இளையர் அறிவியல் களஞ்சியம்/சினிமா
சினிமா : உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ள தொழில் 'திரைப்படத்துறை’ என அழைக்கப்படும் சினிமாத் தொழிலாகும். சினிமாத்துறை
இன்று பல்வேறு வகையினவாகப் பிரிந்து வளர்ந்து வருகிறது. உலகமக்களில் பெரும்பான்மையினர் சினிமாவை விரும்பிப் பார்த்து மகிழ்கின்றனர்.
படப்பிடிப்புக் கருவியான கேமரா மூலம் சினிமாப்படம் தயாரிக்கப்படுகிறது.இஃது கண் பார்வையின் தன்மையை அடியொற்றி அமைந்துள்ளது. நாம் ஒரு பொருளைப் பார்க்கும் போது, அப்பொருளின் பிம்பம் கண்ணின் பின்புறம் அமைந்துள்ள பார்வை படலத்தின் மீது விழுகிறது. இப்பிம்பம் பார்வைப் படலத்தினின்றும் மறையாமல் 1/16 விநாடி நேரம் நீடிக்கிறது. அந்தக் குறிப்பிட்ட விநாடிக்கும் வேறொரு பிம்பம் பார்வைப் படத்தின் விழுமானால், இரண்டு பிம்பங்களுக்கிடையிலான குறுகியகால இடைவெளி கண்ணுக்குப் புலனாவதில்லை. காட்சிகளைத் தெரிந்து பார்ப்பது போன்ற உணர்வே தோன்றும். இந்த அடிப்படையில்தான் நீண்ட பிலிம் சுருள்களைக் கொண்டு காட்சிகளைப் படமாக்குகிறார்கள்.
நீண்ட சுருள் பிலிமில் உளள சிறு பகுதி (பிரேம்)களுக்கு இடையேயுள்ள இடைவெளித் தூரம் படம் ஓடும் 'புரொஜக்டர்’ எனும் கருவியில் எடுத்துக் கொள்ளும் நேரம் 1/16-க்குள்ளாகவே அமைவதால் படம் தொடர்ச்சியாக ஓடுவதுபோன்ற பிரமை நமக்கு ஏற்படுகிறது. திரைப்படம் கேமரா எனும் காட்சி எடுக்கும் கருவி கொண்டு தொடர்ச்சியாகப் பிலிமில் காட்சி பதிவு செய்யப்படுகிறது. இக்காட்சிகள் 'புரொஜக்டர்’ எனும் படம் காட்டும் கருவி மூலம் திரையில் தொடர்ந்து காட்சி தெரியும்படி ஓட்டப்படுகிறது.
சினிமாப் படம் இன்று பல்வேறு பிரிவுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. அவை கதைப்படம், செய்திப்படம், விளக்கப் படம், கல்விப்படம், கேலிச் சித்திரங்களைக் கொண்டு இயங்கும் கார்ட்டுன் படம் என்பவையாகும். இவை 35 மில்லி மீட்டர், 16 மில்லி மீட்டர், 8 மில்லிமீட்டர் என்ற அளவுகளில் உள்ள பிலிம் சுருள்களில் படம் பதிவாக்கப் படுகிறது. இப்படங்கள் விநாடிக்கு 24 பிரேம்கள் படமாகின்றன. இவை திரைப்படக் கருவியில் (புரொஜக்டர்) விநாடிக்கு 24 படங்கள் விதம் தொடர்ந்து ஓடும்போது திரையில் தெரியும் படங்களும் இடைவெளியின்றித் தொடர்ந்து காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தெரிகின்றன.
திரைப்படக் கருவி மூலம் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்படுவது போன்றே பேசும் பேச்சுக்களும் பாடல்களும் ஒலிப்பதிவுக் கருவி மூலம் ஒலிப்பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு தனித்தனியே பதிவு செய்யப்பட்ட காட்சி பிலிம்களையும் ஒலிப்பதிவு பிலிம்களையும் படத் தொகுப்பாளர் விரும்பிய வண்ணம் இணைத்து, அதை ஒரே பிலிமில் அமையுமாறு பிரதி எடுப்பார். இப்பிரதியை புரொஜக்டர் கருவி மூலம் திரையில் காட்டுவார்கள்.
தொடக்கக் காலத்தில் கறுப்பு-வெள்ளைத் திரைப்படங்கள் மட்டும் எடுக்கப்பட்டன. இன்று கண்ணுக்கு குளுமையான பல வண்ணங்களில் வண்ணப்படமாகத் தயாரிக்கப்படுகின்றன. இக்காட்சியைக் காணும்போது இயற்கையான தோற்றங்களை முழுமையாகத் திரையில் கண்டு மகிழ முடிகிறது. இன்று 70 மி.மீ. மற்றும் 'மாக்ஸ்’ (Max)போன்ற பேருருக் காட்டும் திரைப்படங்களும் காட்டப்படுகின்றன.
இயக்கப் படத்தை முதன் முதலாக பலரும் பார்க்கும் வண்ணம் உருவாக்கிய பெருமை சி. பிரான்சிஸ் ஜென்கின்ஸ் எனும் அமெரிக்கரையே சாரும்.
உலகிலேயே சினிமாத்தொழிலில் சிறப்புற்று விளங்கும் நாடு அமெரிக்காவாகும். அடுத்தபடியாக இத்தொழிலில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது.