இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆகாயக் கப்பல்

விக்கிமூலம் இலிருந்து

ஆகாயக் கப்பல் : இன்றைய வடிவிலான விமானங்கள் கண்டறியப்படுவதற்கு முன் ஆகாயக் கப்பல்கள் உருவாக்கப்பட்டன. தொடக்கத்தில் தீப்பிடிக்காத ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ஆகாயக் கப்பல்களும், காற்றில் தீப்பற்றி எரியக்கூடிய ஹைட்ரஜன் வாயு நிரப்பிய ஆகாயக் கப்பல்களும் பறக்கவிடப்பட்டன. இவை அடிக்கடி தீ விபத்துக்கு ஆளாயின. இதனால் இத்தகைய வானவூர்திகள் தொடர்ந்து பெரும் முன்னேற்றம் பெற முடியவில்லை.

நாளடைவில் கனம் குறைந்த அதேசமயம் ஆற்றல் மிக்க என்ஜின்கள் ஆகாயக் கப்பல்களுக்கெனக் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை ஆகாயக் கப்பல்களில் பொருத்தி வானில் செலுத்தினர். இம்முயற்சியில் முதன்முதலில் வெற்றிபெற்ற பெருமை ஹென்றி ஃபோர்டு என்ற ஃபிரெஞ்சு விஞ்ஞானியைச் சாரும். இதன்பின் ஆகாயக் கப்பலின் வடிவமைப்பில் மேலும் சில மாற்றங்களை வேறு சில விஞ்ஞானிகள் செய்து வளர்ச்சிக்கு வழிகோலினர். இதன்பிறகும் கூட மணிக்குப் பத்து மைல் வேகத்திற்கு மேல் செல்ல அவற்றால் இயலவில்லை. அதிகநேரம் ஆகாயக் கப்பலைச் செலுத்த முடியவில்லை. இவை இவற்றின் பெருங்குறையாக இருந்தன.

காலப்போக்கில் கனமில்லாத அலுமினியத் தகடுகளும் பெட்ரோல் என்ஜினும் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றைக் கொண்டு ஆகாயக் கப்பலை இயக்கத் தொடங்கிய பின்னரே விரைவான வளர்ச்சிக்கு வழி பிறந்தன.

முதல் உலகப்போருக்கு முன் ஜெப்பலின் எனும் ஜெர்மானிய இராணுவ அதிகாரி வலுவான நீண்டதூரம் விரைந்து செல்லக்கூடிய ஆகாயக் கப்பலை உருவாக்கினார். இவை பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டது. 227மீட்டர் நீளமும் 24 மீட்டர் விட்டமும் 25 இலட்சம் கன அடி கொள்ளளவும் உடையதாக இருந்தது. 112 கி.மீ. வேகத்தில் பல ஆயிரம் கி.மீ.கள் தொடர்ந்து பயணம் செல்ல இதனால் இயன்றது. இந்த ஆகாயக் கப்பல்கள் அவற்றை வடிவமைத்தவரின் பெயராலேயே 'ஜெப்பலின்’ என்றே அழைக்கப்பட்டது.

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு இத்தகைய ஆகாயக் கப்பல்களை யாரும் உருவாக்கவோ பறக்கவிடவோ கூடாது என ஜெர்மனி தடைவிதித்தது. ஆனால் 1926ஆம் ஆண்டில் இத்தடை நீக்கப்பட்ட பிறகு மேலும் பலம் பொருந்திய ஆகாயக் கப்பல்கள் உருவாக்கப்பட்டன. ஐந்து என்ஜின்கள் பொருத்தப்பட்ட ஆகாயக் கப்பல் புதுவகை எரிபொருளைக் கொண்டு பறக்கவிடப்பட்டது. இதில் விமானிகளைத் தவிர்த்து பயணிகள் அமருமிடமும் உணவுக் கூடமும் பத்து படுக்கையறைகளும் அமைந்திருந்தன. இது மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் 10,000 கி.மீ. கள் வரை சென்றது. 1928இல் உருவாக்கப்பட்ட ஆகாயக் கப்பல் 1988-லிருந்து 1987 வரை ஜெர்மனிக்கும் தென் அமெரிக்காவுக்குமிடையே போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.

1986இல் இதற்கு முன் வானில் பறந்தவைகளை விடப் பெரியதாக ஆகாயக் கப்பல் உருவாக்கப்பட்டது. 'ஹிண்டன்பர்க்' எனும் பெயர் கொண்ட இவ்வானக் கப்பல் 808 அடி நீளமும் 185 அடி விட்டமும் எழுபது இலட்சம் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். நான்கு டீசல் என்ஜின்களால் இயங்கிய இதன் கூண்டுக்கடியில் 50 பயணிகள் செல்ல வசதி செய்யப்பட்டிருந்தது. பலமுறை அட்லாண்டிக் கடலைக் கடந்தது. 1937இல் எதிர்பாராத விதமாக நியூயார்க்கில் இறங்கும்போது தீப்பிடித்து எரிந்துவிட்டது. இதன்பின் ஆகாயக் கப்பலில் பயணம் செய்ய யாரும் முன்வர வில்லை. இதனால் ஆகாயக் கப்பல் போக்குவரத்து அடியோடு நின்றுபோயிற்று.

ஜெர்மனியைப் பின்பற்றி இங்கிலாந்தும் -100, -101, என்ற ஆகாயக் கப்பல்களை உருவாக்கி வானில் பறக்கவிட்டது. 1980இல் இந்தியாவை நோக்கி வந்த -101 ஆகாயக் கப்பல் ஃபிரான்சுக்கருகில் மலை முகட்டில் மோதி சிதைந்தது. இதில் பயணம் செய்த விமான அமைச்சர் உட்பட 46 பேர் மாண்டனர். அதன்பின் இங்கிலாந்தும் ஆகாயக் கப்பல்களை வானில் பறக்க விடுவதை நிறுத்தியது. இவ்வாறு போக்குவரத்துக்கான ஆகாயக் கப்பல்களின் வளர்ச்சி விபத்துகளின் காரணமாக முற்றுப்பெறலாயிற்று. என்றாலும் இன்றும் ஆகாயக்கப்பல் போன்ற வாயுக் கூண்டுகள் வானிலை ஆராய்ச்சிக்கென உலகெங்கும் பயன்படுத்தப்பட்டே வருகின்றன.