இளையர் அறிவியல் களஞ்சியம்/சயரோகம்

விக்கிமூலம் இலிருந்து

சயரோகம் : ‘டூபர்குளோசிஸ்' என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இந்நோய் 'காசநோய், 'சயரோகம்’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இஃது தொற்று நோய்களிலேயே மிகக் கொடிய தொற்று நோயாகும். இது மைக்ரோ பாக்டீரியம் டுபர் குளோசிஸ் எனும் நச்சு நுண்கிருமிகளால் உண்டாகும் நோயாகும். இதனால் மனிதர்கள் மட்டுமல்லாது விலங்கினங்களும் பாதிக்கப்படுவதுண்டு.

காச நோயால் பீடிக்கப்பட்டவர்கள் அடிக்கடி இருமுவார்கள். அப்போது இந்நோய்க்கிருமிகள் காற்றில் பரவுகின்றன. காசநோயாளி காரி உமிழ்வதன் மூலம் இந்நோய் பரவுகின்றது. எனவே, காசநோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். இருமும்பொழுது தங்கள் வாயையும் மூக்கையும் துணியால் போர்த்திக் கொள்ளவேண்டும்.நோயாளிகண்ட இடத்தில் எச்சிலை உமிழாது, ஒரு சிறு பாத்திரத்தில் துப்பி அதை நெருப்பிலிட்டு அழித்துவிட வேண்டும். இல்லையெனில் அவ்வெச்சிலை வெறுங்காலால் மிதிப்பவர்களும் காசநோய்க்கிருமி கலந்த காற்றைச் சுவாசிப்பவர்களும் எளிதாக இந் நோயால் பிடிக்கப்படுவார்கள். சயரோக நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளும் இந்நோயைப் பரப்புகின்றன. குறிப்பாக, இந்நோய் கண்ட பசுவின் பாலைக் குடிப்பவர் இந்நோயால் தொற்றப்படுகிறார்.

காசநோய்க்கிருமிகள் உடல் முழுவதையும் பாதிக்கும் தன்மை கொண்டவை என்றாலும் அதிகம் நுரையீரலையே பாதிக்கின்றன.

இந்நோய் கண்டவருக்கு இரவு நேரங்களில் காய்ச்சல் உண்டாகும். அடிக்கடி இருமல் வரும். நாட்பட்ட காச நோயாளியின் எச்சிலில் இரத்தமும் கலந்திருக்கும். நாளடைவில் உடல் மெலியும். இதனாலேயே இந்நோயை எலும்புருக்கி நோய் என்று அழைக்கிறார்கள். இந்நோயை எச்சிலை சோதனை செய்தும், எக்ஸ் கதிர் எனும் ஊடுகதிர் சோதனை

காசநோய்க் கிருமிகள் (42,000 மடங்கு பெரிதாக்கப்பட்டது)

மூலமும் எளிதாகக் கண்டறிய முடியும். ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்தால் உரிய மருந்துகள் மூலம் குணப்படுத்துதல் எளிது. நோயைக் கவனியாதுவிட்டால் நோயாளி விரைந்து மரணமடைய நேரிடும்.