இளையர் அறிவியல் களஞ்சியம்/அடுக்குக் காற்று மண்டலம்

விக்கிமூலம் இலிருந்து

அடுக்குக் காற்று மண்டலம் : நாம் வாழும் இப்பூமிப்பகுதி முழுவதும் காற்றுப் பரவியுள்ளது. இதுவே காற்று மண்டலம் ஆகும். இக்காற்று மண்டலம் தரைப்பகுதியிலிருந்து சுமார் 500 கி.மீ. உயரம்வரைப் பரவியுள்ளதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

தரையிலிருந்து 10 கி. மீ. உயரம் வரையுள்ள பகுதி காற்று மண்டல அடிப்பகுதி என அழைக்கப்படுகிறது. நாம் வானில் காணும் மேகங்கள் இப்பகுதியில்தான் உருவாகின்றன. காற்று வேகமாக வீசுவது, மின்னல் தோன்றுவது, இடி இடிப்பது, புயல் உருவாவது எல்லாமே இவ்வடுக்கில் தான்.

தரையிலிருந்து மேல் நோக்கிச் செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைந்து கொண்டே செல்லும். இதனால் தான் மிக உயர்ந்த மலையுச்சியில் காற்று அடர்த்திக் குறைவாக இருப்பதால் எளிதாகச் சுவாசிக்க முடிவதில்லை. மூச்சுத் திணறல் ஏற்படும். இதனால்தான் 8 கி.மீ. உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரம் ஏறச் செல்லும் மலையேறும் வீரர்கள் பிராணவாயுக் கலன்களையும் தங்களுடனே கொண்டு செல்கிறார்கள். அடர்த்தி மட்டுமல்ல. மேலே செல்லச் செல்ல வெப்ப நிலையும் குறைவாகவே இருக்கும்.

காற்று மண்டலத்திற்கு மேலாக உள்ளது அடுக்குக் காற்று மண்டலம் (Stratosphere) ஆகும். இங்குக் காற்றின் அடர்த்தி மிகக் குறைவு. கீழ்ப்பகுதியைப் போன்று இங்கே மேகங்கள் ஏதும் இல்லை. அடர்த்தி மிகவும் குறைந்துள்ளதால் ஒளி பரவுவது இல்லை. வெப்ப நிலை பனி உறைநிலையைவிட மிகக் குறைவாகும்.

கதிரவனிடமிருந்து வரும் புறவூதாக்கதிர்கள் அடுக்குக் காற்று மண்டலத்தை அடையும் போது, அதை காற்றிலுள்ள பிராணவாயு ஈர்த்துக் கொள்கிறது. இதனால் நமக்குப் பாதிப்பு ஏதும் இல்லாமற்போகிறது. அண்டக் கதிர்களாகிய காஸ்மிக் கதிர்கள் காற்று மண்டலத்தினுள் நுழையும்போது கதிரியக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் வெளிப்படும் கதிர்களைக் காற்று ஈர்த்துக் கொள்கிறது. அடுக்குக் காற்று மண்டலத்தில் இருந்து தரைக்கு வரும் கதிர்களின் அளவு ஒரு சதவிகிதம் கூட தேறுவதில்லை. இவ்வாறு அடுக்குக் காற்று மண்டலப்பகுதி உயிர்க் குல வாழ்வுக்கான பாதுகாப்புச் சுவராகவும் அமைந்துள்ளது.

அடுக்குக் காற்று மண்டலத்திற்கு அப்பால் உள்ள பகுதி மின்னணு மண்டலம் ஆகும். இது 400 கி.மீ உயரம்வரை மேல் நோக்கிப் பரவி உள்ளது. காரணம் கதிரவனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர் இப்பகுதியை அடையும் போது மின்னணுவால் ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் சிதைக்கப்படுகின்றன.இச்சிதைவுகள் தனி வகை அணுக்களாக உருவாகி அதிக வெப்பத்தை உண்டுபண்ணுகின்றன. உயரே செல்லச் செல்ல வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டே செல்லும். அதிகபட்சம் 20000 வரை இருக்கும்.