இளையர் அறிவியல் களஞ்சியம்/அனல் மின்சாரம்
அனல் மின்சாரம் : நீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யவியலா இடங்களில் அனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நீராவியைக் கொண்டு டர்பன்களைச் சுழலச் செய்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவே அனல் மின்சாரம்’ ஆகும்.
நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி மாபெரும் கொதிகலன்கள் மூலம் நீராவி தயாரிக்கப்படுகிறது. அந்நீராவியை டர்பைன் எனும் சுழலிகளுக்குள் செலுத்தி வெப்ப மின்னாக்கம் உருவாக்கப்படுகிறது.
டர்பைனிலிருந்து வெளியேறும் நீராவியைக் குளிர்ந்த நீர்க்குழாய் மூலம் செலுத்துவார்கள். நீராவி குளிர்ந்து குறைந்த இடத்தை அடைப்பதால் அங்கு வெற்றிடம் ஏற்படும். எனவே கொதி கலத்திலிருந்து நீராவியை உறிஞ்சி டர்பைனுக்குள் செலுத்த, நீராவி டர்பைன் வேகமாகச் சுழன்று அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
இவ்வாறு நீராவியைக் கொண்டு டர்பைன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அவற்றுள் முக்கியமானவை சென்னை பேசின் பிரிட்ஜிலும் தூத்துக்குடியிலும் உள்ள அனல் மின் நிலையங்களாகும்.
வாயு டர்பைனைப் பயன்படுத்தி சிக்கன முறையில் அனல் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணு அடுக்கில் உள்ள அணுவில் பிளவை ஏற்படுத்தும்போது உண்டாகும் வெப்பத்தைக் கொண்டு டர்பைன்களைச் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கலாம். இம் முறையிலேயே அனுமின் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தகைய அணுமின் நிலையங்கள் இந்தியாவில் பல உள்ளன. தமிழ்நாட்டில் கல்பாக்கம் எனும் இடத்தில் அணு அனல்மின் நிலையம் உள்ளது. கூடங்குளம் எனுமிடத்தில் இத்தகைய அணுமின் நிலையம் ஒன்று உருவாக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது.