இளையர் அறிவியல் களஞ்சியம்/ஒளிச்சேர்க்கை

விக்கிமூலம் இலிருந்து

ஒளிச்சேர்க்கை : பெரும்பாலான தாவரங்களில் உள்ள இலை முதலான பகுதிகள் பச்சை நிறமாகக் காணப்படும். இதற்குப் பச்சையம் எனும் நிறமியே காரணமாகும். இஃது குளோரோபில் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய உணவின் ஒரு பகுதியை சூரிய ஒளிச் சக்தியைக் கொண்டு தயாரித்து கொள்கின்றன. நீரையும் கரியமில வாயுவையும் கொண்டு சூரிய சக்தி மூலம் சர்க்கரை அல்லது மாச் சத்தை உருவாக்கிக் கொள்கின்றன. இந்நிகழ்வே 'ஒளிச்சேர்க்கை’ என்று அழைக்கப்படுகிறது.

ஒளிச்சேர்க்கைக்கு இன்றியமையாதது பச்சையம் ஆகும். இது காளான், ஒரு சில ஒட்டுண்ணித் தாவரங்களைத் தவிர பிற எல்லாத் தாவரங்களிலும் உண்டு. தாவரங்கள் பச்சைப் பசேலென பசுமையாகத் தோன்றுவதற்கு இப்பச்சையமே முழு முதற்காரணம். தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய உணவைச் சூரியஒளி உதவியோடு தயாரித்துக் கொள்வதற்கு இதுவே அடிப்படையாய் அமைந்துள்ளது.

இலைகளின் அடிப்புறத்தில் எண்ணிலடங்கா நுண்துளைகள் உள்ளன. காற்று இவற்றினுள் நுழைகிறது. இலையில் இயற்கையாய் அமைந்துள்ள பச்சையம் காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவைத் தனியே பிரித்தெடுக்கிறது. அவ்வாறு பிரிக்கப்பட்ட கரியமிலவாயு வேரிலிருந்து வரும் சத்து நிறைந்த நீருடன் கலக்கிறது. இக்கலவை சர்க்கரைச் சத்தாகவும் மாச் சத்தாகவும் மாறுகிது. காற்றிலிருந்த கரியமிலவாயு கரைந்து போகவே, எஞ்சிய பிராணவாயு இலைத் துளைகளின் வழியே வெளியேறி விடுகின்றது. இச்செயல் அனைத்தும் சூரியஒளி மூலமே இனிது நடந்தேறுகிறது. குளோரோபில் என்னும் பச்சையம் முதலில் ஒளி ஆற்றலை சூரிய ஒளியிடமிருந்து உறிஞ்சி கிளர்வுற்று காற்றில் காணும் நீர்மூலக்கூறினை உடைத்து, ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகவும் மாற்றுகிறது. பின்னர் ஹைட்ரஜன் காற்றில் காணும் கார்பன்-டை-ஆக்சைடை ஒடுக்கி கார்போ ஹைட்ரேட்டாக மாற்றுகிறது.

ஒளிச்சேர்க்கையால் மற்றொரு மாபெரும் நன்மை ஏற்படுகிறது. நாம் சுவாசிக்க பிராண வாயு மிகுதியும் தேவைப்படுகிறது. சுவாசித்த பின் நாம் கரியமில வாயுவை வெளிவிடுகிறோம். ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் கரியமில வாயுவை ஏற்றுக்கொண்டு பிராணவாயுவை வெளியேற்றி விடுகின்றன. இதனால் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான பிராணவாயு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.