இளையர் அறிவியல் களஞ்சியம்/கிராமபோன்
கிராமபோன் : ஒலியைப் பதிவு செய்த தட்டுக்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி திரும்பத் திரும்ப அதே ஒலியை-இசையைக் கேட்கப் பயன்படும் கருவியே 'கிராமபோன்’ என அழைக்கப்படுகிறது. இந்த அரிய கருவியைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் அமெரிக்க விஞ்ஞானி ஆவார். தொடக்கத்தில் இக்கருவிக்கு இவர் இட்ட பெயர் 'போனோகிராப்’ என்பதாகும். ‘ஒலியைப் பதிவு செய்தல்’ என்பது இதற்குப் பொருளாகும், அதன்பின் இக்கருவியில் பல
மாற்றங்களைச் செய்து திருத்தியமைத்தார். புத்தாக்கம் செய்யப்பட்ட இக்கருவியை 'கிராம போன்’ என அழைக்கலானார்.
இனி, ஒலிப்பதிவு செய்யும் முறையைப் பார்ப்போம். பேசுபவர் அல்லது பாடுபவர் 'மைக்ரோபோன்’ எனும் கருவி முன் இருந்தபடி பேசுவார் அல்லது பாடுவார். இக்கருவி அவர் எழுப்பும் ஒலியை மின் அலைகளாக மாற்றும். அம் மின் அலையின் ஒலிக்கேற்ப ஒலிப்பதிவுக் கருவியில் இணைக்கப்பட்டுள்ள ஊசி அசைந்து, மெழுகுத் தட்டின்மீது மெல்லிய கோடுகளாகப் பதியும். இம் மெழுகுத் தட்டு உறையும் தன்மை கொண்டது. எனவே, அரக்கு, கார்பன் போன்றவைகளைக்கொண்டு கெட்டித் தட்டுகள் பதிவு செய்த மெழுகுத் தட்டால் உருவாக்கப்படுகிறது. ஒரே மெழுகுத தட்டைக் கொண்டு வேண்டிய அளவு பிரதிகள் எடுக்க முடியும்.
இவ்வாறு ஒலிப்பதிவு செய்யப்பட்ட தட்டிலிருந்து ஒலியை வெளிப்படுத்தும் தனிக் கருவி உண்டு. அதற்குக் 'கிராமபோன் பெட்டி’ என்று பெயர். அப்பெட்டியில் வட்ட வடிவிலான ஒலிப்பதிவுத் தட்டை வைக்க ஒரு மேடைப் பகுதி உண்டு. அதன் அடிப்பகுதியில் ஒலியை வெளிப்படுத்தும் ஒலிப்பெட்டி உண்டு. அப்பெட்டியின் ஒரு மூலையில் கூர்மையான சிறு ஊசியைப் பொருத்தும் சிறு கருவி உண்டு. அதில் ஊசியைப் பொருத்தி, சுழலும் ஒலித்தட்டின் ஓரத்திலிருந்து தொடங்கும் மெல்லிய கோட்டின்மீது வைத்தால், கோட்டின் மேடு பள்ளங்களுக்கேற்ப பதிவான ஒலி முழுமையாகவெளிப்படும் வகையில் ஊசியில் அதிர்வேற்படும். ஊசியுடன் இணைக்கப்பட்டுள்ள இடைத்திரை ஊசியின் அதிர்வுக்கேற்ப அதிர்ந்து ஒலி அலைகளை வெளிப்படுத்தும். அவ்வொலி அலைகளையே பேச்சாகவும் பாட்டாகவும் மீண்டும் கேட்டு மகிழ்கிறோம்.
கிராமபோன் பெட்டி இயங்க அவ்வப்போது சாவி கொடுத்து இயக்க வேண்டும். ஊசியின் கூர் மழுங்கினால் வேறு கூர் உள்ள ஊசியை மாற்றிப் பொருத்திட வேண்டும்.
அண்மைக் காலத்தில் சாவி கொடுக்காமல் மின் விசையால் இயங்கும் கிராமபோன் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே ஒரு இசைத்தட்டு முடிந்தவுடன் வேறு இசைத் தட்டை தானாக மாற்றிக்கொள்ளும் வசதிகளும் இதில் உள்ளன.