இளையர் அறிவியல் களஞ்சியம்/கழிவு மண்டலம்

விக்கிமூலம் இலிருந்து

கழிவு மண்டலம் : நம் உடலில் சேர்ந்து கொண்டிருக்கும் கழிவுப் பொருட்களை உடலின் மிக முக்கிய நான்கு உறுப்புகள் அவ்வப்போது அக்கழிவுகளை வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. இக்கழிவு உறுப்புக்கள் தோல், நுரையீரல், குடல், சிறுநீரகம் ஆகும். இவை நான்கும் இணைந்ததே கழிவு மண்டலம்.

தோல் : நம் உடல் முழுமையும் தோலால் மூடப்பட்டுள்ளது. இவை வெயில், மழை, காற்றுப் போன்றவற்றிலிருந்து நம்மைக்காப்பதோடு வியர்வை போன்றவற்றை வெளியேற்றும் வடிகால்களாகவும் அமைந்துள்ளன.

தோலின் அடிப்பகுதியில் இருவகைச் சுரப்பிகள் உள்ளன. அவையே வியர்வைச் சுரப்பிகளும் எண்ணெய்ச் சுரப்பிகளுமாகும். இவற்றின் மொத்த எண்ணிக்கை இருபது இலட்சத்திற்கும் மேலாகும். இவை உடலெங்கும் தோலினடியில் அமைந்துள்ளன. அதிலும் இவற்றின் எண்ணிக்கை உள்ளங்கை, உள்ளங்கால், நெற்றி, அக்குள் ஆகிய பகுதிகளில் மிகுதியாகும். எனவேதான் இப்பகுதிகளில் எப்போதும் வியர்வை வெளியேற்றம் மிக அதிகமாகவே இருக்கிறது.

நுரையீரல் : நுரையீரல் மிக முக்கிய சுவாச உறுப்பாகும். நாம் காற்றைச் சுவாசிக்கும் போது காற்றிலுள்ள ஆக்சிஜனை பிரித்து இரத்த மண்டலத்திற்கு அனுப்பி உடலெங்கணுமிருந்து வெளிப்படும் கழிவான கரியமில வாயுவை மூக்கு வழியாக வெளியேற்ற உதவுகிறது. இப் பணியைநுரையீரல் இடையீடின்றி நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது.

குடல் : சீரண உறுப்பாக உள்ள குடல் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. சிறுகுடல், பெருங்குட்ல் என்பவைகளே அவை. சிறு குடலில் சீரணமாகாத கழிவுப் பொருட்கள் பெருங்குடலை அடைகின்றன. பெருங்குடல் அதிலுள்ள நீரை மட்டும் உறிஞ்சிக் கொண்டு எஞ்சிய கழிவான மலத்தை மலக்குடல் வழியாக வெளியேற்றி விடுகிறது.

சிறுநீரகங்கள் : அடிவயிற்றுக்குக் கீழாக பக்கத்துக்கு ஒன்றாக அமைந்துள்ள சிறுநீரகங்கள் அங்கு வரும் இரத்தத்தில் உள்ள கழிவுகளைப் பிரித்து சிறுநீர்ப் பைக்கு அனுப்பிவிடுகிறது. போதிய அளவு சேர்ந்த கழிவுநீர் சிறுநீர்ப்பையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

நமக்கு உள்ளது போன்றே பிராணிகளுக்கும் கழிவு உறுப்புகள் உண்டு. அவையும் கழிவுப் பொருட்களை அவ்வப்போது வெளியேற்றுகின்றன. தாவரங்களும் கழிவுகளை வெளியேற்றியே வாழ்கின்றன.