இளையர் அறிவியல் களஞ்சியம்/செய்தித் தொடர்பு
செய்தித் தொடர்பு : மனிதன் என்று தன் உணர்வையும் கருத்தையும் பிறருக்கு உணர்த்த விழைந்தானோ அன்று முதல் செய்தித் தொடர்பு முயற்சியும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
பண்டைக் காலத்தில் சமிஞ்கை மூலமும் குரலொலி மூலமும் செய்திப் பரிமாற்றம் செய்து வந்தனர். பின்னர் குறியீடுகள் மூலமும் படங்களை வரைந்து காட்டுவதன் மூலமும் செய்திக்கான கருத்தை வெளிப்படுத்தலாயினர். சற்று தூரத்தில் மனிதர்களுக்கும் குழுக்களுக்கும் முரசு அடித்து ஒலி எழுப்பியும் கண்ணாடி மூலம் கதிரவன் ஒளியைப் பிரதிபலித்தும் சில சமயம் சருகுகளைக் கொண்டு நெருப்பூட்டி புகை எழும்பச் செய்தும் செய்திகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.
அதன்பின், நாகரிக வளர்ச்சியின் விளைவாக நெடுந்தூரத்தில் உள்ளவர்கள் ஆள் மூலம் செய்தி அனுப்பியும் குதிரைக்காரர்கள் மூலம் செய்தி அனுப்பியும் வந்தனர். அதன்பின் நன்கு பழக்கப்பட்ட புறாக்களின் கால்களில் செய்திகளைக் கட்டி பறக்கவிட்டு செய்தி அனுப்பினர்.
இன்று அறிவியல் பெரு வளர்ச்சியின் விளைவால் தபால் அனுப்பும்முறை செயல்பாட்டிற்கு வந்து நிலைபெற்றுள்ளது. இத் தபால்கள் ரயில் மூலமும், கப்பல் மூலமும், விமானம் வாயிலாகவும் அனுப்பப்படுகிறது. இவைகள் மூலம் அனுப்புவதைவிட விரைந்து செய்திகளை அனுப்ப தந்தி முறையும் தொலைபேசி மூலம் செய்தி தரும் முறையும் பயன்பாட்டில் உள்ளன. வானொலி வாயிலாகவும் தொலைக் காட்சி மூலமும் உலகின் மூலை முடுக்கெங்கும் வாழும் மக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் செய்திகளை நேரிடையாக கேட்டறியவும் கண்களால் பார்த்து மகிழவும் ஏதுவாகியுள்ளது. செய்திகளை விரைந்து பரப்புவதில் செயற்கைக் கோள்கள் இன்று பெரும்பங்கு வகிக்கின்றன. செய்தித் தாள்களின் பங்கும் பணியும் செய்தித் தொடர்பில் அளவிடற்கரியதாகும்.
இத்தகைய நவீன செய்தித் தொடர்புச் சாதனங்களால் உலக மக்களிடையே மிகுந்த நெருக்கம் ஏற்பட்டுள்ளது. உலகமும் பெருமளவில் குறுகிவிட்டது என்றே சொல்லலாம்.