இளையர் அறிவியல் களஞ்சியம்/கோபால்ட்
கோபால்ட் : ஜெர்மன் மொழியிலுள்ள "கோபால்ட்’ (Kobold) எனும் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இது ஒரு முக்கியமான உலோகமாகும். இஃது வெள்ளியைப்போல் வெள்ளை நிறமுடைய உலோகமாகும். 1785இல் பிராண்ட் என்பவரால் கண்டறியப்பட்ட இவ்வுலோகம் மிகவும் கடினத்தன்மை வாய்க்கப் பெற்றதாகும். சொல்லப்போனால் இரும்பையும் நிக்கலையும் விட உறுதி வாய்ந்ததாகும். இதனால் இவ்வுலோகத்தைக் கம்பியாக நீட்டவோ தகடாக அடிக்கவோ இயல்வதில்லை. எனவே, இதனை கம்பியாக நீட்ட அல்லது தகடாக அடிக்க இவ்வுலோகத்தோடு கார்பன் கலந்து பயன்படுத்துகிறார்கள். அப்போது அதனுடைய கடினத் தன்மை குறைந்து விடுகிறது.
கோபால்ட் உலோகத்தோடு குரோமியத்தைக் கலந்தால் மேலும் கடினத்தன்மை ஏற்படுகிறது. இத்தகைய கடினமிக்கக் கூட்டுக் கலவையைக் கொண்டு பிற உலோகங்களை வெட்டக்கூடிய கருவிகளைச் செய்து பயன்படுத்துகிறார்கள்,
கோபால்ட் உலோகத்தோடு டங்ஸ்டன், குளேபியம், மாலிப்டினம் ஆகிய உலோகக் கலவையைச் சேர்த்துச் செய்யப்பட்ட ஸ்டெல் வைட் என்ற உலோகக் கலவையைக் கொண்டு வெட்டுக் கருவிகளை செய்கிறார்கள். இதனால் இரும்பு மற்றும் கண்ணாடிகளை அறுக்க முடியும். நிலைக்காந்த எஃகு தயாரிக்க கோபால்ட்டுடன் இரும்பையும் நிக்கலையும் கலந்து உருவாக்குகிறார்கள். இவை தொலைபேசி மற்றும் ஒலிப்பான் போன்ற கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. கோபால்ட் கலவைகள் நிறமுண்டாக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடிக்கும் எனாமலுக்கும் நிறம் உண்டாக்கக் கோபால்ட் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது.
கோபால்ட்டின் ஐசோடோப் Co0 ஆகும். இது கதிரியக்கமுடையதாகும். இக்கதிர்கள் புற்றுநோய்க் கிருமிகளைக் கொல்ல வல்லனவாகும். எனவே, புற்றுநோய் மருத்துவத்தில் இஃது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
கோபால்ட் உலோகம் கனடா நாட்டிலுள்ள அன்டோரியோ எனுமிடத்திலும் ஆஃப்ரிக்க நாட்டிலுள்ள காங்கோவிலும் அதிக அளவில் கிடைக்கின்றன. கோபால்ட் உலோகத்தின் அணு எண் 27 ஆகும்.