இளையர் அறிவியல் களஞ்சியம்/காற்று
காற்று : உயிரினங்கள் உயிர் வாழக் காற்று இன்றியமையாததாகும். உயிரினங்கள் காற்றுக் குறைவான அல்லது இல்லாத இடத்தில் இருக்கும்போது மூச்சுத் திணறும். சிறிது நேரத்தில் உயிரிழக்கவும் நேரிடும்.
காற்று நம்மைச் சுற்றி எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது. காற்று இல்லாத இடம் வெற்றிடம் என்று கூறப்படும். பல்வேறு வகையான வாயுக்களின் கூட்டுக் கலவையே காற்று ஆகும். அதில் அதிக அளவில் பிராண வாயு, கரியமில வாயு, நைட்ரஜன் வாயு உள்ளன. வேறு சில வாயுக்களும் குறைந்த அளவில் கலந்துள்ளன. இவ்வாயுக்கள் அனைத்தும் நிறமற்றவைகளாதலால், காற்றும் நிறமின்றி உள்ளது. சுவையும் மணமும் கூட காற்றுக்கு இல்லை. எனினும் காற்றுக்கு எடை உண்டு. காற்றைத் திரவ நிலைக்கு மாற்ற முடியும்.
உலகைச் சுற்றி காற்றுப் பரவியுள்ள பகுதி ‘காற்று மண்டலம்’ (Atmosphere) என்று அழைக்கப்படுகிறது. தரையிலிருந்து 350 கிலோ மீட்டர் உயரம்வரை காற்று மண்டலம் பரவியுள்ளது. அதற்கு மேல் காற்று இல்லை. தரைப் பகுதியிலிருந்து மேல் நோக்கிச் செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைந்து கொண்டே செல்லும்,
ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு ஒலி காற்றின் மூலமே பரவுகிறது. கதிரவனின் வெப்பக் கிரணங்களால் காற்று எளிதில் வெப்பமடையும். வெப்பமேறிய காற்று விரிவடைந்து மேல்நோக்கிச் செல்லும். அப்போது அங்கு காலியாகும் இடத்தை நிரப்ப குளிர்ந்த காற்று விரைந்து செல்லும். இவ்வாறு காற்றுப் பரவுதை 'காற்றோட்டம்’ எனக் கூறுவர்.
மாலை வேளைகளில் கடற்காற்று குளுமையாக வீசுகிறதே அதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? தரைக்காற்று பகல் பொழுதில் விரைந்து வெப்பமடையும். அவ்வாறு வெப்பமடைந்த காற்று மேலெழுந்து செல்லும். அவ்வெற்றிடத்தை நிரப்பக் கடற்காற்று மாலையில் தரைப் பகுதியை நோக்கி வீசும். இதுவே குளிர்ந்த கடற்காற்று ஆகும். அதே போன்று இரவில் கடற்பகுதிக் காற்றைவிட தரைப் பகுதிக் காற்று விரைந்து குளிர்ச்சியடையும். எனவே, அதிகாலை நேரத்தில் குளிர்த்த தரைக் காற்று கடலை நோக்கி வீசும். இது தரைக் காற்று எனப்படும். இத்தரைக் காற்றின் உதவி கொண்டு பாய்மரப் படகுகள் கடலை நோக்கிச் செல்லும், மாலையில் கடற் காற்றின் துணை கொண்டு விரைந்து தரையை நோக்கித் திரும்பும்.
நமக்கு மழை தரும் மேகங்களைக் காற்றே கொண்டு வருகிறது. நான்கு வகைப் பருவ காலங்களில் ‘பருவக் காற்று’க் காலமும் ஒன்றாகும்.
காற்றின் வேகத்தை அளக்கும் கருவி 'காற்றுமானி’ எனப்படும். காற்று எத்திசையை
நோக்கி வீசுகிறது என்பதை 'காற்றுத் திசை காட்டி' கருவியைக் கொண்டு அறியலாம்