தோல் அழகு என்பது உடம்பின் மேனி அழகாகவும், செவ்வல்லி மலரைப் போன்று மென்மையாகவும் இருத்தல். இளமை அழகு என்பது பத்துப் பிள்ளைகளைப் பெற்ற போதிலும், ஒரே குழந்தை பெற்றவள் போல, உடம்பு தளராமல் இளமையோடு இருத்தல்.
இவ்விதமாக, ஐந்து பண்புகளும் ஒன்றாக அமையப் பெற்ற பெண்ணைத் தவிர, வேறு ஒருத்தியைத் தான் மணம் செய்ய முடியாதென்று அவன் திட்டமாகக் கூறினான். ஆகவே, இப்படிப்பட்ட தன்மை வாய்ந்த பெண் எங்கேனும் இருக்கிறாளா என்று செல்வர் தேடலானார். சிராவத்தி நகரம் முழுதும் தேடிப் பார்த்தார். மணமகள் கிடைக்கவில்லை. ஆகவே, அந்தணர் சிலரை அழைத்து, இப்படிப்பட்ட சிறப்புகளையுடைய மணமகள், நல்ல குலத்தில் பிறந்தவள், எந்த நாட்டிலாயினும் இருக்கிறாளா என்று தேடிப் பார்க்கும்படி அனுப்பினார். செலவுக்குப் போதிய பொருளைப் பெற்றுக் கொண்டு, அந்தணர்கள் பெண் தேடப் புறப்பட்டார்கள். நாடுகள் தோறும், நகரங்கள் தோறும் தேடிய பிறகு, சகேத நகரத்தையடைந்தார்கள்.
சகேத நகரத்திலே தனஞ்சயன் என்னும் செல்வர் ஒருவர் இருந்தார். அவருக்கு அளவற்ற செல்வம் இருந்தது. அவருக்கு ஒரே மகள் இருந்தாள். விசாகை என்னும் பெயருடைய அவர் மகள், மிகுந்த அழகுள்ளவள். அதனோடு புண்ணியவர்த்தன குமாரன் கூறிய ஐந்து அழகுகளும் வாய்க்கப் பெற்றவள். அவள் மணம் செய்வதற்கு உரிய அகவையடைந்திருந்தாள். அவள் ஒரு நாள் மாலை வேளையில், பொழுது போக்குக்காக, அந்நகரத்துப் பூஞ்சோலைக்குத் தன் தோழியர்களுடன் சென்றாள். அந்தச் சமயத்தில், மணமகளைத் தேடிச் சென்ற அந்தணர்கள், தற்செயலாக அந்தப் பூஞ்சோலைக்கு வந்தார்கள். வந்தவர்கள், விசாகையைப் பார்த்தார்கள்.
ஐந்து அழகும் பொருந்திய விசாகையைக் கண்ட போது, தாங்கள் தேடி வந்த மணமகள் கிடைத்து விட்டாள் என்ற மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் நகரத்தில் சென்று, விசாகையின் குலம், சுற்றம், செல்வம் முதலிய எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, நேரே சிராவத்தி நகரம் சென்று, மிகாரச் செல்வந்தனிடம், சகேத நகரத்து, தனஞ்சயன் என்ற செல்வரின் மகள் விசாகை, எல்லா அழகும் வாய்க்கப் பெற்றிருப்பதைத் தெரிவித்தார்கள்.
தம்மை விடச் சிறந்த செல்வரின் வீட்டில், தகுந்த மணமகள் இருப்பதைக் கேட்ட அவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். உடனே விலையுயர்ந்த பொருள்களைக் கையுறையாகக் கொடுத்துத் தகுந்த பெரியவர்களைத் தம் மகன் புண்ணியவர்த்தன குமாரனுக்குப் பெண் கேட்கும்படி அனுப்பினார். அவர்கள் சகேத நகரம் சென்று, தனஞ்சயச் செல்வரின் மாளிகையடைந்து, மணம் பேசினார்கள். தனஞ்சயச் செல்வர் தம் மகளைப் புண்ணியவர்த்தன குமாரனுக்கு, மணஞ்செய்து கொடுக்க ஒப்புக் கொண்டார்.
