இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆல்டிரின், எட்வின் யூகின்

விக்கிமூலம் இலிருந்து

ஆல்டிரின், எட்வின் யூகின் : நிலவின் மேற்பரப்பில் கால் பதித்து நடந்த இரண்டாவது விண்வெளி வீரராவார். முதலில் நிலவில் நடந்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆவார். அமெரிக்காவில் உள்ள மான்கிளேர் என்னுமிடத்தில் 1930 ஜனவரி 20ஆம் நாள் பிறந்தவர். அமெரிக்கப் படைக் கல்விக்கழகத்தில் (War

Academy) 1951இல் படித்துப்பட்டம்பெற்றார். பின் வான்படையில் விமானியாகப் பணியாற்றினார். கொரியாப் போர் போன்றவற்றில் பங்கேற்றுத் தன் திறமையையும் வீரத்தை நிலைநாட்டினார். 1964ஆம் ஆண்டு விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதன் முதலாக 1966ஆம் ஆண்டு நவம்பர் 11இல் ஜெமினி 12 என்ற விண்கலத்தில் நான்கு நாள் பயணம் செய்தார். அப்போது ஐந்தரை மணிநேரம் விண்கலத்திலிருந்து வெளிவந்து நடந்தார். இதன்மூலம் வெற்றிடத்தில் மனிதன் திறம்படச் செயல்பட முடியும் என்பதை எண்பித்துக் காட்டினார்.

இறுதியில் 1969ஆம் ஆண்டு ஜூலை 16 -ஆம் நாள் அன்று நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்பொல்லோ 11 என்ற விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ராங், மைக்கேல் காலின்ஸ். நீல் ஆல் டென் ஆகியோருடன் சேர்ந்து பயணம் செய்தார். நான்கு நாட்களுக்குப் பின்னர் இவ்விண்கலம் நிலவில் இறங்கியது. முதலில் நீல் ஆம்ஸ்ட்ராங் விண்வெளி கலத்திலிருந்து வெளிவந்து நிலவில் கால் பதித்து நடந்தார். அடுத்து ஆல்டிரின் இறங்கி நடந்தார். இருவரும் சுமார் இரண்டு மணிநேரம் நிலவில் நடந்தனர். அப்போது அங்கு சிதறிக் கிடந்த கல் மாதிரிகளைச் சேகரித்தனர். நிறைய ஒளிப்படங்களை எடுத்தனர். தொடர் ஆய்வுக்கென பல்வேறு கருவிகளை நிறுவினர். பின்னர் மீண்டும் விண்கலம் திரும்பி மைக்கேல் காலின்ஸ், நீல் ஆல்டெனுடன் சேர்ந்து பூமிக்குத் திரும்பினாார். ஜூலை 24ஆம் நாளன்று பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்கினர்.

1971ஆம் ஆண்டு விண்வெளித்துறையிலிருந்து பணி ஓய்வு பெற்றார். பின்னர் விமானிப் பயிற்சிப் பள்ளித் தலைவராகத் தன் பணியைத் தொடர்ந்தார். 1972இல் அங்கிருந்தும் ஓய்வு பெற்றார். ‘பூமிக்குத் திரும்பினோம்' எனும் நூலைத் தன் விண்வெளிப் பயண அனுபவ அடிப்படையில் எழுதியுள்ளார்.