இளையர் அறிவியல் களஞ்சியம்/அக்கி

விக்கிமூலம் இலிருந்து

அக்கி (Herpes): இது நம் உடல் தோலின் மீது உண்டாகும் நோயாகும். இந்நோய் பல வகையினவாகும். அவற்றுள் சாதாரண அக்கி, அக்கிப்புடை எனும் இருவகைகளே முக்கியமானவை.

இந்நோய் 'வைரஸ்' எனப்படும் ஒருவகை நச்சு நுண்மங்களால் உண்டாகிறது. இந்நோயின் தொடக்கமாக உடலில் ஒருவித நமைச்சலும் அதைத் தொடர்ந்து எரிச்சலும் உண்டாகும். அதனால் சொரிய நேரிடுகிறது. அவ்விடம் சிவக்கிறது. பின், அங்கு சிறு கொப்புளங்கள் உண்டாகின்றன. இந்நோய் சாதாரணமாக முகம், கன்னம், மூக்குப் பகுதிகளில் அதிகம் தோன்றும். மலேரியா, நியுமோனியா காய்ச்சல், வயிற்றுக்கோளாறு போன்ற நோய்கள் பீடித்திருக்கும்போதும் அக்கி நோய் உண்டாக வாய்ப்புண்டு. இந்நோய் கோடைக் காலத்தில் அதிகம் உண்டாகும்.

நமைச்சல், எரிச்சல் உண்டாகும்போது கூடியவரை சொரிவதைத் தவிர்க்க வேண்டும். அப்போது ‘நைட்ரஸ் ஈதர்’ எனும் மருந்தை சிவந்த பகுதிகள் மீது தடவினால் அக்கி தோன்றாமல் மறைந்து போகும்.

அக்கிக் கொப்புளங்களும் அம்மைக் கொப்புளங்களும் குறிப்பிட்ட காலத்திற்குள் தானாகவே மறைந்து போகும்.