திருமணம், சகேத நகரத்திலே, மணமகள் மாளிகையிலே, திருவிழாவைப் போல வெகு சிறப்பாக நடந்தது. தனஞ்சயன் தம் மகள் விசாகைக்கு, அளவற்ற பொன்னையும், பொருளையும் ஏராளமான பசு மந்தைகளையும், பணிப்பெண்கள், பணியாளர்கள் முதலான ஊழியர்களையும் நன்கொடைப் பொருளாக வழங்கினார். சிறப்புகளும், விருந்துகளும் நடந்த பின்னர், மணமகனுடன், மணமகளைப் புக்ககத்திற்கு அனுப்பினார்கள்.
அனுப்புவதற்கு முன்பு, தனஞ்சயன் விசாகையை அழைத்து, அறிவுரைகள் கூறினார்: “அம்மா, விசாகை! நீ புக்ககத்தில் வாழ்கிற போது, நடந்து கொள்ள வேண்டிய சில முறைகள் உள்ளன. அவற்றைக் கூறுகிறேன்; உன்னிப்பாகக் கேள். கேட்டு, அதன்படி. நடந்து கொண்டால், நன்மையடைவாய்” என்று சொல்லி, அறிவுரைகளை வழங்கினார். அப்போது, விசாகையின் மாமனாராகிய மிகாரன் என்னுஞ் செல்வரும் அங்கிருந்தார். தனஞ்சயன் தம் மகளுக்குக் கூறிய அறிவுரைகள் இவை: “வீட்டு நெருப்பை, அயலாருக்குக் கொடுக்காதே. அயலார் நெருப்பை, வீட்டுக்குள் கொண்டு வராதே. கொடுக்கிறவர்களுக்குக் கொடு; கொடாதவர்களுக்குக் கொடாதே. கொடுக்கிறவர்களுக்கும், கொடாதவர்களுக்கும் கொடு. நகைத்துக் கொண்டு உட்காரு. நகைத்துக் கொண்டு சாப்பிடு; நகைத்துக் கொண்டு தூங்கு. எரி ஓம்பு. குல தெய்வங்களை வணங்கு.”
இவற்றைக் கேட்ட விசாகை, அவ்வாறே செய்வதாகத் தந்தையிடம் கூறினாள். அண்மையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த மிகாரச் செல்வருக்கு, இவை விளங்கவில்லை. “இவை என்ன பைத்தியம்! வீட்டு நெருப்பைக் கொடுக்காதே. அயல் நெருப்பைக் கொண்டு வராதே. நகைத்துக் கொண்டே. தூங்கு. இவையெல்லாம் என்ன கோமாளித்தனம்,” என்று தமக்குள் எண்ணினார். ஆனால், அப்போது அவர் ஒன்றும் பேசவில்லை.
விசாகை, மணமகனுடன் புக்ககம் வந்து சேர்ந்தாள். அவள் தன் கணவனுக்கும், மாமன், மாமிக்கும், மற்றவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை, முறைப்படி சரி வரச் செய்து கொண்டிருந்தாள். சில திங்கள் கழிந்தன.
ஒரு நன்னாள், விசாகையின் மாமனார் பொன் தட்டுகளிலே, சுடச் சுட நெய்ப் பொங்கலும், பால் பாயசமும் அருந்திக் கொண்டிருந்தார். விசாகை அண்மையில் நின்று, விசிறிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு பெளத்த பிக்கு[1] அவ்வீட்டில் பிச்சைக்கு வந்தார். மாமனார் அவரைக் கண்டும், காணாதவர் போல உணவை அருந்திக் கொண்டிருந்தார்.. பிச்சையை எதிர் பார்த்த, பிக்கு காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுதும், மாமனார் அவரைப் பாராதவர் போல இருந்து, உணவு கொள்வதில் கண்ணுங் கருத்துமாக இருந்தார்.
