இளையர் அறிவியல் களஞ்சியம்/தட்டச்சுப் பொறி

விக்கிமூலம் இலிருந்து

தட்டச்சுப் பொறி : தட்டெழுத்துப் பொறியாகிய 'டைப்ரைட்டர்' கருவி இன்றைய வாழ்வில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. தட்டச்சுப் பொறிகள் பல அளவுகளில் பல வகைகளில் கிடைக்கின்றன. வேண்டிய இடங்களுக்கு எளிதாக எடுத்துச் செல்லத்தக்கவாறு கையடக்கமான சிறிய தட்டச்சுப் பொறிகள் புழக்கத்தில் உள்ளன. அலுவலகங்களில் பயன்படுத்தத்தக்க பெரிய, கனமான தட்டச்சுப் பொறிகளும் உண்டு. மற்றும் மின் விசையால் இயங்கவல்ல மின் தட்டச்சுப் பொறிகளும், பார்வையற்றோர் தொடுவுணர்வு மூலம் மட்டும் அறிந்து பயன்படுத்தத் தக்கவாறு பிரெய்ல் எழுத்தாலான தட்டச்சுப் பொறிகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இன்று கிட்டத்தட்ட உலக மொழிகள் அனைத்திலும் தட்டச்சுப் பொறிகள் உள்ளன.

தட்டச்சுப் பொறியை முதன்முதலாக வடிவமைத்தவர் கிறிஸ்டோபர் ஷோல்ஸ் எனும் அமெரிக்கராவார். இவர் 1868ஆம் ஆண்டில் இப்பணியில் ஈடுபட்டபோது அவருக்குத் துணையாயிருந்தவர்கள் கார்லோங் கிளிடன் என்பவரும் சாமுவேல் சூலே என்பவருமாவர். காலப்போக்கில் தட்டச்சுப்பொறி பல்வேறு மாற்றங்களைப் பெற்று இன்றுள்ள வடிவமைப்பை அடைந்துள்ளது.

தட்டச்சு செய்யும் பொறியின் மேற்பகுதியில் நீளமான கருநிற உருளையொன்றிருக்கும். அது மேல்புறமாகவோ அன்றி கீழ்ப்புறமாகவோ சுழற்றினால் சுழலக் கூடியதாகும். இதனைச் சுழற்றும் கைப்பிடி உருளையின் இறுதியில் அமைந்திருக்கும். இவ்வுருளையை ஒட்டினாற்போல் சிறிதளவு இடைவெளி இருக்கும். இவ்விடைவெளியினூடே தாளைச் செலுத்தி மேலுள்ள தாள் பிடியை அழுத்தினால் இடைவெளி நீங்க, உருளை தாளை நன்கு அழுத்திக் கொள்ளும். அப்போது உருளையை மேலாகவோ கீழாகவோ வேண்டிய பக்கம் திருப்பும்போது உருளையோடு இணைந்து தாளும் செல்லும். தட்டச்சுப் பொறியின் முன்புறத்தில் வரிசையாகப் பொத் தான்கள் அமைந்திருக்கும். அப்பொத்தான் ஒவ்வொன்றோடும் ஒரு எழுத்து இணைந்திருக்கும். பொத்தானை விரலால் அழுத்தும்போது அதனோடு இணைக்கப்பட்டுள்ள எழுத்துக்குமிடையேயுள்ள மையோடு கூடிய நாடாவை (Ribbon) அழுத்தும். எழுத்தால் நாடா தாளின் மீது அழுத்தப்படுவதால், எழுத்துரு தாளில் அப்படியே பதியும். இவ்வாறு வேண்டிய எழுத்துக்களைத் தொடர்ந்து அழுத்தி, தாளில் பதியச் செய்வதன்மூலம் அச்சுப் பதிவம் பெறப்படுகிறது. எழுத்துக்களுடன் எண்களுக்கும் குறியீடுகளுக்கும் தனிப் பொத்தான்கள் உண்டு.

தாளின்மீது ஒவ்வொரு எழுத்தும் பதிந்தவுடன் தாள் தானாகவே இடப்புறம் நகர்ந்து அடுத்த எழுத்துப் பதிய இடம்தரும். இவ்வாறு நகர்வதால் தொடர்ந்து பொத்தானைத் தட்டித் தொடர்ந்து எழுத்துக்களைத் தாளில் பதிய வைக்க முடிகிறது. ஒரு சொல்லுக்கும் அடுத்த சொல்லுக்குமிடையே போதிய இடைவெளி தர பொத்தான்களுக்குக் கீழாக பட்டையாக அமைந்துள்ள இடைவெளிக் கட்டையை அழுத்தினால் இடைவெளி ஏற்பட்டுவிடும். இச்செயலைத் தொடர்ந்து செய்வதன் மூலம் சொற்களையும் சொற்றொடர்களையும் தாளில் பதிந்துகொண்டே போகலாம். ஒரு வரிமுடிந்தவுடன் மணி அடிக்கும். உருளையின் இறுதியில் உள்ள கைப்பிடியை மீண்டும் இழுத்தால் வலதுபுறம் வந்து பழைய நிலையை அடையும், தொடர்ந்து அடுத்த வரியைத் தொடர்ந்து தட்டச்சு செய்யலாம்.

தட்டச்சுச் செய்வதில் போதிய பயிற்சியுடையவர்கள் எழுத்துருக் கொண்ட பொத்தான்களைப் பாராமலே தட்டச்சுச் செய்வர். விரைந்து தட்டச்சுச் செய்வதைப் பொருத்து ஒருவரின் தட்டச்சுத் திறன் கணிக்கப்படும்.