இளையர் அறிவியல் களஞ்சியம்/உரம்

விக்கிமூலம் இலிருந்து

உரம் : காலங்காலமாக நிலத்தில் பயிர் செய்து வருகிறோம். பயிர் தனக்கு வேண்டிய சத்துப் பொருட்களைப் தரையிலிருந்து வேர் மூலம் உறிஞ்சி எடுத்துக்கொண்டு வளர்கிறது. இவ்வாறு எடுக்கும் சத்துப் பொருட்கள் நாளடைவில் மண்ணில் குறைந்துகொண்டே வருவது இயல்பு. இதனால் விளைச்சலும் குறையவே செய்யும். மண்ணில் குறைந்து வரும் இயற்கையான சத்துப்பொருட்களை ஈடு செய்யும் வகையில் செயற்கையான சத்துப் பொருட்களை மண்ணுக்கு ஊட்டுவது 'உரம் இடுதல்’ ஆகும்.

சாதாரணமாக மண்ணில் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்வரம், மக்னீஷியம், கந்தகம், இரும்பு முதலிய வேதியியல் பொருட்கள் கலந்துள்ளன. இவையே தாவரங்களுக்குத் தேவையான மண்ணில் உள்ள இயற்கை வேதியியல் சத்துப் பொருட்கள். காற்றிலிருந்தும்கூட சத்துப்பொருட்களைத் தாவரங்கள் சேமித்து வளர்கின்றன.

மண்ணில் உள்ள இவ்வியற்கைச் சத்துப் பொருட்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நிலையிலும் உறுதுணை புரிகின்றன. தாவரத்தின் தண்டும் இலைகளும் நன்கு வளர்ச்சி பெற நைட்ரஜன் பெருந்துணை புரிகிறது. தாவரங்களுக்கு நோய் ஏதும் வராமல் காக்கும் கேடயமும் இதுவேயாகும். பூக்கள் பூத்துக் குலுங்கவும் காய்கள் நன்கு திரட்சியடையவும் விதைகள் முதிர்ச்சி பெறவும் பாஸ்பேட்டுகள் அவசியம். அதேபோன்று வேரும் பழமும் வித்தும் திரட்சி பெற பொட்டாஸ் எனும் சாம்பல் சத்து இன்றியமையாத் தேவையாகும்.

மண்ணிற்கு மேலும் வளமூட்ட மாட்டுச் சாணம், இலை, தழைகள், ஆட்டுப் புழுக்கை போன்ற இயற்கைக் கழிவுப் பொருட்கள் நிலத்திற்கு உரமாக இடப்படுகின்றன. இவையும் இயற்கை உரங்களேயாகும். மேலும், அன்றாடம் கூட்டிப் பெருக்கும் குப்பை கூளங்களை குழியிலிட்டு கழிவு நீரைப் பாய்ச்சி உரமாக்குவதும் உண்டு. இது கம்போஸ்ட் அல்லது கலப்பு உரம் அல்லது தொழு உரம் என அழைக்கப்படுகிறது.

சத்திழக்கும் மண்ணுக்கு மேலும் வளமூட்ட இயற்கை உரங்களின் தன்மைகளைக் கொண்ட செயற்கை உரங்களை வேதியியல் அடிப்படையில் தயாரிக்கிறார்கள். இவ்வகை உரங்கள் நைட்ரஜன், பாஸ்வரம், பொட்டாசியம் போன்ற வேதியியற் பொருள்களின்றும் தயாரிக்கப்படுகிறது. இயற்கை உரம், கலப்பு உரம் இவற்றோடு வேதியியல் உரங்களும் மண்ணிற்குச் சத்தூட்டி தாவரப் பயிர்கள் செழித்து வளர வழிகோலுகின்றன.

நிலத்தின் தன்மை, விளைவிக்கப்படும் பயிரின் இயல்பு, தட்பவெப்ப சூழ்நிலை ஆகியவற்றிற்கேற்ப தேவைப்படும் சத்தை எவ்வகை உரத்தின் மூலம் பெறுவது என்பதைத் தீர்மானித்து அவ்வகை உரத்தை நிலத்திற்கு இடவேண்டும். அப்போதுதான் விரும்பிய பலன் கிட்டும். உரமிடுவதற்கென தனி எந்திரங்களும் உண்டு.

அறிவியலின் வளர்ச்சி காரணமாக உற்பத்தியைப் பெருக்க, நல்ல தரமான விளை பொருட்கள் கிடைக்க, செயற்கை உரங்கள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.