அப்போது விசாகை, பிக்குவைப் பார்த்து, “இப்போது போய் வா. மாமனார் பழைய சோறு சாப்பிடுகிறார்,” என்று சொன்னாள். பிக்கு போய் விட்டார். ஆனால், மாமனாருக்குக் கடுஞ்சினம் வந்து விட்டது. மருமகள் தம்மை இழிவு படுத்தியதாக நினைத்தார். உடனே, பொங்கலையும், பாயசத்தையும் உண்ணாமல் கையை உதறி விட்டு, பணியாளரை அழைத்து, “அடே! இதை எடுத்து விடுங்கள். இந்தப் பெண்ணை வெளியே பிடித்துத் தள்ளுங்கள்,” என்று கூவினார்.
விசாகை பெரிய இடத்துப் பெண். இந்தச் செல்வனை விடப் பன்மடங்கு செல்வத்தில் சிறந்தவரின் மகள் இவள். ஆகவே, அவளை வெளியே துரத்த ஒருவரும் துணியவில்லை. விசாகை மாமனாரை நோக்கி, “ஏன் மாமா, நான் வீட்டை விட்டுப் போக வேண்டும்! நான் செய்த குற்றம் என்ன?” என்று கேட்டாள்.
“போதும், வாயை மூடு. பழைய சோறு சாப்பிடுகிறேன் என்று சொல்லிப் பிச்சைக்காரன் எதிரில் என்னை இழிவு படுத்தவில்லையா நீ? வீட்டை விட்டு வெளியே போ, வாயாடிப் பெண்……” என்று உறுமினார்.
“நான் தங்களை இழிவு படுத்தவில்லை. உண்மையைத்தான் சொன்னேன். இதை நாலு பேர் தப்பு என்று சொன்னால், நான் வெளியே போகிறேன். யாரிடத்திலாவது சொல்லிப் பாருங்கள்” என்றாள் அப்பெண்.
மாமனாருக்குச் சினம் அடங்கவில்லை. ஆனாலும், சற்று எண்ணினார். இவள் செல்வன் வீட்டு மகள். வாளா விரட்டி அனுப்பி விட முடியாது. இவள் குற்றத்தைப் பலருக்கும் தெரியும்படி கூறி, அவளை அப்புறப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். ஆகவே, ஆட்களை அனுப்பி, ஐம்பெரும் குழுவினரை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்.
ஐம்பெருங் குழுவினர் வந்தார்கள். அவர்களிடம் மாமனார், மருமகளின் செய்தியை விளக்கமாகக் கூறினார். “ஒரு நல்ல நாளில் நெய்ப் பொங்கலும், பாயசமும் சுடச் சுடச் சாப்பிடும் போது, பழைய சோறு சாப்பிடுகிறேன் என்று சொல்லலாமா? அதுவும் பிச்சைக்காரனிடத்திலா சொல்வது! நான் என்ன பழைய சோறு சாப்பிடும் பரம ஏழையா? இந்த நகரத்திலேயே முதல் செல்வன் நான் அல்லனோ! இந்தப் பெண் என்னை இப்படி இழிவுபடுத்துவதா? என்னை என்னவென்று நினைத்திருக்கிறாள். மாமனார் என்று மதிப்பு இருந்தால், இப்படிப் பேசுவாளா? நீங்களே சொல்லுங்கள். இனி, ஒரு கணமும் இவள் இங்கு இருக்கக் கூடாது” என்று சினத்தோடு பேசினார்.
“ஏன், குழந்தாய்! நீ அப்படிச் சொல்லலாமா? அது தவறுதானே!” என்று கேட்டார்கள் ஐம்பெருங் குழுவினர்கள்.
“நான் அப்படித்தான் சொன்னேன். ஆனால், அதற்கு அதுவா பொருள்?”
“பின்னை, என்னதான் பொருள்!”
