உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/அலங்கு

விக்கிமூலம் இலிருந்து

அலங்கு : இதை 'எறும்புதின்னி’ என்று அழைப்பார்கள். அலங்கு எறும்பு, கரையான், அவைகளின் முட்டை ஆகியவற்றை மட்டுமே புசித்து வாழ்கின்றது. இவை புதரான இடங்களில் உள்ள சிறு வளைகளிலும் பொந்துகளிலும் வாழ்கின்றன. இவை பகலில் பதுங்கியிருந்து இரவில் வெளிப்பட்டு இரை தேடி வாழ்கின்றன.

அலங்கு பிராணிகளின் உடல் நீளம் 75 செ.மீ. அளவுக்குள்ளாகவே இருக்கும். இதன் வால் பட்டையாக நீண்டிருக்கும். அதிகப்பட்சமாக இதன் நீளம் மட்டுமே 45 செ.மீ. இருக்கும். இதன் உடலின்மேல்பகுதி முழுமையும் கெட்டியான செதில்கள் ஒன்றன்மேல்ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். பழுப்பு நிறமுள்ள இச்செதில்களே இதற்குத் தகுந்த பாதுகாப்பை அளிக்கின்றன. இதன் உடலில் வளரும் ஒரு வகை கெட்டி மயிரே ஒன்றிணைந்து கெட்டிச் செதில்களாகின்றன.

அலங்கு

இதன் கால் குட்டையானவை, ஆனால் வலிமை மிக்கவை. கால் விரல்நகங்கள் கூர்மையாகவும் கெட்டியாகவும் உள்ளன. இவ்விரல்களின் துணைகொண்டே எறும்புப் புற்றுகளையும் கரையான் மேடுகளையும் தோண்டி இரை தேடுகின்றன. இது அவ்வப்போது பாதுகாப்பின் பொருட்டு பந்துபோல் சுருண்டு கொள்ளும்

இது நிலத்தில் வாழும் பிராணியே யாயினும் அவ்வப்போது மரத்திலும் ஏறுவதுண்டு.இதன் தாடைகளில் பற்கள் இல்லை. ஆனால் நீளமான நாக்கு உண்டு. வாயில் பசைபோன்ற ஒருவித நீர் ஊறும். இப்பசை நீரின் உதவி கொண்டே எறும்பு கரையான் போன்றவற்றை நாக்கோடு ஒட்டச்செய்து உட்கொள்கின்றன. தன் மோப்ப சக்தியால் எறும்பு கரையான் புற்றுகளை இது எளிதாகக் கண்டறிகின்றது. குட்டிபோடும் இப் பிராணி பன்னிரண்டு ஆண்டுகள்வரை உயிர் வாழ்கின்றது. அழிந்து வரும் பிராணிகளில் அலங்கும் ஒன்றாகும்.