இளையர் அறிவியல் களஞ்சியம்/கலப்பினம்
கலப்பினம் : ஒரே இனத்தைச் சேர்ந்த இருவகைப்பட்ட பொருட்களை ஒன்றாக இணைத்து அதன் மூலம் பெறும் மூன்றாவது பொருள் கலப்பினப்பொருளாகும். சான்றாக, ஜப்பானிய நெல் வகையையும் இந்திய நாட்டு நெல்வகையையும் இணைத்துப் பெற்ற புது வகையான நெல்லே 'ஆடுதுறை 27’ என்ற வீரிய ஒட்டு நெல் வகை. இதே முறையில் சோளம், கம்பு, கோதுமை எனப் புதுவகை வீரிய ஒட்டு ரகங்களைக் கலப்பின வகையாகப் பெற்றுள்ளனர். பயிர் வகைகள், கனிவகைகள் மட்டுமல்லாது பிராணிகளிலும் கலப்பின வகைகள் பலவற்றைத் தோற்றுவித்துள்ளனர், கழுதைக்கும் குதிரைக்கும் பிறந்த கலப்பினக் குதிரை வகையே கோவேறு கழுதை வகை. இதே போன்று கலப்பின பசு வகைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. சாதாரணமானவைகளை விட கலப்பினங்கள் வீரியமுடையவையாக உள்ளன. அதிகப் பலன் தரக்கூடியவைகளாக அமைகின்றன. உருவில் பருமனும் திடத்தில் வலிமை கொன்டவையாக உள்ளன. -
ஒரேவகை இனத்தைச் சேர்ந்தவைகளைக் கொண்டே கலப்பினம் உருவாக்க முடியும். வேறுபட்ட இனங்களை இணைத்துக் கலப்பினம் உருவாக்குவது இயலாத ஒன்றாகும்.