“மாமா பொங்கலும், பாயசமும் சுடச் சுடத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான்தான் விசிறிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பிக்கு பிச்சைக்கு வந்தார். மாமா அவரை கவனிக்கவில்லை. அவரும் நெடுநேரம் நின்றார். அப்போது எனக்குள் நான் எண்ணினேன்; “முன் பிறப்பில் மாமா, நல்ல பெரியவர்களுக்கு உடையும், உணவும் கொடுத்ததனால், அதன் பயனாக, இப்போது செல்வராகப் பிறந்து உண்ணவும், உடுக்கவும் பெற்று, நுகர்ந்து வருகிறார். ஆனால், இந்தப் பிறப்பில், இப்போது புதிதாகத் தான, தருமம் செய்து, புதிய நல்வினையைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆகவே, பழைய வினையின் பயனை நுகருகிறபடியால், இவர் பழைய சோறு சாப்பிடுகிறார் என்று சொன்னேன். இப்படிச் சொன்னது, எப்படி இழிவு படுத்தியது ஆகும்?” என்றாள்.
இந்தப் பொருளை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வியப்புடன், “அதற்கு இதுவா பொருள்!” என்று கூறி மகிழ்ந்தார்கள். செல்வரைப் பார்த்து, “குழந்தை சொன்னதில், ஒன்றும் குற்றம் இல்லையே!” என்று கூறினார்கள்.
அவருக்கும் அப்போதுதான் உண்மை விளங்கிற்று. “பழைய சோறு சாப்பிடுகிறார்,” என்று கூறியது இழிவு படுத்துவதற்கு அன்று என்றும், அதற்குப் பருப்பொருளை விட நுண்பொருள் இருக்கிறதென்றும் அறிந்தார். “ஆமாம்! விசாகை சொன்னதில் தவறு ஒன்றும் இல்லைதான்!” என்று சொன்னார். அப்போது விசாகையின் தந்தை, அவளுக்குக் கூறிய அறிவுரை நினைவிற்கு வந்தது. அந்த அறிவுரைகளிலும், ஏதேனும் நுண்பொருள் இருக்க வேண்டும் என்றும், தாம் அவற்றை எளிமையாக எண்ணியது தவறு என்றும் நினைத்தார். அவற்றின் பொருள் என்னவென்று, அவளைக் கேட்டறிய வேண்டும் என்னும் எண்ணம் அவருக்கு அப்போது உண்டாயிற்று. அவர் கூறினார்:-
“விசாகையை இங்கு அனுப்பி வைக்கும் போது, தனஞ்சயச் செல்வர் சில அறிவுரைகளைக் கூறினார். அவற்றிற்குப் பொருள் விளங்கவில்லை. “வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே, அயலார் நெருப்பை வீட்டில் கொண்டு வராதே,” என்று கூறினார். நெருப்பு இல்லாமல் வாழ முடியுமா? அண்டை, அயலார் நெருப்புக் கேட்டால், கொடுக்காமல் இல்லை என்று சொல்லலாமா? நம் வீட்டில் நெருப்பு இல்லையானால், அயலாரிடம் வாங்காமல் இருக்க முடியுமா?[2] இதற்குப் பொருள் என்ன?” என்று கேட்டார்.
விசாகை இதற்கு விளக்கம் கூறினாள் :- “வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே” என்றால், நெருப்பைக் கொடுக்காதே என்பது அன்று பொருள். கணவன், மாமன், மாமி இவர்களிடத்தில் ஏதேனும் குற்றங்களைக் கண்டால், நீ போகிற வீடுகளில், அந்தக் குற்றங்களை மற்றவர்களிடம் சொல்லாதே என்பது பொருள். அயலார் நெருப்பை வீட்டுக்குக் கொண்டு வராதே என்றால், கணவனைப் பற்றியாவது, மாமனார், மாமியாரைப் பற்றியாவது ௮ண்டை, அயலில் இருப்பவர்கள் ஏதேனும் அவதூறு சொன்னால், அதைக் கேட்டுக் கொண்டு வந்து, ‘உங்களைப் பற்றி இன்னின்னார் இப்படி, இப்படிச் சொன்னார்கள்’; என்று வீட்டில் சொல்லாதே என்பது பொருள். இவ்வாறு பேசுவது, கலகத்துக்குக் காரணம் ஆகும். ஆகையால், அது நெருப்பு என்று சொல்லப்படும்” என்றாள். இதைக் கேட்டு எல்லோரும் மகிழ்ந்தார்கள்.
“சரிதான்! மற்றவற்றிற்கு என்ன பொருள்? ‘கொடுக்கிறவருக்கு மட்டும் கொடு’, ‘கொடாதவர்களுக்குக் கொடாதே’, ‘கொடுக்கிறவருக்கும், கொடாதவருக்கும் கொடு’, இவற்றுக்கெல்லாம் என்ன கருத்து?” என்று கேட்டார் மாமனார்.
“கொடுக்கிறவர்களுக்கு மட்டும் கொடு என்றால், உன் வீட்டுப் பொருளை யாரேனும் இரவல் கேட்டால், அதைத் திருப்பிக் கொடுக்கிறவர்களுக்கு மட்டும் கொடு” என்பது பொருள்.
கொடாதவர்களுக்குக் கொடாதே என்றால், உன் வீட்டுப் பொருளை இரவல் வாங்கிக் கொண்டு போய், அதைத் திருப்பிக் கொடுக்காதவர்களுக்குக் கொடாதே என்பது பொருள்.
கொடுக்கிறவர்களுக்கும், கொடாதவர்களுக்கும் கொடு என்றால், உன் உற்றார், உறவினர் உன்னிடம் ஏதேனும் உதவியைக் கோரினால், அதை அவர்கள் திருப்பிக் கொடுத்தாலும், கொடா விட்டாலும் அவர்களுக்குக் கொடுத்து உதவி செய் என்பது பொருள்.
நகைத்துக் கொண்டு உட்காரு என்றால், மாமன், மாமி, கணவன் இவர்களைக் கண்டால் உயர்ந்த இடத்தில் உட்கார்ந்திராமல், மகிழ்ச்சியோடு, சிறிது தாழ்ந்த இடத்தில் உட்காரு என்பது பொருள்.
நகைத்துக் கொண்டு சாப்பிடு என்றால், மாமன், மாமி, கணவன் இவர்கள் சாப்பிட்ட பிறகு, எளிய உணவையும் மகிழ்ச்சியோடு சாப்பிடு என்பது கருத்து.
நகைத்துக்கொண்டு தூங்கு என்றால், மாமன், மாமி, கணவன் இவர்கள் தூங்குவதற்கு முன்பு தூங்காதே; இவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்த பிறகு, மகிழ்ச்சியோடு தூங்கு என்பது கருத்து.
எரி ஓம்பு என்றால், மாமன், மாமி, கணவன் இவர்களைத் தீச்சடர் போலக் கருதி நடந்து கொள் என்பது.
குலதெய்வங்களை வழிபடு என்றால், மாமன், மாமி, கணவன் இவர்களைக் குடும்ப தெய்வம் போல எண்ணி, இவர்களைப் போற்றி வழிபட வேண்டும் என்பது.
இவற்றைக் கேட்ட போது, மாமனாருக்கும், மற்றவர்களுக்கும் மன நிறைவும், மகிழ்ச்சியும் உண்டாயின. அவர்கள் விசாகையின் அறிவைப் புகழ்ந்தார்கள். மாமனார், அன்று முதல் விசாகையினிடத்தில் நன்மதிப்புக் கொண்டார்.
விசாகை நெடுங்காலம் பேரன், பேத்திகளையுடையவராய்ப் பெருவாழ்வு வாழ்ந்தார். இவர் பெருமான் புத்தரின் முதன்மையான சீராவகத் தொண்டராக இருந்து, புத்தருக்கும், பெளத்த சங்கத்துக்கும் அரிய, பெரிய தொண்டுகளைச் செய்து வந்தார். பெளத்த பிக்குகள் தங்கி வசிப்பதற்கு விகாரைகளைக் கட்டிக் கொடுத்ததோடு, அவர்களுக்கு அவ்வப்போது தான, தருமங்களைச் செய்து வந்தார். தமது முதுமைக் காலத்திலே, துறவு பூண்டு, பெளத்த பிக்குணியாக [3] இருந்து, பேர் பெற்ற தேரியாக விளங்கி, இறுதியில் வீடு பேறடைந்தார். பெளத்தர்களின் ஏழு சிறந்த பெண்மணிகளில் இவர் ஒருவர்.